ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 19

This entry is part 17 of 44 in the series ஶ்ராத்தம்

பார்வண ஹோமம் -1


இங்கே முழு ஹோமமும் ஆபஸ்தம்பிகள் வழியில் சொல்ல இருக்கிறோம். போகிற போக்கில் பொதுவாக ஹோமம் செய்யும் விதம், இங்கே சிராத்தத்தில் எப்படி மாறுகிறது என்பதையும் பார்த்துக் கொண்டு போய்விடலாம். இந்த ஹோமம் செய்யும் விதத்தில் ஸ்தாலீபாகமே எல்லா ஹோமங்களும் பொதுவான செய்முறை. ஸ்தாலீபாகத்தில் அக்னி ஆராதிக்கப்படுகிறார். மற்றவற்றில் எந்த தேவதைக்காக ஹோமம் செய்கிறோமோ அவற்றுக்கான மந்திரங்கள் சொல்லி அவற்றுக்கான பொருளையும் ஹோமம் செய்வார்கள். ஆகவே இரண்டையும் ஒரே காலத்தில் பார்த்துக் கொண்டு போகலாம்.

முதலில் ஒரு எச்சரிக்கை. சிராத்தம் முடியும் வரை பூணூல் ப்ராசீனாவீதமாக இருக்க வேண்டும். எதற்கு விலக்கு? பிராணாயாமம், ஆகார ஹோமம், ஆஜ்ய பாகம், அக்னிமுகம், ஸ்விஷ்டக்ருத் ஹோமம், பிராயச்சித்த ஆகுதிகள், அபிஷேகம், ஆசமனம், பிரதக்ஷிண நமஸ்காரம் ஆகிய காலங்களில் உபவீதியாக வைத்திருக்க வேண்டும்.

ஔபாசனம் செய்து கொண்டிருப்பவர்கள் ஸ்தாலீபாகம் செய்வதால் ஹோமம் பற்றி தெரிந்திருக்கும். ஆகவே இப்போது எழுதுவது இது பற்றி ஏதும் தெரியாதவர்களுக்காக.

நமக்குத் தேவை சில புதிய அல்லது நன்றாக கழுவிய காயவைத்த செங்கற்கள். நன்கு கழுவி உலர வைத்த ஆற்று மண் கிடைத்தால் மிகவும் சிலாக்கியம். இந்த கற்களை ஓரடி சதுரமாக பரப்பி மேலே மணலை இரண்டு மூன்று பிடி நிரப்பி தயார் செய்ய வேண்டும். அக்னியை வைப்பதற்கு முன் அந்த இடத்தில் பூமியை உழுவதாக பாவனை செய்து கட்டை தர்பை, சமித் ஏதோ ஒன்றால் பூமியை கீற வேண்டும்.

முதலில் தெற்கிலிருந்து வடக்காக மூன்று கீறல்கள். இதில் முதல் கீறல் மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். அடுத்து மேற்கு கிழக்காக மூன்று கீறல்கள்; தெற்கே ஆரம்பிக்க வேண்டும். கையில் நீரெடுத்து பாதியை இந்த சமித் அல்லது கட்டை தர்பையை ப்ரோக்ஷணம் செய்து மீதி பாதியை ஒரு தொன்னையில் விட்டுக் கொள்ள வேண்டும். இதன்பின் அக்னியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். க்ருஹஸ்தனுக்கு ஔபாசனாக்னி; பத்தினியை இழந்தவர் ஆனால் விதுராக்னி; (இந்த விதுராக்னி ஸந்தானத்தில் காயத்ரி பிரயோகமாகிறது.) பிரம்மச்சாரி ஒருவேளை செய்ய வேண்டி இருந்தால் ஸமிதா தானம் செய்த அக்னி; இவை பயனாகும்.

அசுரர்கள் வராமலிருக்கவும் தேவர்கள் வருவதற்காகவும் அக்னிக்கு கிழக்கில் ஒரு பாத்திரத்தில் அக்ஷதையுடன் தீர்த்தம் வைக்க வேண்டும். இதற்கு தொன்னையில் வைத்திருந்த நீரை கிழக்கே கொட்டி விட்டு அதில் சிறுது அக்‌ஷதை சேர்த்து தீர்த்தத்தை சேர்த்து வைக்க வேண்டும்.

இதன்பிறகு அக்னியை சுற்றி நான்கு புறமும் 16, 16 தர்ப்பங்கள் போட வேண்டும் சாதாரணமாக தேவ காரியங்களில் தர்ப்பையின் நுனி வடக்கு புறம் அல்லது கிழக்கு புறம் இருக்கும் ஆனால் இங்கே தெற்கு வடக்காக ஓடும் தர்பைகளின் நுனி தெற்கே இருக்க வேண்டும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 15ஶ்ராத்தம் – 18 >>

About Author