ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 27

This entry is part 27 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 27 ; பார்வண ஹோமம் -9 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 5

அடுத்ததாக வருணனை ஆவாஹனம் செய்தோம் அல்லவா? ஆவாஹனம் செய்த கிண்ணத்தின் மீது ‘வருணாய நம, ஸகல ஆராதனை ஸுவர்ச்சிதம்’ என்று அட்சதையை தூவ வேண்டும். அதை நம் எதிரில் எடுத்து வைத்துக்கொண்டு கிழக்கில் ஆரம்பித்து பிரதட்சிணமாக நீரை ஒவ்வொரு திசையிலும் கொஞ்சம் கொஞ்சம் இறைக்க வேண்டும் பிறகு உபவீதியாக கிழக்கே பாத்திரத்தை முழுவதும் சாய்த்து பூமியில் விழுந்த நீரை தன்னையும் தன் மனைவியையும் ப்ரோக்ஷணம் செய்துகொள்ளலாம்.

ஹோமத்திற்கு நமக்கு உதவிய வாத்தியாருக்கு பிரம்மன் ‘வரம் தே ததாமி’ என்று பசுமாட்டை தட்சிணையாக கொடுத்து ‘பிரம்ஹனே நமஹ, சகல ஆராதனை ஸுவர்ச்சிதம்’ என்று அட்சதையை அவர் தலை மீது போடுவோம். பசு மாடா? ஆமாம். நல்ல வேளையாக ஒரே ஒரு ‘ஆதத்ஸ்வ’ சொல்லறதுக்கு பசு மாடான்னு யாரும் அந்த காலத்தில எதிர்ப்பு காட்டலை போலிருக்கு. இருந்தாலும் யாரால் முடியும்? சாதாரணமாகவே ஒரு ஹோமத்துக்கு கொடுப்பது சிரம சாத்யமே. அப்படியானால் பக்ஷத்துக்கு பக்ஷம் ஸ்தாலீபாகம் செய்பவரை நினைத்துப் பாருங்கள்! எவ்ளோ பசுமாடு இருக்குன்னு கணக்கே தெரியாத அர்ஜென்டைனா போன்ற நாட்டு செல்வந்தர் போல இருந்தால் ஒழிய இது மிகவும் கஷ்டம். யாரோ ரிஷி அதை இளக்கி கொடுக்க கோ சப்தத்துக்கு தேங்காய்ன்னு வெச்சுக்கலாம்ன்னு சொல்லி இருக்கார். அதனால் மட்டை தேங்காய் கொடுக்கிறார்கள். (ஆனா இங்க ‘வரம் தே’ ன்னு தான சொல்லி இருக்குன்னு கேக்கக்கூடாது!) போகட்டும், எப்படியும் கடைசில பேசின தக்ஷிணைதான் கொடுக்கப்போகிறோம்!

பிறகு ஒரே ஒரு சமித்தை ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து எழுந்து நின்று உபஸ்தானம் செய்கிறோம். அதற்கு ‘அக்னே நய’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகிறது.

அதன் பொருளாவது: அக்னியே! உனக்கு எல்லா வழிகளும் நன்கு தெரியும். ஆதலால் நல்ல வழியாக எங்களுக்கு செல்வம் வரும்படி செய்யுங்கள். கொடிய பாவங்களான சத்ருக்களுடன் போரிடுங்கள். உமக்கு பலமுறை வணக்கம் செலுத்துகிறோம். அக்னே, மந்திரத்திலும் செய்கையிலும் பக்தியிலும் குறைவுடன் நான் செய்த ஹோமம் பூரணமாக ஆகும்படி ஏற்றுக்கொள்ளுங்கள். தபஸ், கர்மா முதலிய வடிவமாக கூறப்பட்டுள்ள எல்லாவகை பிராயச்சித்தங்களுல் கிருஷ்ணனை நினைப்பதே உயர்ந்த பிராயச்சித்தம் ஆகும் .இப்படி சொல்லி கிருஷ்ணா கிருஷ்ணா என்று எட்டுமுறை சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அக்னி காரியம் முடிந்தது. மேற்கொண்டு இருக்கிற சிராத்த பிரயோகத்தை பார்க்கலாம்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 26ஶ்ராத்தம் – 28 >>

About Author