ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 28

This entry is part 28 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்து நாம் பூணூலை இடம் செய்துகொண்டு, தெற்கு பார்த்து பிராமணர்களுக்கு பரிமாறுவதற்கு வைத்திருக்கும் அனைத்தையும் தர்ப்பையால் தொட்டுக்கொண்டு மந்திரம் சொல்ல வேண்டும். வழக்கத்தில் அன்னத்தை மட்டும் வைத்து தர்ப்பையால் தொட்டுக்கொண்டு சொல்வதாக இருக்கிறது.

இதற்கு ‘ஏஷதே’ என்ற மந்திர பிரயோகம் ஆகிறது. அதன் பொருள்: ‘தந்தையே! உமக்காக செய்த இந்த அன்னாதிகள் தேன் போல ருசி உள்ளதுமானதும் கடல் போலும் இருக்கிறது. அக்னியும் பூமியும் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது அன்னம் முதலியன. அவ்வளவு பெரிய அவற்றை உமக்கு அளிக்கிறேன். அன்னம் முதலான பொருட்களே! அக்னி எப்படி என்றும் குறையாததாகவும் அழிவில்லாததாகவும் இருக்கிறதோ, அதுபோல நீ என் தந்தைக்கு அழியாததாகவும் குறையாததாகவும் இரு. ஓ பிதாவே, நீர் அந்த அக்னி முதலியவர்களுடன் கூட இவற்றை ஏற்றுக்கொள்ளும். உங்களின் மகிமை ருக் வேதம் போன்றது.’

அடுத்த இரு மந்திரங்கள் இதுவே சில மாற்றங்களுடன்.
பிதாவுக்கு பதில் பிதாமஹர், ப்ரபிதாமஹர்.
அக்னி-பூமி க்கு பதில் வாயு-ஆகாசம், ஸூர்யன் – ஸுவர்க்கம்.
ருக் வேதத்துக்கு பதிலாக ஸாமம், யஜுர்.

நடைமுறையில் அன்னத்தை மட்டும் இப்படி தயார் செய்வதால் வாத்தியார் அடுத்து சமையலறைக்குப்போய் அங்கே உள்ள உணவுப் பொருட்களை தர்ப்பையால் தொட்டுவிட்டு அதை கீழே போட்டு விட்டு கை அலம்பி வருமாறு சொல்லுவார்.

அடுத்து போக்தாக்களுக்கு இலை போடும் இடத்தில் சுத்தி செய்ய வேண்டும்.

மது கைடபர்களின் உடலால் விளைந்தது இந்த பூமி. இதை சுத்தி செய்ய அதை உழுது மண்ணை புரட்டிப் போட வேண்டும். அப்போதுதான் அது யாகம் செய்ய அருகதை உள்ளதாகும். (விவசாயி செய்யும் யாகத்திலும் அதேதான் நடக்கிறது!) அதற்குத்தான் நாம் ஹோம குண்டத்தில் அக்னியை வைக்கும் முன் சமித்தால் கீறினோம். அதே போல இங்கேயும் இலை போடும் இடத்தில் தர்ப்பைகளால் பூமியை குத்தி மண் எடுப்பது போல பாவனை செய்து ‘அபேத வீத’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். அதன் பொருள்: ஓ யம தாஸர்களே! யமனது ஆணையால் இங்கே தங்கி இருக்கிறீர்கள். வெகுகாலமாக இருப்பவரும் சமீபத்தில் வந்தவருமான நீங்கள் சிறிது காலம் இந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள். பித்ரு பூஜை முடியும் வரை இந்த இடத்தை எமனை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். எங்கள் பித்ருக்கள் இங்கே வருகிறார்கள்.

அடுத்த மந்திரத்தில் ‘இந்த இடத்தை அண்டி வசிக்கும் அசுரர்கள், ராக்ஷஸர்கள், பிசாசுகள் – இவர்களும்; பித்ரு கர்மாக்களுக்கு விக்னம் செய்பவர்களும் இந்த இடத்தை விட்டு இஷ்டமான வேறு இடத்திற்கு செல்லட்டும்.’ இப்படி சொல்லி எள்ளை இறைக்க அவர்கள் வேறிடம் சென்றுவிடுவர்.

அடுத்து ‘உதீரதாம்’ என்ற மந்திரத்திற்கு பொருள்: தாழ்ந்தவர்களும் மத்தியமானவர்களும் உயர்ந்தவர்களும் ஆன பித்ருக்கள் இங்கே வந்து நான் அளிப்பதை உண்டு அருள் புரியட்டும். தண்டனை தரத்தக்க குற்றம் புரிந்தாலும் எங்களை இம்சிக்காமல் நான் கொடுத்ததை ஏற்றுக்கொண்டு நன்றியுடன் ரக்‌ஷிக்கட்டும்’ என்று வேண்ட வேண்டும்.

சுத்தம் செய்வதற்காக பூணூலை வலம் செய்து கொண்டு ‘அபவித்ர’ என்ற மந்திரத்தால் நீரை தெளிக்கிறோம். இதன் பொருள் அசுத்தன் ஆயினும் சுத்தனாயினும் ‘சர்வ’ எனும் நிலையை அடைந்து இருந்தாலும் பகவானை நினைத்தவன் உள்ளும் புறமும் சுத்தம் ஆகிறான்.

முன்போல மூவருக்கும் சாப்பிடுவதற்காக இலை கையில் கொடுத்து ‘இந்த போஜன பாத்திரம் உங்கள் சௌகரியம் போல் இருக்கட்டும்’ என்று சொல்ல அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று பதில் சொல்வார்கள்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 27ஶ்ராத்தம் – 29 – உணவிடும் முன் >>

About Author