ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 36

This entry is part 36 of 44 in the series ஶ்ராத்தம்

‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை.


பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் என்னும் யாகத்தில் வரும் மந்திரம். ஆறு ருதுக்களும் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் இன்பத்தை தருகின்றன என்ற பொருளுடைய இதை சொல்லி பொதுவாக விஸ்வே தேவர்களையும் தேவர்களையும் சந்தோஷப் படுத்தும் என்று பிரார்த்தனை.

வேதம் தெரிந்த அந்தணர்கள் போக்தாக்களாக இருந்தால் ‘அக்னியாயுஷ்மான் * ப்ரதிஷ்டித்யை’ என்ற மந்திரம் சொல்லி மங்கல அக்ஷதை தர கர்த்தா அதை தன் தலையை போட்டுக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு தெரிந்தால் கர்த்தா பிரார்த்தனை செய்வார். வழக்கமாக கர்தாவுக்காக வாத்தியார் ‘ஸ்வஸ்தி மந்த்ராஹா’ என்ற மந்திரம் சொல்லி வாழ்த்தும் படி பிராமணர்களிடம் கேட்க அவர்களும் ‘எஜமானன் குடும்பத்துடன் வேதம் சொன்ன தீர்க்க ஆயுசுடன் இருக்கட்டும்’ என்பதுபோல ஆசீர்வாதங்கள் செய்வார்கள். பிறகு ‘நான் (அல்லது எஜமானன்) செய்த இந்த சிராத்தத்தால் என் (அவரது) பித்ருக்கள் குறைவில்லாத திருப்தியுடன் இருக்கட்டும்; கயா ஸ்ராத்த பலன் ஏற்படட்டும்’ என்று வேண்ட அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று சொல்வார்கள்.

கடைசியாக பூணூலை இடம் செய்துகொண்டு பித்ரு பிராமணரை ‘உத்திஷ்டத’ என்று சொல்லி தர்ப்பத்தைக் கொடுத்து எழுப்பிவிட்டு அதேபோல் விச்வே தேவருக்கும் விஷ்ணுவுக்கும் உபவீதியாக தர்ப்பத்தைக் கொடுத்து எழுப்பி விட வேண்டும்.

பிறகு கர்த்தா கிழக்கு அல்லது வடக்கு நுனியாக தன் மேல் வஸ்திரத்தை கீழே போட போக்தாக்கள் அதை மிதித்துக்கொண்டு கடந்து செல்வார்கள். பின் ‘வாஜே வாஜே’ என்ற மந்திரம் சொல்லி பிரதட்சிணம் செய்து ‘ஹவிஶ் ஶோபனம்’ என்று சொல்ல அவர்கள் ‘ஶோபனம் ஹவிஹி’ என்பார்கள் . பிறகு அவர்களிடம் ‘வெறும் காய்கறிகள் கீரைகளை தந்து உயர்ந்த ஆகாரத்தை தராமல் கஷ்டப்படுத்தி விட்டேன். அதை மனதில் நினைத்துக் கொள்ளாமல் மறந்து மன்னிக்க வேண்டும்’ என்று அவர்களை உபசாரமாக சொல்லி சில அடிகள் வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்ப வேண்டும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 35ஶ்ராத்தம் – 37 >>

About Author