முன்னுரை
முகலாய இளவரசியான ஜகன்னாராவின் வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட “Mistress of the Throne” புத்தகத்தின் தொடர்ச்சியை எழுதும் எண்ணம் எனக்கு அப்பொழுது இல்லை. ஆனால், அந்த புத்தகத்தை படித்த வாசகர்கள் எழுதிய மின்னஞ்சல்கள் எனக்கு அதன் தொடர்ச்சியை எழுத ஊக்கம் அளித்தது. அப்பொழுது என் மனதில், இந்திய வரலாற்றில் அதிகம் அறியப்படாத மக்ஃபியைப் பற்றிய எண்ணம் ஓடியது. “Mistress of the Throne” புத்தகத்தில் மக்ஃபியைப் பற்றி சில இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும், அதை அடிப்படையாக வைத்து ஒரு புத்தகம் எழுதும் எனக்கு அப்பொழுது இல்லை. அந்த நேரத்தில், மக்ஃபியைப் பற்றியும், அதை நிறுவிய ஜெபுனிஷாவைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யத் துவங்கினேன். முகலாயர்கள் வரலாற்றில் இருந்தும், அந்த காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பிய பயணிகள் எழுதிய குறிப்புகளில் இருந்தும் தகவல்களை சேகரித்தேன். ஜெபுனிஷாவின் வாழ்வை முக்கியமாக கொண்டே இந்த நாவலைத் துவங்கினேன்.
“The Hidden One” ஒரு வரலாற்று புனைவு. ஜகன்னாராவைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாய்க் கிடைத்தாலும் ஏனோ ஜெபுனிஷாவைப் பற்றிய விஷயங்கள் மிக குறைவாகவே கிடைக்கின்றன. முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசியாய், அவளது தந்தையின் பாசத்துக்குரிய மகளாய், தனது சகோதரன் தந்தையை எதிர்த்து செய்த புரட்சியை ஆதரிப்பது என்பது மிகப் பெரிய நிகழ்வு. எனவே அதை இந்த புத்தகத்தின் மைய்யக் கருவாக்கினேன்.
என்னுடைய ஆராய்ச்சியில் எனக்கு கிடைத்த இரு நிகழ்வுகள், ஒன்று இரகசிய கவிதைக் குழுவை ஜெபுனிஷா உருவாக்கியது மற்றும் அக்பர் செய்த புரட்சியை ஆதரித்தது. எனவே, எழுத்தாளர்களுக்கு உண்டான கற்பனையை உபயோகித்து இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து, கவிதைக் குழு உருவாக்கியதே அக்பரை ஆதரிக்கத்தான் என்று எழுதி உள்ளேன். இது உண்மையாகக் கூட இருக்கலாம். அதே சமயத்தில் இது உண்மைதான் என நினைக்கத் தேவையான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
முதல் புத்தகத்தைப் போன்றே, எவ்வளவு தூரம் உண்மை நிகழ்வுகளை வைத்து எழுத முடியுமோ அவ்வளவு முயன்றிருக்கிறேன். ஆனால், ஜெபுனிஷாவைப் பற்றி வரலாற்றில் அதிகம் எழுதப்படாத காரணத்தால் என்னுடைய கற்பனைகளை கொண்டே கட்டமைத்திருக்கிறேன்.
அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை ஆதரிக்க ஜெபுனிஷாவின் கவிதை வரிகளை உபயோகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், அந்த அரசியல் நிகழ்வுகள்தான் இந்த வரிகளை எழுத தூண்டியதா என்பதைப் பற்றி எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. மக்ஃபியை மையமாக கொண்ட புத்தகத்தை எழுதிவிட்டு அதன் வரிகளை எழுதாவிடில் அது மிகப்பெரிய பிழை ஆகிவிடும். இதனால், ஒவ்வொரு அத்தியாயத்திலும், அந்த அத்தியாயத்தில் வரும் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இரண்டு வரிகளை துவக்கத்தில் எழுதியுள்ளேன். ஜெபுனிஷாவின் கவிதை வரிகளை வாசகர்கள் பாராட்டுவார்கள் என்றெண்ணுகிறேன். அவள் அதையே அதிகம் விரும்பியிருப்பாள்.