நாளை India Vs South Africa 1st test முதல் டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதுவரை இந்தியா டெஸ்ட் தொடர் வெல்லாத ஒரு நாடு என்றால் அது தென்னாபிரிக்காவில் மட்டும்தான். ஆனால் இந்த முறை இந்திய அணி வெற்றி பெறும் என்று பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு வலிமை குறைந்த தென்னாபிரிக்க அணியும் ஒரு காரணம். கடந்த சில வருடங்களில் அவர்களின் முக்கிய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர்கள் இடத்தை நிரப்பும் அளவிற்கு எந்த பேட்ஸ்மேனும் இல்லை என்பது அவர்களின் மிகப் பெரிய பிரச்சனை. அதே போல் பந்துவீச்சில் ரபாடா எப்படி பந்து வீசுகிறார் என்பதை பொருத்தே இந்த தொடரில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அமையும். அதே நேரத்தில் , செஞ்சுரியன் மைதானத்தில் அவர்கள் இது வரை இரண்டு முறை மட்டுமே தோற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த முறை அவர்களுக்கு மிகப் பெரிய சவால் இந்திய அணியின் பந்துவீச்சு. அதை சமாளிக்கும் அளவிற்கு அவர்கள் பேட்ஸ்மேன் தயாரா என்பதே முக்கியக் கேள்வி.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி அமையப்போகிறது என்பது பலரின் எதிர்பார்ப்பாய் உள்ளது. ரஹானே அணியில் இருப்பாரா இல்லை அவருக்கு பதில் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஆடுவாரா இல்லை விஹாரி களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை. விஹாரி இதற்கு முன் அங்கு நடந்த A அணிகளுக்கு இடையேயான தொடரில் 3 ஆட்டங்களில் விஹாரி 227 ரன் அடித்தது குறிப்பிடத்தக்கது. மூன்று அரைச்சதங்களும் இதில் அடக்கம். அவர் அணியில் இருந்தால் ஒரு பக்கம் நங்கூரம் போல் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். ஆனால் சாஸ்திரி + கோஹ்லி இருந்தபொழுது அடித்து ஆடுபவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர். அது தொடர்ந்தால் விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்காது. நான்கு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால் ஷ்ரேயாஸ் + விஹாரி இருவரும் களம் இறங்கலாம்.
பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை , ஷமி , பூம்ரா , சிராஜ் மற்றும் அஸ்வின் கண்டிப்பாக இருப்பார்கள். ஐந்து பந்துவீச்சாளர்கள் ஆடினால் தாகூர் இருக்க வாய்ப்புண்டு. இல்லையேல் அவர் ஆடுவது கடினம். இப்படித்தான் அனைவரின் எதிர்பார்ப்பு இருந்தாலும், வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானம் என்று சொல்லி அஸ்வின் கழற்றி விடப்பட்டு , நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம் கோஹ்லி :).
தென்னாப்ரிக்காவை பொறுத்தவரை , கேப்டன் எல்கர் , மார்க்ரம், Bavuma & Quinton de Kock ஆகியோரை நம்பியுள்ளது. இவர்களின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தி றன் குவிப்பைக் கட்டுப்படுத்தினால் வெற்றி நமதே. பிட்ச் முதல் நாள் சற்று வேகம் குறைவாகவும், அடுத்த இரு நாட்கள் வேகம் அதிகமாகவும் இருக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
இந்த தொடர் முழுக்கவே தென்னாபிரிக்க அணியின் வலுவான வேகப்பந்து Vs இந்திய அணியின் தடுமாறும் மிடில் ஆர்டர். இதில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கே தொடர்.