LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?

LIC IPO வாங்கலாமா இல்லையா என்று பார்ப்பதற்கு முன், ஐபிஓ சரியா தவறா என்று ஒரு பார்வை பார்த்து விடலாம்.

உங்கள் தாத்தா 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அந்த நிலம் இப்பொழுது உங்களுடையதாக இருக்கிறது. இப்ப நீங்க ஒரு இடத்தில் 30ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு போய்க் கொண்டு ஒரு சுமாரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் தாத்தா வைத்திருந்த நிலம் இப்பொழுது நகரமாக மாறிவிட்டது. உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அந்த நிலத்தின் விலையின் அடிப்படையில் தானே உங்கள் சொத்தின் மதிப்பினைக் கணக்கிடுவீர்கள்? அதற்கு என்ன செய்யணும்? முதலில் உங்கள் தாத்தா விட்டு வைத்த நிலத்தில் ஒரு ஐம்பது செண்ட் நிலத்தை விற்கணும். அதில் வரும் பணத்தை வைத்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லையா? உங்கள் தாத்தாவின் நோக்கமும், என் சந்ததிகள் சிரமப்படும் காலத்தில் அது பயன்பட வேண்டும் அல்லது சந்ததியினரின் மேம்பாட்டுக்கு அது பயன்பட வேண்டும் என்பது தானே?

அதே போல் தான், இப்பொழுது எல்.ஐ.சியின் பங்குகளில் 5% -ஐ அரசாங்கம் பொது மக்களுக்கு விற்கிறது. இதுவரை எல்.ஐ.சியின் மதிப்பு நமக்கு தெரியாது. இப்பொழுது 22 கோடி பங்குகளை விற்பதன் மூலம், கிட்டத்தட்ட 22 ஆயிரம் கோடிகள் தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவிருக்கிறது. இதை யாருக்கோ விற்கவில்லை. நம் நாட்டு மக்களுக்கு தான் விற்கிறது.

இதுவரை எல்.ஐ.சியின் மதிப்பு என்னவென்று கணக்கிடாமல் இருந்த நமக்கு இப்பொழுது, அதன் மதிப்பு கிட்டத்தட்ட நாலரை லட்சம் கோடி என்று தெரிய வந்திருக்கிறது. லிஸ்டிங் ஆகும் அன்று 1000 ரூபாய்க்கு ஆரம்பித்து ஒரு வருடத்தில் இரண்டாயிரம் என்று போனால், எல்.ஐ.சியின் மதிப்பு 9 லட்சம் கோடி என்றாகிவிடும். அதாவது, இன்றைய அதானியின் சொத்து மதிப்பு அளவிற்கு மதிப்பு கூடிவிடும்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்பது அந்த நிறுவனங்களுக்கு நல்லது இல்லை என்ற கருத்துள்ளவர்கள், இப்படி அந்த நிறுவனத்தின் மதிப்பு அதிகமாவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அம்பானியும் அதானியும் உலகக் கோடீஸ்வர்ர்கள் ஆனது ஷேர்களின் விலை ஏற்றத்தால் தான்.
அப்படி நம் அரசு நிறுவனத்தின் விலை ஏறுவதும் நமக்கு பெருமை தானே? அப்படி ஏறுவதால், அதனை வாங்கிய பொதுமக்களும் நல்ல லாபம் பார்ப்பது நல்லது தானே?

குறைகள்


1, முன்பு போல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பெரிய வளர்ச்சி விகிதம் இல்லை.

2, மற்ற தனியார் நிறுவனங்கள் அளவிற்கு வாடிக்கையாளர்கள் முதலீடுகளுக்கான ரிடர்ன் இல்லை.

3, போட்டியாளர்களுக்கு இணையாக புதிய புதிய திட்டங்கள் மற்றும் மார்கெட்டிங் உத்திகள் இல்லை. அதனால், பிற நிறுவனங்கள் போல பெருவளர்ச்சி என்பது குறைவே!

நிறைகள்


1, எல்.ஐ.சியின் பங்குகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை என்பது, அந்த நிறுவனத்தின் சொத்துகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவே. அதன் உண்மையான மதிப்பிற்கேற்ப இந்த பங்குகளின் விலை உயர்ந்து கொண்டே போகும்.

2, இன்றைக்கும் இந்தியாவின் மிகப் பெரிய நம்பிக்கையான நிறுவனம். செலவு செய்து வருமானம் ஈட்டும் நிறுவனம் இல்லை இது. வருமானத்தை வாங்கிக் கொண்டு அதில் சிறு செலவு செய்யும் நிறுவனம். (ரிஸ்கே இல்லாத பிஸினஸ்)

3, இந்தியாவிலேயே மிக அதிகமான முகவர்களைக் கொண்ட இன்ஸூரன்ஸ் நிறுவனம்.

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போல, மிகவும் பாதுகாப்பான முதலீட்டிற்கு இந்தியாவில், வேறு எந்தத் துறை நிறுவனங்களை விட, இந்தியாவில் வேறு எந்த இன்ஸுரன்ஸ் நிறுவன முதலீட்டினை விட எல்.ஐ.சி நீண்டகால முதலீட்டிற்கு மிக மிக அருமையான நிறுவனம். நல்ல முதலீடுகள் நம் சொத்து மதிப்பினையும் வளர்க்கும்.

முக்கிய குறிப்பு :
எல்.ஐ.சி நிறுவன பங்கு ஐபிஓ வில் கிடைத்து விட்டால், உடனே சென்னை அண்ணாசாலையில் இருக்கும் எல்.ஐ.சி பில்டிங்கில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று அங்கே போய் பிரச்சினை பண்ணக்கூடாது.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.