இணையப் பயன்பாட்டில் நாம் பலப்பல சுருக்குப் பெயர்களை (acronym) சொல்லக் கேட்போம் – ISP, IP, DNS, URL, … ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால், ஒரு சாதாரண இணையப் பயனாளி இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை! இவற்றை விட நம்மில் பலர் கேள்விப்பட்ட, அதே சமயம், நாமும் பயன்படுத்த வேண்டுமோ என்று எண்ணிய ஒரு சுருக்குப் பெயர் VPN – Virtual Private Network – மெய்நிகர் தனிப் பிணையம்.
இணைய (internet) வழி பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்றதாக இல்லாததால் அதில் பல பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கிய கணினி வல்லுனர்கள், தனியுரிமையை (privacy) முழுமையாகக் கொண்டு வர முடியவில்லை. அதனைக் கொண்டுவர உருவாக்கப்பட்ட கருத்துரு தான் VPN!
அவ்வப்போது நாம் கேட்கும் செய்திகளில் இடம்பெறுவது தகவல் திருட்டு, அதாவது, இன்னென்ன தகவல்களை குறிப்பிட்ட வங்கியோ, அல்லது வர்த்தக நிறுவனமோ கணிப்பறியின் (hacking) காரணமாக இழந்தது அல்லது திருடப்பட்டது என்று! நம் சொந்தப் பயன்பாட்டில் உள்ள கணினி மற்றும் கைபேசிகளின் பாதுகாப்பும் சில சமயங்களில் கேள்விக்கு உள்ளாகிறது. நம் வீட்டின் வாசற்கதவினை சரியாகத் தாழிட்டு வீட்டினை பத்திரப் படுத்துகிறோமோ இல்லையோ, கணினி மற்றும் கைபேசிகளை பத்திரப் படுத்துவதில் கவனம் அதிகம் செலுத்துகிறோம், செலுத்த வேண்டிய சூழலும் உள்ளது.
இதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கியமானவை-
- நம் மின்னஞ்சல், வங்கி மற்றும் சமூக வளவத்தாள கடவுச் சொற்களை நீளமானதாக வைத்தல்
- ஈர்-காரணி உறுதிப் படுத்தலை (two factor authentication) செயற்பாட்டில் வைத்தல்
இவ்விரண்டைத் தவிர மூன்றாவதாக சிலர் மேற்கொள்வது தான் VPN பயன்பாடு.
VPN உறுதியாக தனியுரிமையைக் காக்கும் என்றோ (fool proof), பயனாளரின் அடையாளங்களை முழுமையாக மறைக்கும் (anonymous) என்றோ சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவிற்கு பாதுகாப்பைக் கொடுக்கும், இருக்கும் வாய்ப்புகளில் இது நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம்.
VPN பயன்படுத்த நாம் ஒரு VPN சேவையகத்தை நாடி, அதன் சேவைகளைப் பெற வேண்டும். சில சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன, சிலவற்றை நாம் மாதச் சந்தாவோ அல்லது வருடச் சந்தாவோ செலுத்தி பெற வேண்டி இருக்கும். இலவசமாகக் கிடைக்கும் பொருள் அல்லது சேவை எந்த அளவிற்குப் பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்த முடியாது. இவ்வுலகில் எதுவுமே இலவசம் கிடையாது, அப்படி நமக்கு இலவசமாக ஒன்றைக் கொடுக்க ஒரு நிறுவனம் முன்வருகிறது என்றால் அது நம்மையே இலவசமாக அதன் பயன்பாட்டிற்கு பெற்றுக் கொள்கிறது என்றே பொருள்!
இணைய வசதியை ரிலையன்ஸ், ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் நமக்குக் கொடுக்கின்றன. நம் கணினி அல்லது கைபேசிய இணையத்துடன் இந்நிறுவனங்கள் இணைக்கின்றன. இணையத்தில் நாம் உலவும் பொழுது, நம் தகவல்கள் நேரடியாக ஒரு சேவையகத்தை அடைகிறது. உதாரணமாக, நாம் Facebook பயனராக இருந்தால், அதன் சேவையகத்துடன் (server) நம் கணினி அல்லது கைபேசி தன்னை இணைத்துக் கொண்டு, தன் தேவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளும். இந்த வகை இணைப்பில், நமக்கு இணைய சேவை கொடுக்கும் நிறுவனங்கள் (ISP – Internet Service Provider) நம் பயன்பாட்டினைப் பற்றிய தகவல்களை சேமித்து வைக்கும், இதற்கு logging என்று பெயர். நாம் எந்த நேரத்தில், எந்தெந்த வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தோம் என்பதை இணைய சேவை நிறுவனங்கள் தேவைப்படின் அரசு / காவல்துறை போன்றவற்றிற்கு கொடுக்க முடியும். ஜனநாயகம் இல்லாத சீனா போன்ற நாடுகளில் மக்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கவே காவல்துறையில் பெரிய பிரிவு அல்லும்-பகலும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. மேலும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் அரசு தடை செய்த வலைத்தளங்களை நாம் பார்க்க முடியாதபடி செய்துவிடும்.
இதில் இருந்து விடுபட்டு, நாம் அடையாளம் இன்றி, இணையத்தில் உலவவும், இணைய சேவை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவும் VPN பயன்படுகிறது. VPN, அதன் பயனாளரின் தகவல் பரிமாற்றத்தை குறிமுறையாக்கம் (encryption) செய்வதோடு மட்டுமல்லாமல், அடையாளங்களையும் மறைக்கிறது. அதனால் இணைய சேவை நிறுவனம், நாம் VPN பயன்படுத்துகிறோம் என்று தெரிந்து கொள்ளுமெ தவிர, நாம் இணையத்தில் எங்கெங்கு உலவினோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இதனால் தான் VPN, நமக்கு இணையத்தில் ஒரு தனிப் பாதையை / சுரங்கத்தை (tunnel) அமைத்துக் கொடுக்கிறது என்கிறோம்.
இது தவிர, ஒரு VPN சேவையகம் நம்மை வேற்று நாட்டில் இருப்பதாகக் கூட காட்ட முடியும் – உதாரணமாக, YouTube தளத்தில், நம் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு காணொளியை, நம் நாட்டில் இருந்து கொண்டே, வேறு ஒரு நாட்டில் இருப்பது போலக் காட்டி, அக்காணொளியைப் பார்க்க முடியும்.
இவ்வாறெல்லாம் செய்யத்தான் VPN வடிவமைக்கப்பட்டதா என்றால், இல்லை. VPN முதலில் வடிவமைக்கப்பட்டதன் காரணம், பெரு நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் அலுவலகங்களையும், பணியாளர்களையும் பாதுகாப்பாக தங்கள் கணினி வலைப்பின்னலில் இணைத்துக் கொள்ளத்தான் வடிவமைக்கப்பட்டது. தங்களுக்கென்று பொது இணையத்தில் ஒரு தனித் தகவல் பாதை அமைத்து, பாதுகாப்பாக தங்கள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவே VPN வந்தது, அது பின் வளர்ந்து தனிச் சேவைகளை கொடுக்க VPN சேவை நிறுவனங்கள் முளைத்தன.
VPN நமக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டும், நம் அனைவருக்கும் VPN அவசியப்படாது. காரணம், தற்போது பெரும்பாலான இணையச் சேவைகள் குறிமுறையாக்கத்தில் தான் இயங்குகின்றன. வலைத்தள முகவரியில் https என்ற பதத்தை பலர் கவனித்து இருக்கலாம், இதில் இருக்கும் ‘s’, secure என்பதைக் குறிக்கும். இவ்வகை வலைத்தளங்கள் செய்யும் தகவல் பரிமாற்றம் குறிமுறையாக்கம் செய்யப்பட்டே நடக்கும் – உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கை online மூலம் பார்ப்பது முதல், உங்கள் சமூக வலைத்தளப் பக்கம் வரை தற்போது அனைத்தும் குறிமுறையாக்கப் பரிமாற்றம் தான்.
உங்களுக்கென்று வீட்டிலோ, கைபேசியிலோ தனி இணைய சேவை வசதி இருக்கிறது, தங்கள் வலைத்தள உலவல்கள் பற்றிய விவரங்கள் சாதாரணமானவை என்று இருக்கும் பட்சத்தில், VPN உங்களுக்கு அவசியம் இல்லை.
அதே சமயம், பொது இடங்களில் கிடைக்கும் இணைய வசதியை (விமான நிலையம், ரயில் நிலையம், தேநீர் கடை) பயன்படுத்துபவராக இருந்தால் VPN அவசியம், காரணம், பொது இணைய வசதியை பலர் பயன்படுதுவர், அதில் மற்றவரின் நோக்கம் என்ன என்பது தெரியாது, உங்கள் உலவலை மற்றவர் உளவு பார்க்கலாம், நீங்கள் என்னென்ன உள்ளீடு செய்கிறீர்கள் என்பதனை எளிதாகப் பார்க்க முடியும். பொது இணைய வசதியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கையோ அல்லது மின்னஞ்சல் கணக்கையோ பயன்படுத்த கடவுச் சொல்லை உள்ளீடு செய்தால், அதனை அதே பொது இணையத்தில் உலவும் கணிப்பறியாளர் (hacker) எவரேனும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்.
VPN பயன்பாட்டால் ஏற்படும் ஒரு முக்கியமான சிக்கல், இணையத்தின் வேகம் குறைவது – காரணம், நாம் நேரடியாக நமக்குத் தேவையான வலைத்தளத்தினை அடையாமல், நடுவில் ஒரு VPN தரகர் மூலம் அடைவதால் தகவல் பரிமாற்றத்தின் பாதை நீள்கிறது, அதனால் நாம் பயன்படுத்தும் வேகம் குறையும். மேலும், இலவச VPN சேவையைப் பயன்படுத்தினால் நமக்குத் தேவையில்லாத விளம்பரங்கள் வருவதோடு, பயன்பாட்டு வேகமும் VPN சேவையகத்தால் கட்டுப்படுத்தப்படும்.
இந்தியாவில் VPN பயன்பாடு அனுமதிக்கப்பட்டது தான், அதே சமயம், VPN சேவை சட்டதிற்கு புறம்பான செயல்களை ஊக்குவிப்பதற்கானது அல்ல.
பிணையமா? Networkkகு வேறு நல்ல வார்த்தை கிடைக்கலையா? பிணையம் என்பதற்கு வேறு அர்த்தம் ஏற்கனவே உண்டு
பிணைப்பு என்ற சொல்லை வைத்து உருவாக்கப்பட்ட வார்த்தை அது, கணினி உலகில் புழக்கத்தில் உள்ள வார்த்தைதான்.