வருடம்: 1992
இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!!
“வாத்தியார் வந்தாச்சு. ஆக வேண்டியதைப் பாருங்கோ. ஏற்கனவே நாழி ஆயிடுத்து.” யாரோ ஒருவர் குரல் கொடுக்க,
“யாரு, கர்த்தா. கர்மால்லாம் யாரு பண்ணப் போறா. மாமாவோட அண்ணாவும், மன்னியும் வந்துருக்கா. சௌந்தரம் மாமியோட தங்கையும், அக்காக்கள் ரெண்டு பேரும், அத்திம்பேரும் வந்துருக்கா. வேற சொந்தம்னு யாரும் வரலை. அவாளண்டையே கேளுங்கோ. யாரு பண்ணப் போறான்னுட்டு.”
“என்னத்தைக் கேட்கறதுங்கானும். அவா யாருமே எடுத்து நடத்தத் தயாரா இல்லை.” ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி சண்டை போட்டுண்டிருக்கா.
வாத்தியார் இவர்கள் பேச்சைச் செவிமடுத்துவிட்டு “நான் பேசிப் பார்க்கறேன்” என்றார்.
இவர் உள்ளே நுழையும் போதே அங்கு ஏற்கனவே ஒரு சர்ச்சை நடந்து கொண்டிருந்தது.
ரங்கப்ரியனின் மன்னி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு கர்மாவை எங்காத்துக்காரர் ஏத்துக்கணும். கூடப் பொறந்த அம்பிதான் இல்லைங்கலே. ஆனா இத்தனை வருஷமா அண்ணா மன்னின்னு நாங்க ஒருத்தர் இருக்கோமே. ஒரு நாளாவது எங்களை மதிச்சிருப்பானோ. என் மாமனாரும் மாமியாரும் என்னை ராட்சஸியாட்டமும், இவளை அம்பாளாட்டமும்னா பார்த்தா. எங்காத்துக்காரரும் நானும் சொல்லச் சொல்லக் கேட்காம அவாளை அழைச்சிண்டு வந்து இந்தப் புறாக் கூண்டுல அடைச்சு வைச்சானே. அவா போனப்போ கூட அண்ணா வரதுக்கு முந்தியே தான் காரியம் பண்ணினானே. இப்போ மட்டும் இவர் பொறுப்பேத்துக்கணுமாக்கும்”
ரங்கப்ரியனின் அண்ணா ஒரு ஓரமாக மனைவி சொல்லே தாரக மந்திரமாகக் காதில் வாங்கிக்கொண்டு கடனே என்று அமர்ந்திருந்தார்.
“ஆமாம். நீங்க மாமனார் மாமியாரைப் பார்த்துண்ட அழகுதான் இந்த ஊர் உலகத்துக்கே நன்னாத் தெரியுமே. எங்க அக்காவும், அத்திம்பேரும் இல்லைன்னா நாறியிருப்பா அவா ரெண்டு பேரும் உங்ககிட்ட கிடந்து. அவா போனப்போ நீங்கதான் எல்டிஸி’ல வடக்க டூர்ன போயிருந்தேள். நீங்க டெல்லிலேர்ந்து வர்றவரைக்கும் ஒன்னுக்கு ரெண்டா பொணத்த வைச்சுண்டு காத்துண்டா இருப்பா. இன்னிக்கு இவ்ளோ பேசரேளே. ஏன் அத்திம்பேர்தான் அம்மா அப்பா உடம்பு சரியில்லை, எப்ப வேனாலும் எதுவும் நடக்கலாம்னு நாலு நாள் மின்னாடியே தகவல் தந்தாரோல்லியோ. அப்புறமும் எங்களுக்கென்னன்னு டூர்தான் முக்கியம்னு புறப்பட்டுப் போனவாதானே நீங்க. பேச வந்துட்டா பெரிசா.”
“ஏய் கோமளம். வாயை அடக்கிப் பேசு பார்த்துக்கோ. இந்த மாதிரி வாய்த்துடுக்கா இருக்கறதாலதான் புருஷனைப் பரிகொடுத்துட்டு மொட்டை மரமா நிக்கறே.” பதிலுக்கு மன்னி ஷ்யாமளா சாட்டை சொடுக்கினாள்.
அதற்குள் சௌந்தரத்தின் சின்னக்கா பாய்ந்து வந்தாள்.
“தோ கேட்டேளா. எந்தங்கையைப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. உங்க வாய்தான் ஊரொலகம் அறிஞ்சதாச்சே. துக்கிரி நாக்குன்னா.”
இவர்கள் சண்டையைப் பார்த்ததும் சௌந்தரத்திற்கு மேலும் துக்கம் தொண்டையை அடைத்தது. அவளுக்கு நன்றாகத் தெரியும் தன் தங்கை தனக்காக வாதாடவில்லை என்று. அவளின் பிறவி குணமே அதுதான். வாய்ப்பு கிடைத்தால் யாரானாலும் கிழித்துத் தொங்கவிட்டு விடுவாள். ஓர்ப்படியும் அதே ரகந்தான். சண்டைக்கு இடம் கிடைத்தால் போதும். கோர்ட்டில் வக்கீலாக இருந்திருக்க வேண்டியவள். இவள் வாய்க்குப் பயந்து பயந்தே மாமனார் மாமியார் ஒடுங்கிப் போனார்கள். சௌந்தரம்தான் “போதும்னா. இந்த வயசான காலத்துல அவாளுக்கு இதெல்லாம் தேவையா. உங்கண்ணா மன்னி கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டார். கூட்டிண்டு வந்துடுங்கோ. கஷ்டமோ நஷ்டமோ அவாள நாமே பார்த்துப்போம்” என்று அழைத்து வரவைத்தாள். மாமனார் மாமியார் இருந்தவரை இவர்களை மைத்துனரும் ஓர்ப்படியும் என்ன என்று கூட ஏறெடுத்தும் பார்த்ததில்லை. பணமும் பதவியும் இருந்ததால் இவர்களைக் கிஞ்சித்தும் மதித்ததில்லை. அக்காக்களும் அதே ரகந்தான். தங்கையிடம் அவள் ஆத்துக்காரர் வழி வந்த சொத்தும், நிலபுலன்களும் இருந்ததால் எப்பொழுதுமே அவளுக்கு ஆதரவாகத்தான் நிற்பார்கள். இவளும் அவர்களிடம் உதவி என்று ஒரு நாளும் போய் நின்றதில்லை. அவர்களாக எப்போதாவது ஏதாவது சிறு உதவிகள் செய்துவிட்டு பின்னால் அதையே பெரிது படுத்திப் பத்துத் தடவை சொல்லிக் காட்டிக் கொண்டு இருப்பார்கள்.
“அக்கா அவாதான் வாதாடரான்னா நீங்க எல்லாரும் சரிக்குச் சரி வாயாடறேளே. இது சண்டை போடற நேரமா.” அழுகையும் கேவலுமாக சௌந்தரம் கேட்கவும் மூத்த அக்கா பொங்கி எழுந்து வந்தாள்.
“ஆமான்டியம்மா நாங்கதான் நோக்கு சண்டைக்காராளா தெரியரோம். இத்தனை நாளா நாங்க பண்ணின உதவியெல்லாம் மறந்துடுத்து. இப்போ புக்காத்துச் சொந்தம்தான் பெரிசா தெரியறது நோக்கு. இப்போ அத்திம்பேர் இல்லையான்னா யாரு கொள்ளி வைப்பா, கர்மா பண்ணுவா. சுட்ட கைக்கு மோதிரம் போடனும்பா. அதுக்கு வழியிருக்கா நோக்கு. கர்மாவுக்கே செலவழிக்க வக்கில்லை. நாங்க பார்த்துதான் செய்யனும். இந்த லக்ஷணத்துல எங்ககிட்ட கேள்வி கேக்கறா. ஏன் இந்தக் கேள்வியை உன் ஓர்ப்படியைப் பார்த்து கேட்க வேண்டியதுதானே.”
கூடவே இரண்டாவது அக்காவும் சேர்ந்து கொண்டாள். “அவளுக்கு நாமெல்லாம் அவளை விட நன்னா இருக்கோமேன்னு வயத்தெரிச்சல். இவளோட வயத்தெறிச்சல்தான் ஜானகியை வாழவிடாம பண்ணிடுத்து.”
வைதேகி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் கோபத்தில் பொங்கி விட்டாள்.
“ச்சீ நீங்கள்லாம் மனுஷாளா மொதல்ல. இந்த மாதிரி சூழ்நிலைல கூட இப்படி நடந்துக்கறேளே. நீங்கள்லாம் இது வரைக்கும் எங்களுக்குப் பண்ணினது போதும். நானே எங்கப்பாவுக்கு கொள்ளி வைச்சுக்கறேன். அவரோட கடைசி ஆசையும் அதுதான். கடைசிக் காரியத்துக்குத் தேவையான காசை சேர்த்து வைச்சுட்டுதான் எங்கப்பா போயிருக்கார். போங்கோ வெளில எல்லாரும்.”
“போரோண்டியம்மா. வாயப்பாத்தியோ. இதனாலதான் நோக்கு இன்னும் வரன் குதிராமைக்கு இருக்கு. உங்கப்பனுக்கு கொள்ளி வைச்சுட்டு நீயும் உங்கம்மையும் அதுல சேர்ந்து குதிச்சுடுங்கோ.”
கேட்டுக் கொண்டிருந்த பட்டு வாத்தியாருக்கு அருவருப்பாக இருந்தது.
“ச்சே என்ன மனுஷா இவாள்ளாம். இப்படியும் உறவுகள் இருப்பாளா” என்று தோன்றியது.வைதேகியை அழைத்தார்.
“அம்மாடி கோந்தே. இங்க வா.”
தொடரும்……
அடுத்த அத்தியாயத்தில் நிறைவு பெறும்.
அருமையான மினி தொடர். ஆழ்ந்த கருத்துக்கள்….. மூன்று பாகமாய் பிரித்ததால் சஸ்பென்ஸ் சஸ்டெயின் செய்த விதம் அருமை…….. நெகிழ்வாக முடிவு.