ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம்
உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார்.
பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார்.

” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…”
“வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர்.
சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார்.
நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும்.
மிக சரியான மனிதர்
அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேரு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.
ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது.
சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் .
சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார்.
இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார்.
ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர்.
அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.
அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார்.
சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார்.
அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர்.
சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார்.
- ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர்
- ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர்.
சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம்
இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர்.
கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன்.
வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார்.
அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன்.
மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது.
சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான்.
இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான்.
சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன.
தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின் மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள்.
அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான்.
நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார்.
இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையலாம்” என ஒரு விமோசனம் கூறினார்.
விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான்.
அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர்.
சாபக்காலத்தில் கிடைத்த வரம்
அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்ததுடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தபின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவழித்தனர்.
ரிஷியின் சாபம்
அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர்.
பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார்.
இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர்.
குந்தியின் வரம்
அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான்.
முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள்.
காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான்.
குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது.
நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி
ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான்.
அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார்.
ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகைய துன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார்.
” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “
இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார்.
ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில்அவமானப்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!!
பழிவாங்கும் தீ – அம்பை
அஷ்ட வசுக்கள்
அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர்.
வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார்.
“ நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்க வேண்டும் “
அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார்.
இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள்.
முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார்.
சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறான். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள்.அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் .அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான்.
பழிவாங்கும் தீ – அம்பை
சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.
அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான்.
இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான்.
மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள்.
ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும்.
அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர்.
இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை.
அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள்.

மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது.
பதிலுக்கு பதில்…
துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், க்ருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார்.
வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள்.
இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.
இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர்.
முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன்.
தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார்.
தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால்.
திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள்.