பழிக்கு பழி

அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் ஏகசக்கரம் என்ற நகரில் பிராமணர்களாக வேடம் பூண்டு ஒரு பிராமணரின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் . தினமும் அந்நகரத்தில் பிக்ஷை எடுத்து உண்டு வந்தனர் .

அத்தகைய சமயத்தில் ஒரு நாள் , சகோதரர்கள் நால்வரும் பிக்ஷை எடுக்க வெளியே சென்றிருக்கையில் பீமன் மட்டும் தன் தாய் குந்தியுடன் வீட்டில் இருந்தான் . அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளரின் பகுதியில் எதோ குழப்பமான விவாதம் நடப்பது அவர்கள் காதில் விழுந்தது .

“அன்பே! நீ கூறுவதுபடி , நீ எங்களை விட்டு பிரிந்து சென்றால் நான் என்ன செய்வேன்? நம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நம் சிறு மகளை நாம் காப்பாற்ற வேண்டும். மேலும் , நம் குலத்தையும் காப்பாற்ற வேண்டும்.” என அந்த வீட்டின் உரிமையாளர் தன் மனைவியிடம் கூறினார் .

“நாதா! நான் போய்தான் ஆக வேண்டும். நீங்கள் செல்ல நான் அனுமதிக்க இயலாது. கணவன் இல்லாமல் , குழந்தைகளை எப்படி ஒரு பெண் பாதுகாக்க இயலும் ? மேலும் , அப்பாவி குழந்தைகள் தந்தை இல்லாமல் எங்ஙனம் வளர்வார்கள்? எனக்கு இறப்பை பற்றிய எந்த கவலையோ பயமோ இல்லை. நான் இறந்த பிறகு நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனமாக வளருங்கள்” என்று அவருடைய மனைவி பதில் கூறினாள்.

இதைக் கேட்ட அவர்களின் சிறு பெண் ” நான் சிறு பெண்தான் . இருந்தாலும் , நான் சொல்வதை இருவரும் கேளுங்கள் . நீங்கள் இறந்துவிட்டால், சிறு குழந்தைகளான நானும் என் தம்பியும் என்ன செய்வோம்? என்னை செல்ல நீங்கள் அனுமதித்தால் , உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்” என கூறினாள்.

இதைக் கேட்ட பெற்றோர் இருவரும் அவளை அனைத்துக் கொண்டனர் . நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் சிறு மகன் கையில் ஒரு தடி எடுத்துக் கொண்டு வந்து ” ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்? யாரும் பயப்பட வேண்டாம். நான் சென்று அந்த அரக்கனை கொன்று விடுவேன் ” என கூறியதைக் கேட்டு அந்த துயரமான நிலையிலும் அனைவரும் சிரித்தனர் .

அந்த சமயத்தில் அங்கே வந்த குந்தி ” நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா ? ” என வினவினாள்.

“சகோதரி ! பகாசுரன் என்ற அசுரன் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து இந்த நகரின் ராஜாவை கொன்று நகரைக் கைப்பற்றிக் கொண்டான் . பின், வெறி கொண்டவனாய் நகரத்தில் இருக்கும் மக்களை கொல்ல துவங்கினான் . அவனது அராஜகத்தை சமாளிக்க முடியாத மக்கள் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர் . அதன்படி , ஒவ்வொரு வாரமும் , வண்டி நிறைய உணவுப் பொருட்களுடன் ஒரு மனிதரை அனுப்புவதாய் ஒத்துக் கொண்டனர். அதன்படி , ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவர் உணவு கொண்டு செல்லவேண்டும் . அந்த உணவுடன் , உணவு எடுத்து செல்லும் நபரையும் பகாசுரன் விழுங்கி விடுவான் . இந்த வாரம் உணவு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் குடும்பத்தின் முறை. “

” மக்களை காப்பாற்ற வலிமையான அரசரோ இளைஞர்களோ இல்லாதபட்சத்தில் வலிமையற்ற சாதாரண மனிதர்களாகிய நாங்கள் என்ன செய்ய? ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத எங்களால் என்ன செய்ய முடியும்? பேசாமல் , நாங்கள் நால்வருமே அவனுக்கு உணவாக செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என அவர் நிலைமையை குந்திக்கு விளக்கினார் .

“சகோதரரே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு ஐந்து மகன்கள் . அவர்களில் ஒருவன் இந்த முறை அசுரனுக்கு உணவெடுத்து செல்லட்டும் ” என குந்தி கூற அதை அந்த பிராமணர் மறுத்தார் .

“என்னுடைய மகன் பீமன் மிகவும் பலம் பொருந்தியவன் . ஏற்கெனவே அவன் பல அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றிருக்கிறான். எனவே நீங்கள் அதை எண்ணி பயப்பட வேண்டாம். உங்களுக்கு பதில் அவன் செல்வான்” என குந்தி உறுதி அளித்தாள்.

குந்தியின் உத்தரவின் படி இரண்டு வண்டிகள் நிறைய உணவுப் பொருட்களுடன் பகாசுரன் இருந்த குகை நோக்கி சென்றான் பீமன் . அந்த குகையை அடைந்தவுடன் வண்டியை நிறுத்திய பீமன் வண்டியில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிடத் துவங்கினான் . பகாசுரனுடன் சண்டையிடும் பொழுது அந்த உணவு கீழே விழுந்து வீணாகிவிடும். மேலும், அவனைக் கொன்றவுடன் குளிக்காமல் உன்ன இயலாது என அவ்வாறு செய்தான் .

உணவின் சுவை நாசியில் ஏற தன் குகையில் இருந்து வெளிவந்த பகாசுரன் , தனக்கான உணவுப் பொருட்களை மானிடன் ஒருவன் உண்பதைக் கண்டு கோபம் கொண்டு தாக்கத் துவங்கினான் . துவக்கத்தில் , அவனது தாக்குதலை கண்டுகொள்ளாத பீமன், ஒரு கையால் உணவருந்திக் கொண்டே மாரு கை கொண்டு அசுரனுடன் சண்டையிட்டான் . உணவுகளை முழுவதும் உண்ட பின் , அங்கிருந்த மரத்தைப் பிடுங்கி அசுரனை தாக்க பதிலுக்கு அசுரன் எறிந்த கற்களை விளையாட்டாக தடுத்தான் . பின் பகாசுரனை தூக்கி தரையில் எறிந்து கொன்று அந்நகர மக்களுக்கு விடுதலை தந்தான் .