அழியாத மனக்கோலங்கள் – 13

This entry is part 13 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

அன்று இரவு அசந்து தூங்கினாலும் சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். எழுந்து பல் விளக்கி காலைக்கடன் முடித்து குளித்து தலை வாரிக் கொண்டிருந்த பொழுது சின்னசாமி உள்ளே நுழைந்தார்.

“நல்லாத் தூங்கினீங்களா, சார்?” என்றார்.

“நல்ல களைப்பு சின்னசாமி. அதனால் அடித்துப் போட்டாற் போலத் தூங்கி விட்டேன்..”

“அதான் சார் உடம்புக்கு நல்லது. இன்னிக்கு ட்யூட்டிலே ஜாயின் செய்யணும் இல்லையா?”

“ஆமாம், சின்னசாமி..”

“அதான் உங்ககிட்டே சொல்லலாம்ன்னு வந்தேன். நான் கிருஷ்ணகிரி வரை போக வேண்டியிருக்கு.. ரூம் சாவியை நீங்களே வைச்சிக்கங்க.. மதியத்துக்கு மேலே தான் நான் வருவேன்.. நான் வர்றேன்..” என்று சின்னசாமி கிளம்பினார்.

“கேண்டினுக்குப் போனீங்களா?”

‘டீ மட்டும் குடிச்சிட்டு வந்தேன். அது போதும். இப்ப ஏழரைக்கு கிருஷ்ணகிரி பஸ் வரும். அதிலே போய்ட்டு மாலை திரும்பிடறேன்..” என்று சின்னசாமி கிளம்பினார்.

குளித்து உடை மாற்றிக் கேன்டினுக்குப் போனேன். ஜவஹர்லாலைக் காணவில்லை. கவுண்டரில் வேறு யாரோ இருந்தார்கள்.

மறுபடியும் இட்லி தான். சட்னி, சாம்பார் என்று எல்லாமே காரமாக இருந்தன. மனசுக்குப் பிடித்து சாப்பிட முடியவில்லை. கடைசியில் சக்கரையைத் தொட்டுக் கொண்டு இட்லித் துண்டுகளை விழுங்கினேன். காப்பி குடித்தவுடன் ஒரு நிறைவு ஏற்பட்டது.

அலுவலகத்தில் தலைமை எழுத்தரை சந்தித்து வேலை வாய்ப்பு அலுவலக கடிதத்தைத் தந்தேன்.

“ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்கோம். நல்லவேளை, இப்பவாவது ஒரு டைப்பிஸ்ட்டை அலாட் பண்ணினாங்களே..” என்ற ஏக குஷியில் சொன்னவர், வேலையில் சேரும் கடிதம் ஒன்றை எழுதித் தரச் சொன்னார். ஜாப் டைப்பிஸ்ட்டாக இருந்த அனுபவம் இந்த மாதிரி கடிதம் எழுதுவதெல்லாம் தண்ணி பட்ட பாடாக இருந்தது.

“ஏஇ சேலம் கேம்ப். நான் புட் அப் பண்ணிடறேன்.. நீங்கள் இப்பொழுதிலிருந்தே உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்..” என்ற சற்று ஒதுக்குப்புறமாக ஒரு சுவருக்குப் பின்னால் இருந்த தட்டச்சு மிஷினைக் காட்டினார். அதான் உங்க சீட்.. பை த பை இந்தாங்க தற்காலிக ஸ்டாப் ஃபைல். இதைப் பார்த்து நீங்க இன்னிக்கு இங்கே வேலைலே சேர்ந்த லெட்டரையும் புட் அப் பண்ணிடுங்க..” என்று என்னிடம் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கொடுத்தார்.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. “சரி, சமாளிச்சிடலாம்..” என்ற ஒரே நம்பிக்கையில் என் இருக்கையில் அமர்ந்தேன். தட்டச்சு இயந்திரத்தின் மேல் மூடியிருந்த ப்ளாஸ்டிக் கவரை கழற்றினேன்.

அன்று ஆரம்பித்தது தான் அடுத்த ரெண்டு மாசமும் வேலை பிழிந்து தள்ளி விட்டது. நேற்று வரை கையால் எழுதிய இரண்டு வரி கடிதங்கள் எல்லாம் தட்டச்சுக்காக என் டேபிளில் கொண்டு வந்து வைக்கப்பட்டன. நிறைய ஃபைல்களின் மேல் அர்ஜெண்ட் என்ற tag கட்டியிருக்கும். அதையெல்லாம் எடுத்து தனிக் கவனம் செலுத்தி உடனடியாக தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்..

அப்புறம் தான் ஒரு நாள் தெரிந்தது. அந்த ஆபிஸில் அட்ஜெர்ண்ட் ஃபைல் கவர்கள் மட்டும் தான் ஸ்டாக்கில் இருப்பதாகவும் அதனாலேயே எல்லோரும் அதையே உபயோகப்படுத்துவதாகவும்…..

சாப்பாடு தான் எனக்கு ஒத்துக் கொள்ளவே இல்லை. டிசண்ட்ரி, வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் என்று.. இரண்டு நாட்கள் நன்றாக இருந்தால் நான்கு நாட்கள் உபாதை என்று நாட்களைப் பிடித்துத் தள்ளுவதாக இருந்தது.அலுவலகம் இல்லாத நேரங்களில் சின்னசாமியும், கேண்டின் ஜவஹர்லாலும் தான் பேச்சுத் துணையாக இருந்தார்கள். ஜவஹர் அவர் அப்பாவைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லுவார்.

இரண்டு மாத காலம் முடியற தருணத்தில் ஒருநாள், “ஏ.இ. உங்களைப் பார்க்க விரும்புவதாக நேற்றே சொன்னார். மறந்து விட்டேன். அர்ஜெண்ட்டா சேலம் கிளம்பிண்டிருக்கார். குவார்ட்டர்ஸில் தான் இருக்கார். அவரைப் பார்த்திட்டு வந்திடறீங்களா?” என்று த.எ. என்னிடம் கேட்டார்.

இது வரை ஏ.இ. வீட்டுக்கு போனதில்லை.. “தோ.. எதிர்த்தாற்பல தான். ரோஸ் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் பாருங்க.. கிளம்பிடப் போறார். சீக்கிரம் போங்க..” என்றார் தலைமை எழுத்தர்.

என்னவோ ஏதோ என்று போனேன். கதவு சாத்தியிருந்தது. காலிங் பெல் அடிக்கலாமா, வேண்டாமா என்று நான் தயங்கிய பொழுதே “யாரு.. ” என்று கேட்டபடியே வெளியே வந்தார்.

என்னைப் பார்த்ததும் அந்த அவசரத்திலும் அவர் முகம் மலர்ந்தது. “உள்ளே வாங்க..” என்றார்.

செருப்பை கழற்றி விட்டு உள்ளே போனேன்..

எந்த பந்தாவும் இல்லாமல் “உட்காருங்க..” என்றார். அவர் நின்று கொண்டிருக்கிறாரே என்று உட்காரத் தயக்கமாக இருந்தது. “உட்காருங்க.. இதோ வந்திட்டேன்..” என்று உள்ளே போனார்.

அவர் சொல்கிறாரே என்று உட்கார்ந்தேன். அடுத்த நிமிஷமே வெளியே வந்தவர், “ராமன்… ஒண்ணு கேக்கணும். நாளைக்கு உங்க டெனியூர் முடியறதா சொன்னாங்க.. இன்னும் இரண்டு மாசத்துக்கு அதை நீட்டிக்கலாமா?.. அது முடியற தருணத்திலே இன்னும் இரண்டு மாசம்ன்னு மொத்தம் நீங்க இங்கே ஆறு மாசம் இருந்தாப் போதும்.. நிறைய வேலை தேங்கிக் கிடக்கும்.. எல்லாத்தையும் முடிச்சிடலாம்.. என்ன சொல்றீங்க.. நீங்க எஸ்ன்னா, இன்னிக்கு சேலம் போறேன். அப்படியே இதுக்கு ஈ.ஈ. கிட்டே சாங்கஷனும் வாங்கிண்டு வந்திடுவேன்..” என்றார்.

நான் தயங்கினேன். எல்லாம் எனக்கேற்பட்டிருக்கிற வயிற்றுத் தொந்தரவு தான் காரணம். இந்த இரண்டு மாசத்தை ஒப்பேத்தறதே பெரிசா போயிடுத்து.
இன்னும் நாலு மாசம்ன்னா.. முடியவே முடியாது என்று மனசு ஓலமிட்டது. இதை எப்படி பக்குவமா, இவருக்குப் புரியற மாதிரிச் சொல்வேன்?..

“எதுனாலும் சொல்லுங்க.. முடியுமான்னு கேக்கறேன்.. அவ்வளவு தானே?” என்றார்.

“சார். மன்னிக்கணும்.. நான் ஊருக்குப் போயே ஆகணும்.. எங்க அம்மாவுக்கு ரொம்ப முடிலேன்னு லெட்டர் வந்திருக்கு..” என்று சட்டென்று மனத்தில் தோன்றியவாறு உளறினேன்..

“அப்படியா?.. இதை நீங்க சொல்லயில்லையே?” என்று சட்டென்று துடித்துப் போனார். “கடைசி நாள் ஒர்க் பண்ணியே ஆகணுமே?” என்று கன்னத்தைத் தடவியவாறு யோசித்தார். “ஓண்ணு செய்யுங்க.. நான் ஹெட் கிளார்க்கிட்டே சொல்லிடறேன்.. நாளைக்கு எர்லியாகவே ரிலீவிங் ஆர்டர் வாங்கிங்க.. ப்யூன் கிட்டே சொல்லச் சொல்றேன். அவன் உங்களை மெயின் ரோடில்லே டூவீலர்லே கொண்டு விடுவான். பஸ்ஸைப் பிடிச்சு எப்படியும் சாயந்திரத்துக்குள்ளே போய்ச் சேர்ந்திடலாம்..” என்றார்.

எனக்கோ மனசு குழைந்து போயிற்று..

கிருஷ்ண மூர்த்தி சார் சுவற்றில் மாலை போட்டு மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தபடியே சொன்னார். “ராமன்! உலகம் பெரிசு.. ஆனா தாய் ஒருத்தி தான்..” அதைச் சொல்வதற்குள் அவர் குரல் நெகிழ்ந்து போயிற்று.

நானோ துடித்துப் போய் விட்டேன். ‘இப்படி ஒருவரிடம் போய் பொய் சொல்லி.. இது நியாயமா?.. ‘ என்று தவித்தேன்.

“சரி.. சரி.. நான் பாத்துக்கறேன்.. வேறே யாரையாவது வரவழைச்சாப் போச்சு..” என்று அவர் முடிவெடுத்த பொழுது, “நான் வர்றேன், சார்..” என்று வெளியே வந்தேன்.

அன்று பூராவும் அவர் சொன்னது என்னை வாட்டிக் கொண்டிருந்தது. எத்தனை வருஷம் ஆச்சு?.. இப்போக் கூட அந்த நல்ல மனுஷரை நினைக்கையில் அவர் சொன்ன வார்த்தைகள் ஸ்பெஷ்டமாக நினைவுக்கு வந்து மனம் நெகிழ்ந்து போகிறது..

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 12அழியாத  மனக்கோலங்கள் – 14 >>

About Author