அழியாத மனக்கோலங்கள் – 5

This entry is part 5 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

அன்று தபாலில் வந்திருந்த அந்தப் புத்தகம் தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம். அது கதம்பம் என்ற மாத இதழ். இலங்கை கொழும்புவிலிருந்து அந்நாட்களில் பிரசுரமான இதழ். இன்றைய குங்குமம் பத்திரிகை சைஸூக்கு இருக்கும். அந்த இதழின் ஆசிரியர் பெயர் மோகன். வாலிபர். கல்கண்டு தமிழ்வாணனின் மேல் அளப்பரிய அன்பு கொண்டவர். தமிழ்வாணன் மாதிரியே அதே பாணியில் குளிர்க் கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர். சின்னத் தமிழ்வாணன் என்றே அவரை அழைப்பாரும் உண்டு.

அந்த கதம்பம் பத்திரிகைக்கு சேலம் பகுதிக்கு முகவர் நமது எம்.என்.ஆர். தான். எனக்கு கதம்பம் காரியாலயத்திலிருந்து அனுப்பி வைத்திருந்த அந்தக் குறிப்பிட்ட இதழ் சேலம் விற்பனைக்காக அவருக்கு வந்து சேரவில்லை. அதற்குள் இலங்கையில் போஸ்ட் செய்யப் பட்டு காம்ப்ளிமெண்ட் காப்பியாக என் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.

அதில் என்ன விசேஷம் என்பதைச் சொல்கிறேன். இந்தப் பத்திரிகையில் ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’ என்று ஒரு போட்டியை வைத்திருந்தார்கள். அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டிருந்தேன். பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தால் அந்தப் போட்டியில் முதல் பரிசு எனக்குத் தான் என்று தெரிந்தது. அந்த நல்ல செய்தி தான் அன்றைய என் மகிழ்ச்சிக்குக் காரணம்.

அந்நாளைய குமுதம் பத்திரிகையின் பரம ரசிகன் நான். அதுவும் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் குமுதத்தில் தொடர்கதை எழுதுகிறார் என்றால் என் எதிர்பார்ப்பு எகிறும். அவர் தொடர்கதைப் பகுதியைப் பத்திரிகையிலிருந்து பிரித்தெடுத்து சேர்த்து வைத்து பின் மொத்தமாக பைண்ட் பண்ணி பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்… இப்படிச் சேர்த்து வைத்துக் கொண்ட குமுதம் பைண்டிங்கள் பல ஆண்டுகள் கழித்தும் என் கைவசம் இன்றும் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தோன்றிய பொழுதெல்லாம் அவர் எழுத்தை ஆசையுடன் படிப்பதில் அலாதியான சுகத்தை இன்றும் அனுபவிக்கிறேன். நான் என்றும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அந்தக் கதை எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதில் அதிகம் கவனம் கொள்வேன். இந்த இரகசியம் தெரிந்தால் எந்தக் கதையையும் வாசிக்கறவர்களுக்குப் பிடித்த மாதிரிச் சொல்லி விடலாம் எனபது என் அபிப்ராயம். அப்படிச் சொல்லத் தெரியவில்லை என்றால் எப்படிச் சிறப்பான கதையம்சமும் வாசகர் வாசிக்கையில் அவர்களைக் கவராது போய் விடும்.

பெரும்பாலான வாசகர்களுக்கு வேண்டுமானால் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ அக்கறையோ இல்லாது இருக்கலாம். ஆனால் படைப்பாற்றல் மிக்க வாசகர்களுக்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பற்றிய விவரங்கள் அறிவதில் இயல்பான ஈடுபாடு உண்டு. அது அவர்களின் வாசக உள்ளத்தின் வெளிப்பாடு. மாதவி பத்திரிகை பற்றி நான் மேலோட்டமாகச் சொல்லும் பொழுது அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் யார், அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கம், யார் யாரெல்லாம் எழுதினார்கள் என்று ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் விசாரித்தார் இல்லையா?.. இது தான் வாசக உள்ளத்தின் நேர்த்தியான வெளிப்பாடு. அவருக்குக் கூட நான் மாதவி பத்திரிகையில் பிரசுரித்திருந்த பொறுப்பாசிரியரின் பெயரை மட்டுமே சொன்னேன்..
அதற்குக் காரணம்:

  1. ஒரு பத்திரிகையின் முகவர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது.
  2. ஸ்ரீராமைப் பொறுத்த மட்டில் சொன்ன தகவலே போதும் என்று நான் நினைத்ததால். எழுத்து, பத்திரிகை என்று வந்து விட்டால், நாம் கோடு போட்டாலே போதும், ரோடு போடும் திறமை கொண்டவர் அவர். அந்த அளவுக்கு அவருக்கு பத்திரிகை விஷயங்களில் ஈடுபாடு என்று எனக்குத் தெரியும்.

ஒரு பத்திரிகையின் சாகச விற்பனை, அதில் எழுதுபவர்களின் எழுத்தாற்றல், உள்ளடக்க விஷயங்கள் என்பதையெல்லாம் கணாக்கில் எடுத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், அவர் பற்றிய தகவல்கள், தோற்றம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இயல்பானதே. இலட்சக்கணக்கான விற்பனை கொண்ட குமுதம் இதழின் ஆசிரியர் எப்படியிருப்பார் என்று அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்த ஒரு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு தனது புகைப்படம் எதுவும் வெளியில் வராது தம்மை மறைத்துக் கொண்டவர் அவர். ஒரு தடவை மிகவும் ஆசையுடன் அவர் புகைப்படம் அனுப்ப வேண்டி குமுதத்திற்குக் கடிதம் எழுதியிருந்தேன். அடுத்த சில நாட்களில்,

அன்புடையீர், 29-8-60

வணக்கம். தங்களுடைய அன்பான கடிதத்துக்கு ஆசிரியர் தமது நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார். அவரது கைவசம் புகைப்படம் எதுவுமில்லை. அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.
ரா.கி. ரங்கராஜன்
என்று ரா.கி.ர. கையெழுத்திட்டு எனக்கு கடிதம் வந்தது.

அப்பொழுது எனக்கு 17 வயது தான். அந்த வயதில் பத்திரிகைகள் மீதும் மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் மீதும் இப்படி ஒரு ஆசையும், அன்பும்!

அந்நாட்களில் பொங்கல் திருவிழா வந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள் தாம் கடைகளில் குவியலாகக் காணக் கிடைக்கும். எந்த அட்டையை யார் வாங்குகிறார்கள் என்பதைக் கொண்டு அவர்களின் அரசியல் கட்சிகளின் சார்பு நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவான இயற்கைக் காட்சிகள் கொண்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி நான் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்புவது வழக்கம். அந்த அளவுக்கு பத்திரிகைகளும், அதன் ஆசிரியர்களும் அந்த வயதில் என்னை ஈர்த்திருந்தார்கள்.

என் ஆர்வத்திற்குத் தீனி போடுகிற நிகழ்வு ஒன்று நடந்தது. ஆனந்த விகடன் பொன்விழா பரிசுப் போட்டிகளின் போது சிறந்த நாவலைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எஸ்.ஏ.பியும் இருந்தார். அந்தத் தேர்வுக் குழுவின் புகைப் படத்தையும் விகடனில் வெளியிட்டிருந்தார்கள். அந்த குரூப் போட்டோவின் கீழே இடமிருந்து வலமாக என்று ஒவ்வொருவரின் பெயரையும் பிரசுரித்திருந்தார்கள். அவர்கள் சொல்லியிருந்தபடி இடமிருந்து வலமாக என்று ஒவ்வொருவராக எண்ணிக் கொண்டு வந்தவன், ஆறாவது நபர் வரும் பொழுது அவர் தோற்றம் மங்கலாக நிழல் போல தேசலாகத் தெரிந்து உற்று உற்றுப் பார்த்து சலித்துப் போனேன். சென்னைக்கு வந்த பிறகு ஒரு நாள் எஸ்.ஏ.பி. அவர்களைப் பார்த்தே விடுவது என்று விடாப்பிடியாகத் தீர்மானித்து குமுதம் அலுவலகத்துக்கே போனேன். அதெல்லாம் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.

எஸ்.ஏ.பி. அவர்கள் அமெரிக்காவில் காலமான பொழுது தான் தொலைக்காட்சியில் அவர் புகைப்படம் பார்த்து ‘ஓகோ, நம் எழுத்தாசான் இப்படித் தான் இருப்பாரோ’ என்று அவர் தோற்றதை உள் வாங்கிக் கொண்டேன்.

குமுதத்தில் எஸ்.ஏ.பி. எழுதிய முதல் தொடர் ‘பிரம்மச்சாரி’.. அடுத்து காதலெனும் தீவினிலே’. அதற்கடுத்து ‘நீ’. இந்த ‘நீ’க்கு நிகராக எந்தத் தொடரும் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை என்பது என் சொந்த அபிப்ராயம். தொடர்ந்து, ‘சொல்லாதே”, ‘இன்றே இங்கே இப்பொழுதே’, ‘கெட்டது யாராலே’, ‘சின்னம்மா’ ‘பிறந்த நாள்’, ‘மலர்கின்ற பருவத்திலே’, நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று– என்று நிறையத் தொடர்களை எழுதியுள்ளார். ஓவியம் என்றொரு தொடர்கதை. நிகழ்காலத்திலேயே எழுதப் பட்ட தமிழின் முதல் முயற்சி.

சொல்லப்போனால் எஸ்.ஏ.பி. அவர்கள் தான் அந்த இளம் பிராயத்திலேயே மானசீக குருவாய் இருந்து எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவர். ஒரு அத்தியாயத்தை எங்கு தொடங்குகிறார், பின்னால் சொல்ல வேண்டிய விஷயத்தை முன்னால் சொல்லி, அல்லது முன்னால் சொல்ல
வேண்டியதைப் பின்னால் சொல்லி முன்னுக்கும் பின்னுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறார் அதையும் எவ்வளவு லாவகமாக சொல்லி விடுகிறார் என்றெல்லாம் ஏதோ பி.எச்.டி. க்கு ஆய்வு ஏடுகள் சமர்ப்பணம் பண்ணுகிற மாதிரி அவர் எழுத்தை அணுஅணுவாக ஆராய்ந்திருக்கிறேன்.

இலங்கை கதம்பம் பத்திரிகைக்கு எனக்குப் பிடித்த எழுத்தாளராய் அவரைத் தான் வரித்து எழுதியிருந்தேன். எனது கட்டுரை முதல் பரிசு கட்டுரையாகத் தேர்வான செய்தி அந்த இதழில் அறிவிக்கப்பட்டு பரிசுக் கட்டுரையை பிரசுரம் செய்த இதழைத் தான் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதெல்லாம் விட முக்கியமான விஷயம் அந்தப் பத்திரிகையின் தார்மீக உண்ர்வு தான். அந்த இதழுடன் ஒரு கடிதத்தையும் ஆசிரியர் மோகன் தன் கையொப்பத்துடன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
‘தங்களுடைய கட்டுரை முதல் பரிசுக்குரிய கட்டுரையாகத் தேர்வானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். சேலத்தில் எம்.என்.ஆர். என்பவர் எங்கள் முகவராக செயல்படுகிறார். உங்கள் முகவரியை அவருக்குத் தெரியப்படுத்தி இருக்கிறோம். முதல் பரிசுக்கான தொகையை எங்கள் சார்பில் உங்களுக்கு அவர் வழங்குவார். அருள் கூர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். மேலும் தங்கள் படைப்புகளை ‘கதம்பம்’ பத்திரிகைக்கு அனுப்பி எங்கள் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டுகிறோம். நன்றி.’

— என்று அந்தக் கடிதம் எனக்கு சேதி சொன்னது.

முதல் பரிசு கட்டுரையாகத் தேர்வானது, அதற்கான பரிசுத் தொகையை எம்.என்.ஆரே எனக்கு வழங்கப் போகிறார் என்று இரட்டை சந்தோஷம் எனக்காயிற்று.
அந்தக் காலத்தில் விஷய தானம் என்று சொல்வார்கள். சன்மானமெல்லாம் எதிர்பார்க்காமல் எழுதுவது. அந்த மாதிரி இலட்சிய வேகத்தில் எழுதிய காலங்களும் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.

ஆனால் இலங்கை– இந்திய பணப் பரிமாற்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு தனது தமிழக முகவர் மூலம் எனக்கு பரிசை அளிக்க தீர்மானித்து அதனைச் செயல்படுத்தவும் செய்த கதம்பம் பத்திரிகையின் தார்மீக உணர்வு தான் இத்தனை காலம் கழித்தும் நினைவில் வைத்திருந்து அதை இப்பொழுது பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறது.

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 4அழியாத மனக்கோலங்கள் – 6 >>

About Author