அழியாத மனக்கோலங்கள் – 7

This entry is part 7 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

சித்து யோசித்து கடைசியில் கையெழுத்துப் பத்திரிகைக்கு ‘புரட்சி’ என்று பெயர் வைத்தோம். ஏன் அப்படிப் பெயர் வைத்தோம் என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் காரணம் தெரியவில்லை என்றாலும் இப்பொழுது கூட ஒரு வெகுஜனப் பத்திரிகைக்கு அப்படி ஒரு பெயர் வைக்க நிறையவே யோசிப்பார்கள்.

ரகுராமன் பிரமாதமான ஒரு சிறுகதை எழுதியிருந்தான். நான் சரித்திரத் தொடர் ஒன்றை ஆரம்பித்திருந்தேன். அச்சு அசலாக சாண்டில்யன் பாணி. ‘அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தனது கூரிய வாளால் திரைச் சீலையைத் தூக்கிய பொழுது அந்த அதிசயம் நடந்தது..’ என்று கடைசி வரியை எழுதி விட்டுத் தொடரும் போட்டிருந்தேன். அந்தக் காலத்து சினிமாக்களில் ஓரங்க நாடகம் ஒன்று எப்படியும் இருக்கும். தாமோதரன் அந்த மாதிரி அலெக்ஸாண்டரை வைத்து ஓரங்க நாடகம் எழுதியிருந்தான். அறிவியல் கட்டுரை ஒன்று; எதைப் பற்றி என்று ஞாபகம் இல்லை. சில துணுக்குகள். கேள்வி– பதில் பகுதியை நான் எழுதுவதாகத் தீர்மானம் ஆன பொழுது கோடி வீட்டுக் கேசவன், ‘ஏண்டா, முதல் இதழ்லேயே எப்படிடா கேள்வி–பதில் வரும்? முட்டாள்தனமா எதையாவது செஞ்சு வைக்காதீங்க..” என்று எரிந்து விழுந்தான்.

“ஏண்டா வராது?..” என்று நான் குறுக்கே நுழைந்தேன். இதழ் வெளியிடுகிறோம் என்று தெரிந்தவுடனேயே, ஆர்வத்துடன் கேள்விகளை அனுப்பி வைத்த நணபர்களுக்கு நன்றி’ என்று ஒரு நன்றியை கொட்டை எழுத்தில் போட்டு விடலாம்டா. ஆளுக்கு ஒரு கேள்வியை எழுதிக் கொடுங்க; நான் அதுக்கெல்லாம் பதில் எழுதிடறேன். ஓக்கேவா?” என்று நான் கேட்டதும் பயங்கர கைத்தட்டல். அப்பவே ஆளுக்கொரு கேள்வியை யோசித்து எழுதித் தந்தார்கள். அந்த நெருக்கடியிலும் ஒருத்தர் கேள்வி மாதிரியே இன்னொருத்தர் கேள்வி அமையாது இருந்தது ஆச்சரியம் தான்.

சும்மாச் சொல்லக்கூடாது. ராமச்சந்திரன் பிரமாதமா படங்கள் வரைவான். நெடுக்க நாலு கோடு போட்டு, குறுக்கேயும் பக்கவாட்டிலும் இரண்டு கோடிழுத்து கீழேயும் மேலேயும் வரிவரியா கலர் பென்சிலில் தீட்டிறது தான் ஆரம்ப வேலை. அது என்னவோ தான் வரையும் எல்லாச் சித்திரங்களுக்கும் இப்படித் தான் செய்வான். அப்புறம் கண்ணு, மூக்கு, காதெல்லாம் எப்படி வரும் என்பது எங்களுக்கு தெரியாத பரம ரகசியம். பக்காவா குதிரை, யானை, மனுஷன், மனுஷி, பறவை, பாடகர் என்று வரைந்து விட்டு ‘ஆர் ஏ என்’ என்று இங்கிலீஷில் எழுதி பெயரைச் சுற்றி ஒரு வட்டம் போடுவான். அதான் அவன் ஸ்டைல்.. எங்கள் கூட்டத்தில் அவனை அடிச்சிக்க ஆளில்லை என்று அந்த வயசிலேயே அவனுக்கு தெனாவெட்டு ஜாஸ்தி.

பதினைந்து நாட்களில் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து சதா சர்வ காலமும் இதே நினைப்பாக எங்கள் குழு இருந்து கடைசியில் இருபது நாட்களில் எல்லாம் நிறைவாக முடிந்தன. ராமச்சந்திரன் தனது சித்திரங்களால் தூள் கிளப்பியிருந்தான். கேள்வி-பதில் பகுதிக்கு தமிழ்வாணன் தான் ரோல் மாடல். கடைசி பக்கத்தை எழுதும் பொழுது பத்திரிகைக்கு ஒரு முகவரி வேண்டுமே என்ற நினைப்பு வந்து ரகுராமனின் வீட்டு விலாசமான 11, இரத்தினம் பிள்ளை வளாகம் என்ற விலாசத்தை எழுதினோம். ஆசிரியராக, ஜி.வி.இராமனாகிய நான். வெளியிடுவோராக ஜெகப்பிரியன். அந்நாட்களில் ரகுராமனின் புனைப்பெயர் அது.

எங்கள் குழு உறுப்பினர்கள் வீடுகளில் இருபது நாட்கள் கையெழுத்துப் பிரதியின் சுழற்ச்சியை வைத்துக் கொண்டு பின்னர் தெரிந்தவர்களுக்கு தரலாம் என்று தீர்மானித்தோம். யார் கையில் கையெழுத்து பிரதி போனாலும் அவர்கள் கொடுக்கிற அன்பளிப்பை வைத்து கலர் பென்சில், பேப்பர், இத்யாதி செலவுகளுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கையில் நீலகண்டன் குறுக்கிட்டான். “எனக்கு ஒரு ஐடியா தோண்றதுடா… நாம் என்ன செய்யறோம்னா…”

“சொல்லித் தொலைடா..” என்று புருபுருத்தான் தங்கவேலு.

“நாம் என்ன செய்யறோம்னா..” என்று மறுபடியும் இழுத்து விட்டு ஒரு பிரபல நடிகரின் பெயரைச் சொன்னான். “அவர் ரொம்ப தயாள குணம் உள்ளவர்டா. இன்னிக்குக் கூட பேப்பர்லே அவரைப் பத்தி வந்திருக்கு. கவிதாஞ்சலி குழுக்கு அவங்களோட கவிதை அரங்கேற்றங்களைப் பாராட்டி ஒரு இலட்ச ரூபா டொனேட் பண்ணியிருக்கார். இந்த மாதிரி இளம் உள்ளங்களின் கற்பனைத் திறனை வளர்த்து போஷிக்க வேண்டியது நமது கடமை”ன்னும் அறிக்கை வெளியிட்டிருக்கார்.”

“சரி, அதுக்கென்ன இப்போ?..” — தங்கவேலு.

“சரியான டியூப் லைட்டுடா நீ..” என்று எரிச்சலோடு சொன்னான் ராகவன், “நீலகண்டன் என்ன நெனைக்கறான்னா, நம்ம கையெழுத்துப் பத்திரிகையையும் அந்த பிரபல நடிகருக்கு அனுப்பி வைக்கலாம். நாமளும் யெங்க்ஸ்டர்ஸ் தானே? நம்ம திறமையைப் பாராட்டி, நம்ம வளர்ச்சிக்கு நிச்சயம் அவர் உதவி பண்ணுவார்ன்னு நெனைக்கறான். சரி தானே நீல்?”

“அதாண்டா.. நா நெனைச்சதை அப்படியே சொல்லிட்டே..”

“சரி. அனுப்பலாம். இவ்வளவு பாடுபட்டு தயாரிச்சிருக்கோம். கையிலே இருக்கறது ஒரே ஒரு பிரதி. அவருக்கு அனுப்பி தொலைஞ்சு போய் அல்லது திரும்பி வரலேன்னா என்ன செய்யறது?.. ” என்று தனது நியயமான சந்தேகத்தைச் சொன்னான் சந்துரு.

“ரிஜிஸ்டர் போஸ்ட் என்னத்துக்கு இருக்காம்?..” என்றான் ராகவன். “ரிஜிஸ்டர் போஸ்ட்லே அனுப்பிச்சா பாதுகாப்பா நாம யாருக்கு அனுப்பிச்சோமோ அவருக்கே போய்ச் சேரும். அக்னாலெட்ஜ்மெண்ட்டோட அனுப்பலாம். யார் வாங்கிண்டாங்கன்னு கையெழுத்தோட நமக்குத் தெரியும். அதுனால தொலைஞ்சிடுமேன்னு பயமே இல்லாம அனுப்பலாம்..” ராகவன் அப்பா போஸ்ட் மாஸ்டர். அதனால் அவன் சொல்வதில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அடுத்த நாளே இருந்த ஒரே ஒரு கையெழுத்துப் பத்திரிகைப் பிரதியை அந்த நடிகருக்கு ரிஜிஸ்தர் தபால்+அக்னாலெட்ஜ்மெண்ட்டோட அனுப்பி வைச்சோம். எங்களைப் பாராட்டி கடிதமெழுதி அன்பளிப்பு செக்கும் அவர் அனுப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருந்தது. தினமும் அந்த நடிகரிடமிருந்து தபாலை எதிர்ப்பார்ப்பதே எங்கள் ஒரே வேலையாக இருந்தது என்றும் சொல்லலாம்.

அடுத்த வாரம் நாங்கள் அனுப்பி வைச்ச பதிவுத் தபால் எங்களுக்கே– ரகுராமன் வீட்டு விலாசத்திற்கே– திரும்பி வந்தது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது. பதிவுத் தபால் கவரின் மேலே ‘Refused’ — Return to Sender’ என்று ஆங்கிலத்தில் எழுதி, எங்கள் முகவரி எழுதியிருந்த இடத்தில் ஒரு அம்புக்குறி போட்டிருந்தார்கள்.

“என்னடா இப்படிச் செஞ்சிட்டார்?”

“நீலகண்டன் இந்த ஐடியவைச் சொல்லும் போதே நான் நெனைச்சேன்..” என்றான் தங்கவேலு.

“பாவம்டா. நீல் ஏற்கனவே அப்செட் ஆகியிருக்கான். நீ வேறே..”

“நாம ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பியிருக்கக் கூடாது..” என்று நீண்ட யோசனைக்குப் பிறகு சொன்னான் சந்துரு.

“ஏன்?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டான் நீலகண்டன்.

“பொதுவா அவங்களுக்குத் தொடர்பில்லாத இடத்லேந்து வர்ற பதிவுத் தபால்ன்னா டக்குனு யாரும் வாங்கிக்க மாட்டாங்கடா..” என்றான் சந்துரு இந்த விஷயங்களிலெல்லாம் ரொம்ப அனுபவப்பட்டவன் போல. “எந்த புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோன்னு சில பேருக்கு பயம். அதாண்டா..”

“நல்ல வேளை.. பதிவுத் தபாலில் அனுப்பினதாலே நாம கஷ்டப்பட்டுத் தயாரிச்ச பத்திரிகையாவது திரும்பி வந்தது.. இல்லேனா, அதுவும் போயிருக்கும்..” என்று இந்த விஷயத்தை முடித்து வைத்தான் ரகுராமன்.

அவன் சொன்னது திரும்பி வந்ததை பெரிசாக நினைக்காத திருப்தியை எங்களுக்குக் கொடுத்தது. நமக்குள்ளேயே பத்திரிகையை சர்க்குலேட் பண்ணி அடுத்த இதழுக்கு வழி பண்ணலாம் என்ற தீர்மானத்தோடு கலைந்தோம்.

இப்பொழுது நினைத்தால் கூட பிரமிப்பா இருக்கு. அப்புறம் ‘புரட்சி’ கையெழுத்துப் பத்திரிகை ஒன்பது இதழ்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வந்தது..

ராமச்சந்திரன் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி ராமச்சந்திரன் பங்களிப்பு இல்லாமல் போனதும் தான் எங்களுக்குத் தெரிந்தது. ராமச்சந்திரன் போட்ட படங்கள் தான் எங்க கையெழுத்து இதழுக்கு முதுகெலும்பாக இருந்தது என்று புரிந்தது. ஒவ்வொருத்தராக குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்தது ‘புரட்சி’.

இப்போக் கூட என்னப் பிரமாதமா அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்தோம் என்று பெருமிதமாகத் தான் இருக்கிறது.

ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு சார் கூட தன்னோட பன்னிரண்டு வயசிலே ‘சந்திரிகா’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை ஆசை ஆசையா ஒரு டீம் வொர்க்காக் கொண்டு வந்த பொழுது இப்படித் தான் நினைப்பாராம்.

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 6அழியாத மனக்கோலங்கள் – 8 >>

About Author