அழியாத மனக்கோலங்கள் – 4

This entry is part 4 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

டவுன் ரயில் நிலைய பார்ஸல் செக்ஷன் பொறுப்பாளர் என்னைப் பார்த்தவுடனேயே பில்லைப் பார்த்து என்னைக் கையெழுத்துப் போடச் சொல்லி பார்ஸலைத் தந்து விட்டு லேசாகப் புன்னகைத்தார். இரண்டு பேரும் பழக்கமாகிவிட்டோம் என்பதற்கு அடையாளம் அது என்று நினைத்து நானும் புன்னகைத்து, “தேங்க்ஸ்.. வரேன், சார்..” என்று விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தேன்.

டவுன் ரயில் நிலையத்திற்கு இடது பக்கம் அதல பாதாளத்திற்கு இறங்குகிற மாதிரி கீழே இறங்கி திருமணி முத்தாறு தரைப்பாலம் தாண்டி மறுபடியும் சின்ன மேடேறினால் இரண்டாவது அக்கிரஹார– தேரடித் தெரு– சந்திப்பு வந்து விடும். என் ஆஸ்தான இடம் வந்து கதவு திறந்து பார்ஸலை டேபிளின் மேல் வைத்தேன்.

எம்.என்.ஆர். அப்பொழுது தான் அவரது கடையின் உள்ளிருந்து வெளியே வந்தார். எப்பொழுதுமே அவர் அதிகம் பேச மாட்டார். நான் பேச்சுக் கொடுத்தால் விளக்கம் மாதிரி நிறைய சொல்லுவார். இன்றைக்கோ அதிசயமாக “மாதவி வந்து ஒரு வாரம் ஆகப்போறதில்லையா?” என்றார்.

“ஆமாம், சார். அடுத்த வார இஷ்யூ கூட வந்து விட்டது. இப்போத் தான் ஸ்டேஷன் போய் வாங்கிக் கொண்டு வந்தேன்..” என்றேன்.

“ஒண்ணும் ப்ராபலம் இல்லியே?” என்று சந்தேகக் கொக்கி போட்டார்.

“இல்லே, சார். வாசுதேவன் என்னைப் பார்த்ததுமே கொடுத்திட்டார்..”என்றேன்.

“நல்லது. அப்படியே போகட்டும்..” என்றவர் “நான் சாயந்திரம் வரமாட்டேன். கொஞ்சம் வீட்லே வேலை இருக்கு.. நாளைக்குப் பாக்கலாம்..” என்று சைக்கிளின் ஸ்டாண்டை விடுவித்தார்.

நானும் “பாக்கலாம், சார்..” என்று சொல்லி விட்டு அவர் கிளம்பியதும் உள் பக்கம் வந்து பார்ஸலைப் பிரித்தேன். இந்தத் தடவை மாதவியின் முதல் பக்கத்தை நீலக்கலரில் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். எண்ணிப் பார்த்தேன். 30 பத்திரிகைகளும் 3 சின்ன போஸ்டர்களும் இருந்தன. நாளைக்குத் தான் டெலிவரி பண்ண வேண்டும்.

பொதுவாக பத்திரிகைகளின் கடைகளுக்கான விற்பனை வழக்கம் முகவர்களுக்கும் கடைக்காரர்களுக்குமான உறவு முறையில் அமையும். அடுத்தடுத்த இதழ்களை கடையில் விநியோக்கிக்கும் பொழுது அதற்கு முதல் இதழுக்கான விற்பனைத் தொகையை வசூலித்து விடுங்கள் என்று எம்.என்.ஆர். சொன்ன அறிவுரையின் படி செய்யலாம் என்றே தீர்மானித்திருந்தேன்.

அடுத்த நாள் மாதவியின் இரண்டாவது இதழை கடைகளுக்கு விநியோகிக்கும் பொழுது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி திருப்பப்பட்டு விட்டன. அதாவது 30-ல் பதினைஞ்சோ, பதினாறோ தான் விற்றிருந்தது. ஒரிரண்டு கடைகளிலேயே முப்பதையும் பிரித்துப் போட்டு விட்டால், விற்காது போய் விடப்போகிறதே என்று பயந்து தான் பரவலாக பலரின் பார்வையில் படட்டுமே என்று பல கடைகளுக்கு விநியோகித்தேன். இருந்தும் தேங்கி விட்டது.

பத்திரிகையை விற்ற கடைக்காரர்களுக்கு 10% கமிஷன் தர வேண்டும். கமிசனைக் கழித்துக் கொண்டு நாலைந்து பேர் தந்திருப்பார்கள். ஓரிருவர் “நீயே கணக்கு வைச்சுக்கோ. அடுத்த தடவை சேர்த்து வாங்கிக்கோ..” என்று சொன்னார்கள். அதெல்லாம் போகட்டும். செவ்வாய்ப்பேட்டையில் ஒரு கடைக்காரப் பெரியவர் சொன்னது பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.

“தம்பீ! இது புதுப் பத்திரிகை.. நிறைய விளம்பரம் பண்ணனும். கடைக்குக் கடை விக்கறதோ இல்லையோ போஸ்டர் தொங்கி ஒரு பரபரப்பு ஏற்படுத்தணும். பிரகாசமான விளக்குகள் எரியும் போது இது சிம்னி விளக்கைக் கொளுத்தி வைச்ச மாதிரி இருக்கு. பத்திரிகைகாரங்க கிட்டே நிறைய கடைலே மாட்ற போஸ்டர் கேட்டு வாங்கு. பிக்-அப் ஆறதுக்கு இதான் நேரம். ஆயிடுச்சின்னு வைச்சுக்கோ.. அப்புறம் தன்னாலே ஜனங்களே கேட்டு வாங்குவாங்க.. தெரிஞ்சிக்கோ…” என்று அவர் சொன்னது அலிபாபா குகைக் கதவைத் திறந்த மந்திரமாக எனக்குப் பட்டது.

அதே வேகத்தில் விற்காத இதழ்களைச் சுமந்து கொண்டு நூலகம் வந்தவன் உடனே மாதவி பத்திரிகை பொறுப்பாளர்களுக்கு இருக்கும் நிலையை அறிவுறுத்தி இப்படி 3 போஸ்டர்கள் அனுப்பினீர்கள் என்றால் விற்பனை பாதிக்கும். தாரளமாக போஸ்டர்கள் அனுப்புங்கள். என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன்..” என்று கடிதம் எழுதி பெரிய கடை வீதி தபால் ஆபிஸில் போஸ்ட் செய்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து மாதவி பத்திரிகையிலிருந்து கடிதம் வந்தது. ‘பத்து பிரதிகளுக்கு ஒரு போஸ்டர் என்ற கணக்கில் தான் போஸ்டர் அனுப்ப முடியும். எல்லா முகவர்களுக்கும் எந்தக் கணக்கில் போஸ்டர்கள் அனுப்புகிறோமோ அந்தக் கணக்கில் தான் உங்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அதிக போஸ்டர் அனுப்ப முடியாது…’ என்று கறாராகக் கடிதத்தை முடித்திருந்தார்கள்.

கடிதத்தின் வாசகங்கள் என்னை உறுத்தினாலும் இதற்குள் அடுத்த வாரத்திற்கான 30 பத்திரிகைகள், அதற்கான 3 போஸ்டர்கள் என்று வழக்கம் போல வந்து சேர அவற்றைக் கடைகளுக்கு வழங்கும் போது இந்தத் தட வை சென்ற இதழின் 20 பிரதிகள் திரும்பி விட்டன.

அதற்குள் மாதவி பத்திரிகை அலுவலகத்திலிருந்து இதுவரை அனுப்பி வைத்திருந்த பிரதிகளைக் கணக்கிட்டு அதற்காக நான் அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிட்டு உடனே அனுப்பி வைக்க அறிவுறுத்தி கடிதம் வந்து விட்டது. ஆக, அந்த பத்திரிகை அலுவலகத்தைப் பொறுத்த மட்டில் அவர்கள் பத்திரிகையை வெளியே அனுப்பி விட்டால் போதும். அது விற்ற மாதிரி தான் கணக்கு என்பது புரிந்தது. அந்தப் புரிதல் எனது அடுத்த கடித வாசகத்தில் பிரதிபலித்தது.

“அது என்ன 10 பிரதிகளுக்கு ஒரு போஸ்டர் என்று கணக்கு?.. இது புது பத்திரிகை. இப்படி ஒரு பத்திரிகை வெளிவருகிறது என்ற செய்தியை மக்களுக்குத் தெரிவிப்பதே கடைகளில் தொங்க விடப்படும் அந்த குட்டி போஸ்டர்கள் தான். அதனால் போஸ்டர்கள் அனுப்புவதில் கஞ்சத்தனம் வேண்டாம். 30 பிரதிகளைக் கடைகளில் போடும் போதே 20 பிரதிகள் திரும்பி வந்து விடுகின்றன. சிரிக்கத் தான் வேண்டும்..” என்று கடிதத்தை முடித்திருந்தேன்.

இந்த எனது கடிதம் அவர்களைச் சீண்டியிருக்க வேண்டும். கடிதப் போர் போல பதில் வந்தது.. “சேலம் போன்ற பெரிய நகரத்தில் வெறும் 30 பிரதிகள் கூட விற்க முடியாத உங்கள் நிலை கண்டு எங்களுக்கு சிரிப்பதற்கு நேரமில்லை..” என்ற நக்கல். அவ்வளவு தான் அவர்களால் சொல்ல முடிந்தது போலும். அல்லது இதே போல பல ஊர்களில் பத்திரிகை விற்பனையாகாத நிலை இருந்ததோ தெரியவில்லை.

‘என் முகவர் நியமனத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த இதழ் பத்திரிகைகளை எனக்கு அனுப்ப வேண்டாம். அனுப்பினால் பெற்றுக் கொள்ள மாட்டேன்..’ என்று மணியாடர் பாரத்தில் குறிப்பு எழுதி, எம்.என்.ஆரிடம் கைமாற்றாக பணத்தை வாங்கி அவர்களுக்கு அனுப்ப வேண்டிய முழுத் தொகையையும் பைசா பாக்கியில்லாமல் தீர்த்து வைத்தேன்.

அடுத்த நாள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நிகழ்ந்தது..

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 3அழியாத மனக்கோலங்கள் – 5 >>

About Author