ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-12

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி – முந்தைய பாடல்களை படிக்க

பதிவுகளை உடனுக்குடன் பெற

ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

நம் இருவினைப் பாசங்களால், அதாவது நல்வினை, தீவினை ஆகியவற்றால் கட்டுண்டு கிடக்கும் பிறவியால் ஏற்படும் துன்பம் ஒழிந்து ஈசனின் நாமம் ஒன்றே நம்மை உய்விக்கும் திறன் படைத்தது என்னும்படிக்கு அவன் நாமாவளியாகிய அமுதக் கடலில் மூழ்கும் தீர்த்தமாக ஐந்தெழுத்து மந்திரம் இங்கே விளங்குகிறது.

நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்= சுற்றிலும் நெருப்பெரிய நடுவே தில்லையம்பலத்து நடராஜர் ஆடுவதாக ஐதீகம். ஆதிரை நக்ஷத்திரமும் செக்கச் சிவந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்டு விண்ணில் அசைந்து ஆடுவது ஈசன் எல்லையில்லாப் பெருவெளியில் ஆடுவது போலவே தோற்றமளிக்கும் என்பதும் கூறப்படுகிறது. அதே போல் அம்பலக்கூத்தனும் ஆடுகிறான். ஆட்டுவிக்கிறான். இது வெளிப்படையான பொருளென்றாலும் நம் உடலே பஞ்சாக்ஷரத்தால் ஆனது. அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி நம் உள்ளத்தினுள்ளே மனதுக்குள்ளே ஓதிக்கொண்டு வந்தோமானால் உள்ளே ஈசன் உறைந்திருப்பது கண்கூடு.

மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் “சிவாய நம” என ஓதே.” (உண்மை விளக்கம்-மாணிக்க வாசகர்)

“நமசிவாயா” என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது “ந” என்னும் எழுத்தையும், கால்கள் “ம” என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை “சி” என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை “வ” என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் “யா” என்னும் எழுத்தையும் குறிக்கிறது.

இவ்வானும், குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி= எப்போப் பார்த்தாலும் ஆடுகிறாப் போல் இருக்கும் ஈசன் உண்மையில் அவன் ஆட்டத்தின் மூலமே பஞ்சத் தொழில்களையும் நடத்துகிறான் அன்றோ! டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்=அப்படிப்பட்ட ஈசனின் திருநாமத்தைப்பேசிக் கைவளைகள் ஒலிக்கும்படியும், இடையில் அணிந்துள்ள மேகலாபரணங்கள் ஒலிக்கும்படியும், நீண்ட கருங்கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படியும்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.=பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி, பூக்களால் நிரம்பிய குளமோ என்னும்படிக்குஇருக்கும் இக்குளத்து நீரில் மூழ்கிக் குளித்து ஈசன் திருநாமத்தைப் பேசி மகிழ்வோம். பாடி ஆடுவோம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.