எங்கிருந்தோ வந்தான் ! – 3

முந்தைய இரு அத்தியாயங்களை படிக்க

அத்தியாயம்~3
வருடம்: 1992
இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!!

“கோந்தே. உம் பேர் என்னம்மா.”

“வைதேகி.”

“தோ. அந்தப் படத்துல இருக்கானே புள்ளையாண்டான். அது யாரு” என்று அந்தச் சாய்வு நாற்காலிக்கு
மேல் சுவற்றில் மாட்டி இருந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டார்.

“அது எங்கண்ணா. இருபத்து நாலு வருஷம் முந்தி கும்மோணத்துல அம்மா அப்பா பாட்டி தாத்தா எல்லாரும் மகாமகத்துக்குப் போயிருக்கச்சே தொலைஞ்சு போய்ட்டான். அப்போ மூனு வயசு அவனுக்கு. இது மகாமகத்துக்குப் போறதுக்கு நாலு நாள் மின்னாடி எடுத்தது. திடீர்னு என்ன தோனித்தோ அப்பாவுக்கு, அவனைக் கூட்டிண்டு போய் ஒரு ஸ்டூடியோல ஆசையா அவனைத் தனியா நிக்க வைச்சு இந்தப் ஃபோட்டோவை எடுத்துண்டு வந்தாராம். அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு நான் பொறந்தேன்னுவா.”

கேட்டவர் கண்களில் கண்ணீர் பெருகியது. “நாராயணா. எப்படி ஒரு முடிச்சை எங்க கொண்டு வந்து போட்டிருக்கே நீ.” என்றவர்
“கோந்தே. உங்கப்பா புண்ணிய ஆத்மா. உங்கப்பாவோட கடைசி ஆசை நீ அவருக்குக் கொள்ளி வைக்கணும்னுதானே. அதுக்குக் காரணம் உங்கண்ணா இப்போ இல்லைங்கறதுதான். அவன் இருந்திருந்தா அவர் இப்படி ஆசைப் பட்டிருக்க மாட்டார். நீ இப்போ நான் கொள்ளி வைக்கறேன்னு இறங்கினா இந்தச் சமுதாயம் அதை ஏத்துக்காது. கண்ணா பிண்ணானு‌ பேசும். சாஸ்திரமே அனுமதிச்சா கூட சில விஷயங்கள் வேற மாதிரி பழகிப் பழகி சம்பிரதாயமாகிப் போகறதால சமூகத்தால அனுமதிக்கப்படாம போய்டறது. நாம அதை மீறிண்டு செய்யக் கிளம்பினாக்க நிறைய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஆனா இப்போ உங்கப்பா விஷயத்துல ரெண்டு விஷயத்தையும் என்னால நிறைவேத்தி வைக்க முடியும். இருபத்திநாலு வருஷம் மின்னாடி ஒரு மகாமகத்துல தொலைச்சதை, இப்போ இன்னிக்கு ஒரு மகாமகத்துல அந்த பகவான் திரும்பக் கொடுத்துட்டாண்டியம்மா உங்களுக்கு. நீங்கல்லாம் அனாதை இல்லை. நீ ஒரு காரியம் பண்ணு. எப்படியும் காட்டுக்குக் கொண்டு போக ஆத்துலேர்ந்து அக்னி உண்டாக்கிக் அந்தத் தீக்கங்கை வரட்டியோட பானைல வச்சு கொண்டு போகணும். நீ அதை தயார் பண்ணு உன் கையால. அதை நெஞ்சுல வைச்சுட்டுதான் உங்கண்ணா உங்கப்பாவுக்கு கடைசிக் கொள்ளியும் வைப்பான். கர்மாவும் அவனே பண்ணுவான். உங்கப்பாவோட காரியம் எல்லா விதத்திலும் நன்னபடியா நடக்கும். அவர் ஆசையும் நிறைவேறும்.”

வைதேகிக்கு ஒன்றும் புரியவில்லை. சௌந்தரமும் குழப்பமாகப் பார்த்தாள்.

“இவன் என்னடா சம்பந்தா சம்பந்தம் இல்லாம இப்படித் தத்தப் பித்துன்னு பேசறானேன்னு பார்க்கரேளா. நான் சம்பத்தத்தோடதான் பேசறேன். இருங்கோ. இப்போ புரியும் உங்களுக்கு என்றவர் வாசலைப் பார்த்துக் குரல் கொடுத்தார். “ரங்கா. சித்த உள்ள வா இங்க”

அவருடன் வந்திருந்த, இது வரையும் வெளியே நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் உள்ளே வந்தான்.

“இது யாருன்னு தெரியறதா.” சௌந்தரத்திடம் கேட்டார்.

“இது… இது…. இளம் பிராயத்துல எங்காத்துக்காறர் இதே மாதிரிதான் இருப்பார். இந்தப் பிள்ளையாண்டான் அச்செடுத்தாப்புல அதே சாயல்ல இருக்கான்.”

“அச்சேதான். அவரோட அச்சேதான். நீங்க தொலைச்ச உங்க பிள்ளையாண்டான்தான் இவன். அதே மகாமகத்துக்கு நானும் என்னோட ஆம்படையாளும் புள்ளை வரம் வேண்டி சாரங்கபாணியை வேண்டிக்க வந்திருந்தோம். அப்போ கிடைச்ச குழந்தைதான் இவன். மழலை மாறாத அந்த வயசுல அவன்கிட்ட இருந்து தெளிவா எந்த விஷயத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியலை. நாங்களே தெய்வம் தந்த வரமா நெனச்சுண்டு இவனைக் கூட்டிண்டு போய் வளர்க்க ஆரம்பிச்சுட்டோம். சுவாமிமலைல இருக்கற பாடசாலைலதான் படிச்சான். அவன் தனியா கும்பாபிஷேகம், கிரகப்ரவேசம்னு சுப காரியங்களுக்கு மட்டும் போய் வந்துண்டு இருந்தான். இன்னிக்கு உங்க பக்கத்தாத்து சீதாராமைய்யர் ஃபோன் பண்ணி என்னை இங்க காரியம் பண்ணக் கூப்பிட்டப்போ, அவனும் அப்பா நானும் உங்க கூட வரேன்னான். நானோ இந்தக் காரியமெல்லாம் என்னோடவே போகட்டும். நீ சுபகாரியங்கள் மட்டும் பாரு போதும்னு சொன்னேன். அவன் கேட்கலை. எனக்கென்னவோ உள் மனசுல நீயும் அப்பா கூட போன்னு ஒரு உந்துதல் தோன்றது. என்னையும் கூட்டிண்டு போங்கோன்னான். சரி வா. நீ எதுவும் பண்ண வேண்டாம், சும்மா தள்ளி நின்னு பாத்துண்டிருன்னு சொல்லிட்டேன். ஆனா இங்க வந்தாத்தானே தெரியறது. அது தெய்வ சங்கல்பம்னு. இவரோட சாயலையும் பார்த்துட்டு, இந்தப் ஃபோட்டோவை எதேச்சையா பார்த்ததும்தான் நேக்கு பொறி தட்டித்து. அதான் ஊர்ஜிதம் பண்ணிக்கலாம்னு உங்கிட்ட கேட்டேன். இனிமே நீங்க நாதி அத்தவா இல்லே. உங்கப்பாக்கு சகோதரனா நானும், நோக்கு உன்னோட சகோதரன் ஸ்ரீ ரங்கனும், ஆமாம் நாங்க அவனுக்கு வைச்ச பேர் அதுதான், கிடைச்சுட்டான். ஆகட்டும் உங்க அப்பாவோட இறுதி யாத்திரை நல்லபடியா தொடங்கட்டும்.

“டேய் ரங்கா. இத்தனை நாள் கேட்பியே ‌என்னைப் பெத்தவா யாருன்னு. தோ உன்னோட அம்மா, உன்னோட தங்கை. அவா அம்மாவோட கர்மா பண்ணி வைக்கக் கடைசிக் கால கட்டத்துல சங்கர பகவத் பாதரும், பட்டினத்தாரும் எப்படி சரியா வந்து சேர்ந்தாளோ, அதுமாதிரி தெய்வம் சரியா உன்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு உன்னைப் பெத்த தோப்பனாருக்குக் கர்மா பண்ணி வைக்க.” உணர்ச்சி மயமாக பட்டு வாத்தியார் சொல்லி முடிக்கவும்
சௌந்தரம், வைதேகி மட்டும் அல்ல‌ அங்கிருந்த மற்றவர்களும் பேச்சற்று நின்றனர்.

ஸ்ரீ ரங்கன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அம்மாவையும் தங்கையையும் கட்டிக் கொண்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்தான்.

“ஏன்னா. என்னோட ரங்கன் கரையேத்த வருவான்’னு அடிக்கடி சொல்லுவேளே. சித்த நேரம் முன்னாடி கூட இதோ இந்தச் சாய்வு நாற்காலில உக்காந்து பாடிண்டிருந்தேளே. வந்துட்டான்னா நம்ம ரங்கன், நாம ஸ்ரீ வத்ஸனா தொலைச்ச புள்ளை, இப்போ ஸ்ரீ ரங்கனா வந்து நிக்கறான் பாருங்கோ.‌ ஒரு மாகாமகத்துல தொலைஞ்சு போனவன் இன்னிக்கு அதே மாகாமக நாள்ள திரும்ப வந்துட்டான் பாருங்கோ. நமக்கப்புறம் நம்ம பொண்ணுக்குத் துணையா அவளோட அண்ணாவா வந்து நிக்கறான் பாருங்கோ. எழுந்து பாருங்கோன்னா, நாற்காலில உக்காந்து பாடுங்கோன்னா” என்று அழுகையும், அரற்றலுமாகப் புலம்பியவள் சட்டென்று அப்படியே அந்தச் சாய்வு நாற்காலியில் சரிந்தாள்.

முற்றும்…..🙏🙏🙏

இந்த உலகத்தில் எதுவுமே காரண காரியம் இல்லாமல் நிகழ்வதில்லை. அந்தப் பரந்தாமன் போட்ட முடிச்சுக்களை அவன் சங்கல்பித்தாலன்றி‌ யாராலும் அவிழ்க்க முடியாது. அந்தப் பரந்தாமன் அனைத்துக்கும் சாட்சியாக, ஆபத்பாந்தவனாக, நம்பினார்க்கு நல்ல துணையாக இருக்கும் வரை, இந்த உலகில் ஆதரவு இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

About Author

2 Replies to “எங்கிருந்தோ வந்தான் ! – 3”

  1. அருமையான மினி தொடர். ஆழ்ந்த கருத்துக்கள்….. மூன்று பாகமாய் பிரித்ததால் சஸ்பென்ஸ் சஸ்டெயின் செய்த விதம் அருமை…….. நெகிழ்வாக முடிவு.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.