எனக்கென ஒரு வரம்

என் பிள்ளையை யாரையும் நம்பி விட்டுடாதே டா அஷோக்”

“அக்கா அப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒண்ணும் ஆகாது. இருக்கிறதுலயே பெரிய ஆஸ்பத்திரியில் தான் உனக்கு அத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கறார்.”

சோகையாய் சிரித்தவள், “நீ அவனை நல்லபடியா பாத்துப்பேன்னு தான் நான் நிம்மதியா உயிர் விடறேன்”

“அக்கா சும்மா பேத்தாத” ஏதோ சரி இல்லை என்று எண்ணியவன்….

“இரு நர்ஸை கூப்பிடறேன்,” என்று தன் கையை அவள் கையில் இருந்து விடுத்துக் கொண்டு வேகமாக நர்ஸை கூப்பிட விரைந்தான்.

நர்ஸ் வந்து பார்க்கும் போது அனைத்தும் முடிந்து இருந்தது. ஆறு மாதமாக புற்று நோயுடன் போராடி, வாழ்க்கையில் பல விஷயங்களை போராடி ஜெயித்தவளால், இப்போது ஜெயிக்க முடியாமல் தன் உயிரை விட்டு இருந்தாள், அகிலா, அஷோக்கின் பாசமிகு அக்கா.

முகத்தில் அறைந்து அழ மட்டுமே முடிந்தது அஷோக்கால்.

காரியங்கள் அனைத்தும் முடிந்தது அக்ஷய் பற்றி முடிவு எடுக்கலாம் என, அவரவர் துக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

காரியம் முடிந்த பதினாறாம் நாள், “அஷோக், யாரும் துணை இல்லாமல் அக்ஷய்யை வளர்ப்பது கஷ்டம் கொஞ்ச நாள் அவன் உங்க கூட இருக்கட்டும்.” என்று கேள்வியாகவும் இல்லாமல், சம்மதம் கேட்கும் விதமாகவும் இல்லாமல், முடிவாக சொன்னார் சேகர், அகிலாவின் கணவர், அக்ஷயின் தந்தை.

அக்காவின் வார்த்தைகளும், காதில் ஒலிக்க, அஷோக்கால் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது.

அனைவரும் சென்ற பிறகு வீடு ஓ வென்று இருக்க, அமைதியாக அமர்ந்து இருந்த, அஷோக்கின் தோள் தொட்டாள், வித்யா, அவன் மனைவி.

“இந்த காப்பியாவது குடிங்க. பத்து, பதினைந்து நாளா நீங்க சரியா சாப்பிட கூட இல்லை”

அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது, இவளிடம் கூட நாம் அக்ஷய் பற்றி பேசவில்லை என்று.

“வித்யா, என்னை மன்னிச்சிடு. உன்கிட்ட கூட கேக்காமல்…….”

அவன் வாயை தன் கையால் மூடியவள்.

“இந்த நிமிஷம் வரை நீங்க என்னை கலந்து ஆலோசிக்காமல் எதுவும் செய்தது இல்லை. அதில் பெருமையே எனக்கு. இப்போ நீங்கள் இருக்கும் மனநிலையை நான் அறிவேன்.”

“அக்ஷயின் அப்பா வந்து கூட்டிக் கொண்டு செல்லும் வரை அவன் நம் பொறுப்பு. காப்பி குடிங்க. உள்ள எனக்கு வேலை இருக்கு” என எழப் போன்றவளை, தன் வயிற்றோடு இழுத்து அணைத்தான்.

“சரி, சரி, எனக்கு ஏகத்துக்கும் வேலை இருக்கு விடுங்க” என்று அவன் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு கிளம்பினாள் வித்யா.

தான் எத்தனை பாக்கியம் செய்து இருக்கிறோம் என்று நினைத்த படி கையில் இருந்த காபியை பருக்கினான்.

“மாமா”

குரல் கேட்டு சட்டென காபியை வாயில் கவிழ்த்துக் கொண்டு அவசர அவசரமாக எழுந்து அக்ஷய் தூங்கி கொண்டு இருந்த அறைக்கு, போவதற்குள், கையை துழாவியபடி வந்தான், பிறந்த இரண்டாவது வருடத்தில், ஒரு விஷக் காய்ச்சலில் தன் கண்ணின் ஒளியை இழந்த அக்ஷய்.

“மாமா கூப்பிட்ட உடனே வருவேன் தானே அக்ஷய். நீ எதுக்கு எழுந்து வர? ” என்று அன்பாக கடிந்து கொண்டான் மருமகனை.

“எப்பவுமே எல்லா நேரமும், யாரும் யாருக்கும் துணை இருக்க முடியாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க மாமா. உன் வேலைகளை நீயே தனியே பாத்துக்கணும்னு சொல்லுவாங்க”

கண்ணில் நீர் வரப் பெற்றவன், சிறிது நேரம் மறந்து இருந்த தமக்கையின் நினைவு மீண்டும் தாக்க, யோசனையில் ஆழ்ந்தான்.

“மாமா”

“ம்ம் சொல்லு அக்ஷய் இங்க தான் இருக்கேன்”

இவர்கள் பேசும் சத்தம் கேட்டு அக்ஷிய்க்கு பாலும், பிஸ்கட்டும் கொண்டு வந்த வித்யா,

“என்ன மாமாவும், மருமகனும், இந்த மாமியை உங்க பேச்சில் சேத்துக்க மாட்டீங்களா? என்றாள்.

“இன்னும் ஒண்ணுமே பேச ஆரம்பிக்கல மாமி” என்றவன் கேசத்தை வருடினாள் வித்யா.

“மாமா அப்பா கூப்பிட்டாரா ? நான் ஸ்கூல் என்னிலேர்ந்து போகணும்.?”

அட இது பற்றி நாம் யோசிக்கவே இல்லயே, என்று தன்னை தானே கடிந்து கொண்டவன், பெற்றவருக்கும் ஏன் இது நினைவில்லாமல் போனது என்று யோசித்தான்.

அவன் முக மாற்றத்தை பார்த்த வித்யா, “இல்ல அக்ஷய், உன்னை அப்பாவால தனியா பார்த்துக்க முடியாது இல்ல. அதனால் ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு கூப்பிடுவார்”.

“நானும் கூப்பிட்டு கேக்கறேன் அக்ஷய்,” என்று அஷோக்கும் உறுதி அளித்தான்.

வித்யாவிடம், அக்ஷயை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு வேறு அறைக்கு சென்றான். அக்ஷயின் அப்பாவை தொடர்பு கொண்டான்.

“சொல்லுங்க, அஷோக்”

“மாப்பிள்ளை, அக்ஷய், ஸ்கூலுக்கு எப்போ போகறதுன்னு கேக்கறான். நீங்க அவனை பாத்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடீங்களா? நீங்க வந்து கூட்டிட்டு போறீங்களா, இல்லை நான் கொண்டு வந்து விடட்டுமா.……

அந்த பக்கம் மௌனம். லைன் கட்டாகி விட்டதோ என்று நினைத்து, அஷோக் “ஹெலோ, ஹெலோ ” என….

“ஹான், லைன்ல தான் இருக்கேன். இன்னும் ஆள் யாரும் சரியா அமையல அஷோக். நீங்க தப்பா எடுத்துகலன்னா, உங்க வீட்டுகிட்டயே ஏதாவது ஸ்கூல் அக்ஷய்க்கு தோதா பாத்து சேத்துடுங்களேன். ஆள் கிடைக்க நாள் ஆகும். அப்படியே ஆள் கிடைத்தாலும், அக்ஷய் கூட அவங்களுக்கு செட் ஆகுமா தெரியாது. கொஞ்ச நாள் அவன் உங்க கூட இருக்கட்டுமே. சரி எனக்கு அவசர வேலை இருக்கு, நான் அப்புறம் பேசறேன்” என்று அஷோக்கின் பதிலுக்கு கூட காத்திராமல், போனை வைத்தார்.

ஏதோ சரி இல்லை என்று தோன்றியது அஷோக்கிற்கு, ஆனால் இதை எப்படி, அக்ஷய்யிடமும், வித்யாவிடமும் சொல்வது என்று குழம்பினான்.ரொம்ப நேரம் காணுமே என்று, கணவனை தேடி வந்தாள் வித்யா. “என்னாச்சுங்க. ஏன் டல்லா இருக்கீங்க?”

“ம்ம்ம்ம், அக்ஷய்யோட அப்பாக்கு, இவனை அங்க வச்சுக்ரதுல விருப்பம் இல்லை போல. அவனை இங்கயே ஏதாவது ஸ்கூல்ல சேர்க்க சொல்லி, நம்ம கூடவே வச்சுக்க சொல்றார்”

“நெனச்சேன், இப்படி தான் ஏதாவது நடக்கும்னு. பாவம் அக்ஷய். சரி விடுங்க அவன் நம்ம கூடவே இருக்கட்டும். இங்கயும் ஏதாவது அவனுக்கு ஏத்த மாதிரி ஸ்கூல் இருக்கும். நான் விசாரிக்கிறேன். நீங்க கவலை படாதீங்க” என்றாள் வித்யா.

கவலைப்படாதே என்று சொல்லி விட்டாளே தவிர, அவளுக்கு உள்ளூர கவலையே, ஒரு அம்மா கொடுக்க கூடிய, அன்பை தன்னால் தர முடியுமா என்று. தன் தோழிகளுக்கு அழைத்து, பார்வையற்றோருக்கான பள்ளி ஏதும் தன் பகுதியில் இருக்கா என விசாரித்தாள். அஷோக்கும் தன் பங்கிற்கு விசாரித்தான்.

அக்ஷயிடம், அவன் அப்பாவிற்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகும் வாய்ப்பு இருப்பதால், புது இடத்தில் அவனுக்கு சரி வர புரிப்படுவது சிரமம் என்று எடுத்து சொல்லப்பட்டது. வேறு புதிய ஸ்கூலுக்கு இங்கே முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் சொன்னார்கள். அவனுக்கு, தந்தை கூட இருக்க முடியவில்லையே என்று தோன்றினாலும், மாமாவும், மாமியும் தன்னை இன்னும் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று நம்பினான்.

இதற்கிடையில், அக்ஷய்யின் தந்தை வேறு திருமணம் செய்து கொண்டது, அரசல் புரசலாக காதில் விழ, மிகவும் மனம் நொந்தான் அஷோக்.

அது பற்றி கேட்க அஷோக் செய்த அத்தனை முயற்சியும், விழலுக்கு இறைத்த நீரானது.

அன்று காலை முதல், வித்யா மிகவும் சோர்வாக உணர்ந்தாள். தனக்கு நாட்கள் தள்ளி போய் இருக்கிறதோ என்று நினைத்தாள். கல்யாணம் ஆகி, ஐந்து வருடங்கள் குழந்தை இல்லை. அதற்க்காக இருவரும் பெரிதும் வருத்தப்பட்டது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு வருடங்கள் இல்லாமல் தனக்கென ஒரு கரு உண்டானதை நினைத்து சந்தோஷமே பட்டு இருக்க வேண்டிய, வித்யா வருத்தப்பட்டாள். எங்கே தனக்கென ஒரு குழந்தை வந்து விட்டால் தான் அக்ஷய் மேல் இதே பாசத்தோடு இருப்போமா என்று குழம்பி தவித்தாள்.

இன்று எப்படியும், அஷோக் அலுவலகத்துக்கும், அக்ஷய் ஸ்கூலுக்கு சென்ற பிறகு, டாக்டரை போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, வேலைகளை துரிதமாக முடித்தாள்.

பத்து மணிக்கு மேல் தனக்கு பழக்கமான டாக்டர் லலிதாவை பார்க்க சென்றாள். இன்முகத்துடன் வரவேற்ற டாக்டர், “சொல்லு வித்யா நல்லா இருக்கியா? என்ன இந்த பக்கம், உடம்புக்கு என்னாச்சு?” என்று கேட்டார்.

தன் சந்தேகத்தை சொன்னாள். டாக்டர் லலிதா,” சரி டெஸ்ட் செய்து பார்த்து விடுவோம்.” என்று கூறி விட்டு நர்ஸை அழைத்து இவளை அவ்ருடன் அனுப்பினார். செய்ய வேண்டியதை முடித்து விட்டு “ஒன் அவர் வைட் பண்ணுங்க மேடம், இல்லை வீடு பக்கத்தில் இருந்தா போய்ட்டு வாங்க என்றாள்”

“இல்ல நான் ரிசப்ஷன்ல வெய்ட் பண்ணறேன், ரெடி ஆகிட்டா கூப்பிடுங்க.” என்று விட்டு போய் அமர்ந்தாள்.

ஒன்றரை மணி நேரம் கழித்து, வித்யா அழைக்கப்பட்டாள். “ஐ அம் சாரி, வித்யா, உனக்கு சந்தோஷமான செய்தி தரும் சந்தர்ப்பம் அமையவில்லை. மனசை தளர விடாதே, வயசு இருக்கு, கொஞ்ச நாள் பொறு.” ரொம்ப அனிமிக்கா இருக்க. நான் சில மாத்திரைகள் எழுதி தரேன். தொடரந்து சாப்பிடு.” என்றார் டாக்டர் லலிதா.

“அப்பாடா…. நான் கர்ப்பம் ஆகவில்லையா?” என்று துள்ளி குதிக்காத குறையாக சந்தோஷப்பட்டாள் வித்யா.

“சரி டாக்டர் நான் கிளம்பறேன். நன்றி” என்று தன் பரிசோதனை குறிப்புகளை எடுத்துக் கொண்டு, கிளம்பியவளை விசித்திரமாக பார்த்தார் டாக்டர் லலிதா.

வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த பிள்ளையார் கோவிலில் நின்று, கதவு பூட்டி இருந்தாலும் வேண்டினாள். “கடவுளே, நான் இதுவரை எனக்கு குழந்தை இல்லயேனு வருத்தப்பட்டது இல்லை. உன்கிட்ட வந்து குறை பட்டுகிட்டதும் இல்லை. ஆனா இனி எனக்கு குழந்தை பிறக்காத வரம் வேணும். அக்ஷய்க்கு மட்டும் நான் நல்ல தாயாய் இருந்தா போதும். இந்த வரத்தை மட்டும் நீ எனக்கு தா” என மனமுருகி வேண்டினாள்.

வித்யா கேட்ட வரம் அவளுக்கு கிடைக்குமா?

About Author

2 Replies to “எனக்கென ஒரு வரம்”

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.