அன்றும் வழக்கம் போல் கீதாவும்,முரளியும் Weekend outing போவதை சற்று பொறாமையுடன் தன் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்து ஓர் ஏக்கப் பெருமூச்சுடன் கிட்சன் திரும்பினாள் மாலினி.,
மாலினியின் கணவன் மகேஷும்,முரளியும் ஒரே கம்பெனி. ஒரே சம்பளக் கேடர். முரளி எந்தவித கமிட்மெண்ட்களிலும் சிக்கிக் கொள்ளாது வாழ்க்கையை முழுவதும் சந்தோஷமாக அனுபவிக்கும் சுதந்திரமான காதல் பறவை.,
மகேஷ் அனைத்துக் கடன்களையும் சந்தோஷமாய் வாங்கி அனைத்துக் கடன்களுக்காகவும் தன் சம்பளத்தை அப்படியே கட்டிக் கொண்டு மிக மிகச் சாதாரண வாழ்க்கையை போராடி வாழ்ந்து வரும் கடன்களின் சிறைப் பறவை.,
மாலினி முரளியைக் compare பண்ணிப் பேசும் ஒவ்வொரு முறையும் சலிக்காமல்,
” மாலு, அவங்க இருக்கற வீடு அவங்களுக்குச் சொந்தமில்ல. நம்ம கிட்ட கார் இருக்கு. அவங்க கிட்ட வெறும் bike தான் இருக்கு. நம்ம வீடு கொள்ளாத அளவுக்கு நம்ம கிட்ட எல்லாம் இருக்கு.
அவங்க வீடே ஃப்ரீயா இருக்கு. வாங்கும்போது வாங்கி அனுபவிக்காம
சும்மா beach , cinema ன்னு காசை செலவு பண்ணிட்டு பிற்காலத்தி கஷ்டப்படும்போது அவங்களுக்கு புரியும் “
மாலினியைக் கன்வின்ஸ் பண்ணுவதாக தன்னையும் மோட்டிவேட் பண்ணிக் கொள்ளும் மகேஷ் சில சில சமயங்களில் அதுவும் வாங்கும் சம்பளம் மொத்தமும் EMI க்கே போகும் போது கொஞ்சம் சலனப் படுவது உண்மை.,
இருந்தாலும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அதிகம் சம்பாதித்தாலும் சிக்கன வாழ் க்கைக்கு தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டதோடுமாலினியையும் பழக்கப் படுத்துவதை மிகச் சிரமத்துடன் செய்து வந்தான்.,
இருவருக்கும் சொல்லி வைத்தது போல் ஒரே குழந்தை. அதுவும் இருவருக்குமே ஆண் குழந்தை. ஒரே பள்ளியில் ஒரே விதமான படிப்பு.
ஸ்கூல் function க்கு மகேஷ் தன் குடும்பத்துடன் காரில் வந்து இறங்கி பார்க்கிங் தேடிக் கொண்டிருக்கும் சமயம் Book பண்ணிய கேபில் வந்து இறங்கும் முரளி சிரித்தவாறு உள்ளே சென்று விடுவான் தன் குடும்பத்துடன்.
முரளியிடம் எவ்வளவோ முறை ஒரு வீடு வாங்கி EMI கட்டி சொந்தமாக்கிக் கொள்ள எடுத்துச் சொல்லியும் ஒரு புன்சிரிப்புடன் மறுத்துக் கடந்து விடுவான்.,
” Free யா விடு மகேஷ். நீ கட்டிட்டு இருக்கற EMI யை விட கம்மி காசுல நீ இருக்கற வீட்டை விட அதிக வசதிகளோட. உன் வீட்டை விடவும் கொஞ்சம் பெரிய வீட்ல என்னால இப்ப இருக்க முடியுது . நானும் உன்னை மாதிரி ஒரு சின்ன வீட்டை லோன்ல வாங்கி வாடகையை விட ஜாஸ்தி EMI கட்டி அவஸ்தைப் படனுமா !? “
ஒரு கட்டத்தில் முரளி சொல்வது சுரீரென்று உறைக்கும் மகேஷுக்கு.,
ஆனாலும் தனது வீடு, கார் இன்ன பிற வசதிகள் அவனை சமாதானப் படுத்தி விடும்.,
இருந்தாலும் எந்த கமிட்மெண்ட்டும் இல்லாமல் ஊர் சுற்றி இஷ்டப்படி வாழும் முரளி, கீதா இருவரும் மகேஷ், மாலினி கண்களை கொஞ்சம் உறுத்தத்தான் செய்தனர் தங்களையறியாமலே.
வேலை அழுத்தம் தாங்காமல் பேப்பர் போட்டுச் செல்லும் தனது சக ஊழியர்கள் அதை விட அதிக சம்பளத்திலோ, அதே சம்பளத்திலோ ஒரு ரெண்டு மூணு மாத பிரேக்கில் சேருவது கண்டு அவர்களைப் பார்த்து ஓர் ஏக்கப் பெருமூச்சு தான் விட முடிந்தது மகேஷால்.
வேலையும், சம்பளமும் இல்லாமல் ரெண்டு.. மூணு மாதம்.. ஏன் ஒரு மாதம் கூட தன்னால் தாக்குப் பிடிக்க இயலாது என்னும் நிதர்சனம் முகத்திலறைய வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தான் மகேஷ்.,
எப்படியாவது முரளியையும் லோன் கமிட்மெண்ட்டில் கோத்து விட முயற்சித்தாலும், முரளி சிரித்துக் கடந்து விடுவான்.,
” சம்பாதிக்கற காலத்தில வீடு, கார்னு வாங்கிப் போட்டு அனுபவிக்காம வயசான காலத்துல என்னடா பண்ணுவே? “
” இங்க பாரு, நான் ஏற்கெனவே உங்கிட்ட சொன்ன மாதிரி, நல்ல பெரிய, வசதியான வீடு உன்னோட வீட்டு EMI காசை விடக் கம்மி வாடகைக்கு எனக்கு எங்க போனாலும் கிடைக்கும்.,
வெளிய போய்ட்டு வர்றதுக்கு உனக்கு ஆகற பெட்ரோல் செலவுலயே எந்த maintenance செலவும் இல்லாம எனக்கு கேப் கிடைக்குது.,
வாங்கினா ஒரே கார் தான்., புக் பண்ணிப் போகும் போது.. போகும்போது ஒரு பிராண்ட் கார்., திரும்பும் போது இன்னொரு பிராண்ட் கார்., “
சொல்லிச் சிரித்து மகேஷ், மாலினி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் முரளி யிடம் எதுவும் பேச முடியாமல்.,
கீதாவிடம் ஆசை காண்பித்த போது,
” மாலு, இப்ப என்கிட்ட இருக்கற நகைல பாதி கூட உன்கிட்ட இல்ல., எந்தக் கடனும் இல்லாம நாங்க நகையாவும், கோல்ட் காய்ன் னாவும் வாங்கி வச்சுருக்கறது எப்பவும் எங்களுக்கு உதவும்.,
பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.,
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “
கீதாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் பதில் சொல்ல இயலாமல் அவர்களைத் தவிக்க வைத்து புலி வால் பிடித்த கதையாய்த் தங்கள் வாழ்க்கை ஆகியதைக் கண்டு.,
வீட்டு லோன் தவிர வேறெந்த கமிட்மெண்ட்டும் தங்களைக் கட்டிப் போடாதவாறு என்னென்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.,
குறள் 363:
” வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில் “
எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை..,