- சிவ தாண்டவம்
- சிவ தாண்டவம் – 2
- சிவ தாண்டவம் – 3
சிவ தாண்டவம் – முந்தைய பகுதி
“மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்
கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்
அஞ்சலென்றருளும் அழகிய கரமும்
ஆடிடும் அம்பலவாணன்
குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினை
கொள்ளை கொண்டனவே”-
சக்தி சரணன்.
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நடனம் ஈசனின் பேரெழில் நடனம். எல்லா சிவத்தலங்களிலுமே உற்சவ மூர்த்தி நடராஜப் பெருமானாக இருந்தாலும் குறிப்பிட்ட ஐந்து சபைகளில் அவனாடிய ஆனந்த நடனம் சிறப்பாகக் கருதப்படுகிறது.
கனக சபை அல்லது பொன்னம்பலம், ரஜதசபை என்ற வெள்ளியம்பலம், தாமிர சபை, சித்திரசபை,
ரத்னசபை என விதவிதமான சபைகளில் விதவிதமாக ஆடினான், ஆடுகிறான், ஆடிக்கொண்டே இருக்கிறான் சபாபதி.
பிறவா வரம் வேண்டிய காரைக்கால் அம்மையாருக்காக பிரத்யேகமாக தனது ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டு ரத்னசபையில் நிகழ்த்தி இன்றும் ஊர்த்துவதாண்டேஸ்வரர் என்ற பெயரிலேயே நிலைத்திருக்கிறான்.
இராஜசேகர பாண்டியனின் அன்புக்குக் கட்டுப்பட்டு கால் மாறி ஆடிய சபை மதுரை ரஜத சபை. “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவாயே நெஞ்சே” என்று தானே நெக்குருகிப்பாடுகிறார்கள் அடியார்கள். பின் ஏன் கால் மாறி ஆடவேண்டும்?
வலியோ?
வலி தான்.
ஆனால்….
இராஜசேகர பாண்டியனுக்கு.
பரதக்கலை கற்ற பாண்டிய அரசன் அடடா நமக்கே இவ்வளவு நோகிறதே ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும் ஈசனுக்கு கால் வலிக்குமே என வருந்தி ஈசனிடமே கோரிக்கை வைக்கிறான் சற்று காலை மாற்றித் தான் ஆடுமே ஐயா என.
அவனது கோரிக்கையை ஏற்று ஓர் சிவராத்திரியன்று ஊன்றிய கால் உயர்த்தியும் உயர்த்திய கால் ஊன்றியும் ஆடிக்காட்டி அரசனை ஆட்கொண்டான் நடராஜன்.
தாமிரபரணி பாயும் நெல்லையிலே தாமிர சபை அமைத்து தனது காளிகா தாண்டவத்தை அரங்கேற்றினான் நடனசபாபதி.ஈசன் புரியும் ஐந்தொழிலைக் குறிப்பதே காளிகா தாண்டவம்.
அது மட்டுமா?
குற்றாலநாதனாக குறும் பலா மரத்தடியில் குடி கொண்ட சர்வேஸ்வரன் ஆடிய சபை குற்றாலத்தின் சித்திர சபை.
திருமாலும் பிரம்மாவும் தேவர்களும் திரிகூட மலையில் தவமிருக்க, தனது திரிபுர தாண்டவக் காட்சியை அருளினார் சிவபெருமான். அந்த நடனத்தைக் கண்டு ரசித்த பிரம்மன் அதை சித்திரமாக வடித்தாராம். எல்லா சபைகளிலும் செப்புத் திருமேனியாய் காட்சியளிக்கும் நடன சபேசன் குற்றாலத்தில் சித்திர ரூபமாக அருள்கிறான்.
எத்தனை சபைகள்! எத்தனை தாண்டவங்கள்!! எல்லாமே சிறப்பு தான். ஆனாலும்,”சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா”என்று கோபாலகிருஷ்ண பாரதி கேட்பது போல் சிதம்பரம் பொற்சபையில் ஆடிய திருநடனம் தான் சிறந்தவற்றுளெல்லாம் சிறந்ததாக அடியார்களால் கருதப்படுகிறது,கொண்டாடப்படுகிறது.
ஏனென்றால் இங்கிருந்து தானே அவன் உலகை ஆட்டுவிக்கிறான்!
-தாண்டவம் தொடரும்