சோளிங்கர் நரசிம்மர் கோவில்

பரிகாரம் பண்ணனும்னு ஒவ்வொருத்தரும் எத்தனையோ கோவில்களுக்கு போயிட்டு வருவாங்க. சொல்ற பரிகாரத்தை பண்ணிட்டு வருவாங்க. சிலருக்கு எதற்காக பரிகாரம் பண்ணினோமோ அந்த விஷயங்கள் நடக்கும். சிலருக்கு பரிகாரம் பலனளிக்காது. இதுக்கு என்ன காரணம்னு கண்டுபிடிக்க முடியாது. விதி இது தான் அப்படின்னு விதியை நொந்து கொண்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிடுவோம். அல்லது ஜோதிடரை திட்டிக் கொண்டு இருப்போம். அடுத்த ஜோதிடரை பார்க்க புறப்படுவோம். இது ஜோதிடர் தப்பா இல்லை ஜோதிடரின் வாக்கு பலிக்கவில்லையா? அல்லது நமக்கு அந்த ஜோதிடர் மேல் நம்பிக்கை இல்லையா? ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்தால் பதில் கிடைக்காது. கிடைக்கும் பதில்கள் பலவிதமாக இருக்கும். ஆனா எந்த பதிலும் நமக்கு திருப்தியளிக்காது. நம்முடைய பிரச்சினையும் தீராது.

மனிதனுடைய பிரச்சினைகளை வகைப்படுத்தலாம். வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை. வம்சம் விருத்தியாகவில்லை. மகன், மகளுக்கு திருமணம் நடக்கவில்லை. இது தான் முக்கிய பிரச்சினை. பணம் இல்லை, வீடு வாசல் அந்தஸ்து இல்லை இதெல்லாம் தனி. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு கோவிலுக்கு போயிட்டு வந்தா விடிவுகாலம் வரும்னு நம்பறது நம்ம மனோநிலை. ஆனா கோவிலுக்கு நாம நம்பிக்கையோட போகிறோமா என்பது தான் முக்கிய கேள்வி.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சோளிங்கர் என்ற ஊர் உள்ளது. நரஸிம்மரை வழிபடுகிற அனைவரும் அறிந்த கோவில். அங்கே பெரிய மலையில் நரஸிம்மர் யோக நிலையில் இருக்கிறார். 1305 படிகள் ஏறி அவரை தரிசிக்க வேண்டும். பின்னர் கீழே இறங்கி ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் சிறிய மலையில் 410 படிகள் ஏறி அங்கு இருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். நரஸிம்மர் யோகத்தில் இருப்பதால் தன்னுடைய சங்கு சக்கரங்களை ஆஞ்சநேயரிடம் கொடுத்து என்னை வழிபட வரும் பக்தர்களின் கோரிக்கைகளை நீ நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனால் இங்கு ஆஞ்சநேயரிடம் பிரார்த்தனைகள் செய்து நம்முடைய கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

சோளிங்கர் நரசிம்மர்

1305 படிகள் ஏறுவது என்பது யாராக இருந்தாலும் கஷ்டம் தான். அந்த படிகளை கடந்து ஆலயத்திற்குள் சென்ற உடன் முதலில் நாம் தரிசிப்பது அமிர்தவள்ளித் தாயாரைத்தான். பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை வழிபட்டு பின்னர் தான் பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் என்று சில சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. முக்கூரார் ஒரு உபன்யாஸத்தில் சொல்லியிருக்கார். //பெருமாள் கோவிலுக்கு சென்றால் தாயார் சன்னதி முன்பு நின்று கை கூப்பி பெருமாளை பற்றி ஸ்லோகம் சொல்ல வேண்டுமாம். தாயார் மிகுந்த சந்தோஷப்பட்டு நம்ம பர்த்தா மீது இவனுக்கு என்ன ஒரு பக்தி. இவனுக்கு தேவையானதை நாம் செய்வோம் என்று நம் மீது கருணை காட்டுவாளாம். அதே போல பெருமாள் சன்னதி முன்பு நின்று கை கூப்பி தாயாரை பற்றி ஸ்லோகம் சொல்லணுமாம். அப்போது பெருமாள் மகிழ்ந்து நம் மனைவி மீது இப்படி ஒரு பக்தியா இவனுக்கு என்று நமக்கு தேவையானதை செய்வாராம். தேவர்களுக்கே முகஸ்துதி தேவைப்படுகிறது.// இப்படி போட்டி போட்டுக் கொண்டு நமக்கு நல்லது செய்வார்கள்.

அந்த அமிர்தவள்ளித் தாயார் முன் நின்று மனம் உருக முழு நம்பிக்கையோடு அம்மா உன் குழந்தை நான் வந்திருக்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கா? என்னுடைய குறையை யாரிடம் போய் நான் சொல்ல முடியும்? நீ தான் என்னோட குறையை தீர்த்து வைக்கணும்னு சொல்லி உங்க பிரச்சினையை சொல்லுங்க. அவ கண்டிப்பா தீர்த்து வைப்பான்னு நம்பிக்கையோட அவ கிட்டே சொல்லுங்க. உங்க அம்மா கிட்டே நீங்க எப்படி பேசுவீங்களோ அந்த உரிமையில் பேசுங்க. அவ கண்டிப்பா பண்ணுவா. எந்த அம்மாவும் தன்னோட குழந்தை கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டா. லோகத்தில் எந்த அம்மாவும் கெட்ட அம்மா கிடையாதுன்னு பெரியவா சொல்லியிருக்கார்.

சோளிங்கர்னு இல்லை எந்த ஊர் கோவிலாக இருந்தாலும் நீங்க இது மாதிரி அம்பாள் கிட்டே பிரார்த்தனை பண்ணுங்க. உங்களோட கோரிக்கை கண்டிப்பா நிறைவேறும். சோளிங்கர் போய்ட்டு வருவதா இருந்தால் கார்த்திகை மாதம் போயிட்டு வாங்க. ஏன்னா கார்த்திகை மாதம் தான் நரஸிம்மர் யோகத்தில் இருந்து கண் விழித்து பக்தர்களை பார்ப்பதாக ஐதீகம்.

அவர் மேல நம்பிக்கை வைச்சு போயிட்டு வாங்க. கோவிலுக்கு போகும் போது (சோளிங்கரில் குரங்கு தொல்லை ஜாஸ்தி. ஜாக்கிரதையா போகணும்) கை நிறைய புஷ்பங்கள் வாங்கிட்டு போங்க. கனகாம்பரம் வேண்டாம். மல்லியும் அரளியும் நிறைய் வாங்கிட்டு போய் அம்பாளுக்கு அலங்காரம் பண்ணி அந்த அலங்காரத்தில் அம்பாளை பார்த்துட்டு சந்தோஷமா வாங்க. அம்பாள் சுமங்கலி. சுமங்கலியை வெறும் கையோட போய் பார்க்காதீங்க. அவ எல்லாம் உங்களுக்கு பண்ணுவா.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.