ஜெபுனிஷா – புதைக்கப்பட்ட வரலாறு -2

“ஆம். உங்களிடம் சில இரகசியங்களை கூற வேண்டும். மக்ஃபி பிரார்த்தனை குழு அல்ல, அது ரகசிய கவிதை குழு. அரசருக்கு எதிரான புரட்சி குழு.” இதைக் கூறிவிட்டு, தன் மார்பு கச்சைக்குள் மறைத்துவைத்திருந்த அவர்கள் இயற்றிய கவிதைகளை எடுத்துக் கொடுத்தாள்.

அதைப் படிக்க துவங்கிய ஜகன்னாரா, கவிதை வரிகளில் மறைந்திருந்த அரசுக்கு எதிரான கருத்துக்களையும் திட்டங்களையும் புரிந்துகொண்டதால் அவளுடைய கண்களையே அவளால் நம்பமுடியவில்லை. முகத்தில் சொல்ல இயலாத அளவு பீதியுடன் ஜெபுனிஷாவை பார்த்தாள். அந்த கவிதைகளில் தெளிவாய் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை புரிந்துகொண்டதால் மக்ஃபியின் திட்டங்களும்,நோக்கமும் எவ்வளவு பெரியது என்பதை அவளால் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. அந்த கவிதைகளை முழுவதும் படித்து முடித்தவள், அவற்றை தன் மடியில் வைத்துக் கொண்டு முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் ஜெபுனிஷாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெபுனிஷாவோ முகத்தில் பயம் கலந்த நம்பிக்கையுடன் அவர்கள் பேசுவதற்காக காத்திருந்தாள்.

“இது உன் தந்தைக்கு தெரிந்தால் நீ சிறைக்கு அனுப்பப்படுவாய்!”

“நாம் அனைவருமே இறுதியில் நரகத்திற்குத்தான் போகப் போகிறோம். அதற்கு முன் சில காலம் சிறைச்சாலையில் இருந்தால் ஒன்றும் ஆகிவிடாது.”

“இந்த திட்டத்தில் வேறு யாரெல்லாம் உன்னுடன் இணைந்துள்ளனர்?”

“நான், ஜூபைதாத், ஜீனத், பத்ருனிஷா, மிஹிருனிஷா முக்கிய நபர்கள். எங்களுடன் முவாஸம், அக்பர் மற்றும் அகில் கானும் இதில் உள்ளனர்.”

“அகில் காணுமா ? அவனை பேரரசருக்கு மிக நெருங்கியவனாயிற்றே? மற்ற யாரையும் விட அகில் கானைதான் பேரரசர் நம்புகிறார்.”

“அதுதான் எங்களுக்குத் தேவையான ஒன்று. வெளி உலகை பொறுத்தவரை, அகில் கான் பேரரசருக்கு வேலை செய்பவர். ஆனால் உண்மையில், பேரரசரை வீழ்த்த எண்ணுபவர். நாங்கள் எங்கள் குறிக்கோளில் வெற்றிக்கு மிக அருகில் சென்றோம். முவாஸத்தை பேரரசராக பிரகடனப்படுத்த சில நிமிடங்களே இருந்தன. அதுமட்டுமல்லாது, உங்களையும், தாத்தாவையும் விடுவிக்க உத்தரவு கூட பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அனைவரும் வியக்கும் வண்ணம் அப்பா குணமடைந்தது எங்கள் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற காரணமாகிவிட்டது.”

தன் தம்பி மகளும் அவள் சகோதரிகளும் சென்று கொண்டிருக்கும் அபாயகரமான பாதையும், அதில் தன்னையும் இணைக்க அவர்கள் முயல்வதும் ஜகன்னாரவை வருத்தமடைய செய்தது.

“நீங்கள் மக்ஃபிக்கு தலைமையேற்று நடத்தவேண்டும். என் தோள்களில் இருந்து இந்த சுமையை இறக்கிவைக்க உதவுங்கள். எங்களை எப்பொழுதும் போல வழிநடத்துங்கள்.”

அவளையே உற்றுப் பார்த்த ஜகன்னாரா மறுப்பு தெரிவிக்கும் விதமாய் தன் தலையை அசைத்தார்.

“இந்த மாதிரி விவகாரங்களில் ஈடுபடக்கூடிய வயதை நான் கடந்துவிட்டேன். இதற்கு மேலும், பின்னடைவுகளையோ, தோல்விகளையோ தாங்கக்கூடிய மன வலிமையும், உடல் நலமும் எனக்கு இல்லை. நான் உங்கள் குழுவில் இணைந்தால், உங்கள் வேகத்தை அது மட்டுப்படுத்துவதாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் முயற்சிகளுக்கு என் ஆதரவு இறுதி வரை உண்டு. அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.”

“ஒரே ஒரு சந்தேகம் அத்தையே! உங்களுக்குப் பிறகு ஜானி உங்கள் இடத்திற்கு வரவேண்டும் என்றுதான் அவளை ஆஸமிற்கு மணமுடிக்கிறீர்களா?”

“என் குழந்தாய்! எனக்குப் பின் இந்த நாட்டின் பேரரசி என யாரும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், உன் தந்தைக்குப் பின் யாரும் பேரரசராக ஆகப்போவதில்லை. நான் ஜானிக்கு கூறியதையே உனக்கும் கூறுகிறேன். உன் தந்தைக்குப் பிறகு, இந்த சாம்ராஜ்யம் முழுவதும் அவரது மகன்களில் ஒருவருக்கு செல்லப்போகிறது. சுல்தானும், முவாஸமம் சிறையில் இருப்பதால், ஆஸம் அல்லது அக்பர்தான் அரசராகப் போகின்றனர். அவர்களில் யாரேனும் ஒருவருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள். இதை நீ செய்யாவிட்டால், உன் தந்தைக்குப் பின் உன்னை யாரும் மதிக்கமாட்டார்கள். உனக்கென எதுவும் உதவ யாரும் இருக்க மாட்டார்கள். உனக்கு நிச்சயித்த சுலைமானை கொன்றான் உன் தந்தை. உன்னை திருமணம் செய்ய விரும்பும் எந்த ஆணும் அவனால் கொல்லப்படலாம். ஆனால், தன் மகன்களை கொல்லமாட்டான். அவர்களை கைது கூட செய்யமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்துள்ளான். அதனால்தான், ஜானியை ஆஸமிற்கு தர சம்மதித்தேன் நான்.”

தன் அத்தை கூறியவற்றால் வருத்தமடைந்த ஜெபுனிஷா ” ஒரு பேரரசருக்கு இருக்கவேண்டிய கம்பீரமும், கவர்ச்சியும் குணநலன்களும் என் சகோதரர்கள் யாருக்கும் இல்லை. எங்கள் திட்டம் தோல்வியடைய அதுவும் ஒரு முக்கியக் காரணம். ஒரு இளவரசனை முழுமையாய் வளர்த்து அடுத்த பேரரசனாக்கி இந்த நாட்டை உயிர்ப்புடன் வைக்க வேண்டும். அதுவே என்னுடைய ஆசை” என்றாள்.

“அக்பர் இருக்கிறான். அவனை சரியாக வளர்த்து அவனை அரசனாக்கு” எனக் கூறிய ஜகன்னாரா, ஜெபுனிஷாவை தன்னுடன் வருமாறு அழைத்து அரண்மனைக்குள் அழைத்து சென்றாள்.

கோட்டையின் ஒரு பகுதியில் இருந்த நீண்ட இருண்ட தாழ்வாரத்தின் வழியே ஜெபுனிஷாவை அழைத்து சென்றாள் ஜகன்னாரா. அந்த நீண்ட தாழ்வாரத்திற்கு பாதுகாப்பு பலமாக இருந்தது. கோட்டையின் அந்தப் பகுதிக்கு ஜெபுனிஷா வந்ததே இல்லை. வழியை மறித்து நின்ற காவலர்கள், ஜகன்னாராவின் கண்ணசைப்பில் நகர்ந்து வழிவிட்டனர். போக போக காற்று அடர்த்தியாக மாறி ஜெபுனிஷா சுவாசிக்க சிரமப்பட, அவளுக்கு சுலைமானை பார்க்க சென்றது நினைவிற்கு வந்தது.

நீண்ட நெடிய பாதையின் வழியே சென்றவர்கள், ஒரு பெரிய அறையின் முன்னே நின்றனர். அந்தக் கதவிற்கு முன்பே இருந்த பேரேட்டில், தனது பெயரை ஜகன்னாரா எழுத, ஜெபுனிஷாவிற்கு இது எல்லாம் புதிதாய் இருந்தது. அந்த அறையின் உள்ளே செல்வதற்கு முன்பு அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி வெளியே இருந்த காவலனிடம் ஒப்படைத்தனர்.

“உள்ளே நுழையும் முன் உன்னை எச்சரிக்கிறேன். நீ பார்க்கப்போவது சாத்தானை. நம் குடும்பம் அழிய காரணமானதை.” இதைக் கூறிய பொழுது ஜகன்னாராவின் கண்களில் அவளையும் அறியாமல் சோகம் தளும்பியது.

அவர்கள் இருவரும் அந்த அறையினில் நுழைந்த பொழுது அவர்கள் முன் இருந்தது கணக்கிட முடியாத செல்வம். அதைக் கண்ட ஜெபுனிஷாவின் கண்கள் திகைப்பில் விரிந்தது.

182 கிலோ வைரங்கள், 136 கிலோ மரகதம், 300 கிலோ அளவிலான முத்துகள், பல பெட்டிகளில் விலைமதிப்பிட இயலாத மிக அரிதான கற்கள், வைரம் பதிக்கப்பட்ட தங்க குறுவாள்கள், தங்க நாணயங்கள், தங்க சிலைகள், தங்க தகடுகள் என அந்த சாம்ராஜ்யத்தின் மொத்த பொக்கிஷமும் அங்கே இருந்தது. அவற்றின் நடுவே நகைகள் பொறிக்கப்பட்ட தங்க சிம்மாசனம் ஒன்றும் இருந்தது.

“அந்த சிம்மாசனம் எனது தாத்தா பேரரசர் ஜஹாங்கீர் அமர்ந்து ஆட்சி செய்தது. எனது தந்தை மயில் சிம்மாசனத்தை உருவாக்கியவுடன் இதற்கு வேலை இல்லாமல் போனது. மறக்கப்பட்ட பேரசர்களின் நினைவுச்சின்னமாக மாறி விட்டது.”

ஜெபுனிஷாவிற்கு மூச்சு திணறி அதனால் இருமல் வந்தது.

அதைக் கண்ட ஜகன்னாரா “இதைப் பார்ப்பதற்கு கண்டிப்பாய் திகைப்பாதான் இருக்கும். இதனுடன் ஒப்பிடும் பொழுது உனக்கும் எனக்கும் என்ன மதிப்பு உள்ளது? இதை கண்டபின் நாம் உபயோகமற்றவர்கள் என்ற எண்ணம் நமக்கு வருவதை தவிர்க்க இயலாது.” அங்கிருந்த ஒரு பெட்டியில் இருந்த இருந்த இரத்த வர்ண மாணிக்கங்களை எடுத்து ஜெபுனிஷாவின் கையில் கொடுத்தாள். “இவை இரத்த மாணிக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. நம் உறவினரின் இரத்தத்தால் சிவந்தவை இவை. ஓவ்வொரு முறை ஒரு முகலாயன் இன்னொரு முகலாயனை கொல்லும் பொழுதும் இவை மேலும் சிவந்து அதன் மதிப்பு அதிகரிக்குமாம்.” இதைக் கேட்டவுடன் ஜெபுனிஷாவிற்கு வாந்தி வருவதை போல் தோன்றியது. தனது கையில் இருந்த மாணிக்கங்களை வேகமாக பெட்டியினுள் வைத்தாள்.

“எனது தந்தை, எனது சகோதரர்களை இந்த அறைக்கு அழைத்து வந்தபொழுது நானும் உடனிருந்தேன். இந்த பொக்கிஷ குவியலைப் பார்த்தபின் அவர்கள் அனைவரின் மனதிலும் பேராசை புகுந்தது. அதன் பின், ஒருவரை விரோதிகளாய் பாவிக்கத் துவங்கினர். அவர்கள் மனதை சுயநல பேய் ஆட்டுவிக்க துவங்கியது. அக்பரை இந்த அறைக்குள் வர அனுமதிக்காதே. அங்ஙனம் அவன் வந்தால் அவன் மனமும் மாறிவிடும். அவர்கள் மனதில் பேராசையும், பண ஆசையும் புகுந்து விட்டால், தாய் அன்பும் சகோதர பாசமும் கூட அதை மாற்ற இயலாது” என அவளுக்குள அறிவுறுத்திய ஜகன்னாரா, ஜெபுனிஷாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அங்கிருந்து கிளம்பும் முன் “நீயும் இந்த அறைக்கு வரக் கூடாது. இதற்குள் உன் மனதிலும் பேராசை புகுந்திராவிடில் நீ அதிர்ஷ்டசாலி. ஆனால் , நீ மீண்டும் இங்கே வந்தால், உன்னால் அது விட்டு வைக்காது” என யதார்த்தத்தை அறிவுரையாக கூறினாள் ஜகன்னாரா.

****

17. ஜிஸ்யா

நான் முஸ்லீம் அல்ல
உருவ வழிபாட்டாளன்
காதலின் உருவத்தின் முன் தலைகுனிந்து வணங்கி
அவளை வழிபடுகிறேன்

2 ஏப்ரல் 1679

பனி மூட்டத்தால் மூடப்பட்டிருந்த வானத்தை துளைத்துக் கொண்டு வந்த சூரிய கதிர்கள் தில்லி செங்கோட்டையில் சுவர்களில் பட்டு எதிரொளித்துக் கொண்டிருந்தன. கடந்த சில வருடங்களில், ஆஸம் ஜானியை மணந்திருக்க, ஜூபைதாத் சிஃப்ரையும், மிஹிருனிஷா இசாத் பக்ஷ்ஷையும் மணந்திருந்தனர். அவர்களின் திருமணத்தை ஜகன்னாரா முன்னிருந்து நடத்தினாள். நீண்ட போராட்டத்திற்கு பின், முவாஸத்தை கூட சிறையில் இருந்து விடுதலை செய்ய வைத்திருந்தாள். அன்று, அரச சபையில், மயில் சிம்மாசனத்தில் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையுடன் அவுரங்கசீப் அமர்ந்திருக்க, அவனது சிம்மாசனத்திற்கு அருகே அமர்ந்திருந்தாள் ஜகன்னாரா. அவர்களுக்கு எதிரே முல்லாக்கள் அமர்ந்திருந்தனர்.

உடல்நல குறைப்பாட்டிலிருந்து மீண்டு வந்த பொழுது, இந்துக்கள் மீது விதித்தித்திருந்த வரியை நீக்கிய அவுரங்கசீப், இப்பொழுது மீண்டும் தனது வெறுப்பை காட்ட துவங்கி இருந்தான். முகலாய சாம்ராஜ்யத்தில் இருந்த பல கோவில்கள் இடிக்கப்பட்டன. இதனால் கோபம் கொண்ட ராஜபுதன மன்னர்கள் அவுரங்கசீப்பின் அரச சபைக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அதனால் கோபம் கொண்ட ஆலம்கீர், அவர்கள் ஆண்ட பிரதேசங்களை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொண்டான். இவனது நடவடிக்கைகளால் ஜெபுனிஷா பொறுமை இழந்தாலும், அவனை தோற்கடிக்கும் வழியை அவளால் கண்டுப்பிடிக்க இயலவில்லை. தன் அத்தை கூறியவாறு, அக்பரை நிகரற்ற போர் வீரனாக்குவதில் தனது கவனத்தை செலுத்தினாள். மற்றவர்களின் பார்வையில் இருந்து வெகு தொலைவு அக்பரை அனுப்பி, சிறந்த படைத் தளபதிகளின் மேற்பார்வையில் காட்டிற்குள்ளே அவனுக்கு போர் பயிற்சி கிடைக்க செய்தாள்.

“தக்காணத்தில் இருந்து ஏதேனும் செய்தி உள்ளதா?” குரலில் சிறிது தயக்கத்துடனேயே அவுரங்கசீப் கேட்டான். ஏனென்றால் அங்கிருந்து அவனுக்கு எப்பொழுதும் நல்ல செய்திகள் வந்ததே இல்லை. தக்காணத்தின் ஆளுநராக அவுரங்கசீப் இருந்தபொழுதில் இருந்தே மராத்திய மன்னனான சிவாஜி போன்ஸ்லே முகலாயர்களை எதிர்த்து வந்தார். அவுரங்கசீப்பின் மாற்று மதத்தினர் மீதான அடக்குமுறையை சிவாஜி அறவே வெறுத்தார். அப்பொழுதிலிருந்தே மராத்தியர்களின் சாம்ராஜ்யத்தை சிறுக சிறுக விரிவுபடுத்தி வந்தார். அதனால் சிவாஜி மீது தனக்கு இருந்த வெறுப்பை தன் சாம்ராஜ்யத்தில் இருந்த ஹிந்துக்களின் மீது காட்டி அவர்கள் வழிபடும் ஆலயங்களை இடித்தான் அவுரங்கசீப். அன்று அவனுக்கு காத்திருந்த செய்தி, முகலாயருக்கு மிகவும் கெடுதலான ஒரு செய்தியாகும்.

மிகவும் தயக்கத்துடனும், பயத்துடனும் தன் இருக்கையில் இருந்து எழுந்தார் அமைச்சர்.

அவர் உடல்மொழியில் இருந்தே காத்திருந்த செய்தி நல்ல செய்தி இல்லை என்பது அவுரங்கசீப்பிற்கு புரிந்தது.”அமைச்சரே! உங்கள் கண்களில் பயம் தெரிகிறது. பயம் இன்றி என்ன விஷயமோ அதை கூறுங்கள். உங்களின் நேர்மையும் விசுவாசமும் எனக்கு தெரியும்.”

“தக்காணத்தில் இருந்து வந்திருப்பது நல்ல செய்தி இல்லை அரசே! சிவாஜி சத்ரபதியாக முடிசூடி இருக்கிறார்.”

கோபத்தில் தனது தொடையில் ஓங்கி தட்டிய அவுரங்கசீப் “இத்தகையப் பட்டங்கள், யாருக்கு தகுதி இருக்கிறது என நான் நினைக்கிறேனோ அவர்களுக்கு வழங்கப்படும். அப்படி இருக்க இந்தப் பட்டங்களை வழங்க அவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது?” என்று கோபத்தில் கத்தினான்.

அந்த அரச சபையில் மௌனம் குடிகொண்டது. ஜகன்னாரா எதுவும் பேசவில்லை. அவளுக்கு சிவாஜியை நன்கு தெரியும். தனது தம்பியின் ஒரு தலைப்பட்சமான கொள்கைகளுக்கு எதிராக சிவாஜி போரிட்டது, அவரை ஹிந்துக்களின் தலைவராக உயர்த்தி இருந்ததை அவள் அறிவாள்.

தன் கேள்விக்கு எந்த பதிலும் அவையோரிடம் இருந்து வராமல் போனதைக் கண்டு பெருமூச்சு விட்டான். சிவாஜி , முகலாய பேரரசுக்கு நீண்ட நாட்களாக தொல்லைத் தந்து வந்தார். அவரை அறவே ஒழிக்கவேண்டும் என அவுரங்கசீப் நினைத்தான். “ஹிந்துக்கள் அரசவைக்கு வராமலும், ஒரு படிப்பறிவற்றவனை தங்கள் சக்ரவர்த்தியாக அறிவிப்பதின் மூலமும் என்னை அவமதிக்க துணிந்து விட்டனர். அவர்களுக்கு முகலாயர்கள் மேல் இருந்த பயம் அகன்று விட்டதா?” எனக் கேட்டான்.

“நாம் காட்டும் இரக்கத்தை நம் பலவீனம் என அந்த இறை நம்பிக்கையற்றோர் கருதுகின்றனர்” என தலைமை முல்லா அவருக்கு பதில் கூறினான் .

ஜகன்னாரா அவனை அதிருப்தியுடன் பார்த்தாள். ஹிந்துக்களை இறை நம்பிக்கையற்றவர்கள் என சொல்வதை அவள் வெறுத்தாள். கடந்த நான்கு தலைமுறைகளாக ஒவொரு முகலாய பேரரசரும் ஒரு ஹிந்து பெண்ணை திருமமணம் செய்திருந்தனர். அதன் மூலம் முகலாய அரச ரத்தத்தில் ஹிந்துக்களின் ரத்தமும் கலந்தே இருந்தது. அவர்களை இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்வதன் மூலம் முகலாயர்களும் அப்படியே என்று மறைமுகமாக கூறுவது போல் இருந்தது அது.

“தக்காணத்திற்கு மேலும் இரண்டு படைப்பிரிவுகளை அனுப்புங்கள். சத்ரபதியாக முடி சூடியவுடன் கண்டிப்பாக நமது கோட்டைகளின் மேல் படையெடுத்து வருவார்கள்” என ஆணையிட்டான் அவுரங்கசீப்.

“அரசே! மேலும் இரண்டு படைப்பிரிவுகளை அங்கே அனுப்புவதற்கு நமது பொக்கிஷத்தை நிலவரம் அனுமதிக்காது. கடந்த சில வருடங்களில், பல கோட்டைகளை சீரமைக்க வேண்டி இருந்தது. மேலும், தக்காணத்தில் இருக்கும் நம் படைகளுக்கும் தொடர்ந்து நாம் உதவி செய்ய வேண்டி இருந்தது” என அப்போதைய நிலைமையை அமைச்சர் எடுத்துக் கூறினார்.

“அப்படியானால், இதுதான் நாம் ஜிஸ்யா வரியை விதிக்க வேண்டிய நேரம்” என தலைமை முல்லா கூறினான்.

“அரசே! ஜிஸ்யா ஹிந்துக்களின் மீதான வரி. உங்கள் குடிமக்கள் யாரும் தங்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வரி செலுத்தக் கூடாது” திரையின் பின்னிருந்து வந்த ஜெபுனிஷாவின் குரல் அரசனிடம் கெஞ்சியது.

“அனைவரும் அமைதியாக இருங்கள். இது என்னுடைய சபை. வியாபரம் செய்யும் இடமல்ல, அனைவரும் பேசுவதற்கு. நான்தான் இந்த முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசன், இருந்தும் ஹிந்துக்கள் என்னை எதிர்க்க துணிகின்றனர்.”

ஜகன்னாரா பேசுவதற்கு அனுமதி வேண்டினாள். அவளை பேச சொன்ன அவுரங்கசீப் மௌனமாய் அவளை ஊர்ந்து கவனித்தான்.

“அரசே! ஹிந்துக்கள் என்னும் கடலில்தான் நம் சாம்ராஜ்யம் என்னும் கப்பல் செல்கிறது. நம் கப்பல் மிதக்க உதவும் அந்த நீருக்கு வரி விதிக்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.”

ஜகன்னாராவின் திரையிட்ட முகத்தையே கூர்ந்து கவனித்தான் அவுரங்கசீப். அவளின் வார்த்தைகள் பேரரசரை அசைத்துவிடுமா என்று அந்த சபை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் கூறப்போகும் பதில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும்.

“ஹிந்துக்கள், நாம் மிதக்க உதவும் கடல் அல்ல. அல்லாஹ்வின் மேல் இருக்கும் நம்பிக்கையினாலும், அவருடைய கருணையாலும்தான் நம் சாம்ராஜ்ய கப்பல் பயணிக்கிறது” என்ற அவன் பதில் அவையோரை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

முல்லாக்களின் “அல்லாஹ் ஹோ அக்பர்!” என்ற கோஷம் அந்த அவையை நிறைத்தது.

திரைக்குப் பின்னால் இருந்த ஜெபுனிஷா கைகளை இறுக்க, ஜகன்னாரா தோல்வியில் கண்களை மூடிக் கொண்டாள்.

“நம் நம்பிக்கை, இஸ்லாமின் விரோதிகளை தோற்கடிக்க உதவும்” என்ற அவுரங்கசீப்பின் குரல் அங்கே ஒலித்துக் கொண்டிருந்த கோஷங்களை விட ஓங்கி ஒலித்தது.

“கடலாகிய நம் நம்பிக்கை, நமது எதிரிகளை சூழ்ந்து அவர்களை மூழ்கடிக்கும்.”

இதுவரை அமைதியாக இருந்த பிரபுக்களும் ஏற்கனவே ஒலித்த கோஷத்தில் கலந்து கொண்டனர். பேரரசர் ஒரு முடிவெடுத்தப்பின் தாங்கள் அமைதியாக இருந்தால் அது தங்களுக்கு ஆபத்தையே வரவழைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.

அங்கே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்கள் கண்மூடி அமர்ந்திருந்த ஜகன்னாராவின் செவிகளில் நுழைந்து அவள் மனதை நிறைத்தது.

“இன்று முதல் முஸ்லீம் அல்லாத அனைவரும் தங்கள் வழிபாட்டுதலங்களுக்கு செல்ல வரி செலுத்த வேண்டும். செல்வந்தர்கள் 1000 பொற்காசுகளை, மத்திய தர வர்க்கத்தினர் 24 பொற்காசுகளை, ஏழைகள் 12 பொற்காசுகளை தர வேண்டும். ஆண்டிற்கு 10000 பொற்காசுகள் மேல் பொருள் ஈட்டுவோர் செல்வந்தர்கள் எனவும், 1000 பொற்காசுகள் வருமானம் உள்ளோர் மத்திய தர வர்க்கத்தினர் எனவும், 200 பொற்காசுகளுக்கு கீழே வருமானம் உள்ளோர் ஏழைகள் எனவும் வகைப்படுத்தப்படுவார்கள். மேலும், அவர்கள் நடந்து சென்று தங்கள் கையாலேயே வரியை செலுத்த வேண்டும். வரியை வசூலிக்கும் அதிகாரி அமர்ந்திருக்க வரி செலுத்தும் ஹிந்துக்கள் நின்று கொண்டு, தங்கள் கையில் வரியை கொடுக்க வேண்டும். வரி வாங்கும் அதிகாரி “ஜிஸ்யா வரியை செலுத்துங்கள் இறை நம்பிக்கை அற்றவர்களே!” எனக் கூறி வரி வசூலிக்க வேண்டும் என ஆணையிட்டான் அவுரங்கசீப்.

***

18. புரட்சி

எனக்கு பிடித்த மது அதன் சுவையை இழந்து விட்டது
இந்த பூமியில் எனது இருப்பு வீணாகி விட்டது

4 ஏப்ரல் 1679

அந்த வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு தொழுகைக்காக தன் பரிவாரங்களுடன் கிளம்பினான் அவுரங்கசீப். அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அந்தப்புர பெண்கள் மூடப்பட்ட பல்லக்குகளிலும், யானையின் மேல் இருபுறம் மூடப்பட்ட இருக்கையில் அமர்ந்தும் அவனுடன் சென்றனர். மழை மேகங்கள் தில்லியை சூழ்ந்திருந்தன. இடியுடன் கூடிய பலத்த மழை வருவதற்கான அறிகுறிகள் எங்கும் காணப்பட்டாலும் மசூதிக்கு சென்று தொழுகை செய்வதில் உறுதியாக இருந்தான் அவுரங்கசீப்.

அரசரின் வருகையை தெரிவிக்கும் முரசுகள் கொட்டப்படுவதைக் கேட்டுக் கொண்டு ஒரே யானையில் அமர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர் ஜெபுனிஷாவும், ஜகன்னாராவும். அவர்கள் செல்லும் பாதையை மறித்துக் கூடியிருந்த ஹிந்துக்களை கண்டு திகைத்தாள் ஜெபுனிஷா. தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருந்த கிராமத்தை சேர்ந்த ஹிந்துக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர். கூட்டத்தினர் தங்கள் கைகளில் இருந்த ஈட்டிகளால் ஊர்வலத்தில் இருந்த யானைகளையும் குதிரைகளையும் குத்த, யானைகள் பிளிறின, குதிரைகள் தங்கள் முன்கால்களை உயர்த்தின.

ஜெபுனிஷா வியப்புடன் ஜகன்னாராவை பார்த்தாள். ஜெகன்னாராவோ அந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் கைகளால் தன் வாயை மூடிக் கொண்டாள். “நீங்கள் இதுவரை இப்படிப்பட்ட காட்சியை பார்த்துள்ளீர்களா அத்தை ?” என ஜெபுனிஷா கேட்டதற்கு மறுப்பாய் தலை அசைக்க மட்டுமே முடிந்தது ஜகன்னாராவால்.

“வரி செலுத்த இயலாது!” என்ற கோஷம் எங்கும் எழுப்பப்பட்டது.

அரசருக்கு எதிராய் செயல்படுவோரை பொதுவெளியில் தண்டித்தப் பொழுதும் கண்டுகொள்ளாமல் இருந்த குடிமக்கள், தங்கள் பயத்தை தகர்த்து எறிந்துவிட்டது போல் தோன்றியது. அவர்கள் அதிகப்படியான கோபத்தில் இருந்தனர். தங்களது பாதுகாப்பை எண்ணி ஜெபுனிஷாவின் உடல் நடுங்கியது. காவலர்களின் தலைவன் , வழிவிடுமாறு அங்கே கூடியிருந்தவர்களுக்கு சைகை செய்ததை அவள் பார்த்தாள். ஆனால் கூட்டத்தினர் அவன் கூறியதை செவிமடுக்கவில்லை. அவர்கள் இடத்தில் இருந்து அசையாமல் இருந்தனர். கோபமும் வெறியும் நிறைந்த கண்களுடன் கணக்கில்லா இந்துக்கள் அந்த ஊர்வலத்தை சுற்றி வளைத்து நின்றிருந்தனர். சில ஹிந்து இளைஞர்கள் அவுரங்கசீப் அமர்ந்திருந்த யானை மீது கல்லெறிந்தனர். அரசரின் கட்டளையை நேரடியாய் எதிர்க்கும் விதமாக பெண்கள் யாரும் முகத்தை மறைக்காமல் வந்திருந்தனர். தங்கள் தந்தையின் தோள்களில் அமர்ந்திருந்த சிறுவர்களும் சிறுமிகளும் கூட அரசனுக்கெதிராய் முழக்கமிட்டது அவளின் பயத்தை அதிகப்படுத்தியது. சிகப்பு உடை அணிந்திருந்த அரச காவலர்கள் ஈட்டியால் குத்தியும் சாட்டையால் அடித்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் செயலுக்கு எந்த பலனும் இல்லாமல் போனது. கூட்டத்தில் இருந்தோர் தீப்பந்தங்களை பற்ற வைத்து அதை காவலர்கள் மீது வீசினர்.

தனக்கு முன் நிகழும் பயங்கர காட்சிகளை ஜகன்னாரா பார்த்துக் கொண்டிருந்த பொழுதே வானில் பலத்த இடி சப்தம் ஒலிக்கத் துவங்கியது. எதிர்காலத்தை கணிக்கக்கூடியவர்கள் சொல்லிய பேரழிவு இதுதானோ என எண்ணினாள் ஜகன்னாரா. பேரரசர் அக்பர் ஜிஸ்யா வரியை நீக்கி ஒரு தலைமுறையின் மனத்தைக் கவர்ந்தார். ஒரு நூற்றாண்டுக்குப்பின் அவருடைய கொள்ளுப்பேரன் மீண்டும் அந்த வரியை கொண்டுவந்ததன் மூலம் முகலாய அரச குடும்பத்தினருக்கும் அரசிற்கும் அழிவை தேடித் தந்தான். இடி சப்தத்துடன் மழை பெய்யத் துவங்கியவுடன் ஜெபுனிஷாவின் உடல் நடுங்கியது. அவளுடைய தந்தை, எதுவும் பேசாமல் தன் யானையின் மேல் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். அவனை மனதில் அந்த கூட்டத்தினர் மீதும், அவர்களை கட்டுப்படுத்த இயலாத காவலர்கள் மேல் கட்டுக்கடங்கா கோபம் பொங்கிக் கொண்டிருக்கும் என அவளுக்கு தெரியும்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எங்கும் செல்ல இயலாமல் அங்கேயே நிற்க வேண்டி இருந்தது. தன் காவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனதால், தன் ஆடை மழையால் சொட்ட சொட்ட நனைந்ததையும் பொருட்படுத்தாமல் தானே தன் வீரர்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அங்கு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நேரடியாய் அரசரை தாக்க முயலாததை ஜெபுனிஷா கவனித்தாள். அப்பொழுது இருந்த சூழ்நிலையில், அவர்களால் அரசனை நேரடியாய் தாக்க அதிக வாய்ப்புகள் இருந்தன. இருந்தும், யாரும் அதை செய்யவில்லை. அந்த கலவரம் மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருப்பதாக அவள் எண்ணினாள். அரசருக்கும், ஹிந்துக்களும் இடைவெளி அதிகரிப்பதாக எண்ணிய ஜெபுனிஷா சரியான சமயத்தில் அதை தனக்கு சாதகமாய் உபயோகப்படுத்த எண்ணினாள்.

தொடர்ந்து மழையில் நிற்க முடியாமல் தவித்த ஜகன்னாரா, தனது யானையை கோட்டையை நோக்கி திருப்ப சொன்னாள். அவள் சொன்னதற்கு ஜெபுனிஷா மறுப்பெதுவும் சொல்லவில்லையெனினும், தனது தந்தை இதை கோழைத்தனமான செயலாக பார்ப்பார் என்பதை மட்டும் அவள் நன்கு உணர்ந்திருந்தாள். தனது இடத்தில் இருந்து திரும்பிய ஜெபுனிஷாவின் பார்வையில், கூடியிருந்த மக்களை விலக சொல்லி அவன் சைகை செய்தது மட்டும் தெரிந்தது. அவன் கூறிய வார்த்தைகள் அவளை செவிகளில் விழவில்லை.

****

கல் போல் இறுகியிருந்த அவன் முகத்தில் மழைச் சாரல் தெறிக்க, உடுத்தியிருந்த மெல்லிய ஆடைகள் மழையில் நனைந்து அவனின் பலவீனமான உடல் அனைவரின் பார்வையிலும் தெரியும் வண்ணம் யானையில் அமர்ந்திருந்த அவுரங்கசீப்பின் உடல் முழுவதும் அவமானத்தால் வெந்து கொண்டிருந்தது. முகத்தில் விழுந்த நீரை துடைக்க துடைக்க, பெய்து கொண்டிருந்த பலத்த மழையால் மீண்டும் மீண்டும் அவன் முகம் நனைந்துக் கொண்டிருந்தது. நீரில் இருந்து எடுக்கப்பட்ட மீனைப் போல் பாதுகாப்பு இல்லாமல் தவித்தான்.’முகலாய பேரரசனான நான் ஏன் இவ்வாறு வீடற்ற ஒரு ஏழையைப் போல் இங்கே மழையில் நனைந்து யார் உதவியும் இல்லாமல் நின்றுக் கொண்டிருக்கிறேன்’ என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். அவனது காவலர்களால் அங்கே குழுமியிருந்த கூட்டத்தை அடக்க இயலவில்லை. பக்கத்தில் இருந்த தெருக்களில் இருந்து மென்மேலும் கூட்டம் வந்து சேர்ந்துக் கொண்டே இருந்தது.ஜிஸியா கொண்டு வந்ததை ஹிந்துக்கள் கட்டாயம் எதிர்ப்பர் என்று அவனுக்கு தெரியும். ஆனாலும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்படி ஒரு போராட்டத்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தன் முன்னே இருந்த கூட்டம் முழுவதையும் கொன்று குவிக்க எண்ணினான். ஆனால், அங்கிருந்து பின்வாங்கி செல்ல வேண்டும் என்று அவன் எண்ணவில்லை. தன் நாட்டு மக்களின் முன்னால் அவன் பின்வாங்கி சென்றால் அது அவனது துணிவின்மையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். அதுவே புரட்சி உருவாக காரணமாய் அமையும்.

ஜகன்னாராவின் யானை, பின்னடைந்து கோட்டையை நோக்கி திரும்பி செல்வதைக் கண்ட அவுரங்கசீப் சொல்ல இயலா கோபம் கொண்டான். ‘அவளைக் காப்பாற்ற நான் இங்கு இருக்கையில், அவளை திரும்பி செல்ல வைத்தது யார்? மக்களின் முன் ஏன் இத்தகைய கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறாள்?’. அவளுடைய யானை பாகனை நோக்கி கத்தினான். ஆனால், இடி சப்தத்தில் அவனுடைய குரல் அமுங்கியது. எந்த அசைவும் இன்றி தன்னுடைய யானையில் அமர்ந்திருந்தான். நொடிக்கு நொடி, அங்கே குழுமியிருந்த மக்களின் கோஷம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் அவனுக்கு எதுவும் கேட்கவில்லை. தன்னை நோக்கி கோபத்துடன் கோஷமிட்டுக் கொண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்களின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் கோபம் அவனுக்கு புரிந்தாலும் கல் போல் அமர்ந்திருந்தான். திடீரென தொலைவில் அவனுடைய தந்தை ஷாஜகானின் முகம் தெரிந்தது அவனுக்கு. சிறு வயதில், அவன் தந்தை அவனை திட்டியபொழுதெல்லாம் மனதில் உருவான திகில் இப்பொழுதும் அவன் மனதில் தோன்றியது. அவனைப் பொறுத்தவரை, ஷாஜஹானுக்கு அவனது சகோதரன் தாராவையே அதிகம் பிடிக்கும். அதனாலேயே தன்னைத் திட்டுகிறார் என எண்ணினான். அந்த நேரங்களில் எல்லாம், பாய்ந்து ஷாஜஹானின் கண்ணை நோண்டிவிட வேண்டும் என்றெண்ணுவான். ஆனால் அவனால் எதுவும் செய்ய இயலாது. அந்த நிமிடம் அந்த மக்களிடையே அவனைத் திட்டிக்கொண்டிருந்த ஷாஜகானின் முகத்தை பார்த்த அவுரங்கசீப் , மிகவும் பலவீனமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதாய் உணர்ந்தான். கண்களை மூடி பிரார்த்தனை செய்யத் துவங்கினான்.

சில நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தவன் “நம் இறைவன் மேல் நம்பிக்கையற்ற இவர்கள் நசுக்கிக் கொல்லுங்கள்!” என ஆணையிட்டான்.

அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன் மேல்தான் இருந்தது. தன் யானையையும் , தன் படையினரையும் முன்னேற சொல்லி அவன் சைகை காட்ட, அவனது காவலர்கள் முன்னே செல்லத் துவங்கினர்.

****

கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த யானையில் இருந்து திரும்பி பார்த்துக் கொண்டிருந்த ஜெபுனிஷாவின் பார்வையில் தன் துதிக்கையை தூக்கிக் கொண்டு கூட்டத்தினரிடையே புகுந்த அவுரங்கசீப்பின் யானை கண்ணில் பட்டது. அதன் காலடியில் சிக்கியவர்களின் உடலில் இருந்து சதையும் இரத்தமும் அந்த வீதியெங்கும் சிதறி விழுந்தது. அந்த யானையின் காலடியில் இருந்து தப்ப கூட்டத்தினர் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். திடீரென, தன் தந்தையின் தோளில் இருந்து கீழே குதித்த சிறுவன் ஒருவன் யானையை நோக்கி ஓடத் துவங்க, அவனது அன்னை அவனைக் காப்பற்ற கத்தினாள். சரியாய், யானையை குறி வைத்து ஓட, அவன் அன்னையோ அவனுக்குப் பின்னால் அவனை காப்பாற்ற இயலாமல் துரத்திக் கொண்டு வந்தாள். ஆனால், யானையின் ஓங்கி உயர்த்திய காலடியில் இருந்து அந்த சிறுவனை காப்பாற்ற இயலவில்லை அவளால்.

இரத்தத்தை உறைய வைக்கும் இந்த காட்சியை கண்ட ஜெபுனிஷா தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். சுலைமானின் இறப்பிற்கு பின் எதற்கும் அழுதிறாத அவள் கண்களில் இருந்து பெருகிய கண்ணீர் அவள் முகத்தை நனைத்தது. கைகளில் ஈட்டி இந்திய முகலாய வீரர்கள், ஆயுதம் ஏதுமில்லாத அந்த மக்களை தாக்க, அந்த பகுதியே கலவர பூமியாக காட்சி அளித்தது. தன்னை சுற்றி நடப்பதை நம்ப இயலாமல் அமர்ந்திருந்த ஜெபுனிஷாவின் காதுகளை ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் எழுப்பிய ஓலம் நிறைத்தது. எத்தனை பேர் இன்று இறக்கப்போகிறார்கள்? எத்தனை சிதை நாளை எரியப்போகிறது? இவை அனைத்தும் எதற்காக? வெறுப்பினால் உண்டான போருக்கு நிதி திரட்ட அப்பாவி பொதுமக்கள் மீது விதிக்கப்பட்ட வரியே இவை அனைத்திற்கும் காரணம்.

ஜகன்னாரா அவள் காதுகளில் “என்னை இங்கிருந்து அழைத்து சென்று விடு” என மெல்ல முணுமுணுத்தாள்.

அவர்களை சுமந்து சென்ற யானை கோட்டைக்குள் புகுந்தவுடன், மக்களின் குரல் மெல்ல தேயத் துவங்கியது. பலத்த சப்தத்துடன் பெய்து கொண்டிருந்த மழையின் ஓசையில் மக்களின் கூக்குரல் அடங்கி போனது. அந்த நிமிடம் , இந்த வேதனையை விரைவில் போக்க வேண்டும் என்பதே ஜெபுனிஷாவின் எண்ணமாக இருந்தது.

****

19. இறுதி நம்பிக்கை

அந்த வருடம் தில்லியில் கோடைகாலம் விரைவில் முடிவுக்கு வந்திருந்தது. பொதுவாய் ஆகஸ்ட் இறுதி வரை கோடையின் அனலில் தவிக்கும் தில்லி, அந்த வருடம் அப்பொழுதே குளிரில் நடுங்க துவங்கியிருந்தது. யமனை ஆற்றில் குளிக்கும் சாதுக்கள், மறைந்தவர்கள் வேதனையுற்ற ஆன்மாக்களின் சாபமே இந்த தட்பவெப்ப நிலை மாறுதலுக்குக் காரணம் என பேசிக் கொண்டனர்.

இளவரசன் அக்பரின் பயிற்சி, காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் அடர்ந்த காடுகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக ஜெபுனிஷாவிற்கு செய்தி வந்திருந்தது.

ஓராண்டிற்கு முன்பு விதிக்கப்பட்ட ஜிஸியாவால் முகலாய சாம்ராஜ்யம் பலவீனம் அடைந்திருந்தது. ஜிஸியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, பேரரசியான ஜகன்னாரா தில்லி செங்கோட்டையை விட்டு வெளியேறி இருந்தார். அவர், தாஜ்மகாலை வடிவமைத்தவர்களில் ஒருவரான அலி மர்தானின் மாளிகையில் குடியேறினார். அலி மர்தானுடன் அவருக்கு நீண்ட கால நட்பு இருந்தது. அவர் இறந்த பின், அவரது தில்லி மாளிகை காலியாகவே இருந்தது. எனவே இப்பொழுது ஜகன்னாரா அங்கே குடியேறினார். தன்னைப் பார்க்கவந்தவர்களில் பெரும்பான்மையானோரை தவிர்த்த ஜகன்னாரா, தனது பிரியத்துக்குரிய மருமகள்களான ஜெபுனிஷாவையும் , ஜானியையும் மட்டும் தன்னை சந்திக்க அனுமதித்தார்.

முகலாய சாம்ராஜ்யம் முழுவதும் கருத்து வேறுப்பாடுகளும், கலகமும் வெடிக்கத் துவங்கியது. வடமேற்கில் ஜாட்களும், மேற்கே ராஜபுதனத்து மன்னர்களும், மேற்கிலும், தக்காணத்திலும் மராத்தியர்களும் தனித்தனியாக முகலாயர்களுக்கு எதிராக போர் செய்தனர். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் போர் நடத்த வேண்டியிருந்ததால் அரசாங்க கஜானா தொடர்ந்து கரைந்துக் கொண்டு வந்தது. ஜெபுனிஷாவிற்கு அப்பொழுது இருந்த ஒரே நம்பிக்கை அவளது மகன் அக்பர் மட்டுமே. ஒரு நூற்றாண்டுக்கு முன், பேரரசர் அக்பர், இந்தியா முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இப்பொழுது இந்த இருண்ட காலத்தில், அவர் பெயரை தாங்கிய ஒரு இளவரசன்தான் மீண்டும் முகலாய அரசின் பொற்காலத்தை கொண்டு வர வேண்டும் என்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று என எண்ணிக் கொண்டாள்.

அவள் முன் வந்து அவளை குனிந்து வணங்கிய அகில் கான் “இளவரசி! நீங்கள் இப்படி பொதுவில் நடப்பது தெரிந்தால் அரசர் மிகவும் வருத்தப்படுவார்” என கூறினான்.

“அவர் எதற்குத்தான் வருத்தப்படாமல் இருந்துள்ளார்?” என சிரிப்புடன் கேட்டாள்.

“நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. பேரரசியின் யோசனைக்கு மாறாக, முல்லாக்களுக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கியுள்ளார் அரசர். அவர்கள் மூலம், தனக்கு எதிரான எந்த ஒரு புரட்சியையும் அவர் அடக்கிவிடுவார்.”

“நீங்கள் என்னுடன் இருக்கும் வரை அது நடக்காது.”

இருவரும் அந்த முற்றத்தை சுற்றி மெதுவாய் நடந்து கொண்டிருந்தனர். தூரத்தில் இருந்து பார்ப்போருக்கு ஆசிரியரும், மாணவியும் பேசுவது போல் தோன்றியது.

“பேரரசர் தக்காணத்திற்கு கிளம்ப ஆயத்தம் செய்துக் கொண்டுள்ளார்.”

“தெரியும். மராத்தியர்களின் தலைவரான சிவாஜி இறந்து விட்டதாகவும், அவரது மகன் சம்பாஜி சத்ரபதியாக முடி சூடியதாகவும் கேள்விப்பட்டேன். சம்பாஜி சிறிதும் இரக்கமற்றவன் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.”

“சம்பாஜியை பற்றி மற்றவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பல வருடங்கள் முன்பு நான் அவனை சந்தித்துள்ளேன்.”

“உன்னைப் போன்ற ஒருவர் எப்படி அந்த கொள்ளைக்காரனை சந்திக்க நேர்ந்தது?”

“நீங்கள் லாகூரில் இருந்த சமயத்தில் அவனுடைய தந்தை சிவாஜியுடன் தில்லி தர்பாருக்கு வருகை தந்திருந்தான் சம்பாஜி!”

“தன் வாழ்நாள் எதிரியை தில்லி அரசவைக்கு அழைத்திருந்தாரா தந்தை ?”

“ஆம். நமக்கு எதிராக நடக்கமாட்டேன் என சம்பாஜி கூறிய உறுதிமொழிக்கு பரிசாக வெறும் 5000 குதிரைகளை அவனுக்கு கொடுத்து அவனை அவமானப்படுத்தினார் பேரரசர்.”

“அதற்கு சம்பாஜி என்ன சொன்னான்?”

“அவன் என்ன சொல்ல முடியும்? அவன் சாதாரண கொள்ளைக்காரன் தானே? அவன் எதற்கு தில்லி வர சம்மதித்தான் என்பதே எனக்கு புரியாத ஒன்றாகும். அவனை அவமானப்படுத்தியதால் முகலாயர்களை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பேன் என சபதம் எடுத்து தர்பாரில் இருந்து வெளியேறினான்.”

இதைக் கேட்ட ஜெபுனிஷா புன்னகைத்துக் கொண்டே “எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் கலையை என் தந்தை கற்றுக் கொள்ளவேயில்லை. அதற்கு பதிலாக நண்பர்களை கூட எதிரியாய் மாற்றி விடுவார். அல்லாஹ் மனிதராக இருந்தால் அவரை எதிர்த்துக் கூட போரிடுவார் என் தந்தை.”

இதைக் கேட்ட அகில், மெல்ல சிரித்துக் கொண்டான்.

“எப்பொழுது அவர் கிளம்புகிறார்?”

“இன்னும் இரண்டு நாளில் கிளம்பி விடுவார் என எண்ணுகிறேன். எதற்கு கேட்கிறாய்?”

நீண்ட பெருமூச்சை விட்ட ஜெபுனிஷா “ஏனென்றால், நம் மகன் இன்னும் சில வாரங்களில் திரும்பி வருகிறான். அவனுக்கு உரிமையான ஒன்றை எடுத்துக் கொள்ள போகிறான். இதுவே நமக்கு கிடைக்கும் இறுதி வாய்ப்பு. இப்பொழுது நாம் வெல்லமுடியாவிடில், இனி எப்பொழுதும் நாம் வெல்ல இயலாது.” என்று தன் மனதில் இருந்ததை கூறினாள்.

“அக்பர் வருகிறானா?”

“ஆம். பல வருடங்கள் காடுகளில் கடுமையான போர் பயிற்சி பெற்ற பின் தலைநகருக்கு திரும்புகிறான்.”

இதைக் கேட்டவுடன் அகில் கானின் கண்களில் கண்ணீர் பூக்க “அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று கூறினான்.

****

நடுங்கும் கரங்களால் அந்த வெள்ளி தலைக்கவசத்தை எடுத்து அணிந்துக் கொண்டான் அவுரங்கசீப். தன்னுடைய இளம் வயதில் இருந்து அதை அணிந்து வருகிறான். அந்த தலைக்கவசம் அவனைப் பல ஆபத்துகளில் இருந்து காத்துள்ளது. ஈட்டிகளும், கத்திகளும், குறு வாட்களும் பட்டு ஆங்காங்கே சேதம் அடைந்திருந்தாலும் அந்த கவசத்தை மிகவும் விரும்பினான் அவுரங்கசீப். அவன் பேரரசனாக முடிசூட்டிக்கொண்ட பின், அரசர்கள் உபயோகிக்கும் தலைக்கவசத்தை உபயோகிக்க பலர் சொன்ன பொழுதும் அதை மாற்ற மறுத்துவிட்டான். அதை அவன் அணிந்தவுடன் அதிலிருந்த உலோக சங்கிலிகள் முகத்தின் முன்னால் தொங்கி அவனது பார்வையை மறைத்தது.

“அரசே, பேரரசி உங்களுக்கு செய்தி அனுப்பி உள்ளார். அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் நேரில் வர இயலாது என்றும் போரில் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும் என்றும் கூறியுள்ளார்” எனக் கூறிய அமைச்சர் ஜகன்னாராவின் கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

ஜகன்னாரா வராதது அவுரங்கசீப்பிற்கு வருத்தமாக இருந்தாலும் தான் அவர்களுக்கு கட்டளை இட முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரியும்.

தம்பி,

இளம் வயதில் நமது வீடாய் இருந்த தக்காணத்திற்கு மீண்டும் செல்கிறாய். நிஜாம்சஹியில், நாம் கூடாரத்தில் வசித்த காலத்தில், நமது சகோதர சகோதரிகளுடன் விளையாடியது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. அது மிக எளிமையான காலம். இன்று, நம் குடும்பத்தில் நீயும் நானும் மட்டுமே மீதம் இருக்கிறோம். மற்ற அனைவருமே நம்மை விட்டு சென்றுவிட்டனர்.

தக்காணத்தில் ஏதேனும் நல்லது நிகழுமா என்பது சந்தேகமே. அங்கு இருந்தபொழுதுதான் நமது அம்மா இறந்தார். பின்னால், தாஜ்மகாலை கட்டும் வரை, அம்மாவின் சமாதி அங்கேதான் இருந்தது. பின் வந்த காலங்களில், உன் மேல் கோபம் கொண்ட சமயத்திலும் உன்னை தக்காணத்திற்குதான் தந்தை அனுப்பினார். கடவுளால் கைவிடைப்பட்ட அந்த பகுதி நம் குடும்பத்திற்கோ அல்லது சாம்ராஜ்யத்திற்கோ எந்த வித மகிழ்ச்சியையும் தந்தது இல்லை.இருந்தும், அங்கே உருவாகியுள்ள புரட்சியை அடக்கி அங்கிருந்து செல்வங்களை கொண்டுவர நீ செல்கிறாய்.நம் முன்னோர்களின் பெயரையும், நம் மரபையும் நீ அழித்து விட்டாய்.உன் மதவெறியால் நமக்கு இருந்த கூட்டணியை நீ உடைத்து விட்டாய். அதன் விளைவாய் நாம் எப்பொழுதும் யுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.உன் மதவெறியினால் குடிமக்கள் அவதிபடுகின்றனர்.இதற்கான விளைவுகளை நீ சந்திப்பாய். உன் சொந்த மக்களாலேயே வெறுக்கப்பட்டு தனிமையில் இறப்பாய்.

ஜிஸ்யாவை திரும்பப் பெறுமாறு மீண்டும் உன்னை கேட்கிறேன். உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாதே. உன்னைக் காப்பாற்ற பல முறை முயன்றுவிட்டேன். ஆனால், அழிவை நோக்கிதான் செல்வேன் என சொல்பவனை நான் எப்படி காப்பாற்ற இயலும்? எப்பொழுதும் போல் , இந்தப் போரிலும் நீ வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.நீ வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது உன்னை வரவேற்க நான் இருக்கமாட்டேன் என்பதையும் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். நான் மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன். இனி மேலும் அரசாங்க விவகாரங்களை என்னால் கையாள முடியும் எனத் தோன்றவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும் நம் அரசிற்கு நான் விசுவாசமாக இருந்தேன் என்பதில் என் மனம் நிம்மதி கொள்கிறது. இப்பொழுது, சொர்க்கத்தில் அப்பாவையும், அம்மாவையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஒரு காலத்தில் சொர்க்க பூமியாக இருந்த இந்த சாம்ராஜ்யத்தை உன் கைகளில் ஒப்படைக்கிறேன்.

ஜகன்னாரா

அவுரங்கசீப் அந்த கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்தான். ஜகன்னாரா தற்கொலை செய்து கொள்ளப்போகிறாளா? அப்படி செய்தால், அது அவள் எடுத்த முடிவு. அதை மாற்றிக் கொள்ள சொல்லி அவளது காலடியில் வீழ்ந்து கெஞ்ச மாட்டேன். மற்றவர்களின் பயமுறுத்தலுக்கு அஞ்சி முடிவெடுப்பது பேரரசருக்கு அழகல்ல. அந்தக் கடிதத்தை கசக்கி தூக்கி எறிந்த பொழுதும், அவனது கண்கள் ஏனோ கலங்கின. பின், அரண்மனை வாயிலை நோக்கி நடக்கத் துவங்கியவன் திரும்பி பார்க்கவே இல்லை.

****

20. ஒருவர் வருகையில் மற்றொருவர் விடை பெறுகிறார்

என் இரத்தத்தில் இருந்து நறுமணம் வீசும் மலர்கள் பூக்கின்றன
அலைந்து களைப்புற்ற என் பாதங்கள் முட்கள் குத்தி
இரத்ததினால் ரோஜாவாய் மாறுகின்றன

16 செப்டம்பர் 1681

பேரரசரின் வருகைக்காக அலங்கரிப்பது போல் அந்தப்புரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவர்களுக்கு மீண்டும் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. புதிய விரிப்புகள் தொங்க விடப்பட்டிருந்தன. தோட்டத்தில் இருந்த நீரூற்றுகளில் இருந்த நீர் மாற்றப்பட்டு வாசனை திரவியம் கலந்த நீர் ஊற்றப்பட்டிருந்தது. அலங்கார விளக்குகள் அரண்மனை எங்கும் ஏற்றப்பட்டிருந்தது. தில்லி செங்கோட்டையை முழுவதும் சுத்தம் செய்து தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் அதன் சுவர்கள் எளிதில் தெரியும் வண்ணம் செய்ய சொல்லியிருந்தாள் ஜெபுனிஷா. தன் செலவிற்கென கொடுக்கப்பட்ட பணத்தில் இருந்து அந்தப்புர பெண்கள் அனைவருக்கும் புதிய ஆடை எடுத்துக் கொடுத்திருந்தாள். அரண்மனை சமையல் கலைஞர்கள் மிகப் பெரிய விருந்துக்கு தயார் செய்திருந்தனர். ஷாஜகானின் காலத்திற்கு பிறகு இத்தகைய விருந்தை இப்பொழுதுதான் ஏற்பாடு செய்திருந்தனர்.

பலவிதமான அசைவ உணவுகள் உணவுப்பட்டியலில் இடம் பெற்றன. பல வருடங்களுக்கு முன், பெர்ஷிய இளவரசன் வந்தபொழுது தயாரிக்கப்பட்ட பல சுவையான உணவு வகைகளை இப்பொழுது தனது மகனுக்காக தயாரிக்க உத்தரவிட்டிருந்தாள் ஜெபுனிஷா.

அவளது பாட்டியான மும்தாஜின் பெயரினால் அழைக்கப்பட்ட முர்க் கீமா மும்தாஜ் மஹால் என்ற உணவை அந்தப்புர பெண்களுக்காக தயாரிக்க சொன்னாள். பேரரசர் அப்பொழுது தலைநகரில் இல்லாத காரணத்தினால் பலவகை மதுபானங்களை அந்த விருந்தில் இடம் பெற்றது. அரண்மனை தோட்டத்தில் இருந்த புற்கள் வெட்டப்பட்டு, பல அறிய வகை பறவைகள் பறக்க விடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட ஜெபுனிஷா தானே நேரில் பார்வையிட்டு திருத்தம் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு அடிமைப்பெண் அழுகையுடன் ஓடி வந்தாள்.”இளவரசி! பேரரசியிடம் இருந்து துக்ககரமான செய்தி வந்துள்ளது!”

அக்பர் ஏதேனும் சிக்கி கொண்டானோ என எண்ணிய ஜெபுனிஷா உறைந்து நின்றாள்.

“என்ன ஆனது என சொல்” என ஜூபைதாத் ஆணையிட்டாள்.

ஆனால், அந்தப் பெண்ணோ தான் கூற வந்ததை சொல்ல விரும்பாமல் மௌனம் காத்தாள். அவளின் மௌனம், சகோதரிகளிடையே பயத்தை உண்டு பண்ணியது.

“என்ன ஆயிற்று? உடனே சொல்” என ஜூபைதாத் மீண்டும் கேட்டாள். அதற்கு அந்தப் பெண் அழுகையையே பதிலாக தந்தாள்.

“பேரரசி இறந்து விட்டார்கள். விஷத்தை குடித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார்கள்” என்று அழுகையின் நடுவே கூறினாள்.

இதைக் கேட்டவுடன், குரானில் இறந்தவர்களுக்காக கூறப்படும் பிரார்த்தனைகளை சொல்லத் துவங்கினாள் ஜெபுனிஷா.

“இறுதியாக, தன் தந்தை, தாய், சகோதரர்களுடன் அவர் இணைந்து விட்டார். இனி அவரது மனம் அமைதி அடையும்” என்றாள் ஜெபுனிஷா.

***

அரண்மனை பலவித அலங்காரங்களால் ஜொலித்துக் கொண்டிருக்க, அரண்மனையின் மாடத்தில் அந்தப்புர பெண்கள் நின்று கொண்டு இறுதி சடங்குகளுக்காக செங்கோட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜகன்னாராவின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜகன்னாரா இறந்த செய்தியை மன்னருக்கு அறிவிக்க தூதர்கள் அனுப்பப்பட்டனர். நாடு முழுவதும் அரசாங்க துக்கம் அனுஷ்டிக்க கட்டளை இடப்பட்டது. அங்கே இருந்த அனைவரும் துக்க உடையான வெள்ளை நிற உடையை அணிந்திருந்தனர்.

செப்டம்பர் மாத குளிர் காற்று ஜெபுனிஷாவின் உடலை ஊடுருவி அவள் எலும்பை தாக்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன் பல இறப்புகளை அவள் கண்டிருந்தாலும், ஜகன்னாராவின் இறப்பு அவளை மிகவும் பாதித்திருந்தது. தன்னுடைய இறுதி சடங்குகளை தானே பார்ப்பது போல் தோன்றியது அவளுக்கு. ஜகன்னாராவின் உடலையே பார்த்துக் கொண்டிருந்த ஜெபுனிஷா அழ விரும்பினாள். ஆனால், கண்ணீரும் ஏனோ அவளைக் கை விட்டுவிட அவள் மனம் உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த திடீர் இறப்பு செய்தி அவளை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்க, கீழே விழுந்துவிடாமல் இருக்க அருகில் இருந்த ஜீனத்தின் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள்.

அவள் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி ஜானி நின்று கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாய் வெளியே தெரியாத பகை ஒன்று இருந்து கொண்டே இருந்தது. இருவருமே தான் மட்டுமே ஜகன்னாராவிற்கு நெருக்கமானவளாய் இருக்க வேண்டும் என்று எண்ணியதால் உண்டான பகை உணர்ச்சி அது. அவுரங்கசீப்பின் மகள் என்பது ஜெபுனிஷாவிற்கு எதிரான ஒன்று. ஜானி, ஜகன்னாராவிற்கு பிடித்தமான தம்பியான தாராவின் மகள் என்பது அவளுக்கு இருந்த கூடுதல் அனுகூலம். அவுரங்கசீப்பின் நிழல் எங்கு சென்றாலும் தன்னைப் பின்தொடர்வதை தன்னால் அழிக்க முடியாது என்பது ஜெபுனிஷாவிற்கு நன்கு தெரிந்த ஒன்று. மாறாக, ஜானி, தாராவின் மறு உருவமாய் இருந்தாள். அவளுடன் இருப்பது தாராவுடன் இருப்பதை நினைவுப்படுத்தியதால் அவளுடனே ஜகன்னாரா அதிக நேரத்தை செலவளித்தாள். தனக்குப் பின் தனது நகைகள் அனைத்தும் ஜானிக்கே செல்ல வேண்டும் என அவள் குறிப்பிட்டிருந்தாள். இது தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று ஜெபுனிஷா நினைத்தது அவளின் வலியை அதிகப்படுத்துவதாய் அமைந்தது. இதுவே ஜானியை தன் வாழ்நாள் எதிரியாகவும் நம்பிக்கை இன்றியும் பார்க்க வைத்தது.

மூச்சு விட திணறிய ஜெபுனிஷா மயங்கி தரையில் விழுந்தாள். அவள் கீழே விழுவதை கவனித்தப் பெண்கள் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தும், முகத்தில் காற்று பட விசிறியும் விட்டனர்.

மேலே மாடத்தில் நடந்த குழப்பங்களுக்கு என்ன காரணம் எனப் புரியாமல் அனைவரும் மேலே பார்க்கத் துவங்கினர். சில நிமிடங்களுக்குப் பிறகு ஜெபுனிஷாவின் மூச்சு சீராக, அவள் முகமும் தெளிவடையத் துவங்கியது.

“எப்படி நம்மை விட்டு பிரிந்து செல்ல முடிந்தது அவர்களால்? அனைவரும் நம்மை தனியே விட்டு சென்று கொண்டே இருக்கின்றனர். முதலில் அம்மா, பின் நம் சித்தப்பா, அதன் பின் தாத்தா, இப்பொழுது அத்தை…நாம் யாரும் இல்லாமல் தனித்து நிற்கிறோம்” என அழுகையினூடே புலம்பத் துவங்கினாள் ஜெபுனிஷா.

அதைக் கேட்ட மற்ற பெண்களும் அழத் துவங்கினர். ஷாஜஹானின் தாசிகளில் ஒருவளாய் இருந்து பின் ஆக்ராவில் ஜகன்னாராவுடன் சிறையிருந்த ஹென்னா “ஜகன்னாரா, பேரரசி மட்டுமல்ல இந்த சாம்ராஜ்யத்தின் ஆன்மாவாக இருந்தார்கள்” என கூறினாள்.

“தன்னுடைய ஆட்சியில் அனைவருக்கும் விரக்தியை மட்டுமே தந்த ஒருவரைத் தவிர அனைவரும் இறக்கின்றனர். இறைவனே! எங்களை இவனிடம் இருந்து காப்பாற்ற ஒருவனை விரைவில் அனுப்பு!” என்று ஜூபைதாத் இறைவனிடம் வேண்டினாள்.

ஜகன்னாராவின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றிலும் துக்கத்தை குறிக்கும் வெள்ளை உடையணிந்து மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் நீண்ட நெடிய வரிசையில் பொதுமக்கள் வெள்ளை உடை அணிந்து தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்த கடல் போல் வந்துக் கொண்டே இருந்தனர். ஷாஜகான் இறந்த பொழுது கூட அத்தகைய கூட்டம் கூடவில்லை.

தன் கண்களை மூடி கைகளை உயர்த்தி “இறைவனே! உனது மகளை உன்னுடன் சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்” என பிரார்த்தித்தாள்.

அவள் கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பொழுது கீழே கூட்டத்தில் சப்தம் எழுவதைக் கேட்டாள். அம்பு ஒன்றால் பிளக்கப்பட்டதைப் போன்று அந்த கூட்டம் இரண்டாய் பிரிந்து நிற்க, கிடைத்த இடைவெளியில் போர்க்களத்தில் இருந்து வெற்றியுடன் திரும்பும் வீரன் போல தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான் இளவரசன் அக்பர். அவனைப் பின்தொடர்ந்து பல வீரர்கள் அவர்களது குதிரையில் வந்து கொண்டிருந்தனர். இடைப்பட்ட காலத்தில் அக்பர் நன்கு வளர்ந்திருந்தான். சிறுவனாய் பயிற்சிக்கு சென்றவன் இப்பொழுது நன்கு உயர்ந்து வலிமையான சதைப்பிடிப்புள்ள உடலைக் கொண்டிருந்தான். அவன் தந்தை இளம் வயதில் இருந்ததைப் போலவே இருந்தான். அவனது சிவந்த நிறம் அவனது தாய் ஜெபுனிஷாவிடம் இருந்து வந்தது. ஆனால் மற்றவர்கள் அது அவுரங்கசீப்பிடம் இருந்து வந்ததாக எண்ணினர். தனது ரகசியம் என்றும் மற்றவர்களுக்கு தெரியாமலே இருக்க வேண்டும் என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.

அக்பர் வருவதைப் பார்த்த ஜூபைதாத் “இதோ நம் கேள்விகளுக்கான விடை” என சந்தோஷப்பட்டாள்.

“ஒருவர் வந்தால் மற்றொருவர் சென்று விடுகிறார். இறைவன் ஜகன்னாராவை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு அக்பரை கொடுத்திருக்கார்” என மிஹிர் முணுமுணுக்க “நீ ஏதும் சொல்ல மாட்டாயா ஜெபோ?” என ஜூபைதாத் வினவினாள்/

மெல்ல புன்னகைத்த ஜெபுனிஷா “பேரரசர் அக்பர் நீடுழி வாழட்டும்” என்றாள்.

***

21. ஜோத்பூர்

புல் புல் பறவையே மகிழ்ச்சியுடன் தோட்டத்தில் பாடுங்கள்
மக்ஃபி உங்களுக்காக வசந்தத்தை வென்றெடுத்துள்ளது

20 செப்டம்பர் 1681

அந்த ஞாயிற்றுகிழமை, தனது கூடாரத்தில் மிக எளிய துணியால் அலங்கரிக்கப்பட்ட தனது உணவு மேஜையின் முன் அவுரங்கசீப் அமர்ந்திருந்தான். தங்கம் மற்றும் வெள்ளிப்பாத்திரங்கள் சாத்தானின் மறுவடிவம் என அவன் எண்ணியதால், அவற்றில் உணவு பரிமாறக் கூடாது என தடைவிதித்திருந்தான். தக்காணம், முகலாய சாம்ராஜ்யத்திற்கு என்றுமே ஒரு சோதனையாகத்தான் இருந்தது. அதிகம் வளர்ச்சி இல்லாத பிரதேசம் அது. அருகில் இருந்த மற்ற ராஜ்யங்களுடனும், மராத்தியர்களுடனும் எப்பொழுதும் யுத்தம் நடந்து கொண்டே இருந்ததால் அங்கிருந்த விவசாயிகள் வேறு பிரதேசங்களுக்கு குடியேறிவிட்டனர். அதனால் ஒரு காலத்தில் பசுமையான வயல்வெளிகளை கொண்டிருந்த தக்காணம், இப்பொழுது அடர்ந்த வனப்பகுதியாக மாறி இருந்தது.

அந்த பிரதேசத்தின் உஷ்ணம் அவனுக்கு அவஸ்தையாக இருந்தபொழுதும், அரசின் சுமைகளிடம் இருந்து தஞ்சம் அடையும் இடமாக அதைக் கருதினான் அவுரங்கசீப். தன் வேலையாட்களும், நம்பிக்கைக்கு உரிய படைத்தளபதிகளும் மட்டும் உடனிருக்க அந்த தனிமை அவனுக்கு மிக பிடித்த ஒன்றாய் இருந்தது. தில்லியின் ஆடம்பரங்களும், வசதிகளும் இன்றி ஒரு கூடாரத்தில் எளிமையாய் வாழ்வது அவனுக்கு பிடித்திருந்தது. தக்காணத்தின் ஆளுநராக இருந்த பொழுது, அவன் பெயர் தாங்கிய நகரமான அவுரங்காபாத்தை நிர்மாணித்ததும், கண்ணில் பட்ட அனைத்து ஹிந்து கோவில்களையும் இடித்ததும் அவனுக்கு நினைவிற்கு வந்தது. எப்பொழுதெல்லாம் கோவில்களை இடித்து அங்கிருந்த கற்சிலைகளை மசூதி கட்ட உபயோகப்படுத்தினானோ அப்பொழுதெல்லாம் அவன் மனதில் நிம்மதி குடிகொண்டது. அந்தக் கோவில்களில் இருந்த செல்வதை கொண்டு அவுரங்காபாத்தை நிர்மாணித்தான்.

அன்று அவனுடன் மத்திய உணவு அருந்த அவனது நண்பனும், அந்தரங்க ஆலோசகனுமான ஷாயிஸ்தா கான் வந்திருந்தான். யுத்தத்தை பற்றி முக்கிய விஷயங்களை விவாதிப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. தான் இருப்பது தக்காண பிரதேசத்தில் அமைந்துள்ள கூடாரத்தில் என்பதை மறந்து தனது சமையல்காரனை இளம் ஆட்டுக் கறியை செய்ய சொன்னான். ஆனால், அதற்கு முன்பே அவர்கள்,உணவை தயாரித்திருந்தனர். புலாவ், திராட்சையும் பிஸ்தாவும் கலந்திருந்த நெய் சோறு என அவர்கள் தயாரித்த உணவு அங்கே மேஜையில் தயாராய் இருந்தது. அருகில் ஓடிக் கொண்டிருந்த நதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த குளிர்ந்த நீர் அவர்கள் பருகுவதற்காய் குவளைகளில் ஊற்றப்பட்டிருந்தன.

ஷாயிஸ்தா கான் வந்ததும் அவனை உக்கார சொல்லி சைகை செய்த அவுரங்கசீப், கையை தட்டி பணியாளர்களை வரவழைத்தான். பாத்திரங்களை மூடியிருந்த தட்டை அகற்றியதும் அந்த உணவின் மணம் அங்கே காற்றில் கலந்து வீசியது. அவுரங்கசீப் அங்கே வருவதற்கு முன்பு சில நாட்கள் மிக எளிய உணவை உண்டுக்கொண்டிருந்த ஷாயிஸ்தா கானுக்கு இந்த அறுசுவை உணவு ஒரு மாற்றமாய் இருந்தது. அவர்கள் முன்னிருந்த தட்டில் உணவை பரிமாறிய பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

“ஜோத்பூரின் ராஜாவான ஜஸ்வந்த் சிங் உடல்நலம் குன்றி படுக்கையில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.” தன் முன்னிருந்த உணவை உண்டு கொண்டே தனது ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தியை அவனுடன் பகிர்ந்து கொண்டான் அவுரங்கசீப். “ராஜபுதனத்தில் என்னுடைய அதிகாரத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தவர்களில் அவனும் ஒருவன். அவன் இறக்க நேரிட்டால், அவனது ராஜ்ஜியத்தை நம்முடன் இணைக்க ஏதேனும் எதிர்ப்பு வருமா?” என ஷாயிஸ்தா கானை வினவினான்.

“ஜோத்பூர் ஏற்கனவே முகலாய ஆதிக்கத்தின் கீழ் தான் உள்ளது. நாம் எந்த பிரதேசத்தை விரும்புகிறோமோ அதை நம்முடன் இணைத்துக் கொள்ள எந்த தடையும் இல்லை.”

அதைக் கேட்ட அவுரங்கசீப் புன்னகைத்தாலும் அவன் சொன்னதை மறுப்பது போல் தலை அசைத்தான். “ராஜ்ய பரிபாலனம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல! என் முன்னோர்கள் இரக்க மனதுடன் ராஜபுதனத்தை அவர்கள் ஆள அனுமதித்ததன் விளைவாய் அந்த பகுதிகள் அவர்களுக்கே உரித்தானது போல நடந்து கொள்கின்றனர் இந்த ராஜபுதன மன்னர்கள். நேரடியாய் ஜோத்பூரை நம்முடன் இணைத்துக் கொண்டால் அனைத்து ராஜபுதன மன்னர்களின் பகையையும் நாம் சந்திக்க நேரிடும்.” என அப்பொழுது அவர்கள் முன் இருந்த சிக்கலை விவரித்தான்.

“ஜோத்பூர் நம் வசம் வந்துவிட்டால், வடக்கில் இருக்கும் மன்னர்கள் தெற்கில் இருக்கும் மற்ற ராஜபுதன மன்னர்களுடன் நமக்கு தெரியாமல் தொடர்பு கொள்ள இயலாது. பல காலமாய் நான் யோசித்த விஷயம் இது. இப்பொழுதுதான் இதை செயல்படுத்த நேரம் வந்துள்ளது” என தனக்கு தோன்றிய எண்ணத்தை பகிர்ந்து கொண்டான் ஷாயிஸ்தா கான்.

உணவு பரிமாறுபவர்கள் உள்ளே வர அவர்களிடையே மௌனம் குடி கொண்டது. யார் வேண்டுமானாலும் ஒற்றனாய் இருக்கக்கூடும் என அறிந்த இருவரையும் சூடான உணவு பரிமாறப்படும் வரை அமைதியாக இருந்தனர்.

ஷாயிஸ்தா கானை நோக்கி குனிந்த அவுரங்கசீப் மிகவும் மெதுவான குரலில் “ஜஸ்வந்த் சிங்கிற்கு வாரிசு இல்லை. அதிகாரபூர்வமாக வாரிசு இல்லை எனும் பொழுது அடுத்து யார் பதவி ஏற்பது என்ற குழப்பம் உருவாகும். அந்த தருணத்தில், நாம் ஜோத்பூரை நம்முடன் இணைத்துக் கொண்டால், தேவையற்ற பகை உருவாகுவதைத் தவிர்க்கலாம்” என தனது யோசனையை பகிர்ந்து கொண்டான்.

அவனது அந்த யோசனையைப் பற்றி சிந்தித்துக் கொண்டே தனது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஷாயிஸ்தா கான்.

“ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தேவைப்பட்டால் அனைத்து ராஜபுதன மன்னர்களுடனும் ஒரே நேரத்தில் போரிட நாம் தயராக இருக்க வேண்டும்” என அந்த யோசனையில் இருந்த ஆபத்தையும் விலக்கினான் அவுரங்கசீப்.

குழப்பமாய் அவனை பார்த்த ஷாயிஸ்தா கான் “அப்படியானால் நீங்க தக்காணம் வரவேண்டிய அவசியம் என்ன அரசே?” என கேட்டான்.

“இது மற்றவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நான் செய்த ஏற்பாடு. மராத்தியர்களுடன் எப்பொழுதும் போர் நடந்து கொண்டே இருப்பதனால் நான் இங்கு வருவதை பற்றி எவரும் பெரிதாய் கவலைக் கொள்ள மாட்டார்கள். நான் இங்கிருந்து கொண்டே ஜோத்பூர் விஷயங்களை கவனிக்கலாம். தில்லியில் இருந்தால், அந்த விவகாரத்தை கவனிக்க இயலாத வண்ணம் பல வேலைகள் குறுக்கிடும்.” என தான் தக்காணத்திற்கு வந்ததின் உண்மை காரணத்தை வெளிப்படுத்தினான்.

“அரசே! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும் அல்லவா?”

“இந்த மாதிரி விஷயங்களை நான் உன்னுடன்தான் முதலில் பகிர்ந்து கொள்வேன் என்பது நீ அறியாததா?”

***

தொடர்ந்து செய்த பயணத்தினால் களைப்படைந்திருந்த அக்பரின் தூக்கம் கனவுகளால் நிரம்பி இருந்தது. தில்லியின் வெதுவெதுப்பான காலை நேர காற்று அவன் முகத்தில் பட, தான் இருப்பது தலைநகரில் என்பது அவனுக்கு நினைவிற்கு வந்தது. யாரோ அங்கே வரும் காலடி ஓசைக் கேட்க உடனேயே எழுந்து உக்கார முனைந்தான்.

“எழுந்திருக்க முயலவேண்டாம். ஓய்வெடுக்காமல் குதிரைப் பயணம் செய்ததில் களைத்திருப்பாய் நீ!” என அவனை மீண்டும் படுக்க சொல்லிக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தாள் ஜெபுனிஷா.

“நான் ஏற்கனவே முழித்துவிட்டேன் சகோதரி. மேலும், நான் ஒரு போர்வீரன். ஓய்வில்லாமல் உழைப்பதற்கு பழகிவிட்டேன்.”

“இந்த இஞ்சி கலந்த தேநீரை பருகி, மாம்பழங்களை உண்டு உன் நாளை துவங்கு” என அவன் அவனுக்கு காலை உணவைக் கொடுத்தாள்.

தேநீர் கோப்பையில் இருந்த தேநீரை பருகத் துவங்கினான். இஞ்சி கலந்த அந்த தேனீரின் சுவை, கடந்த சில வருடங்களாக அவன் குடித்து பழகிய குளிர்ந்த மலை நீருக்கு நேரெதிராய் இருந்தது.

“ஒரு இளவரசனுக்கு இருக்க வேண்டியதை விட நீளமாய் முடி வளர்ந்துள்ளது. உன் முடியை வெட்டி திருத்தம் செய்ய நாவிதர்களை அனுப்புகிறேன். நீ குளித்து தயாராக வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொல்லி இங்கிருக்கும் அடிமைகளுக்கு உத்தரவிடுகிறேன். விரைவில் குளித்து நேர்த்தியான உடை அணிந்து என்னுடைய அறைக்கு வந்து விடு. நாம் பேச வேண்டிய விஷயங்கள் ஏராளமாய் உள்ளன” என அவனை தயாராக சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள் ஜெபுனிஷா.

அங்கிருந்த வேலைக்காரர்களுக்கு கட்டளை இட்டுக் கொண்டே செல்வதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அக்பர். அவர்கள் தயாரித்து வைத்திருந்த சுடுநீரில் குளித்தவன், அதுவரை அவனுக்கு பழக்கம் இல்லாத ஆடம்பரத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள முயன்றான். அதன் பின், இளவரசனுக்கு உரிய பட்டாடைகளை உடுத்தி ஜெபுனிஷாவின் அறைக்கு விரைந்தான்.

தன் அறைக்குள் வந்த அக்பரை அழைத்து தன் அருகே அமர வைத்துக் கொண்டாள் ஜெபுனிஷா. அகில் கானும், மக்ஃபியின் மற்ற முக்கிய உறுப்பினர்களும் அந்த அறையில் இருந்தனர். அக்பரை பல வருடம் கழித்து மீண்டும் பார்த்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.

“அக்பர்! ஜோத்பூரின் மன்னர் ஜஸ்வந்த் சிங் இறந்து விட்டதாக செய்தி கிடைத்துள்ளது. ராஜபுதனத்து மன்னர்களின் வழக்கப்படி அவனது மனைவிகள் அவனுடன் உடன்கட்டை ஏறுவார்கள்.” ஜெபுனிஷா சொன்னதை கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான் அக்பர். சதி என்றழைக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஜெபுனிஷா அறவே வெறுத்தாள்.

“அல்லாஹ் அவர்கள் மேல் கருணை காட்டட்டும். இது காட்டுமிராண்டித்தனமான செயல்!” என பத்ருனிஷா சொல்ல மற்றவர்கள் அவளது கருத்தை ஆமோதித்தனர்.

“இது ஒரு கொடூரமான பழக்கம். ஆனால், மற்ற இந்துக்களிடம் இந்த பழக்கம் இல்லை. இறந்தவரின் மனைவிகளை உயிருடன் கொள்வதை அவர்கள் கௌரவம் என எண்ணுகின்றனர் போலும்” என அந்த பழக்கத்தை பற்றி தனக்குத் தெரிந்த விஷயத்தை பகிர்ந்துக் கொண்டான் அகில் கான்.

“அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் இறந்த மன்னருக்கு வாரிசு இல்லை என்பதே. இப்பொழுது பிறர் அவரின் ராஜ்யத்தை தங்களுடன் இணைத்துக் கொள்வது மிகவும் எளிது.”

“யார் அவர்கள் ராஜ்ஜியத்தை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயல்கிறார்கள்?” என மிஹிர் கேட்டாள்.

“வேறு யார்? சர்வ வல்லமை பொருந்திய முகலாயர்கள்தான்.”

சில நொடிகள் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் “உங்களுக்கு எப்படி இந்த செய்தி தெரியும் இளவரசி?” என அகில் கான் கேட்டான்.

“தந்தையுடன் இருக்கும் சமையல்காரன் எனக்கு தகவல் தருபவன். ஒருமுறை, தோட்டத்தின் சுவர் ஏறி குதித்து அந்தப்புரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை அவன் சந்திக்க முயன்றபொழுது என்னிடம் சிக்கினான். அவனை தண்டிக்காமல் விட்டுவிட்டால், எனக்குத் தொடர்ந்து தகவல்களை தருவதாக ஒத்துக்கொண்டான்.”

“இந்த நேரத்தில், ஜோத்பூரை நம்முடன் இணைத்துக் கொண்டால், அனைத்து ராஜபுதன மன்னர்களும் நமக்கு எதிராக திரும்புவார்கள். ராஜபுதன மன்னர்களுடனான நமது நட்பு உடைந்து போனால், நமது சாம்ராஜ்யம் சிதறுண்டு போகும்” எனக் கூறிய அகிலின் குரலில் கவலை படர்ந்திருந்தது.

அதுவரை பொறுமையாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்பர் எழுந்து “நாம் அப்பாவை தடுத்து நிறுத்துவோம். இந்த நடவடிக்கைக்கு நாம் ஆதரவு தரப்போவதில்லை என கூறுவோம்” என்றான். இளம் கன்று பயமறியாது என்பது போல் இருந்தது அவன் பேசியது.

“வெகுளியாய் இருக்கிறாய் தம்பி! நம் சாம்ராஜ்யத்தை பற்றியும், நம் தந்தையை பற்றியும் நீ அறிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அவர் என்ன செய்யவேண்டுமென கூற யாராலும் இயலாது” என தந்தையின் குணத்தை அவனுக்கு விளக்கமாய் எடுத்து சொன்னாள் ஜெபுனிஷா.

“அப்படியானால், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என நாம் அமைதியாய் இருக்க வேண்டியதுதானா?”

“அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறிய ஜெபுனிஷா அருகில் இருந்த கோப்பையில் மதுவை ஊற்றிப் பருகத் துவங்கினாள்.”அக்பர்! நீ இப்பொழுது ரகசியக் குழுவான மக்ஃபியின் அங்கமாவாய். வெளிப்பார்வைக்கு கவிதைகளை எழுதவும் மற்றவர்களின் கவிதைகளை கேட்கவும் இதன் கூட்டத்திற்கு நீ வருவாய். ஆனால், நாங்கள் எழுதும் கவிதைகளில் இரகசியக் குறிப்புகள் மூலம் எங்களது திட்டங்களை பரிமாறிக் கொள்வோம். இதன் மூலம், அரசரை வீழ்த்த யாரும் அறியாமல் வேலைகள் நடக்கின்றன. நீ ஜோத்பூர் சென்று, ஜஸ்வந்த் சிங்கின் இரண்டு மனைவிகளை சந்திக்க வேண்டும்” என அவன் அடுத்து செய்ய வேண்டிய வேலையைப் பற்றி கூற துவங்கினாள் ஜெபுனிஷா.

“ஆனால், அவருடைய மனைவிகள் அனைவரும் உடன்கட்டை ஏறியதாக கூறினீர்களே?”

“அவருடைய இளம் மனைவிகள் இருவர் உயிருடன் உள்ளனர்.”

“அடுத்த ஜோத்பூர் அரசராகும் ராஜபுதனத்து மன்னரை நாம் ஆதரிப்பதாகக் கூறு. ஆனால், இதை அவர்களிடம் மிக ரகசியமாக கூறு.”

அவள் கூறியதைக் கேட்ட அக்பருக்கு குழப்பமே மிஞ்சியது. அது அவனது வார்த்தைகளில் எதிரொலித்தது.

“ஜஸ்வந்த் சிங்கிற்கு வாரிசுகள் யாரும் இல்லாத பொழுது அடுத்த ஜோத்பூர் அரசரை ஆதரிப்பதாக நான் எப்படி கூற இயலும்?”

அதைக் கேட்ட ஜெபுனிஷா சிரித்தாள்.

“ஜஸ்வந்த் சிங்கின் இரண்டு மனைவிகள் கர்ப்பமாக உள்ளனர். இந்த விஷயம் இன்னும் அப்பாவிற்கு தெரியாது.”

***

22. ரோஜா

நம்பிக்கை குறைந்து இருப்பவர்களே இங்கே வாருங்கள் உங்களுக்கு உதவி காத்திருக்கிறது

30 செப்டம்பர் 1681

ராஜபுதனத்தின் பரந்து விரிந்த பாலைவனத்தில் முகாமிட்டிருந்த அவுரங்கசீப், தன் கூடாரத்துக்கு வெளியே அமர்ந்து அங்கே மூடப்பட்டிருந்த தீயில் தன் கைகளை காட்டி தன் உடலை வெம்மைப்படுத்திக் கொண்டிருந்தான். பாலைவனத்தில் நிலவிய கடுமையான குளிர் அவன் உடலையும் குறிப்பாய் முதுகையும் மிகவும் பாதித்தது. இருந்தாலும், அந்த வலியினால் முகத்தில் வெளிப்பட்ட சில கோடுகளைத் தவிர, வலியின் அறிகுறியை அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. தன் எதிரே , நெருப்பின் மறுபக்கம் அமர்ந்திருந்த ஷாயிஸ்தா கானை, தீக்கங்குளின் இடையே பார்த்துக் கொண்டிருந்த அவுரங்கசீப்,

“நீயும் உன் கைகளை வெம்மைப்படுத்திக் கொள் ஷாயிஸ்தா கான். விரைவில் அவை ராஜபுதனத்து வீரர்களின் இரத்தத்தால் குளிர நேரிடும்.” என்றான்.

ஜோத்பூரின் மீது முகலாயர்கள் போர் தொடுக்க இருக்க செய்தி ராஜபுதனம் முழுவதும் பரவியிருந்தது. முகலாயர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் ஜோத்பூரில் இருந்த முகலாய பிரதிநிதியை நாட்டிலிருந்து வெளியேற்றி இருந்தனர் ஜோத்பூரின் ராணிகள். நாங்கள் இனி முகலாய பேரரசின் அங்கமல்ல என்பதே அதில் இருந்த மறைமுக செய்தி.

அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷாயிஸ்தா குளிரில் நடுங்கினான்.

“உன் கண்களில் பயம் தெரிகிறது.”

“இல்லை அரசே. இந்த குளிரின் காரணமாய் எந்த உணர்வும் எழவில்லை.” வெளியிலே பயம் இல்லை என்று கூறினாலும் அவன் மனதிற்குள் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. ராஜபுதனத்துடனான யுத்தம் என்பது எப்பொழுதுமே பயப்படும் ஒன்றாக இருந்ததே அதற்கு காரணம். அவர்களுக்கு மரணத்தை பற்றிய பயமில்லை. இறுதி வரைப் போராட வேண்டும் என்பது அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருந்ததால் சரணடைவது என்ற பேச்சே அவர்களிடம் கிடையாது. ஒரு வேளை, அவர்கள் தோல்வியை சந்திக்க நேரிட்டால், அவர்களது மனைவிகள், பகைவர்கள் அவர்களை களங்கப்படுத்தாமல் இருக்க தங்களை தாங்களே உயிருடன் மாய்த்துக் கொண்டனர்.

“இராணிகள் இருவரும் ஜோத்பூரை விட்டு வெளியேறி விட்டதாக எனக்குத் தகவல்கள் வந்துள்ளது அரசே..”

“மற்ற இராஜபுதன மன்னர்களுடன் இணைந்து நமக்கு எதிராக எதோ திட்டமிடுகிறார்கள்.”

“இளவரசர் அக்பர் இன்னும் இராஜபுதனத்தில்தான் உள்ளாரா?”

“அங்குதான் இருப்பதாக நான் நம்புகிறேன்.”

“அவர் அங்கே செல்லும் முன் அரசின் சம்மதத்தை கேட்டாரா?”

“அவன் செல்லலாம் என நான்தான் கூறினேன்.” ஆனால் அவுரங்கசீப் கூறியது பொய்.

அக்பர், மேவாருக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டதும், அவுரங்கசீப் அவனுடைய அனுமதி இல்லாமல் அக்பர் அங்கே சென்றது ஏன் என்று கேட்டு ஜெபுனிஷாவிற்கு கடிதம் அனுப்பினான். மேவாரின் அரசர் அக்பரை அழைத்தததாகவும், அவருடைய அழைப்பிற்கு மரியாதை செலுத்தும்விதமாய் அக்பர் சென்றதாகவும் ஜெபுனிஷா கூறினாள். அதில் ஏதும் சூது இருப்பதாக அவுரங்கசீப்பிற்கு தோன்றவில்லை. அதனால், அவர்களை காப்பாற்றும் விதமாய் ஷாயிஸ்தா கானிடம் பொய் கூறினான்.

அதன் பின் அங்கே கனத்த மௌனம் நிலவ, நெருப்பில் சூடேறிய தன் கைகளை முகத்தில் வைத்து தன் முகத்தை வெம்மையாக்கிக் கொண்டான் ஷாயிஸ்தா கான். பின் அவுரங்கசீப்பை பார்த்து “அரசே! உங்களின் இளம் பிராயத்தில் இருந்து உங்களை நான் அறிவேன். நீங்கள் போரில் எந்த அளவிற்கு ஆர்வமுடன் இருப்பீர்களா அன்பு செலுத்துவதிலும் அதே போன்றுதான். ஆனால், சில சமயம், நமக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் கூட நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். இளவரசர் அக்பர்….”

அதற்கு மேல் அவன் பேச வேண்டாம் என்பதற்கு அறிகுறியாய் தன் கையை உயர்த்தினான் அவுரங்கசீப். நண்பனாக இருந்தாலும், தனக்குரிய எல்லையை அவன் மீறுகிறான் என்பதே அதற்கு காரணம். திடீரென கோபப்படக்கூடிய மனோநிலை கொண்டிருக்கும் அரசனை வருத்தம் கொள்ள வைப்பது தனக்கே ஆபத்தாக முடியும் என உணர்ந்த ஷாயிஸ்தாவும் மௌனமானான். சில நிமிடங்கள் கழிந்த பின் “ஜோத்பூரின் இராணிகள் இருவரும் இப்பொழுது அஜ்மீரில் தஞ்சம் புகுந்திருப்பதாக என் ஒற்றர்கள் கூறினார்கள்.” என தனக்கு வந்த தகவலை தெரிவித்தான்.

“அப்படியானால், நாம் அஜ்மீரை எரித்து சாம்பலாக்குவோம். அவர்களின் கோவிலிகள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கி, அவர்கள் வீட்டு பெண்களை தாசிகளாக மாற்றுவோம்” என அறைக்கூவல் விடுத்தான் அவுரங்கசீப்.

ஒரு படைவீரனாக ஷாயிஸ்தா, அவுரங்கசீப்பின் மூர்க்க போர் குணத்தை எப்பொழுதுமே ரசித்தான். “ராஜபுதனத்து மன்னர்கள், தங்களின் அழிவிற்கு தாங்களே காரணமாகப் போகின்றனர்” என அவுரங்கசீப் கூறினான்.

****

தன் அறையில் அமைதியில்லாமல் அங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. பட படவென துடித்துக் கொண்டிருந்த தன் நெஞ்சினில் கை வைத்து அதை அமைதியாக்க முயன்றாள். தன்னுடைய பணிப்பெண்ணை சளைத்தவள், கோப்பையில் மதுவை கொண்டு வர சொன்னாள். அவள் முகத்தில் குழப்பம் குடி கொண்டிருந்தது. அக்பரிடம் இருந்து செய்தி எதுவும் வராதது அவளது கவலைக்கு காரணமாய் அமைந்தது. ஏன் இன்னும் அவன் கடிதம் அனுப்பவில்லை? ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டானா? இல்லை முகலாயர்களின் மேல் தங்களுக்கு இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள மேவார் அரசர் அவனை சிறை செய்துவிட்டாரா?

அவளுடைய மனதில் தோன்றிக் கொண்டிருந்த கேட்ட எண்ணங்களின் விளைவாய் அவள் முகத்தில் வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. ஒருவேளை, தன்னை ஏமாற்றி தன் தந்தையின் பக்கம் இணைந்து விட்டானோ அக்பர் என்றுக் கூட அவள் எண்ணினாள். தன் வாழ்நாள் முழுவதும் முகலாய ஆண்களால் ஏமாற்றப்பட்டதால், தன் சொந்த மகனைக் கூட நம்ப முடியவில்லை அவளால்.

அறையினுள் நுழைந்த மிஹிருனிஷாவை பார்த்து “ஏன் இன்னும் அவன் செய்தி அனுப்பவில்லை. தந்தை அஜ்மீர் நகரத்தை முழுவதுமாக எரித்து அங்கிருந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டதாய் கேள்விப்பட்டேன்” என நடுங்கும் குரலில் கூறினாள்.

தன் சகோதரியின் நிலையை பார்த்த மிஹிர் அவள் தோள்களில் ஆறுதலாய் கை வைத்து “முதலில் அமைதியாய் இரு ஜெபுனிஷா” என அவளை சாந்தப்படுத்த முயன்றாள்.

“உனக்கு புரியவில்லை மிஹிர். கோவில் பூஜாரிகள் அனைவரையும் கொன்று, அவர்கள் தலைகளை கம்பில் வைத்து தொங்கவிட சொல்லியுள்ளாராம் அப்பா. மேலும், அங்கிருக்கும் பெண்கள் அனைவரையும் மானபங்கம் செய்ய உத்தரவிட்டுள்ளாராம். இராஜபுதன மன்னர்களுக்கு வேண்டுமென்றே கோபமூட்டுகிறார். அக்பரின் நிலை என்ன எனத் தெரியாமல் பயப்படுகிறேன் நான்.”

அப்பொழுது, ஜெபுனிஷாவின் பணிப்பெண் மதுவைக் கொண்டு வர, அந்த கோப்பையை வாங்கி ஒரு மிடறு முழுங்கிய மிஹிர், மீதமிருந்ததை ஜெபுனிஷாவிடம் கொடுத்தாள். பின், “நாம் பொறுமையாய் இருத்தல் அவசியம். இந்த தருணத்தில் செய்தி அனுப்புவது என்பது மிக ஆபத்தான ஒன்றாகும். அக்பரின் செய்தி வருவதற்காக காத்திருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. இப்பொழுது நீ அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது” என தங்கள் முன் இருக்கும் சூழ்நிலையை எடுத்துக் கூறினாள்.

***

அடுத்த சில நாட்களுக்கு நடப்பது எதையும் கண்டுகொள்ளாதது போன்று தங்கள் வேலைகளை மட்டும் செய்து கொண்டிருந்தனர். ஆனால், ராஜபுதனத்தில் என்ன நடக்கிறது என்பதை தங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மூலம் அறிய முயன்றுக் கொண்டிருந்தனர். ஜோத்பூர் இராணிகள் இருவரும் அஜ்மீரில் இருந்து தப்பிவிட்டனர் என செய்தி வந்தாலும், அவரால் எங்கே இருக்கின்றனர் என்ற விஷயம் யாருக்கும் தெரியவில்லை. இதனால், அவுரங்கசீப் கடுங்கோபத்தில் இருந்தான். அக்பர் எங்கிருக்கிறான் எனக் கேட்டு ஜெபுனிஷாவிற்கு கடிதம் அனுப்பி இருந்தான். அக்பர், ராஜபுதன மன்னர்களால் சிறைப்படுத்தப்பட்டதாக வதந்தி உலாவத் துவங்கியது.

“ஜெபுனிஷா..” என்றவளை அழைத்துக் கொண்டே அறைக்குள் ஓடி வந்தாள் ஜூபைதாத். “அக்பரிடம் இருந்து செய்தி வந்துள்ளது” எனக் கூறியவள் மூடி முத்திரையிடப்பட்டிருந்த கடிதத்தை ஜெபுனிஷாவிடம் கொடுத்தாள்.

வேகமாக முத்திரையை நீக்கி அந்தக் கடிதத்தை படிக்கத் துவங்கினாள் ஜெபுனிஷா.

அன்பு சகோதரிக்கு

நீங்கள் அனுப்பிய கவிதைகளை நான் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன். அதிலும் குறிப்பாய் இந்த வரிகளில் நீங்கள் உபயோகப்படுத்தியுள்ள வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

பருவம் மாறாமல் வசந்த காலம் வந்துவிட்டது
ஆன்மாவை உயிர்ப்பிக்கும் மது எங்கே?
ரோஜாவை சுற்றி இருந்த வாசனை காற்றில் கலந்து விட்டது
தெய்வீகமான புல்புல்லின் பாடல் எங்கே ?

சமவெளியை ரோஜாக்கள் அலங்கரிக்கின்றன
நீல வானம் பரந்து விரிந்துள்ளது
பூக்கள் தங்கள் கோப்பைகளை பனியால் நிரப்பியுள்ளன
எனக்கான மது நிறைந்த கோப்பை எங்கே ?

எனவே இந்த வார்த்தைகளை கொண்டு கவிதை எழுத முடிவு செய்தேன்.

சிறையில் இருந்தும் கோவிலில் இருந்தும்
பனியுடன் கூடிய புதிய காற்று எங்களை அழைக்கின்றன
சொர்க்கம் தந்த அற்புத பரிசாக
புதிய ரோஜாக்கள் வசந்த காலத்தில் பூத்துள்ளன

முதலில் இரண்டு ரோஜாக்கள்
காற்றில் நறுமணத்தை பரப்பின
அதில் ஒரு ரோஜா காற்றினால் வாடிப் போக
மீதம் இருக்கும் ஒரு ரோஜாவை மாலி கவனித்துக் கொள்கிறான்

தினமும் தோட்டத்தில் நடக்கிறேன்
அழகின் அதிசயத்தை வியந்து கொண்டே
தீங்கு விளைவிக்கும் புயல்களில்
இருந்து அதைக் காப்பாதே என்னுடைய கடமை இப்பொழுது

“அல்லாஹவை போற்றுவோம். இராணிகளுக்கு குழந்தை பிறந்துவிட்டது” என்று மகிழ்ச்சியினால் நடுங்கிய குரலில் கூறினாள் ஜெபுனிஷா.

அவளை குழப்பமாக பார்த்த ஜூபைதாத் “நீ எப்படி உறுதியாகக் கூறுகிறாய்?” எனக் கேட்டாள்.

“தெளிவாகக் கேள். ரோஜாக்கள் குழந்தைகளை குறிக்கின்றன. இரண்டு ரோஜாக்களில் ஒன்று உதிர்ந்தது என்றால் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மீதமிருக்கும் குழந்தையை காப்பாற்றுவது என் கடமை எனக் குறிப்பிட்டுள்ளான்.”

“ரோஜா , இறந்த மன்னர் ஜஸ்வந்த் சிங்கின் மகன். இது அப்பாவிற்கு தெரியும் என நினைக்கிறாயா?”

“என்னால் உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால், இப்பொழுது ஆண் வாரிசு பிறந்துவிட்டதால், அந்த குழந்தையைத்தான் அடுத்த மன்னராக அவர்கள் தேர்ந்தெடுப்பர். கண்டிப்பாக இப்பொழுது யுத்தம் இருக்காது. அனைத்து ராஜபுதன மன்னர்களுடனும் ஒரே நேரத்தில் யுத்தம் செய்திட அப்பா முட்டாள் இல்லை. அவர் கண்டிப்பாக வேறேதேனும் சூழ்ச்சி செய்வார்.”

“வேறென்ன சூழ்ச்சி இருக்கக் கூடும்?”

“எனக்கு அது இப்பொழுது தெரியவில்லை.”

****

அழகான நகரமாக இருந்த அஜ்மீர் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது முகலாயர்களின் கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் கட்டபட்டிருந்த முகலாயர்களின் கொடி, தொலைவில் இருந்து பார்ப்பதற்கு ராஜபுதனத்தின் இதயத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்களில் இருந்து வழியும் இரத்தம் போல் தோன்றியது.

படைவீரனுக்குரிய உடைகளை அணிந்திருந்த அவுரங்கசீப் , தனது நடுங்கும் விரல்களால் தன் முன் இருந்த இராஜபுதனத்தின் வரைபடத்தில் அதன் உட்பகுதிகளை சுட்டிக் கொண்டிருந்தான்.

“ஜோத்பூரின் அரசி ஒரு பரத்தை. அவளுடைய காதலனுடைய கருவை தன் வயிற்றில் சுமந்தவள் அவள். தன் நடத்தை வெளியே யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென அந்த குழந்தை ஜஸ்வந்த் சிங்கின் குழந்தை எனக் கூறுகிறாள். பல மாதங்களாக உடலை நலம் குன்றி இருந்த ஜஸ்வந்த் சிங் எப்படி தன் மனைவியுடன் உறவு கொண்டிருக்க முடியும்? இந்தக் குழந்தையை நான் ஏற்றுக் கொள்ள இயலாது.”

அவனை சுற்றி நின்றுக் கொண்டிருந்த அவனது தளபதிகள் அனைவரும் அமைதியாய் தங்கள் தலையை குனிந்து நின்றுக் கொண்டிருந்தனர். ஜஸ்வந்த் சிங்க் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் தான் உயிரிழந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அவுரங்கசீப் தான் கூறியதில் பிடிவாதமாக இருந்தான்.

“அக்பர் எங்கே ?”

“அரசே! இளவரசர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், அவரை பணயக்கைதியாக அவர்கள் பிடித்து வைத்திருக்கலாம் என நாங்கள் பயப்படுகிறோம்” என்று ஒரு தளபதி அவனுக்கு வந்த செய்தியைக் கூறினான்.

“எந்த இராஜபுதன மன்னனனுக்கு எனது மகனை கைது செய்ய தைரியம்உள்ளது?”

“மேவரின் அரசர் ராஜ் சிங் இதை செய்திருக்கலாம் என எண்ணுகிறோம் அரசே.”

“இந்த செயலால் என்ன என்ன பின்விளைவுகள் ஏற்படும் என அவனுக்கு எச்சரிக்கை அனுப்பு.”

ஜோத்பூர் ராணியின் குழந்தையை ஏற்க மறுப்பது என்றும் அதை ஏற்க மறுக்கும் எந்த ஒரு மன்னனாலும் அவனை தாக்குவது என்றும் அவுரங்கசீப் முடிவெடுத்தான். ஆனாலும், அனைத்து இராஜபுதன மன்னர்களும் இணைந்து அவனை எதிர்த்தால் என்ன செய்வது என்ற பயம் அவனுடைய ஆழ்மனதில் இருக்கத்தான் செய்தது. அப்படி ஒரு யுத்தம் வந்தால், மராத்தியர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்த படைகளை கொண்டு இவர்களுடன் போரிட நேரிடும். இருந்த பொழுதும், ஜோத்பூர் அரசியின் மகனை தான் அடுத்த வாரிசாக ஏற்கவில்லை என்பதை இராஜபுதனத்து மன்னர்களுக்கு செய்தியாய் அனுப்பினான்.

***

23. 100 படைவீரர்கள்

என் இதயத்தில் இருந்த நெருப்பு புதுப்பிக்கப்பட்டுவிட்டது
என் பெருமூச்சுகள் பட்டு தீப்பிழம்புகள் வெளியே தெரிகின்றன

10 அக்டோபர் 1681

அக்பர், அவனுக்காக ப்ரத்யேகமாய் கட்டப்பட்ட மாடத்தில் அமர்ந்திருந்தான். பாலைவனைப்பகுதிகளில் அதிகாலை நேரம் எப்பொழுதும் கடும் குளிருடன் கூடிய ஒன்றாய் இருக்கும். அந்தக் குளிரில் இருந்து காத்துக்கொள்ள அவனுக்கு தனது பிரத்யேக கம்பளிகளை கொடுத்திருந்தார் ராஜ் சிங். அந்த கம்பளிகளில் ஹிந்துக்களின் சின்னங்களான தாமரையும் சூரியனும் பதிக்கப்பட்டிருந்தது. அந்த குளிருக்கு அவர்கள் தந்த தேநீர் இதமாய் உள்ளிறங்கியது. ராஜபுதன வீரர்கள் அதிகம் கோழி இறைச்சியும், ஆட்டு குட்டியின் இறைச்சியும் உண்பதைத் தவிர்த்தனர். இதனால், அவர்களின் உணவையே அவன் உண்ண வேண்டி இருந்தது. தில்லியில் மணம் கமழும் பல்வேறு உணவுகளை உண்டுப் பழகியவனின் வயிறு இப்பொழுது அந்த உணவுகளை எண்ணி ஏங்கியது. ஆனால், அவன் கண்முன் ஜாலம் நிகழ்த்திய உதய சூரியன் உணவைப் பற்றிய அவன் எண்ணங்களை மறக்கடித்தது.

“மரியாதைக்குரிய அரசர் வருகிறார்!” எனக் காவலன் அறிவித்தான்.

ராஜா ஜெய் சிங் வருவதைக் கண்டா அக்பர் வேகமாய் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவரை வரவேற்றுக் கொண்டே “அரசே! சொல்லி அனுப்பி இருந்தால் , நானே வந்திருப்பேன். நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?”.

“உக்காருங்கள் இளவரசே! இந்த காலை நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், நேற்று நள்ளிரவு கடந்தப் பின் உங்கள் தந்தையின் ஓலை கிடைத்தது. தனக்கு வந்த கடிதத்தை அவனிடம் கொடுத்தவர் , தூரத்தில் கிழக்கே மேலே ஏறிக்கொண்டிருந்த சூரியனை பார்க்கத் துவங்கினார். அவனுடய இதயம் படபடக்க அந்தக் கடிதத்தை விரித்து படிக்கத் துவங்கினான் அக்பர் .

ராணா ராஜ் சிங்,

என்னுடைய ஆளுகையின் கீழ் இருக்கும் மேவாரை நீங்கள் திறம்பட நிர்வகித்து வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன். உங்களுடைய விருந்தினராக உங்கள் மாளிகையில் தங்கியிருக்கும் இளவரசன் அக்பர், தில்லி திரும்ப விரும்புவதாக அறிந்தேன். அவன், இளவரசனாகவும், வீரனாகவும் தன் கடமையை செய்ய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அவனை தகுந்த பாதுகாப்புடன் ஜோத்பூரில் இருக்கும் எனது போர் முகாமிற்கு அனுப்பி வைக்கவும். சரியான நேரம் வரும்பொழுது அவன் என்னுடய படையுடன் தில்லி செல்வான்.

அல்லாஹ்வின் கருணை உங்களுக்கு என்றும் கிட்டட்டும்.
ஆலம்கீர்

“நான் உங்களிடம் பணயக் கைதியாக இருப்பதாக தந்தை நினைக்கிறாரா?”

அப்பொழுது, ஒரு பணியாள் உள்ளே வந்து சூடான தேநீர் கோப்பையை வைத்து சென்றான். அவன் வெளியே செல்லும் வரை மௌனமாய் இருந்த ராஜ் சிங் அவன் சென்ற பிறகு,” என் மாளிகையில் உன் தந்தையின் ஒற்றர்கள் அதிகம் ஊடுருவி உள்ளனர். அதனால்தான், உங்கள என் அறைக்கு அழைக்காமல், நானே இங்கு வந்தேன். என் மாளிகையில் வெகு சிலரையே நான் நம்புகிறேன்.”

அதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்த அக்பரின் கண்கள் சிமிட்ட துவங்கின. யோசிக்கும் பொழுதெல்லாம் கண் சிமிட்டும் இந்தப் பழக்கம் அவனையறியாமலேயே அவன் தந்தையிடம் இருந்து அவனுக்கு வந்துள்ளது.

“அஜ்மீரை அழித்ததற்கு பதிலடியாக உன்னை சிறைப்பிடித்துள்ளதாக உன் தந்தைக்கு பதில் எழுதப் போகிறேன். மேலும், உன்னை விடுவிக்க வேண்டுமானால், போரில் கைது செய்த 100 ராஜபுதன வீரர்களை விடுதலை செய்ய வேண்டுமென நிபந்தனையும் விதிக்கப் போகிறேன்.”

“என்னுடைய மதிப்பு அவ்வளவுதானா?” என அக்பர் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“இளவரசே! இது ராஜதந்திரங்களில் அடங்கும் ஒன்றாகும். உங்களை விடுவிப்பதற்கு நிபந்தனையாக நான் ஏதேனும் கேட்டுத்தான் ஆக வேண்டும். நீங்கள் அங்கே சென்றவுடன் எங்களுக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து உங்கள் தந்தையை ராஜபுதனத்தில் இருந்து துரத்துவோம். அவர் தோல்வியை தழுவட்டும். அதற்கு பரிசாக உங்களை பேரரசர் ஆக்குகிறோம்.”

“நீங்கள் கருணை மிக்கவர் அரசே. நான் ஒரு போர் வீரன். இராஜதந்திரங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு பெருமை அளிக்கிறது.”

இராஜ் சிங் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார். “உன்னுடைய முன்னோர் பேரரசர் அக்பர் இராஜபுதன இளவரசிகளை முகலாயர்கள் திருமணம் செய்துகொள்ளும் பழக்கத்தை துவக்கி வைத்தார். அவருக்கு பின் வந்த அரசர்கள் அனைவரும் ராஜபுதன இளவரசிகளை மணந்தனர். உங்கள் உடலில் ஓடும் அதே இரத்தம் எங்கள் உடலிலும் ஓடுகிறது. ஆனால், இந்த இரத்த பந்தத்தையும், நம்மிடையே இருந்த பிணைப்பையும் உன் தந்தை உடைத்தெறிந்தார். உங்களுடைய குடும்பத்தில் இருந்த பல பேரைக் கொன்று விட்டார். இப்பொழுது அவரை தடுக்க உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் கிடையாது. நீதான் எங்களின் இறுதி நம்பிக்கை.”

தன் முன்னோருடன் அடிக்கடி செய்யப்பட்ட ஒப்பீடு அவனுக்கு பிடித்திருந்தாலும் மறுபுறம் எரிச்சலூட்டுவதாய் இருந்தது. அவரது பெயரே, முகலாய சாம்ராஜ்யம் இழந்த பெருமையை மீண்டும் பெரும் என்ற நம்பிக்கையை பலருக்கு தந்திருந்தது. ஆனால், அக்பருக்கு அது நடக்க இயலாத ஒன்றாக தோன்றியது.

“அரசே, நான் என் தந்தையை போன்றவனில்லை. அதே சமயத்தில் பேரரசர் அக்பரின் மறு பிறவியும் அல்ல. அந்த நாட்கள் மீண்டும் வருவது கடினம்.” அக்பர், சாளரத்தின் வெளியே தெரிந்த பரந்து விரிந்த நிலப்பகுதிகளை பார்த்திருக்க அந்த அறையில் ஓர் கனத்த மௌனம் நிலவியது.

” தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், ஹிந்துக்களிடையே மறு பிறவியைப் பற்றிய நம்பிக்கை உண்டு. நீங்களும், நானும் மண்ணால் ஆனவர்கள். மீண்டும் ஒரு நாள் அதே மண்ணுக்குள் போக வேண்டியவர்கள். இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், நம் மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதே நிலைத்து நிற்கும். நீங்களும் சிறந்த பேரரசராக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என தன் மனதில் தோன்றியதை கூறினார் ஜெய் சிங்.

“நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன் அரசே!”

“நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறிய ஜெய் சிங்கின் முகத்தில் எந்தவித உணர்வுகளும் இல்லாமல் இருந்தது.

****

ராஜா ஜெய் சிங்கின் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஷாயிஸ்தா கான், அவுரங்கசீப்பின் கூடாரத்தில் நுழைந்த பொழுது, அவுரங்கசீப் மெக்கா இருக்கும் திசையை நோக்கி மண்டியிட்டு தொழுது கொண்டிருந்தான். தன்னுடைய பிரார்த்தனையில் யாரும் குறுக்கிடுவதை அவுரங்கசீப் என்றும் விரும்பியதில்லை. ஆனால், காரணம் இன்றி ஷாயிஸ்தா கான் தன்னை தொந்தரவு செய்யமாட்டான் என அறிந்த அவுரங்கசீப் தரையில் நெற்றி பதிய மண்டியிட்டு தொழுதப் பின் கடிதத்தைப் படிக்க சொல்லி சைகை செய்தான்.

முகலாயப் பேரரசர் ஆலம்கீருக்கு வணக்கம்.

ஒரு காலத்தில் அஜ்மீர் என்ற நகரம் இருந்த இடத்தில் இன்று இருக்கும் உங்கள் முகாமுக்கு இளவரசர் அக்பரை அனுப்பி வைக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன. இன்று உங்களால் இடித்து தரைமட்டமாக்கபட்டுள்ள அஜ்மீரில் எனது கோடைக்காலங்களை கழித்த நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. நீங்கள் அழித்த ஆலயங்களில் எனது தாய் வழிபட்டிருக்கிறார். நீங்கள் சிதைத்த அரண்மனைகளில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். இளவரசர் அக்பரை எனது விருந்தாளியாக மேவாருக்கு அழைத்தேன். அவருக்கு பதிலாக நூறு ராஜபுதன வீரர்களை தர நீங்கள் சம்மதிக்கும் வரை அவர் என் விருந்தாளியாக இங்கேயே தொடர்ந்து இருப்பார். அந்த வீரர்கள் செய்த குற்றம்தான் என்ன? அவர்கள் வசிக்கும் இடங்களை பாதுகாத்தது குற்றமா? அவர்களை அவர்கள் குடும்பத்துடன் இணைய அனுமதியுங்கள்.

ராஜ் சிங்

மேவார் அரசர்

“யாரிடம் பேரம் பேசுகிறான் அவன்?” என அவுரங்கசீப் கொதித்தான்.

“அரசே! அவசரப்பட வேண்டாம். தன் நாட்டு மக்களிடம் தன் கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ளவே இந்த நிபந்தனையை அவன் விதித்துள்ளதாக நினைக்கிறேன். அஜ்மீர் சிதைக்கப்பட்டதில் ராஜபுதன மக்கள் அனைவரும் கொதித்துள்ளனர். 100 வீரர்களை திருப்பி கொடுப்பதில் நமக்கு நஷ்டம் இல்லை.”

இதைக் கேட்ட அவுரங்கசீப்பின் கோபம் சிறிது தணிந்தது. “அப்படியானால், வீரர்களை உடனடியாக குடுத்து இளவரசனை மீட்க ஏற்பாடு செய். அக்பரின் ஒரு தலைமுடிக்கு சேதம் விளைவித்திருந்தாலும் இந்த ராஜபுதனம் முழுவதையும் அழித்துவிடுவேன்” என சூளுரைத்தான்.

****

24. போரின் துவக்கம்

என் குறிக்கோளை அடைவதற்கான பயணம் மகிழ்வானது என்றோ
எளிதானது என்றோ எண்ணாதீர்கள்
சோர்வுற்ற இதயத்துடனும் களைத்த கால்களுடனும்தான்
நான் பயணிக்கிறேன்

ஆஸமிற்காக அவள் எழுதிய பிரார்த்தனை கவிதை இருந்த கடிதத்தை மூடி முத்திரையிட்டு ஜானியிடம் கொடுத்தாள் ஜெபுனிஷா.

“இது உன் கணவருக்காக நான் எழுதிய பிரார்த்தனைப் பாடல்.”

“என் கணவர் உங்களைப் போலவோ அல்லது உங்கள் சகோதரிகள் போலவோ கவிதை திறமைப் படைத்தவர் அல்ல” என சிரித்துக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டாள் ஜானி.

“நீ சொல்லுவது சரிதான். ஆனாலும், என் இளகிய கவிதை மனம், என் சகோதரர்களுக்காக கவிதை எழுத சொல்லித் தூண்டுகிறது.” ஆஸம் அவளது கவிதையை கிண்டல் செய்வான் என அவளுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், தான் நடத்தி வருவது பிரார்த்தனை குழு தான் என்று பிறரை நம்பவைக்க இவற்றை செய்ய வேண்டியிருந்தது.

ஜகன்னாராவின் இடத்தில் , நாட்டின் முதல் பெண்மணியாகவும், பேரரசியாகவும் அவளை நியமித்திருந்தான் அவுரங்கசீப். அவனது மனைவிகளைவிட ஜெபுனிஷாவின் மதிப்பு அதிகமாகியது. இப்பொழுது அவளை சுற்றி ஆயிரம் கண்கள் அவளை பார்த்துக் கொண்டே இருந்தன.

“வங்காளத்தில் இருந்து வருவதற்கு கால தாமதம் செய்ததால் பேரரசர் திட்டியதன் காரணமாய் இளவரசர் ஆஸம் வருத்தமாக உள்ளார்.” ஜெபுனிஷா ஆறுதல் கூறுவாள் என எண்ணி தன் மன வருத்தத்தை அவளுடன் பகிர்ந்துக் கொண்டாள் ஜானி.

“பேரரசர் அனைவரின் மீதும் வருத்தமாக உள்ளார்” எனக் கூறிய ஜெபுனிஷா, ஜானியின் தாடையை தன் கைகளால் பிடித்து உயர்த்தி நேருக்கு நேர் பார்த்தவாறு கூறினாள். “வங்காளத்திலிருந்து ராஜபுதனம் செல்லும் வழியில் தில்லியில் ஒருநாள் நீங்கள் தங்கி செல்ல திட்டமிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சாம்ராஜ்யத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் செல்வது என்பது அவ்வளவு எளிதான பயணம் அல்ல.”

ஜெபுனிஷாவின் கைகளை தன் கரங்களால் பிடித்துக் கொண்ட ஜானி ” தான் சொல்லியவாறு உதய்பூரின் மீது படையெடுக்காத இளவரசர் அக்பர் மீதுதான் பேரரரசருக்கு அதிக கோபம் என எண்ணுகிறேன்” எனக் கூறினாள்.

ஜானியின் வார்த்தைகள் ஜெபுனிஷாவின் இதயத்தை தைத்தது. அக்பரை பற்றிய எதிர்மறை கருத்துகளை அவள் என்றுமே விரும்பியதில்லை. இருந்தும், ஜானியின் வார்த்தைகளில் உண்மையில்லாமல் போகவில்லை என்பது அவளுக்குத் தெரியும். மேவாரிடம் இருந்து திரும்பி வந்த அக்பரை , உதய்பூரின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருந்தான் அவுரங்கசீப். ஆனால், அதை உடனடியாக சொல்லாமல் காலம்தாழ்த்தி வந்தான் அக்பர். உதய்பூர் மிக முக்கியமான இடத்தில் அமைந்திருந்ததால் அதை உடனடியாக கைப்பற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. அதே சமயத்தில், அக்பர் ராஜபுதன மன்னர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாக வதந்திகள் பரவத் துவங்கின. ஆனால், அதை அவுரங்கசீப் நம்பியதாகத் தெரியவில்லை.

“தாக்குவதற்கு சரியான சமயத்தை அக்பர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அரசர் சிறிது பொறுமை காக்க வேண்டும்.” அக்பரை பற்றி தவறாக பேசவேண்டாம் என்பது போல் இருந்தது அவள் கூறிய தொனி.

“அரசருக்கு பொறுமை கிடையாது என்பது என்னை விட உனக்கு நன்கு தெரியும் ஜெபுனிஷா.”

ஜெபுனிஷாவின் மேஜை அருகே சென்றவள், அங்கே இருந்த கவிதைகளைப் பார்த்தவள் “இந்தக் கவிதைகளை யார் எழுதியது ? நம் சாம்ராஜ்யத்தில் கவிதைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாதா? பார்ப்பதற்கு வெகுதொலைவில் இருந்து வந்தவை போல் தெரிகிறதே. இதில் ஏன் அக்பரின் பெயர் இருக்கிறது?” என சந்தேகமாய் கேக்கத் துவங்கினாள்.

வேகமாய் அவள் அருகே வந்த ஜெபுனிஷா, அவளிடம் இருந்து அந்த கவிதைகளை பறித்துக் கொண்டு “இவை எல்லாம் மிக பழைய கவிதைகள். இவற்றை வைத்திருப்பதற்கு பேரரசரிடம் அனுமதி பெற்றிருக்கிறேன்” எனக் கூறி தன் அறையில் இருந்த பெட்டியை திறந்து அந்த கவிதைகளை அவற்றில் போட்டு பெட்டியை திரும்ப பூட்டினாள்.

ஜெபுனிஷா எதையோ மறைக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட “அந்தக் கவிதைகள் நான் பார்க்கக் கூடாதா?” என சந்தேகத்துடன் கேட்டாள்.

தன் நடவடிக்கை சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்பதை உணர்ந்துக் கொண்ட ஜெபுனிஷா சிரித்துக் கொண்டே “இவற்றை மற்றவர்கள் படிக்க பேரரசர் அனுமதிக்கவில்லை” எனக் கூறினாள்.

இதைக் கேட்ட ஜானியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“நீ என்னிடம் இருந்து எதையோ மறைக்கிறாய் என எண்ணுகிறேன். அவை கண்டிப்பாக பழைய கவிதைகள் இல்லை. அதில் ஏன் அக்பரின் பெயர் உள்ளது?”

அவளின் கேள்வியில் ஜெபுனிஷா தடுமாறினாலும், தன் குரலை உயர்த்துவதன் மூலம் உணர்வுகளை மறைக்க எண்ணினாள். “நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்து விடாதே! நாட்டின் பேரரசியிடம் பேசுகிறாய். பொய்யான குற்றசாட்டுகளுக்காக உன்னை சிறைப்படுத்த என்னால் முடியும்.”

“என்னை மிரட்டலாம் என நினைக்காதே! என்னை கைது செய்தால் கண்டிப்பாய் விசாரணை நடக்கும். அதுவும் சிறை செய்யப்பட்டது அரசரின் மருமகள் என்னும் பொழுது கண்டிப்பாக விசாரணை நடக்கும். அந்த சமயத்தில் இந்த கவிதைகளை அங்கே காட்டியே ஆக வேண்டும். அப்பொழுது நீ என்ன செய்வாய்?”

ஜெபுனிஷா உள்ளே வைத்தது போக இன்னும் சில கவிதைகள் மேஜையின் மேல் இருப்பதையும், அவற்றை தன்னிடமிருந்து ஜெபுனிஷா மறைக்க முயல்வதையும் பார்த்தாள் ஜானி. ஜெபுனிஷாவை சுற்றி தனது வலது கரத்தால் அந்த கவிதைகளை பற்றினாள் ஜானி. அவளது கையைப் பற்றி அவளிடம் இருந்து அவற்றை பறிக்க முயற்சி செய்தால் ஜெபுனிஷா. ஜெபுனிஷாவை இழுத்துக் கீழே தள்ள ஜானி செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. ஜெபுனிஷாவை தள்ளுவது என்பது பாறையை தள்ளுவது போல் இருந்தது.

ஜெபுனிஷா ஜானியின் வயிற்றில் குத்த, வலியில் துடித்த ஜானி கீழே விழுந்தாள். அவள் கையில் இருந்த கவிதைகளை பறித்துக் கொண்ட ஜெபுனிஷா, அவளை வாயிலை நோக்கித் தள்ளினாள். வயிற்றில் குத்தியதால் மூச்சு விட திணறி இருமத் துவங்கினாள் ஜானி. அவளுடன் சண்டையிட்டதால், ஜெபுனிஷாவும் மூச்சு வாங்க நின்றுக் கொண்டிருந்தாள். “என்னுடைய விஷயங்களில் இனியாவது தலையிடாமல் விலகி நில். இல்லையேல், உனக்கு மரண தண்டனை விதித்து, அந்த உத்தரவு அரசருக்கு தெரியும் முன் உன்னை கொல்லவும் நான் தயங்க மாட்டேன்.”

ஜானியின் கோபம் எல்லை மீறிக் கொண்டிருக்க, அந்த கோபத்தினால் அவள் உடல் நடுங்கியது. அந்த அறையில் ஜெபுனிஷாவை தாக்க ஏதேனும் ஆயுதம் கிடைக்குமா என்று அறையை நோட்டமிட்டாள். அவளுக்கு என்னைத் தாக்க எப்படி தைரியம் வந்தது? ஜெபுனிஷாவின் காலுக்கு அருகே ஹூக்கா இருப்பதை பார்த்தவள் அதை எடுத்து ஜெபுனிஷாவை தாக்கலாமா என யோசித்தாள். அதே சமயத்தில், அவளை காயப்படுத்த முடியாமல் போனால், தன்னுடைய நிலை என்னாகும் என்பதையும் சிந்தித்தாள். தன்னுடைய குறி தப்பினால், தன்னை கொல்லவும் ஜெபுனிஷா தயங்கமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த ஜானி, அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

ஜெபுனிஷாவை முறைத்துப் பார்த்த ஜானி “இது இத்துடன் முடியவில்லை. என்னைப் பகைத்துக்கொண்டதற்கான பலனை நீ கட்டாயம் அனுபவிப்பாய்” என எச்சரிக்கும் விதமாய் கூறினாள். அந்தக் கணத்தில் இருந்து ஜெபுனிஷா மீது தீரா பகை உருவானது ஜானிக்கு. எந்த தருணத்திலும் அவளை மன்னிக்க ஜானி தயாராக இல்லை. அவளுக்கு பதிலடி தர இன்று சரியான நாள் இல்லை என்பதை உணர்ந்தவள் மெல்ல அங்கிருந்து வெளியேறினாள்.

அடுத்த பேரரசரை உருவாக்கு என ஜகன்னாரா சொன்னதை நினைவுகூர்ந்த ஜானி, அக்பரை அந்த இடத்திற்கு ஜெபுனிஷா உருவாக்குகிறாள் எனப் புரிந்து கொண்டாள். அவள் வெற்றிபெற்றால், தன் தந்தையை எப்படி அவுரங்கசீப் கந்தல் ஆடை உடுத்தி யானையின் மேல் ஊர்வலமாய் கொன்று சென்றானோ, அதே மாதிரி தன்னையும் அழைத்து சென்று கொலை செய்ய ஜெபுனிஷா தயங்கமாட்டாள் என்பது அவளுக்கு தெரியும். “அவ்வாறு நடக்க நான் விட மாட்டேன். ஆஸம் பேரரசர் ஆவார். நான் பேரரசியாவேன்” என உறுதி எடுத்தாள்.

முகலாய பேரரசின் அடுத்த வாரிசுக்கான போர் அங்கே துவங்கியது. ஆனால். இந்தப் போரைத் துவக்கியது அவுரங்கசீப்பின் மகன்கள் அல்ல, அரச குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள்.

***

பாலைவனத்தில் வீசிய மணல் புயலால் ராஜபுதனத்து வீரர்கள் தங்கள் படைகளை நிறுத்தியிருந்த ஆரவல்லி மலையை அவுரங்கசீப்பால் தெளிவாக பார்க்க இயலாமல் போனது. ஆனால் , இன்று புயல் காற்று நின்றவுடன், அதன் நிழல் சீரற்ற பாலைவனத்தில் உருவாகியது. அவுரங்கசீப் எதிர்பார்த்த கடுமையான எதிர்ப்புக்கு மாறாக அமைதியே நிலவியது அங்கே.

அப்பொழுது, கருமையான போர் உடையும், தலைக்கவசத்தையும் அணிந்து அவுரங்கசீப்பின் கூடாரத்திற்குள் நுழைந்தான் அக்பர். பல வகைகளில், தன்னையே பார்ப்பது போல் இருந்தது அவுரங்கசீப்பிற்கு. அவனைப் போலவே நிறமும், வலிமையான உடலும் கொண்டிருந்தான் அக்பர். அதுமட்டுமல்லாது திறமையாக போர் புரிவதிலும், யுத்த தந்திரங்களிலும் சிறந்து விளங்கினான்.

அவர்களுக்கு எதிரே தூரத்தில் தெரிந்த ஆரவல்லி மலையை காட்டி “அங்கேதான் எதிரிகளின் படை இருக்கிறது. உன் சகோதரர்கள் ஆஸம் மற்றும் முவாஸத்தை அவர்களின் படைப்பிரிவுடன் அங்கே அனுப்பி இருக்கிறேன். எதிரிகளின் எண்ணிக்கை, அவர்களை படைப்பிரிவுகளை பார்த்து வருவதற்காக சென்றுள்ளார்கள். அவர்கள் கொண்டு வரும் செய்தியை பொறுத்து நம் போர் திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று சொன்னான்.

“நாம் ஏன் காத்திருக்க வேண்டும் தந்தையே? நம் முழுப் படைகளையும் கொண்டு நேரடியாய் தாக்கலாமே?”

“ஒருபொழுதும் அவ்வாறு செய்யக் கூடாது. நம் படைகளை கொண்டு அவர்களை தோற்கடித்துவிடலாம் என்று தவறான எண்ணத்தில் போனால், நம்மை விட அவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் நாம் அதிக வீரர்களை பலி கொடுக்க நேரிடும். இது ராஜபுதனத்து மண். அவர்கள் மலையை தேர்வு செய்ததற்கு ஏதோ ஒரு முக்கியக் காரணம் இருக்க வேண்டும். எதிரிகளை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடாதே!”

இதைக் கேட்டு அக்பர் பெருமூச்சு விட்டான். எதிரிபடைகளின் எண்ணிக்கையை பற்றி சரியான தகவல்கள் இருந்தால், கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தன் படைகளை அனுப்புவதில் அவுரங்கசீப்பிற்கு எந்த தயக்கமும் இருக்காது. இராஜபுதனத்து நகரங்களின் மீது தாக்குதல் தொடுக்க துவங்கியதில் இருந்தே அவுரங்கசீப்பின் மிருகத்தனமான தாக்குதல்களை பற்றிய செய்திகள் சுற்றிக் கொண்டிருந்தன. ஜோத்பூரை தாக்கி தரைமட்டமாகிய பின், அங்கிருந்த தெய்வங்களின் விக்கிரங்களை தில்லிக்கு அனுப்பி வைத்தான். தில்லி ஜும்மா மசூதியின் வாயில் படிக்கட்டுகளாக அதை உபயோகப்படுத்த சொல்லி உத்தரவு பிறப்பித்திருந்தான். மேலும், பிடிப்பட்ட நகரங்களை சூறையாடவும், அங்கிருந்த ஹிந்து பெண்களை கற்பழிக்கவும் தன் வீரர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தான். அதுமட்டுமல்லாது, ஹிந்துக்களை பிடித்து அவர்களை மாட்டுக்கறி திங்க அவனது வீரர்கள் வற்புறுத்தினர். ஆனால், அவனது வீரர்கள் அதோடு நிற்காமல் ஹிந்து தெய்வங்களின் சிலைகளில் மாட்டுக் கறியை போட்டனர்.

இத்தகைய படையுடன் தான் இருக்க வேண்டி இருப்பதை எண்ணி எரிச்சலுற்றான் அக்பர். ஆனால், அவன் சரியான நேரம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும், அது வரை அவனை அவுரங்கசீப் சந்தேகிக்காமல் இருக்க அக்பர் நடிக்க வேண்டும் என்பதும் ஜெபுனிஷாவின் கட்டளை. அவன் தாக்க வேண்டிய மலையை ஆராய்ந்தான். மலையின் பல பகுதிகளில் சிறிய சிறிய மூலைகள் இருப்பதை பார்த்தான். அவர்கள் விரும்பினால், முகலாயப் படை மீது திடீரென தாக்குதல் நடத்தி அழிக்க முடியும் என்பதை உணர்ந்தான். சில நொடிகள், பல அக்கிரமங்களை புரிந்த முகலாயப் படை முழுவதும் அழிக்கப்பட்டால் நன்றாக இருக்குமென்று கூட எண்ணினான். ஆதரவற்ற மக்களை எப்படி வெட்டி கொன்றார்களோ அப்படியே இவர்களும் வெட்டிக்கொல்லப் பட வேண்டும் என்று நினைத்தான். ஆனால், ஒரு தளபதி, தன்னுடைய வீரர்கள் கொல்லப்பட வேண்டும் என எண்ணுவது சரியா என்ற எண்ணமும் அவனுள் எழுந்தது. அவர்களின் உயிரைப் பற்றி அரசன் கவலைப்படாத பொழுதும், அவர்களை காப்பது தளபதியின் கடமை. ஒரு தற்கொலை தாக்குதலுக்கு அவர்களை அவன் நடத்தி செல்ல அவன் மனம் அனுமதிக்கவில்லை.

“அந்த மலைக்கு செல்லும் சமயத்திற்காய் காத்திருக்கிறேன். இராஜபுதனம் முழுவதையும் எரித்து சாம்பலாக்க விரும்புகிறேன்.”

தன் மகனின் வார்த்தைகளை கேட்டு அவுரங்கசீப் புன்னகைத்தான். ஆனால், அக்பரோ பதிலுக்கு புன்னகைக்காமல் இறுகிய முகத்துடன் நின்றான்.

***

அதற்கு அடுத்த வாரம் ஜெபுனிஷாவிற்கு அக்பரின் கடிதம் கிடைத்தது.

சகோதரிக்கு,

இந்த கடிதம் கிடைக்கும் சமயம் நீங்கள் உடல்நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். நாங்கள் ஆரவல்லி மலைகளின் அருகே முகம் அமைத்து எதிர்களை தாக்க தக்க தருணம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.ஆஸம் மற்றும் முவாஸம் தங்கள் படைகளுடன் எதிரிப்படைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் இருக்கும் இடங்களை கண்டு வர சென்ற பொழுது எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, கழுதை மேல் திருப்பி அனுப்பப்பட்டனர். என்னிடம் இருக்கும் 70000 படை வீரர்களுடன் ஆரவல்லி மலையை தாக்க சொல்லி தந்தை உத்தரவிட்டிருக்கிறார். இப்பொழுது தந்தையிடம் சில ஆயிரம் வீரர்கள் மட்டுமே உள்ளனர். என் வீரர்களுடம் ஆரவல்லி மலையை அடைந்தவுடன் என்னை நான் பேரரசராக அறிவித்துக் கொண்டு தந்தையை சிறைப்படுத்த முடியும். உங்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்.

அக்பர்

“முட்டாள்! ஏன் கவிதை மொழியில் குறிப்புகளை கொண்டு எழுதாமல் இப்படி நேரடியாய் எழுத்து கடிதம் அனுப்பி இருக்கிறான்? இது வேறு யாரிடமாவது சிக்கி இருந்தால் என்ன செய்வது? நாம் அழிந்திருப்போம் இந்நேரம்!” கோபத்தில் ஜெபுனிஷா படபடத்தாள்.

ஒரு கோப்பையில் சிறிது மதுவை ஊற்றி “இதைக் குடி. நீ அமைதியாக இருக்க வேண்டும் ஜெபுனிஷா” என அவளை சாந்தப்படுத்த முயன்றாள் ஜூபைதாத்.

“எப்படி அமைதியாக இருக்க முடியும்? நாம் நம் குறிக்கோளை அடையும் தருணத்தில் இருக்கிறோம். அகில், இந்த நேரத்தில் முன்பு போல் தவறு நடக்க நாம் அனுமதிக்க முடியாது.”

“உண்மைதான். ஆனால் நீ கத்துவதால் எதுவும் நடந்துவிடாது.” ஜூபைதாதிடம் இருந்து கோப்பையை வாங்கிய அகில் அதை ஜெபுனிஷாவிடம் கொடுத்தான். “நீ இதை அமைதியாக பருகு. அந்த நேரத்தில் என்ன செய்யலாம் என நான் யோசிக்கிறேன்.”

“என்ன செய்வது என யோசிக்கப் போகிறீர்களா? நாம் அவனுக்கு அடுத்த கவிதையை அனுப்ப வேண்டும்.”

“இப்பொழுது கவிதை அனுப்ப நேரம் இல்லை. நாம் அனுப்பும் கவிதையை அக்பர் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது? மீண்டும் நம் திட்டம் தோற்பதை நான் விரும்பவில்லை” என ஜூபைதாத் கூறினாள்.

“ஆனால், நாம் அனுப்பும் கடிதம் சக்ரவர்த்தியின் கைகளில் சிக்கினால் என்ன ஆகும்? அது இன்னும் மோசம் அல்லவா?” என ஜூபைதாதின் திட்டத்தில் இருந்த சிக்கலை ஜெபுனிஷா விளக்கினாள்.

“நம்பகமான ஆள் எடுத்து சென்றால் பிறர் கையில் அது சிக்காது” என அகில் கூறினான்.

“இது முகலாய சாம்ராஜ்யம். இங்கு யாரையும் நாம் நம்ப இயலாது” என அவனை முறைத்துக் கொண்டே கூறினாள் ஜெபுனிஷா.

“என்னைக் கூடவா நம்ப மாட்டாய்?” என அகில் ஜான் அமைதியாகக் கேட்டான்.

“என்ன சொல்கிறாய் நீ?”

“உன் கடிதத்தை நானே எடுத்து செல்கிறேன். மன்னரின் உடல்நலம் குறித்த கவலையால் அதைப் பற்றி அறிந்து வர என்னை நீ அனுப்புகிறாய். நான் அங்கிருக்கும் நேரத்தில், அவனிடம் கடிதத்தை ஒப்படைத்து விடுவேன்.”

“நேரடியாக போகும் பொழுது எதற்கு கடிதம் எழுத வேண்டும்?” அவன் சொல்வது ஜூபைதாத்திற்கு புரியவில்லை.

“போர் முகாமில் ஒற்றர்கள் எங்கிருப்பார்கள் என யாராலும் சொல்ல இயலாது. நான் அக்பரிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது. படித்தவுடன் அந்தக் கடிதத்தை எரிக்க சொல்லிவிடு.”

ஜெபுனிஷா தன் கண்களை மூடி தன் மூச்சை இழுத்து விட்டு , அவன் கூறிய யோசனையை பரிசீலித்தாள். பின், “சரி. நான் கடிதம் எழுதி அதை முத்திரையிட்டு உன்னிடம் தருகிறேன். இது கொஞ்சம் ஆபத்தான விஷயம்தான். ஆனால், நமக்கு இப்பொழுது வேறு வழியோ இல்லை நேரமோ இல்லை. அப்பாவை கைது செய்யும் முன், தன்னை பேரரசராக அக்பர் அறிவித்துக் கொள்ளக் கூடாது. அப்பாவிற்கு சிறிது சந்தேகம் வந்தாலும் அவரை கைது செய்வது என்பது முடியாதக் காரியம் ஆகிவிடும். அவுரங்கசீப், அக்பரை நம்ப வேண்டும்.” என அக்பர் செய்யவேண்டியதை கூறினாள்.

“கடிதம் எழுதிக் கொடு. கவிதையை எழுதாதே.”

***

மறுநாள் காலையில் சூரியன் உதிக்கும் முன், தான் குதிரையில் அமர்ந்திருந்த அகில் கான் அதன் கழுத்தை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தன் குடுவையில் இருந்த நீரைக் குடித்துவிட்டு, தன் முன்னே விரிந்து நீண்டிருந்த நிலப்பரப்பை பார்த்தான். அவனுக்கு பின்னே, அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான வீரர்கள் தங்கள் குதிரையில் அணிவகுத்து நின்றனர்.

“போர்க்களம் நோக்கி மீண்டும் ஒரு பயணம். என் தலைமுடி நரைத்து விட்டது, கைகள் நடுங்குகின்றன. உங்கள் விசுவாசத்தையும் பாதுகாப்பையும் நம்பித்தான் இந்த பயணத்தை துவங்குகிறேன்.”

தங்கள் தலைவர் தனக்கு வயதானதைப் முதல் முறையாக பேசுவதைக் கண்ட அந்த வீரர்கள் அவனுக்கு மரியாதை தரும் விதமாய் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டனர். அவர்களில் அகில் கான் அளவிற்கு வயது முதிர்ந்தவரும், அவனை விட பலசாலியாய் காணப்பட்ட ரிஜா கான், ” உங்கள் கைகள் சண்டையிடுவதற்கு வசதியாய் வளைந்துக் கொடுக்கின்றன. நரைத்த முடிகள், இத்தனை வருட போர்க்களத்தில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அறிகுறி, அது உங்களின் பலவீனம் அல்ல” என கூற மற்ற வீரர்கள் அதை ஆமோதித்தனர்.

“உங்களை எந்த ஒரு வாளும் தீண்ட வேண்டுமென்றால், அது எங்களை வீழ்த்திய பிறகே நடக்கும்.”

அவன் கூறியதைக் கேட்ட அகில் கான் புன்னகைத்தான். அவர்கள் அனைவரும் அவனுக்கு சகோதரர்கள் போன்றவர்கள். பல போர்க்களங்களில் தோளோடு தோள் நின்று யுத்தம் செய்தவர்கள். பின், தன் பார்வையை ராஜபுதனத்தை நோக்கி சென்ற திசையில் திருப்பினான். அங்கே போரிட்டுக் கொண்டிருந்த மகனின் நினைவு வந்தது. ‘உன்னை தேவையில்லாமல் இந்த சிக்கலில் இழுத்து விட்டுவிட்டேன். புலி வாலைப் பிடித்தவனின் நிலையில் இருக்கிறாய் நீ. என்னுடைய காமத்திற்கும், பலவீனத்திற்கும் நீ இன்று விலை தர வேண்டியுள்ளது.’ ஒரே சமயத்தில் வெட்கமும் சோகமும் அவனை ஆட்கொண்டன. ஜானி தன்னை நாடி வந்த இரவை நினைத்துப் பார்த்தான் அகில். ஜானியை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியது போல் ஏன் தன்னால் அன்று ஜெபுனிஷாவிடம் மறுப்பு சொல்ல இயலாமல் போனது என தன்னைத்தானே நொந்துக் கொண்டான்.

ரிஜா கான் “அகில் கான் வெல்லட்டும்” என கோஷமிடத் துவங்க, மற்ற வீரர்களும் அந்த கோஷத்தை திருப்பி சொன்னார்கள்.

தன் வீரர்களை பார்க்கவும் வெட்கப்பட்டான் அகில். தான் மேற்கொண்டிருக்கும் காரியம் இவர்களுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும்? நடந்து கொண்டிருக்கும் அரசியல் சதுரங்கத்தில் என்னுடைய பங்கு என்னவென்று இவர்களுக்குத் தெரிந்தால் எனக்கு இதே மரியாதை தருவார்களா என மனதில் யோசித்துக் கொண்டே ராஜபுதனத்தை நோக்கி தன் குதிரையை செலுத்தினான்.

***

அரச மருத்துவர், கூர்மையான குறுவாளை அந்த நோயாளியின் முழங்கை மடிப்பில் சொருகினார். அதற்கு முன் அந்த குறுவாளை கொதிக்கும் நீரில் கழுவி இருந்தார். அவர்கள் குறுவாளை சொருகிய இடத்தில் இருந்து இரத்தம் வரும்வரை அதை மெல்ல உள்ளே செலுத்திக் கொண்டிருந்தார். இரத்தம் கசியத் துவங்கியப் பின் , தன்னிடம் மருத்துவம் பயின்று வரும் இளைஞனை இரண்டு பாத்திரங்கள் எடுத்து வர சொன்னார். ஒன்றில் இரத்தம் தோய்ந்த குறுவாளை வைத்தவர், இன்னொன்றை கைக்கு கீழே இரத்தம் கொட்டிக் கொண்டிருந்த இடத்தில் வைத்தார்.

“இந்த சிகிச்சை இவரது இரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி விடும். ஆனால், இதனால் இவரது உடல் பலவீனம் அடைந்தாலும், சிறிது காலத்தில் அந்த இரத்தம் மீண்டும் உடலில் சுரந்து விடும்.”

இந்த சிகிச்சையை முதல் முறையாக பார்த்த அந்த இளைஞன் அந்த பீதியில் இருந்து வெளிவரமாலேயே “யாரிந்த வீரர்?” எனக் கேட்டான்.

“அவுரங்கசீப்பின் நம்பிக்கைக்கு பாத்தியமான அகில் கான். பேரரசி ஜெபுனிஷாவின் சார்பில், பேரரசரின் உடல்நலம் பற்றி விசாரிக்க வந்தார். ஆனால், இந்த வறண்ட நிலத்தின் அசுத்தமான தண்ணீரினால் அவர் உடலில் தொற்று ஏற்பட்டது.”

எப்பொழுதும் உரக்க பேசிப் பழக்கப்பட்ட ரிஜா கான் அரச மருத்துவருக்கு மரியாதை தரும் வண்ணம் மெல்லியக் குரலில் “நான் உள்ளே வரலாமா?” எனக் கேட்டான்.

அகில் கானுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டே “வீரனே! நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே வரக்கூடாது எனத் தெரியாதா உனக்கு?” என ரிஜாவை கோபமாக கேட்டார்.

“என்னை மன்னியுங்கள் மருத்துவரே. ஆனால் , இங்கே நீங்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைவர் அவரிடம் இருக்கும் கடிதத்தை இளவரசர் அக்பரிடம் அளிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார்.”

“இத்தகைய முக்கியமான விஷயத்திற்கு சாதாரணமான படை வீரனான உன்னை எப்படி நான் நம்ப இயலும்?”

“இவருடன் இணைந்து கணக்கற்ற போர்களில் பங்கேற்றுள்ளேன். அவர் உயிரை நானும், என் உயிரை அவரும் பலமுறை காத்துள்ளோம். அவர் என்னை அவருடைய மகன் போன்று நடத்துவார்.”

“மகனா!!! படைவீரர்களுக்கு கணக்கற்ற குழந்தைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் சண்டையில் ஈடுபடுவதால், உடல் மீதான வேட்கை அதிகமாக இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் போரிடும் போர்க்களம் எங்கும் உங்கள் வித்தை விதைப்பீர்கள் என தெரியும்.”

அதெற்கென்ன பதில் கூறுவது என புரியாமல் விழித்தான் ரிஜா. பின், “நீங்கள் அனுமதித்தால், அந்த கடிதத்தை பார்க்காவது செய்யட்டுமா ? உங்களை நான் தொந்தரவு செய்யமாட்டேன்” என இறுதியாய் ஒருமுறை கேட்டான்.

“இப்பொழுது அனுமதிக்க இயலாது” என்று கோபமாய் கூறி தன்னை முறைத்துப் பார்த்த மருத்துவரை கண்டு பயந்தான் ரிஜா. சக்ரவர்த்தியின் மருத்துவரை பகைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே , எதுவும் கூறாமல் அங்கிருந்து விலகி சென்றான்.

சில மணி நேரம் கழித்து அகில் கானின் சிகிச்சை முடிவுக்கு வர, அவனது காயத்தை சுற்றி வெள்ளைத் துணியால் இறுக கட்டினார் மருத்துவர். தன் கையை நன்கு துடைத்துவிட்டு, அகில் கானின் உடைகளில் ரிஜா கான் குறிப்பிட்ட கடிதத்தை தேடி எடுத்தார். பின், தன்னுடன் இருந்த இளைஞனைப் பார்த்து ” இந்த வீரர்களுக்கு போர் மட்டுமே முக்கியம். நோயாளியின் உடல் நிலை எல்லா போர் திட்டங்களையும் விட முக்கியமானது என இவர்களுக்கு புரியாது. இவர்கள் போரிலே பிறந்து, போருடன் வளர்ந்து போரினாலேயே இறந்து போகிறார்கள்” என்று கூறினார்.

அதே சமயத்தில், ஜானி மருத்துவரின் கூடாரத்திற்குள் நுழைந்தாள். அவளும், இளவரசன் ஆஸமும் பல வாரங்களாக அந்த போர் முகாமில் இருந்தனர். அகில் கான் உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருப்பதாக கேள்விப்பட்டதால் அதைப் பற்றி விசாரிக்க வந்தாள்.

“அகில் கான் எப்படி உள்ளார் மருத்துவரே?”

“இதற்காக நீங்கள் ஏன் உங்களை ஏன் சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள் இளவரசி? நானே உங்கள் இடத்திற்கு வந்து சொல்லி இருப்பேன்.”

“அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. அந்தப்புர பெண்கள் அனைவரும் அவரது உடல் நலம் பற்றிய கவலையில் உள்ளனர். அகில் கான் அந்தப் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்.”

நோய்வாய்ப்பட்டு அங்கே படுத்திருந்த அகில் கானை பார்த்தவுடன் ஜானியின் கண்களில் கண்ணீர் திரண்டது. அகில் கானின் கண்கள் முழுவதும் திறக்க இயலாமல், அவனது இமைகளின் இடைவெளியில் கண்களின் வெள்ளை நிறப்பகுதி மட்டுமே தெரிந்தது. அவனது தோள் வெளுத்து, வியர்வையினால் நனைந்திருந்தது. அவனது தலைமுடியில் மண்ணும், குப்பையும் கலந்து இருந்தது. மூக்கினால் சுவாசிக்க சிரமப்பட்டு , தன் வாயினால் சுவாசித்துக் கொண்டிருந்த அகில் கானை பார்த்தவள் அவன் பிழைப்பானா என்ற சந்தேகம் எழுந்தது. ஆஸமுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பும் அவனை அடைய முயற்சி செய்ததை எண்ணி அவள் வெட்கப்பட்டாலும்,அவன் மேலான ஆசை அவளை விட்டு இன்னும் அகலவில்லை. அகில் கானின் இதயத்தில் ஜெபுனிஷாவைத் தவிர வேறு பெண்ணுக்கு இடம் இல்லை என்று உலவிய வதந்தியை அவளும் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால், அதை அகில் கான் எப்பொழுதும் மறுத்தே வந்தான். அதேபோல், அவுரங்கசீப் அவனை என்றும் சந்தேகப்பட்டதே இல்லை. ஒரு தலைமுறைக்கு முன்பு, முகலாய சிம்மாசனத்திற்காக ஒருவரை ஒருவர் எதிர்த்த இரு ஆண்களின் மகள்கள் இன்று எல்லாவற்றிற்காகவும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

மருத்துவரின் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்த ஜானி, ” உங்கள் கையில் எதை வைத்துருள்ளீர்கள் மருத்துவரே!” என்று கேட்டாள்.

“இது முத்திரையிடப்பட்ட கடிதம் இளவரசி. இளவரசர் அக்பரிடம் கொடுப்பதற்காக அகில் கான் எடுத்து வந்தார்.”

இதைக் கேட்டு ஜானியின் கண்கள் வியப்பில் விரிந்தன. அக்பருக்கு ஏன் முத்திரையிடப்பட்ட கடிதத்தை அகில் கான் கொண்டு வர வேண்டும். பேரரசரோ இல்லை பேரரசியோ மட்டுமே முத்திரையிடப்பட்ட கடிதத்தை அனுப்ப இயலும். அரசர் போர்முனையில் உள்ளார். எனவே, இதை அனுப்பியது ஜெபுனிஷாவாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தாள் ஜானி.

“அகில் கானின் வீரர்களில் ஒருவர் இந்த கடிதத்தை பெற்று செல்ல வந்தான். ஆனால் அப்பொழுது நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால் அவனிடம் தரவில்லை. இப்பொழுது இதை… “

அவரது வார்த்தைகளை இடைமறித்த ஜானி “அதை என்னிடம் கொடுங்கள்” என உத்தரவிட்டாள்

அவளுடைய வார்த்தைகளில் தொனித்த கடுமை மருத்துவரை உறைய வைத்தது.

சில நொடிகளில் தன்னை நிதானித்துக் கொண்ட ஜானி ” இளவரசர் அக்பருக்கான அரசு முறை கடிதம் என்றால் அதை எப்படி சாதாரண ஒரு படை வீரனிடம் கொடுப்பது? அதை அவன் என்ன செய்வான் என்று யாருக்குத் தெரியும்?” என்று மருத்துவரை சமாதானப்படுத்தும் விதமாய் கூறியவள், மீண்டும் தான் கையை அந்த கடிதத்தை வாங்க நீட்டினாள்.

அப்பொழுதும், அவளிடம் அந்தக் கடிதத்தை கொடுக்க மருத்துவர் தயங்கினார்.

ஜானி மீண்டும் தன் குரலை உயர்த்தி “உடனே கொடுங்கள்” என கட்டளையிட்டாள்.

அரச குடும்பத்தினர் ஆணையிடும் பொழுது அதை மறுக்க இயலாது என உணர்ந்த மருத்துவர், கொடுக்க மனமில்லை என்ற பொழுதும் அந்தக் கடிதத்தை அவளிடம் தந்தார். அதைக் கையில் வாங்கிய ஜானி, கண்டிப்பாக இது சாதாரணக் கடிதமாய் இருக்க முடியாது, ஜெபுனிஷா மறைத்த கவிதைகளுக்கும் இதற்கும் கண்டிப்பாய் தொடர்பு இருக்கும் என நினைத்துக் கொண்டே அந்தக் கடிதத்தை தன் உடைக்குள் மறைத்து வைத்தவள், மருத்துவரின் கூடாரத்தில் இருந்து வெளியேறி தன் கூடாரத்தை நோக்கி விரைந்தாள். சூரியன் அஸ்தமித்து இருள் கவிழத் துவங்கிய அந்த நேரத்தில், பாலைவனத்தில் குளிர் காற்று வீச துவங்கியதால் அதை போக்க ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த தீ கணப்புகளை தாண்டி நடந்தாள். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கும் என்று யோசித்தவளின் நெஞ்சம் வேகமாய் துடிக்கத் துவங்க தன் பணிப்பெண்ணை கூடாரத்தில் இருந்து வெளியேற்றி விட்டு அதில் இருந்த முத்திரையை உடைத்து கடிதத்தை படிக்கத் துவங்கினாள்.

அக்பர்

என்னுடைய உரிய நண்பரான அகில் கான் மூலம் இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். ஆரவல்லி மலையை தாக்கும் சமயத்தில் நீ உன்னை பேரரசராக அறிவித்துக் கொள்ளக் கூடாது. நீ எதிரிகளுடன் இணைந்து சாம்ராஜ்யத்தை கைப்பற்ற சதி செய்கிறாய் என தந்தை அறிந்தால் உன்னை தன் எதிரியாக அறிவிப்பார். அந்த சமயத்தில், அவரது நடவடிக்கைகளை உன்னால் கட்டப்பட்டுத்த இயலாமல் போய்விடும். அதற்கு பதிலாக ஏற்கனவே திட்டமிட்டவாறு ஆரவல்லி மலையை தாக்கு. பின், ராஜபுதன மன்னர்களை உன்னிடம் தோற்றதாக நாடகம் ஆட சொல். பின், அவர்கள் உன்னிடம் சிறைப்பட்டதாகக் கூறி அப்பாவை அங்கே வர சொல்.

உன் சொல்லை நம்பி அங்கே வரும் தந்தையை, உன் வீரர்களை கொண்டு கைது செய்தப் பின் உன்னை பேரரசனாக அறிவித்துக் கொள். இதை இப்படியே பின்பற்று. இதில் இருந்து மாறி வேறு வழிகளிலும் செல்லாதே!!!

ஜெபுனிஷா

அந்தக் கடிதத்தைப் படித்தவளின் மனதில் திகிலும் ஆச்சரியமும் கலந்த உணர்வு எழுந்தது. தன்னை அறியாமல் “அல்லாஹ் கருணை காட்டட்டும்” எனக் கூறினாள்.

“துரோகம்” என முணுமுணுத்தவள், அந்தக் கடிதத்தை மடித்து வைத்துக் கொண்டு, தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என யோசிக்கத் துவங்கினாள். முதலில் இந்தக் கடிதத்தை பேரரசரிடம் கொடுக்கலாமா என சிந்தித்தவள் பின் அந்த யோசனையை நிராகரித்தாள். கண்டிப்பாக தான் இந்தக் கடிதத்தை எழுதவில்லை என ஜெபுனிஷா சாதிப்பாள். அதுமட்டுமில்லாது, நான்தான் இந்தக் கடிதத்தை எழுதியதாக அவள் குற்றம்சாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மகளின் மீது அதிக அன்பு கொண்டிருக்கும் அவுரங்கசீப்பும் அவளைத்தான் நம்புவார். அவனுடைய எதிரியாக ஒருகாலத்தில் இருந்த தாராவின் மகளாகிய தன்னை அவர் நம்பவேண்டிய அவசியம் இல்லை. தனக்காக ஜெபுனிஷாவை அவர் கைவிட மாட்டார்.

இதுதான் தனக்கான நேரம் என்று உணர்ந்திருந்த ஜானி அடுத்து என்ன செய்வது என யோசிக்கத் துவங்கினாள். தன்னை தாக்கிய ஜெபுனிஷாவிற்கு சரியான பதிலடி தர வேண்டும். முட்டாள்கள் தான் நேருக்கு நேர் நின்று மோதுவார்கள். முகத்தை மறைத்துக் கொண்டு எதிரியை தாக்குவதுதான் சிறந்த வழி என முடிவு செய்தாள். தன் தந்தை ஏமாந்தது போல் தான் ஏமாறக்கூடாது என நினைத்தவள், “உன்னிடம் அன்றே சொன்னேன் என் வழியில் குறுக்கிடாதே” என ஜெபுனிஷாவிடம் கூறுவது போல் கூறிக்கொண்டாள்.

தன் இடுப்பை சுற்றி இருந்த ஆஸமின் வியர்வைப் படிந்த கரங்களை மெல்ல தன் மேல் இருந்து நகர்த்தினாள். குழப்பமான போர் முனைகளில் கண்டிப்பாக இரவு நேரங்களில் ஆஸமிற்கு பெண் சுகம் தேவை என அவள் நன்கு அறிவாள். எனவே அவனை தன் கூடாரத்திற்கு கவர்ந்து இழுத்து வந்திருந்தாள். அவளுடைய பணிப்பெண்கள் வெளியில் இருந்து இரகசியமாக கொண்டு வந்திருந்த மதுவில் இருந் கொஞ்சம் அவனுக்கு தந்திருந்தாள். போர் முகாமிற்கு தங்கள் கணவர்களுடன் வந்திருந்த அரச குடும்ப பெண்களுக்காக இரகசியமாக கொண்டு வரப்பட்ட மது அது. பேரரசருக்குத் தெரியாமல் இது நடந்தது. அதுவும், போரில் அப்பொழுது முகலாயர்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருக்கும் வீரர்களுக்கு சிறிது பொருள் கொடுத்து இவற்றை உள்ளே கொண்டுவருவது கடினமாக இருக்கவில்லை.

ஆஸமிற்கு போதை அதிகமாக அவனை மயக்குவது ஜானிக்கு எளிதாக இருந்தது. இன்னும் ஒல்லியாகவும் பார்க்க கவர்ச்சியாகவும் இருந்த ஜானி எளிதில் ஆஸமை படுக்கையில் வீழ்த்தினாள். தன் மனைவியின் உடலில் மயங்கிய ஆஸம், அவளை நிர்வாணப்படுத்தி அவளுடன் தீவிரமாக உறவு கொள்ளத் துவங்கினான். அவன் களைத்து அயர்ந்து போகும் வரை ஜானி விடவில்லை. மது போதையும், உறவு கொண்ட மயக்கமும் ஒருங்கே இணைய ஆஸம் ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்தான்.

அவனை எழுப்பிவிடாமல் மெல்ல அவனிடமிருந்து விடுபட்ட ஜானி, ஒரு கம்பளியை தன் மேல் போர்த்திக்கொண்டு கூடாரத்தின் மறுபுறம் இருந்த உடை மாற்றும் பகுதிக்கு சென்றாள். அங்கிருந்த மாற்று உடை ஒன்றை அணிந்துக் கொண்டவள் கடிதம் எழுத துவங்கினாள். ஜானிக்கு களைப்பு மிகுந்திருந்தது. அவள் உடல் நிலவைப்போல் வெளுத்திருந்தது. அவள் கண்களின் கீழே கருவளையங்கள் உருவாகி இருந்தது. தன் முன்னிருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவள் தன் உருவம் சிதைந்து போனது போல் உணர்ந்தாள். ஒருவேளை இதுதான் நம்மின் உண்மையான உருவமோ? ‘நம் அனைவரும் வாழ்வுமே இப்படித்தான் முடிகிறதோ?’ என வியந்தாள். ‘முகலாயர்களில் கருணை உள்ளம் கொண்ட பெண்மணி என்று யாரேனும் உள்ளனரா இல்லை அனைவருமே வெளியே சிரித்தும் உள்ளே பழி வாங்கும் கருமையான உள்ளம் கொண்டவர்கள்தானா?’.

காதலர்களுக்கு இடையேயான ஒழுக்கக்கேடான விஷயங்களைப் பற்றியும், முறைகேடான உறவுகளைப் பற்றியும் நம்பிக்கைத் துரோகங்களைப் பற்றியும் பல கதைகளை கேள்விப்பட்டிருந்தாள். வெளியே கருணையும் அன்பும் மிக்க அரச மகளிராய் காணப்பட்டாலும் உள்ளுக்குள்ளே பழி வாங்க துடிக்கும் பிணந்தின்னி கழுகுகள் போலவும், பரத்தையர் ஆகவுமே பலர் இருந்தனர். ‘என் பாட்டி மும்தாஜ் எப்படிப்பட்டவளாக இருந்திருக்க கூடும்? அவளைப் பற்றி எந்தவித வதந்திகளும் இருந்திருக்கவில்லை. இதுவரை இருந்த பெண்களினுள் அவள் மட்டுமே நல்லவளாய் இருந்திருக்கக் கூடும்.’

ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் காதல் கதையில் வேறெந்த பொய்களும், வதந்திகளும் என்றும் இருந்ததில்லை. இருந்தும், மற்ற அனைத்து முகலாய இளவரசிகளுக்கும், இராணிகளுக்கும் கருப்பான ஒரு பக்கம் இருக்கத்தான் செய்தது. ‘நாங்கள் பிறப்பிலேயே இப்படித்தானா அல்லது அரச குடும்பத்தில் பிறந்ததால் இப்படி நடக்கிறோமா? இதன் பிறகு ஜானியின் சிந்தனை மாறியது. தன் எதிரே இருந்த மயில் இறகு மற்றும் மையை பார்த்தாள். மீண்டும் எதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்த தன பிம்பத்தை பார்த்த ஜானி “என்னை மன்னித்துவிடுங்கள் அத்தை ஜகன்னாரா. நீங்கள் விரும்பியது போன்ற இளவரசியாக என்னால் இருக்க முடியவில்லை” எனக் கூறினாள்.

ஜெபுனிஷா எழுதுவது போல் அக்பருக்கு கடிதம் எழுதினாள்.

***

ஆரவல்லி மலையின் முழுத் தோற்றமும் அவர்கள் முன்னிருந்த படத்தில் வரையப்பட்டிருந்தது. தன்னுடைய தளபதிகளைப் பார்த்த அவுரங்கசீப் “நம் கணக்குப்படி இந்த பள்ளத்தாக்கில் 50,000 எதிரி படை வீரர்கள் உள்ளனர்”. தன் கையில் இருந்த குச்சியினால் பள்ளத்தாக்கு பகுதியை சுட்டிக்காட்டியவன் “ஆஸம், கிழக்கில் இருந்து தாக்கியபோது சரி, முவாஸம் தெற்கிலிருந்து தாக்கிய பொழுதும் சரி, அவர்களின் படைகளை இந்த பள்ளத்தாக்கிற்கு இழுத்து அவர்களை கொன்று குவித்தனர் எதிரிகள்” என்று நடந்து முடிந்த போரில் அவர்கள் தோற்றதற்கான காரணத்தை விளக்கினான். அவுரங்கசீப் விளக்கிக் கொண்டு வந்ததை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் அக்பர்.

“அதனால், இந்த முறை அக்பர் , வடக்கில் இந்த பள்ளத்தாக்கிற்கு பின்னிருந்து தாக்குதல் நடத்தட்டும். அதே சமயம், மீதம் இருக்கும் 5000 வீரர்களுடன் நாம் கிழக்கில் இருந்து எதிரிகளை தாக்குவோம். அவர்களின் கவனம் நம் மீது இருக்கும் பொழுது, அக்பரின் படைகள் பின்னிருந்து தாக்கினால் எதிரிகளை எளிதில் துவம்சம் செய்யலாம்” என தன் திட்டத்தை விவரித்தான்.

“அருமையான திட்டம். இந்த திட்டம் மிகுந்த கற்பனை மிக்கதாகவும் புத்திசாலித்தனமானதாகவும் உள்ளது” என ஒரு தளபதி புகழ்ந்தான்.

“முகலாயர்களின் வரலாற்றிலேயே நம் பேரரசர்தான் தலைசிறந்த வீரர். நம்முடன் போருக்கு வந்ததற்காக அவர்கள் விரைவில் வருந்துவார்கள்” என மற்றொருவன் புகழ்ந்தான்.

“ஆனால், நாம் தெரிந்தே சாக அனுப்பும் அந்த 5000 வீரர்களின் நிலை என்ன? எனக் கேட்டான் அக்பர்.

“அவர்கள் வீரர்கள். யுத்தத்தில் இறப்பிப்பதற்காகவே பிறந்தவர்கள்” என அதிருப்தியான குரலில் பதில் கூறினான் அவுரங்கசீப்.

இதன்பின் அக்பர் எதுவும் பேசாமல் தன் வாயை இறுக மூடிக்கொண்டான். கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத தன் தந்தையைப் பற்றி தெரிந்தவன் என்பதால் வாக்குவாதம் செய்யவில்லை. ஜெபுனிஷாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் கொஞ்சம் அமைதியற்று இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.

அதே சமயத்தில் கலைந்த உடைகளுடனும் கையில் தலைக்கவசத்துடனும் அந்தக் கூடாரத்தில் நுழைந்தான் ஆஸம்.

“இந்த கூட்டம் துவங்கி ஒரு மணி நேரம் ஆகிவிட்டது” என குரலில் அதிருப்தி தெரியக் கூறினான் அவுரங்கசீப். வயது ஏற ஏற கோபத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. வானத்தை நோக்கி எரியும் தீ ஜ்வாலைப் போல் நொடியில் வேகம் எடுத்தது.

“என்னை மன்னியுங்கள் அரசே” என அவனிடம் ஆஸம் மன்னிப்புக் கேட்டான்.

முக்காடிட்டு தன்னை மறைத்துக் கொண்டு ஆஸமின் பின்னே நின்றுக் கொண்டிருந்த ஜானியை அதிருப்தியுடன் பார்த்தவன் “இது பெண்களுகக்கான இடமில்லை” என்றான்.

அவனை நோக்கி தலைக் குனிந்து வணங்கியவள் “பேரரசி ஜெபுனிஷா, இளவரசர் அக்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். தன் உடல்நலம் சரியில்லை என்பதால் இந்தக் கடிதத்தை இளவரசரிடம் கொடுக்க சொல்லி அகில் கான் கூறினார்” என தான் வந்தக் காரணத்தை கூறினாள்.

ஏற்கனவே அகில் கானின் உடல்நலக் குறைவால் வேதனையுற்றிந்த அவுரங்கசீப் ஜானியின் வார்த்தைகளை கேட்டவுடன் தன் கோபத்தை குறைத்துக் கொண்டான். அக்பரிடம் கடிதத்தை கொடுக்குமாறு சைகை செய்தான்.

“நன்றி இளவரசி.”

“ஏதேனும் முக்கிய தகவலா, அக்பர்?” என அவுரங்கசீப் வினவினான்.

“வழக்கம்போல் என் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள சொல்லியும், உங்களுக்கு விசுவாசமாக இருக்க சொல்லியும் எழுதி இருப்பாள் என் சகோதரி” என சிரித்துக் கொண்டே சொன்ன அக்பர், கூடாரத்தின் துணியை விலக்கி ஜானி வெளியேற வழி செய்தான். பின், அவள் கொடுத்த கடிதத்தை தன் உடையில் வைத்துக் கொண்டான்.

அந்தக் கூட்டம் சிறிது நேரத்தில் முடிவுக்கு வர, தன்னுயடைய இருப்பிடத்திற்கு விரைந்தான். வழக்கமாய் ஜெபுனிஷாவிடம் இருந்து வரும் கடிதங்களில் இருக்கும் முத்திரை இந்தக் கடிதத்தில் காணப்படவில்லை.

என் அன்புக்குரிய அக்பருக்கு

நீ கூறியவாறே செயல்படு. ஆரவல்லி மலைகளுக்கு சென்றவுடன் உன்னை பேரரசராக அறிவித்துக் கொள். தந்தையை கைது செய்யும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. உன்னிடம் இருக்கும் படைகளும், ராஜபுதன படைகளும் தந்தையை கைது செய்ய போதுமானதாய் இருக்கும் . படித்தவுடன் இந்தக் கடிதத்தை எரித்து விடு.

ஜெபுனிஷா

கையெழுத்து ஜெபுனிஷாவுடையது போலவே இருந்தாலும், அதில் முத்திரை இல்லாமல் இருந்தது. அதே சமயம், மடிக்கப்பட்டு மற்றொருவரின் உடையில் வைத்துக் கொண்டுவந்தது போலவும் காணப்பட்டது. ஜானியும் மக்ஃபியின் அங்கத்தினராக இருந்து அதனால் அகில் கான் அவளிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டாரா? ஜானியை என்றும் தனது கூட்டாளியாக அக்பர் நினைத்தது இல்லை. இப்பொழுது ஜானியிடம் சென்று இது பற்றி கேப்பதா இல்லை வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான்.

அப்பொழுது “இளவரசே, உங்கள் குதிரை தயாராக இருக்கிறது. உங்கள் படையுடன் எதிரிகள் முகாமின் வடக்கு பக்கம் செல்ல சொல்லி பேரரசர் கட்டளை இட்டுள்ளார்” என்று ஒரு குரல் கூறியது.

ஒரு கணம் என்ன செய்வது எனப் புரியாமல் நின்றான் அக்பர். பின் திரும்பி, ஜானியின் கூடாரம் நோக்கி நடந்தான். அவளிடம் கடிதத்தில் அரச முத்திரை இல்லாதது பற்றிக் கேட்க எண்ணினான். ஆனால், அப்பொழுது அவனுக்கு நேரம் இல்லை. காலதாமதம் செய்வதை பேரரசர் என்றுமே விரும்பியதில்லை. ஜானியிடம் பேசுவதிலும் அபாயம் இருந்தது. வேறு யாரேனும் ஒட்டுக்கீக நேர்ந்தால் மொத்த திட்டமும் அழிந்து போகும் அபாயம் இருந்தது. அந்த நேரத்தில் ஜானி கொடுத்த கடிதத்தை நம்புவதை தவிர அவனுக்கு வேறு வழியில்லாமல் போனது. தன் தலைக்கவசத்தை அணிந்து குதிரையில் ஏறி பயணிக்கத் துவங்கினான்.

***

25. பிரகடனம்

நீ எங்களுக்கு கொடுத்த நம்பிக்கையின் ஜோதி
இன்னும் பிரகாசிக்கட்டும்

1 நவம்பர் 1681

“உன்னுடைய வீரர்களை மெல்ல முன்னேற சொல்” என நடுங்கும் குரலில் கூறினான். தன் பால்ய நண்பனும், பயிற்சி எடுத்த காலத்தில் உற்ற தோழனுமாய் இருந்த தஹாவூர் கானை கூர்ந்து கவனித்து வந்தான். மக்ஃபியை தவிர்த்து தஹாவூர் கானுக்கு மட்டுமே அக்பரின் உண்மையான நோக்கம் தெரியும். ஆரவல்லி மலையின் வடக்கு பகுதிக்கு செல்லும் அந்த குறுகிய வழியை இருவரும் கூர்ந்து கவனித்தனர். இந்த குறுகிய பாதை அரச அதிகாரத்திற்கும், செல்வத்திற்கும் வழிவகுக்குமா அல்லது அரச கைதியாக வாழ்வை சீரழிக்குமா என தன் கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தான்.

“பேரரசர் வாழ்க! பேரரசர் ஆலம்கீர் வாழ்க!” என ஒரு வீரன் கோஷமிட்டதைக் கேட்ட அக்பரும், தஹாவூர் கானும் அவனை நோக்கித் திரும்பினர். கோஷமிட்ட அந்த வீரனை, கண்களில் தீப்பொறி பறக்க பார்க்க துவங்கிய அக்பர், தஹாவூர் கான் செய்த தலை அசைப்பால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைத்தான். அவன் புன்னகைப்பதை கண்ட அந்த வீரன் மீண்டும் அதே கோஷத்தை முழங்க, இப்பொழுது மேலும் பல வீரர்கள் அவனுடன் இணைந்து கொண்டனர். ஆரவல்லி மலையின் பாறைகளில் பட்டு அந்த கோஷம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது.

அவர்கள் முன் சென்று நின்று தன் கைகளை உயர்த்தி அவர்களின் கோஷத்தை நிறுத்திய அக்பர் “இன்று நாம் எந்த ஒரு தனி மனிதனையும் புகழ வேண்டாம். இந்த நாட்டை மட்டும் புகழ்வோம். ஹிந்துஸ்தான் வாழ்க!” என அவர்களின் கோஷத்தை மாற்றினான்.

“என் தோழர்களே! நாம் இன்று ஹிந்துஸ்தானை வாழ்த்துவோம். தைமூரின் அவையை போற்றுவோம். பல வருடங்கள் பாலைவனத்திலும், மலைகளிலும் அலைந்து எதிரிகளுடன் போரிட்டு இந்த முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய நம் முன்னோர்களை போற்றுவோம். பாபரைப் போற்றுவோம்.”

பாபர், இந்தியாவின் மீது படையெடுத்து வந்து இங்கே முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய முதல் முகலாய பேரரசன் ஆவான். அவர்களுடைய உடலில் பாபரின் இரத்தம் ஓடுகிறது என அவர்களுக்கு நினைவூட்ட அக்பர் விரும்பினான்.

“பேரரசர் பாபர் வாழ்க!” என ஒரு வீரன் கோஷமிட்டான்.

“பேரரசர் ஹுமாயுன் வாழ்க!” என அடுத்த வரியை அக்பர் கூறினான்.

மது அருந்தியது போல் கண்கள் மின்ன தஹாவூர் கானைப் பார்த்து அக்பர் தலை அசைக்க, அவனுடைய குறிப்பை கொண்ட தஹாவூர் கான், “பேரரசர் அக்பர் வாழ்க! ” என கோஷமிட்டான். ஹுமாயூனின் மகன்தான் அக்பர். இதைக் கேட்ட மற்ற வீரர்கள் “பேரரசர் அக்பர் வாழ்க!” என கோஷமிட துவங்கினர்.

அந்த கோஷம் மலைகளில் பட்டு எதிரொலிப்பதைக் கேட்ட அக்பருக்கு அவன் உடல் புத்தணர்வு பெற்றது போல் இருந்தது. இந்த கோஷம் தனக்கானது அல்ல என அவனுக்குத் தெரிந்தாலும், அது அவனுக்கு பிடித்திருந்தது. சிறிது நேரம் முன்பு, பயம் மற்றும் குழப்பத்துடன் அவன் பார்த்த அதே குறுகிய பாதையில் உயர்த்திய வாளுடன் தன் படைகளுக்கு தலைமை வகுத்து முன்னே சென்றான்.

***

அக்பரின் முகாமில் இருந்து வந்த ஒற்றன் மலைகளில் வேகமாய் வந்ததால் மூச்சிறைக்க அந்த செய்தியை கூறினான்.

தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்த ராஜ் சிங் அவனைப் பார்த்து “இந்த படை நம்மை திசை திருப்பவே வருகிறது என்பது உண்மையல்லவா?” எனக் கேட்டார்.

“அரசே! இது அவுரங்கசீப் எப்பொழுதும் உபயோகிக்கும் போர் தந்திரங்களில் ஒன்று. பெர்ஷியர்களுக்கு எதிராக கந்தஹாரில் நடந்த போரிலும் முன்கூட்டியே சில வீரர்களை அனுப்பி அவர்கள் கவனத்தை திசைத்திருப்பி, பின் தன் படைகளுடன் பின் பக்கத்தில் இருந்து தாக்கினான். தன்னுடைய வீரர்களை பலி கொடுக்க அவன் எப்பொழுதும் தயங்கியதில்லை” என தளபதிகளில் ஒருவன் அவுரங்கசீப்பின் திட்டத்தை விவரித்தான்.

தன்னுடைய நரைத்த தாடியை தடவிக்கொண்டே தன் முன் இருந்த நிலையைப் பற்றி யோசிக்க துவங்கினார் ராஜ் சிங். பல மாதங்களாக அக்பருடன் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தது. ஒற்றர்கள் மூலம் வரும் சில ரகசிய மறைமுக தகவல்களைக் கொண்டு அவரால் போர் திட்டங்களை வகுக்க இயலவில்லை.

“அப்படியானால், பெர்ஷியர்கள் எப்படி அவுரங்கசீப்பை தோற்கடித்தனர்?”

இதைக் கேட்ட தளபதி சிரித்துக் கொண்டே “அவன் நினைப்பது போல் அவ்வளவு தந்திரம் மிக்கவன் அல்ல அவுரங்கசீப். பெர்ஷியர்கள், கோட்டையின் அனைத்துப் பக்கங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். எனவே , அவுரங்கசீப் பின்பக்கமாக தாக்கிய பொழுது, அவனை எழுத்தில் முறியடித்தனர். நாமும், நமது முகாமின் பின்புறம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என விவரித்தான்.

“அப்படியே செய்வோம். ஆனால், அங்கே பீரங்கிகளை நிறுத்தவேண்டாம். காலாட்படை மட்டும் போதும்” எனக் கூறினான். தன் தளபதிகளில் யார் அவுரங்கசீப்புடைய ஒற்றன் எனத் தெரியாத ராஜ் சிங், தான் சொல்லியதற்கு பின் இருந்த உண்மையான காரணத்தை கூற விரும்பவில்லை.

“பீரங்கிகள் தேவை இல்லையா? பீரங்கிகள் இல்லாமல், வெறும் வாள் கொண்டு சண்டையிட்டால், நம் வீரர்களை நாம் பலி கொடுக்க நேரிடும்.”

தான் கூறியதை மறுத்து பேசிய தளபதியை கோபமாக பார்த்த ராஜ் சிங் “அது மிக குறுகிய பாதை. நாம் பீரங்கிகள் கொண்டு தாக்கினால், அவை அங்குள்ள பாறைகளில் பட்டு நம் வீரர்கள் மேலே பாறைகள் சரிந்து விழுந்தால் என்ன செய்வது?” என்றுக் கூறினான். உண்மையில், பீரங்கியில் இருந்து செல்லும் குண்டு அக்பரின் மேல் பட்டு அவன் உயிருக்கு ஆபத்து விளைவிக்குமோ என்றுதான் அவன் பயந்தான். அக்பர் இறந்தால், அவுரங்கசீப்பை தோற்கடிப்பது என்பது நடக்காத ஒன்றாக மாறிவிடும்.

ராஜ் சிங்கின் விளக்கத்தை கேட்டும் சமாதானம் அடையாத தளபதி “நீங்கள் கூறியவாறு செய்கிறேன்” என தயக்கத்துடன் அதற்கு சம்மதித்தான்.

அவருடைய தளபதிகள் அவருடைய கூடாரத்தில் இருந்து வெளியேற, ராஜ் சிங்கின் மனதில் இனம் புரியாத பயம் தோன்றியது. அவனுடைய எதிர்காலம் அக்பரின் எதிர்காலத்துடன் பின்னிப் பிணைந்திருந்தது.

***

அக்பர், தஹாவூர் கானிடம் அவனது வீரர்களை அந்த மலைகளின் முகட்டின் மேல் அமைதியாக மறைந்து இருக்க சொன்னான். ராஜபுதனத்து வீரர்கள், இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் இவர்களை எதிர்பார்த்து காத்திருப்பது போல் தங்கள் அப்படைகளை நிறுத்தி வைத்திருந்தனர். அதனைக் கண்ட முகலாய வீரர்கள், தங்களது திட்டம் இவர்களுக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரியமடைந்தனர். இரு படைகளுக்கும் நடுவே பரந்து விரிந்த நிலம் இவர்களின் யுத்தத்திற்காய் காத்திருந்தது. அவர்கள் இருந்த திசைக்கு நேரெதிர் திசையில் பீரங்கிகளின் சப்தமும், புகை மூட்டமும் எழுந்தது. ராஜபுதனத்து வீரர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அனுப்பப்பட்ட 5000 முகலாய வீரர்கள் சண்டையில் ஈடுபட்டதனால் வந்த சப்தம் அது. ஒவ்வொரு முறை பீரங்கி வெடிக்கும் சப்தம் கேட்டபொழுதெல்லாம் அக்பரின் இதயம் வலித்தது.

“உங்களின் உதவிக்கு வர இயலாமைக்கு என்னை மன்னித்து விடுங்கள் என் தோழர்களே! ஆனால் , மேலும் இரத்தக்களறி ஏற்படக்கூடாதெனில் நான் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியான ஒன்றாகும்” என தனக்குள் சொல்லிக் கொண்டான் அக்பர்.

தூரத்தில், போர் கோஷம் எழும்பியது அக்பருக்கு கேட்டது. அதன் ஓசை அதிகரிக்க அதிகரிக்க அதை உன்னிப்பாய் கேட்க துவங்கினான் அக்பர். “ஹர் ஹர் மஹாதேவ்!” என ராஜபுதன வீரர்களின் போர் கோஷம் ஓங்கி ஒலிக்கத் துவங்கியதும், முகலாய வீரர்கள் பொறுமை இழக்கத் துவங்கினர். ராஜபுதன வீரர்களுக்கு பயம் என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் என்பது அவர்களுக்கு தெரியுமாதலால் இரத்த ஆறு ஓடும் என எதிர்பார்த்தனர்.

தன் குதிரையின் சேணத்தில் எழுந்து நின்ற அக்பர், பதில் கோஷம் போடுமாறு தன் வீரர்களுக்கு சைகை செய்தவுடன் அவனது வீரர்கள் “அல்லாஹ் ஹோ அக்பர்! அல்லாஹ் ஹோ அக்பர்” என்ற முகலாயர்களின் போர் கோஷத்தை முழங்கத் துவங்கினர்.

இரண்டு மாறுபட்ட போர் கோஷங்கள் வரவிருக்கும் யுத்தத்திற்கு முன்னோட்டமாய் அந்த மலை முகடுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இரண்டு படைகளில் ஏதோ ஒரு படை தன் பீரங்கி கொண்டு தாக்கத் துவங்கலாம் அல்லது எதோ ஒரு வீரனின் ஈட்டி எதிரணியை நோக்கி பறந்து செல்லலாம். இருக்கும் இடத்தை விட்டு பின்வாங்கி செல்வதோ வெள்ளைக் கொடியை பறக்கவிடுவதோ தோல்விக்கு அடையாளமாய் பார்க்கப்பட்டன.

தான் விரைந்து செயல்படவேண்டும் என்பது அக்பர் அறிந்திருந்தான். இவனின் திட்டம் பற்றி தெரியாத படை வீரனோ அல்லது தளபதிகளில் ஒருவநோ சண்டையை துவங்கி விடக்கூடாது என்று பதட்டமாய் இருந்தான். தன் நண்பனை அழைத்தவன், “இப்படி அனைவரும் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தால் நான் எப்படி பேரரசனாக பிரகடனப்படுத்திக் கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பினான்.

“இளவரசே! நீங்கள்தான் போர் கோஷத்தை முதலில் சொன்னீர்கள்!”

“ஆம். ராஜபுதன வீரர்களின் கோஷத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதற்காய் சொன்னேன். அப்படி செய்யாவிடில், நம் பலவீனமாக அதை எண்ணுவர்! யார் எதிரிகளின் படைக்கு தலைமை தாங்குகின்றனர்?”

***

அக்பரின் திட்டம் எதுவாக இருந்தாலும், அதற்க்கு தாங்கள் தயராக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவே தன் வீரர்களை போர் கோஷமிட சொல்லி இருந்தார் ராஜ் சிங். ஆனால் அதை அக்பர் தவறாக புரிந்து கொண்டதாக எண்ணிய அவர், தன் வீரர்களின் கோஷத்தை நிறுத்த சொல்லி தன் தளபதிகளுக்கு கட்டளையிட்டார். அதனால், ராஜபுதன வீரர்களின் கோஷம் நின்றாலும், முகலாயர்களின் கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதானிருந்தது.

“அரசே! அவர்கள் தாக்குதலை துவக்குவதற்காக நாம் காத்திருந்தால் நமக்கு அது பலவீனமாகும். நாம் இங்கிருப்பதை அவர்களும் அறிவர். எனவே நேரடி தாக்குதலுக்கு நீங்கள் உத்தரவு தரவேண்டும்” என போரைத் துவங்க ராஜ் சிங்கின் தளபதி அனுமதி வேண்டினான்.

அக்பரிடம் இருந்து எந்த செய்தியும் இல்லாததால் பொறுமை இழந்திருந்த ராஜ் சிங், தன் தளபதியின் வார்த்தைகளைக் கேட்டு கோபம் கொண்டு “நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும்” என திட்டியதைக் கேட்ட மற்ற தளபதிகள் அதிர்ச்சியில் அமைதியானார்கள்,

அவனுடைய பொறுமையை அதிகம் சோதிக்காமல், எதிரியின் முகாமிலிருந்து ஒருவன் தன் கைகளை உயர்த்தியவாறு வருவது தெரிந்தது. தன் கண்களை சுருக்கி வருவது யார் என அறிய முற்பட்டார் ராஜ் சிங். அவனை யாரவது தாக்கினால், போர் தவிர்க்க இயலாத ஒன்றாகி, அவுரங்கசீப்பை அரியணையில் இருந்து அகற்றுவது என்பது இயலாத ஒன்றாகிவிடும். பின், தன் தளபதிகளை நோக்கி “அந்த வீரனை யாரும் தாக்க வேண்டாம்” என வீரர்களிடம் உத்தரவிட சொன்னான். அந்த மனிதன் வேகமாய் வந்தாலும், இரு படைகளுக்கும் இடையே அதிக தூரம். அதுமட்டுமல்லாது, பாலைவனப் பகுதிகளில் பகல் நேரத்து வெய்யிலின் தாக்கம் அதிகமாய் இருக்கும்.

***

எதிர் முகாமிற்கு அக்பரை அனுப்புவது ஆபத்து என தஹாவூர் கானுக்கு நன்கு தெரியும். அதே நேரத்தில், சாதாரண ஒரு வீரனை அனுப்புவதும் ஆபத்துதான். எனவே, தன்னை அனுப்ப சொல்லி வற்புறுத்தினான். இறுதியில், அக்பரின் சம்மதம் கிடைத்தது.அவனை கட்டி அணைத்த அக்பர் “உன் தலைமுடிக்கு ஆபத்து வந்தால் கூட அவர்களை கூண்டோடு அழிப்பேன்” என சூளுரைத்தான். அவர்களின் திட்டத்தை எடுத்துக் கூற ராஜ் சிங்கின் படை இருந்த இடத்தை நோக்கி கைகளை தூக்கியவாறு தஹாவூர் கான் நடக்கத் துவங்கினான்.

அந்தப் பாலைவனப் பகுதியில் இரவும், அதிகாலை நேரமும் குளிர் காற்று தாக்க, பகல் வேளைகளில் அனல் வாட்டி எடுத்தது. எனவே , அவன் நடக்க வேண்டிய தூரம் ஒரு மைல்தான் என்ற பொழுதும் வேகமாய் நடக்க இயலவில்லை அவனால். நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையை துடைப்பதற்காக கைகளை அசைந்தாலும் தான் ஆயுதம் எடுக்கப் போகிறேன் என எதிராளிகள் நினைக்க வாய்ப்பு அதிகம் இருந்ததால், அட்னாஹ் வியர்வையை சட்டை செய்யாமல் மெல்ல முன்னேறினான் தஹாவூர். இதற்கு முன், ஆயுதம் ஏந்தாத படை வீரனை எதிராளிகள் முகாமை நோக்கி அனுப்பி, அவர்களின் முகாம் நெருங்கியவுடன் மறைத்து வைத்திருக்கும் ஆயுதத்தை எடுத்து பகை வீரர்களை வெட்டி வீழ்த்துவது அவுரங்கசீப்பின் தந்திரங்களில் ஒன்று. இப்பொழுதும், ராஜ் சிங்கின் வீரர்கள் தன்னை அப்படி நினைக்க கூடாதே என்று அஞ்சியப்படியே சென்றான்.

ராஜ் சிங்கின் படைகளை அவன் நெருங்கிய நேரத்தில் , ராஜ் சிங்கின் தளபதி ஒருவனின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

“வீரனே! நீ இருக்கும் இடத்தில் அப்படியே நில்!”

“பேரரசர் அக்பரிடம் இருந்து செய்தி கொண்டுவந்துள்ளேன்.”

“பேரரசர் அக்பரா? அவர் தன் முன்னோர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பல காலம் ஆகிவிட்டதே!”

“துரோகி அவுரங்கசீப்பின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பேரரசர் அக்பர் இப்பொழுது முகலாயர்களின் ஒரே பேரரசராகி விட்டார் என்பதை அவரது நண்பர் ராஜா ராஜ் சிங்கிற்கு சொல்லவே நான் வந்துள்ளேன்.”

அவன் சொன்னதைக் கேட்டு கேலியாக சிரித்த அந்த தளபதி “பேரரசர் அக்பர் !!! எங்களுடைய முகாமிற்குள் ஊடுருவ முகலாயர்கள் செய்யும் புதிய முயற்சியா?” என கேலியாக கேட்டான்.

“நான் வந்திருப்பதை உங்கள் அரசருக்கு தெரிவிக்கவும். அவருக்கு எங்கள் திட்டம் நன்கு தெரியும்.”

“இங்கயே காத்திரு” என அவனை நிறுத்தி வைத்த தளபதி, சற்று உள்ளே தள்ளி இருந்த ராஜா ஜெய் சிங்கின் கூடாரத்தை நோக்கி சென்றான்.

***

தஹாவூர், ஜெய் சிங்கிங் முகாமை நோக்கி சென்றதில் இருந்தே அக்பரின் இதயம் தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து வரும் செய்திக்காக காத்திருந்தே அவன் களைப்படைந்திருந்தான். அவனுடைய வீரர்கள் நடப்பவற்றை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு எதற்கும் தயாராக காத்திருந்தனர்.

தஹாவூர் கானை ராஜபுதனத்து வீரர்கள் தங்கள் முகாமிற்குள் கூட்டி செல்வதை அக்பர் பார்த்தான்.’ஆனால் அவனுக்கு அங்கே என்ன காத்திருக்கிறது?’ என அக்பர் யோசித்தான். கடந்த சில மாதங்களாக, ராஜபுதனத்து மக்களின் கோவில்களையும், வீடுகளையும் இடித்து, பெண்களை சீரழித்து அவர்கள் செல்வங்களை கொள்ளையடித்து முகலாய வீரர்கள் செய்த அட்டூழியத்திற்கு பதிலடியாய் ஆயுதம் இன்றி சென்றிருக்கும் தஹாவூர் கானை தாக்குவார்களோ என்ற ஐயமும் அக்பருக்கு இருந்தது.

எதிர் முகாமில் எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு அக்பரின் மனம் பலவித எண்ணங்களில் ஆழ்ந்து எதையும் முடிவெடுக்க முடியாமல் திணறியது. அவன் உணர்ச்சிவசப்பட்டு எந்தவித முடிவையும் எடுக்க விரும்பவில்லை. வெளியிலே தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

அதே சமயத்தில், படை அணிவகுத்து வருவது போல் சப்தமும், புகை மண்டலமும் கிளம்பியது. அவர்கள் தன்னை தாக்க வருகிறார்களோ? ஆனால், எந்தவித போர் முழக்கமும் கேக்கவில்லையே? ராஜா ஜெய் சிங்கே வருவாரா இல்லை அவரது தளபதிகளில் யாரேனும் வருகிறார்களா? என்று பலவித கேள்விகளுடன் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த படையை பார்த்தான்.

“உங்கள் ஆயுதங்களை கீழே வையுங்கள். தளபதி தஹாவூர் கான், அவர்களை சரணடைய வைத்துவிட்டான்!” அவன் கூறியதை கேட்டவுடன் முகலாய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை தாழ்த்தினர்.

ராஜபுதனத்து வீரர்களின் படை சற்றுத் தொலைவில் நின்றது. அவர்கள் வந்ததால் எழும்பிய மண் புழுதி அடங்கிய பின், ஈட்டிகள் வைத்திருந்த காலாட்படையினரும், அவர்களுக்குப் பின்னே நின்றுக் கொண்டிருந்த குதிரை படை வீரர்களும் கண்ணுக்குத் தெரிந்தனர். அவர்களின் நடுவே அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல், ராஜா ஜெய் சிங்கும், அவர் அருகே தஹாவூர் கானும் அமர்ந்திருந்தனர். அதைக் கண்டதும் அக்பர் நிம்மதி பெருமூச்சு விட்டான். தஹாவூர் கானின் திட்டம் பலித்தது.

திடீரென, முரசுகள் ஓங்கி ஒலிக்க , முன்னணியில் இருந்த காலாட்படை விலகி வழிவிட்டது. யானையில் இருந்து இறங்கிய ஜெய் சிங்கும், தஹாவூர் கானும் அக்பரை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் கால் தரையில் படாதாவண்ணம் அவர்களுக்கு முன் மலர்கள் தூவப்பட்டன. கொம்புகள் முழங்க அக்பரை நோக்கி வந்த ஜெய் சிங்கும், தஹாவூர் கானும் அவன் முன்னே குனிந்து வணங்கினர்.

“அரசே! இதன் மூலம் நீங்கள் ஹிந்துஸ்தானத்தின் பேரரசர் என்பதை ஏற்றுக் கொண்டு உங்களுக்கு என் ஆதரவையும் சேவையும் தெரிவிக்கிறேன்” என அவனை பேரரசராக அங்கீகரித்து ஜெய் சிங் பேசினார்.

“பேரரசர் அக்பர் வாழ்க!” தஹாவூர் கான் கோஷமிட்டான். ஆனால், அங்கிருந்த முகலாய வீரர்களுக்கு தாங்கள் என்ன செய்ய வேண்டுமென குழப்பமாய் இருந்தது. புதிய பேரரசரை ஆதரித்தால் அது அரச துரோகம் ஆகி விடுமோ என பயந்தனர். என்ன செய்வது எனப் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்.

அவர்களின் தயக்கத்தை கண்ட தஹாவூர் கான் “துரோகி அவுரங்கசீப், பேரரசர் ஷாஜகானிடம் இருந்து முறையற்ற வழியில் அரசுரிமையை எடுத்துக் கொண்டார். அவுரங்கசீப்பின் நடவடிக்கைகள் காரணமாய் நமக்கு நண்பர்களாய் இருந்த ராஜபுதனத்து மன்னர்கள் நம்மிடம் இருந்து விலகி சென்றனர். நாம் உண்மையான முகலாய வாரிசான அக்பருக்கு நம் ஆதரவை தரவேண்டிய நேரம் இது. புதிய பேரரசர் அக்பர் ஹிந்துக்களையும், முஸ்லீம்களையும் இணைத்து முகலாய பேரரசை புகழின் உச்சிக்கு எடுத்து செல்வார். பேரரசர் அக்பர் வாழ்க!” என உணர்ச்சி போங்க பேசினான்.

அவன் கூறியதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்தனர் அங்கிருந்த முகலாய வீரர்கள். திடீரென, படைகளின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த வீரன் ஒருவன் “பேரரசர் அக்பர் வாழ்க!” என கோஷமிட, மெல்ல அந்த கோஷம் அங்கிருந்த அனைத்து வீரர்களிடமும் பரவியது.

தன் வீரர்களின் கோஷத்தை கேட்ட அக்பரின் முகத்தில் வெற்றிப் புன்னகை குடி கொண்டது. வானத்தை பார்த்து அல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்தான். அந்த சமயத்தில் அவனுடைய அரசான ஆரவல்லி மலைகளை பார்த்தவன், இன்று இளவரசனாக விழித்து, பேரரசனாக தூங்கப் போகிறோம், இறுதியா ஜெபுனிஷாவின் கனவு நனவானது என எண்ணிக் கொண்டான்.

***

ஜெய் சிங்குடன் அவர் முகாமிற்கு சென்றான் அக்பர். அவன் முகாமில் நுழையும் பொழுது இன்னிசையுடன் ராஜபுதனத்து வீரர்கள் அவனை வரவேற்றனர். அவன் உள்ளே நுழைந்ததும் அழகிய சாமந்தி மலர்களால் ஆன மாலையை அவனுக்கு அணிவித்தனர். அவன் பேரரசன் ஆனதிற்கு பரிசாய் ஜெய் சிங் ஒரு தங்க சிம்மாசனத்தை அளித்தார். அவன் அதிலே அமர்ந்ததும் அந்த முகாமில் அவனது முதல் அரச சபை கூடியது. இராஜபுதன தளபதிகளும், முகலாய தளபதிகளும் கலந்து அமர்ந்திருந்தனர். பேரரசனாக அவன் பிரகடனம் செய்து கொண்டது முழுமைப் பெற வேண்டுமெனில் அவன் தில்லி சென்று அதற்கு தேவையான பிரார்த்தனைகளையும் மற்ற விதிமுறைகளையும் முடிக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், அந்த மயில் சிம்மாசனத்தில் அவன் நிரந்தரமாக அமர வேண்டுமெனில் இங்கே அவனது தந்தையை தோற்கடித்து, ராஜபுதனத்து மன்னர்கள் தரும் மரியாதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“அரசே! அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ராஜாங்கம் முடிவுற்று உங்களுடைய ராஜாங்கம் ஆரம்பித்ததை கொண்டாட விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன்” எனக் கூறிய ஜெய் சிங் தன் கைகளை தட்ட, பல தட்டுகளில் பட்டாணி கலந்த சாதமும், சூடான ரொட்டிகளும், பாசிப் பருப்பில் செய்த குழம்பும், உருளைக் கிழங்கு கறியும், வறுத்த கோழிக்கறியும், ஆட்டிறைச்சியும் கொண்டு வரப்பட்டன.

ஆனால், அந்தக் கொண்டாட்டம் வெகு நேரம் நீடிக்கவில்லை. விரைவிலேயே தங்கள் விருந்தை முடித்துக் கொண்டவர்கள், தெற்கிலிருந்து தாக்கிய 5000 முகலாய வீரர்களையும் கொன்று குவித்தனர். இது அவுரங்கசீப் எதிர்பார்த்ததே. அதன் பின், வடக்கிலிருந்து ராஜபுதன வீரர்களை தாக்கிய அக்பரிடம் இருந்து வரும் செய்திக்காக அவுரங்கசீப் காத்திருந்தான். அவனுடைய மகன் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டு எதிரிகளுடன் இணைந்ததால் எந்த வித தாக்குதலும் இருக்காது என்பது அவனுக்கு தெரியாமலே போனது.

தன் அருகே அமர்ந்து தங்களின் அடுத்த கட்ட திட்டங்களைப் பற்றி ஜெய் சிங் விளக்கிக் கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அக்பர். அன்று காலையில் இருந்து அக்பரது மனதை அரித்துக் கொண்டிருந்த அதே கேள்வியை ஜெய் சிங்கும் கேட்டார். ” பேரரசி ஜெபுனிஷா, வேறு எந்த திட்டமும் சொல்லாமல் ஏன் உங்களை பேரரசராக அறிவித்துக் கொள்ள சொன்னார்?” எனக் கேட்டான்.

“எனக்கும் அது புரியவில்லை. என்னை பேரரசராக அறிவித்துக் கொள்ள மட்டும் கட்டளை வந்தது” எனக் கூறிய அக்பரின் மனதில் இனம் புரியா கலவரம் ஒன்று மூண்டது.

“அப்படியானால் நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் திட்டமிட வேண்டும். நாம் அஜ்மீருக்கு செல்லுதல் அவசியம்.”

“அஜ்மீருக்கா?”

“ஆமாம். அங்கேதான் உங்கள் தந்தையின் பெருவாரியான படைகள் உள்ளன. அவர் அஜ்மீர் செல்லும் முன், நீங்கள் அங்கே சென்று அந்தப் படைகளை உங்களுடன் இணைத்துக் கொள்ளுதல் அவசியம். அதன் பின், நீங்கள் பேரரசரானதை பிரகடனம் செய்ய வேண்டும். உங்கள் பெயர் பொறித்த பொற்காசுகளை உருவாக்க என் பொற்கொல்லர்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். அது தயாரானதும் அவற்றை நாம் மக்களிடம் பரப்ப வேண்டும். நீங்கள் தவிர்க்க முடியாத நபராக உருவாகுவது அவசியம்” என அவரது திட்டத்தை விளக்கினார்.

அவர் கூறியதை அவனது மனதின் ஒரு பகுதி விரும்பினாலும், அவர் மிக வேகமாக செயல்படுகிறாரோ என இன்னொரு பகுதி கூறியது. ஆனாலும், அவர் கூறியதை மறுத்துப் பேச விரும்பாமல் அதற்கு தலை அசைத்தான்.

****

மறுநாள் காலையில் அவன் கண்விழித்த பொழுது, அவனது படுக்கையின் அருகே காஷ்மீர் கம்பளங்கள் மடித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டதில் இருந்தே ஜெய் சிங்கும், மற்ற இராஜபுதன வீரர்களும் ஒரு முகலாய சக்கரவர்த்திக்கு எத்தகைய ஆடம்பரம் தேவையோ அந்த அளவு ஆடம்பர பொருட்களால் மகிழ்வித்தனர். மிகப் பெரிய கூடாரமும் , அதில் அவனது தேவைகளை நிறைவேற்ற தேவையான பணியாளர்களும் தந்திருந்தனர். இரவில் அவனது சுகத்திற்காக பரத்தையரை அனுப்பி இருந்தாலும், அந்த சூழ்நிலையில் அவன் மனம் அவர்களை நாடவில்லை.

குளிர்ந்த காலை, அவனை வரவேற்க, காஷ்மீர் சால்வையை தன்னை சுற்றி போட்டுக் கொண்டவன், கூடாரத்தில் இருந்து வெளியே வந்து சுற்றி நடப்பவைகளை பார்வையிட்டான். பனிப்பொழிவு இல்லாவிடினும் சுற்றியிருந்த மலைத் தொடர்களில் சிகரங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதைக் கண்டான். இரவு நேரத்து குளிரில் தண்ணீர் உடனிருந்து பனி ஆகி இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். சற்றுத் தொலைவில், யாரோ ஒரு தளபதியின் மனைவி போன்று இருந்த இராஜபுதனத்து இளம் பெண் ஒருவள் ஒரு சிறுவனைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தாள். இரண்டு வயது கூட இருந்திராத அந்த சிறுவனை கண்டவுடன், கடந்த ஆண்டு பிறந்த அவனுடைய மகன் நிகுசியார் நினைவு வந்தது அக்பருக்கு. அதன் பின் தொடர்ந்து நடந்த பல அரசியல் நிகழ்வுகளால், மகனுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை அவனால். பேரரசி ஜெபுனிஷா, தன் பேரனை மிகுந்த கவனத்துடன் வளர்த்துக் கொண்டிருந்தாள்.

தான் செய்தவற்றையும், ஜெய் சிங்குடன் இணைந்து அடுத்து செய்ய இருப்பதையும் பற்றி ஜெபுனிஷாவிற்கு கடிதம் எழுத எண்ணினான். இறுதியாக, தந்தையை அவன் வென்றதை எண்ணி அவள் பெருமைப் படுவாள். தன்னுடைய வெற்றியை அறிந்தவுடன் ஜெபுனிஷாவின் முகத்தில் ஏற்படும் உணர்வுகளை காண அவன் ஆசைப்பட்டான். ஆனால், தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில், அவனை தில்லி செல்வதோ அல்லது ஜெபுனிஷா அங்கே வருவதோ மிக ஆபத்தானது என்று அவனுக்குத் தெரியும். அவன் பேரரசனாக பிரகடனப்படுத்திக் கொண்டதை அரசாங்க தூதர்கள் சொல்லும்பொழுது அவள் தெரிந்து கொள்ளட்டும். அப்படி நடந்தால் மட்டுமே, இத்தனைக்கும் பின்புலமாய் ஜெபுநிஷாதான் இருக்கிறாள் என யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.

“ராஜா ஜெய் சிங் உங்களை சந்திக்க வருகிறார், அரசே!” என ஒரு பணியாள் அறிவித்தான்.

“வணங்குகிறேன் அரசே!” என்று குனிந்து வணங்கிக் கொண்டே உள்ளே வந்தார் ஜெய் சிங்.

“அரசே! என்னை வணங்க வேண்டாம். என்னுடைய தந்தையின் உத்தரவுகளில் இந்த ஒன்றில் நான் அவருடன் ஒத்துப் போகிறேன். நம்மை உருவாக்கிய இறைவனை மட்டும் வணங்கவும்” எனக் கூறிய அக்பர் அவரை அமர சொன்னான்.

“என்னுடைய புரட்சியை பற்றிய செய்தி என் தந்தைக்கு தெரிந்துவிட்டதா?”

“தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.”

“அப்படியானால் அவரிடம் இருந்து எந்த செய்தியும் ஏன் வரவில்லை. இந்நேரம், அவர் போர் துவக்கி இருக்க வேண்டுமே?”

“அவர் அதிர்ச்சியில் இருக்க வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், நாம் அவருடைய நடவடிக்கைக்கு காத்திருக்க வேண்டாம். நாம் இன்று மதியம், திடீர் தாக்குதல் நடத்தி வடக்கு பகுதி வழியாக அஜ்மீர் நோக்கி செல்லவேண்டும். என்னிடம் 6000 வீரர்கள் உள்ளனர். உங்களிடம் 12,000 வீரர்கள் உள்ளனர். அஜ்மீர் செல்லும் வழியில், மேலும் பல சிறு மன்னர்கள் நம்முடன் இணைந்துக் கொள்வார்கள். எனவே, அஜ்மீரை நாம் நெருங்கும் சமயத்தில் நம்மிடம் கிட்டத்தட்ட 30,000 வீரர்கள் இருப்பார்கள். எனவே அங்கே போர் நடந்தாலும் நாம் எளிதில் வென்று விடலாம். போரின் இறுதியில் நம்மிடம் இரு மடங்கு வீரர்கள் இருப்பர். அது மிக வலிமையான படையாக இருக்கும்” என அடுத்து என்ன செய்யலாம் என அறிவித்த ஜெய் சிங், தங்களுடன் இணைய உள்ள சிறிய ராஜபுதன மன்னர்களின் பெயர்களை கூறினார். மேலும், கொஞ்சம் முயற்சித்தால், தம்முடன் இணையக் கூடிய மன்னர்களைப் பற்றியும் கூறினார்.

திட்டங்கள் மாறிக் கொண்டே இருப்பதைக் கண்டு அக்பர் அதிருப்தி அடைந்தான். அதுவரையில், அவனாக எதையும் திட்டமிட வேண்டிய அவசியம் இருந்ததே இல்லை. அவன் என்ன செய்ய வேண்டுமென்பதை ஜெபுனிஷா திட்டமிட்டு கொடுத்து விடுவாள். ஆனால் ஜெய் சிங்கோ அவனிடம் கூட கலந்தாலோசிக்காமல் திட்டமிடுகிறார். “ஏன் திட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்? நாம் முன்பே முடிவெடுத்த திட்டப்படி ஏன் செயல்படக்கூடாது?” எனக் கேட்டான்.

அவன் சொன்னதை கண்டுகொள்ளாத ஜெய் சிங், தங்களுடன் சேர்த்துக் கொள்ளக் கூடிய மன்னர்களை பற்றி பேசிக் கொண்டே சென்றார். “சில சிறிய அரசர்கள் நம்முடன் இணைய வேண்டுமானால் அவர்களுக்கு நாம் நிதி தர வேண்டி வரலாம். உங்களிடம் அரசர் கொடுத்த பொற்காசுகள் உள்ளனவா?” எனக் கேட்டார்.

அதற்கு அக்பர் பதில் கூறும் முன்னரே, தங்களுடன் சேர நிதி கேட்கும் மன்னர்களை திட்டத் துவங்கினார் ராஜ் சிங். அதன் பின், ராஜாக்களின் கடமைகளைப் பற்றி பேச துவங்கினார். தங்கள் கஜானாவை நிரப்புவதைப் பற்றி கவலைப்படாமல், ஏன் மக்களின் நன்மைக்காக அவர்கள் முடிவெடுக்க வேண்டியது அவசியம் என விளக்கத் துவங்க அக்பருக்கு பொறுமை குறையத் துவங்கியது.

ஆனால், அப்பொழுது அவனுடன் இருக்கும் ஒரே துணையையும் இழக்க அவனுக்கு தைரியம் இல்லை. அந்த நேரத்தில், அவர் தரும் ஆதரவிற்காக அவர் ஆற்றிய அந்த சொற்பொழிவை சகித்துக் கொண்டான். மெல்ல எழுந்து, கூடாரத்தின் சாளரம் வழியாக பரந்து விரிந்திருந்த ஆகாயத்தைப் பார்த்தவன் “அல்லாஹ் எனக்கு எப்பொழுதும் துணையிருப்பாயாக” என வேண்டினான்.

****

26. விசுவாசமும் துரோகமும்

என் மகிழ்ச்சியான தினங்களையும் சோகமான நாட்களையும்
பகிர்ந்து கொண்ட நண்பர்கள் எனக்கிருந்தனர்
ஆனால் அவர்கள் இப்பொழுது என் நண்பர்கள் இல்லை
அனைவரிடம் இருந்தும் விலகி விட்டேன் நான்

10 நவம்பர் 1681

“அக்பர் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டுவிட்டான்” ஆச்சர்யமும் திகிலும் கலந்தக் குரலில் கூறினாள் ஜெபுனிஷா. “ஆனால், ராஜபுதன படையிடம் பிடிபட்டதாக நடிக்கத்தான் நான் கூறியிருந்தேன். அப்பொழுதுதான் தந்தைக்கு எந்த சந்தேகமும் வராது என அப்படி சொல்லி இருந்தேன்.”

“அதில் என்ன வேறுபாடு வந்துவிடப் போகிறது. இப்பொழுது அவன் பேரரசன். இராஜபுதனத்து மன்னர்களின் படைகள் அவனுக்கு ஆதரவாய் உள்ளது” என தன் கை முஷ்டியை உயர்த்திக் கூறினாள் ஜூபைதாத்.

நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாத தன் தங்கையின் வார்த்தைகளை கேட்டு, தன் முகத்தை, தன் கரங்களுக்குள் புதைத்துக் கொண்டாள் ஜெபுனிஷா. “அக்பர், நீ ஒரு முட்டாள். அவசரப்பட்டுவிட்டாய்” என அக்பரை திட்டி தீர்த்தாள்.

“அவன் செய்ய வேண்டி இருந்தது எல்லாம் ஜெய் சிங்கிடம் சிக்குவது மட்டுமே. அவர்கள் அவனை அஜ்மீர் அழைத்து சென்றிருப்பர். அங்கே ஏற்கனவே இருக்கும் 30,000 முகலாய வீரர்களை, இராஜபுதன மன்னர்களின் துணையுடன் தன் பக்க சேர்த்துக் கொண்டிருக்கலாம். அதன் பின், மிக வலிமையான படையுடன் தில்லி நோக்கி வந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என தந்தை அறியும் முன் நாம் தில்லியின் வாயில்களை மூடி அக்பரை பேரரசராக அறிவித்து கஜானாவை கைப்பற்றி இருந்திருப்போம்” என தன்னுடைய திட்டத்தை விவரித்தாள் ஜெபுனிஷா.

அக்பர் செய்ததை இன்னும் நம்ப இயலாத ஜெபுனிஷா “எப்படி இது நடந்தது?” என தன் தலையை இரு பக்கமும் அசைத்தாள்.

“கடிதத்தை நேரடியாக அக்பரிடம் கொடுக்க வேண்டியது அகில் கானின் கடமை. ஒரு வேளை அகில் கான் நம்மை ஏமாற்றி இருப்பாரோ?” என தன் சந்தேகத்தை கேட்டாள் ஜூபைதாத்.

“எனக்கு வந்த செய்திகளின் படி, அக்பருக்கு என் கடிதம் சென்று சேரவில்லை. ஏதோ ஒன்று அகில் கானை தடுத்திருக்க வேண்டும் அல்லது நீ கூறியபடி ஆரம்பத்தில் இருந்தே அகில் கான் அப்பாவின் கையாளாக இருக்க வேண்டும்.”

“ஆனால் அப்படி இருந்தால், மக்ஃபி பற்றி அப்பாவிற்கு எப்பொழுதோ தெரிந்திருக்கும். நம்மையும் அப்பொழுதே சிறை செய்திருப்பார்.”

வழக்கமாய் அவள் செய்வது படி எல்லா நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து என்ன நடந்திருக்கும் என கூற துவங்கினாள் ஜெபுனிஷா. “நாம் சிறைப்படுவது அகில் கான் விரும்பியிருக்க மாட்டார். நாம் தோற்றால் போதும் என்று நினைத்திருக்கலாம். இப்படி அவர் செயல்பட்டதன் மூலம், நம்மையும் ஏமாற்றி தந்தையையும் காப்பாற்றி விட்டார்.”

“நாம்தான் மறைந்திருந்து செயல்படுகிறோம் என எண்ணினேன். ஆனால் அகில் கான்தான் உண்மையில் மறைந்திருந்து செயல்பட்டிருக்கிறார்” என தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் ஜூபைதாத்.

“நன்றி கெட்டவனே!” என அவனைத் திட்டிய ஜெபுனிஷாவின் கண்கள் கண்ணீரால் குளமாகியது.

***

ஜெய் சிங்க் திட்டமிட்டப்படி அவர்களது படை அஜ்மீரை வந்தடைந்தது. அவர்கள் வரும் வழியில், பல சிற்றரசர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டாலும், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படைவீரர்களின் எண்ணிக்கைப் பெருகவில்லை. அஜ்மீரை சுற்றி வளைத்து அவர்கள் கூடாரமிட்டு தங்கிய சமயத்தில் அவர்களிடம் 25000 வீரர்கள் இருந்தனர். அவர்கள் முகாமின் நடுப்பகுதியில் அக்பரும், மற்ற இராஜபுதன மன்னர்களும் தங்க, சுற்றிலும் அவரவர் பதவிக்கேற்ப மற்ற தளபதிகளுக்கு கூடாரம் அமைக்கப்பட்டது. அங்கே சென்று சேர்ந்ததும், மீண்டும் ஒருமுறை தன் பிரகடனத்தை அறிவித்தான் அக்பர்.

அவர்களின் காத்திருப்பு இரு நாட்களாய் நீடித்த பொழுதும், அஜ்மீரில் இருந்த முகலாயப் படைகளிடம் இருந்து சரணடைவதாக எந்த ஒரு தூதும் வரவில்லை. மூன்றாம் நாள், முகலாயர்களின் முகாமில் இருந்து வந்த தூதுவன் அக்பரிடம் கடிதத்தைக் கொடுத்தான். ஆனால் அது அவுரங்கசீப் எழுதியதல்ல, அவனது படையினர் எழுதியது.

இளவரசர் அக்பருக்கு,

நீங்கள் எங்கள் தலைவர் அல்ல. நாங்கள் ஹிந்துஸ்தானத்தின் உண்மையான பேரரசர் அவுரங்கசீப்பையே பின்பற்றுவோம். சரணடைய தயாராக இருங்கள் அல்லது போர்க்களத்தில் சந்திக்க தயாராகுங்கள்.

“யாரிடம் பேசுவதாக எண்ணுகிறார்கள்?” என கோபமாகக் கத்தினான் அக்பர். தன் நிலையில் இருந்து பின்வாங்க மறுத்தான் அக்பர்.

“பேரரசருக்கு எதிராக செயல்படுவதற்காக படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல் நாய்களுக்கு இரையாக போடப்படும்” என முகலாய படைத்தளபதியிடம் சொல்லுமாறு கத்தினான்.

கோபத்தின் உச்சியில் இருந்தவனை ஜெய் சிங் சாந்தப்படுத்த முயன்றார்.

“பொறுமை காக்கவும் அரசே!எந்த ஒரு தளபதியும் தானாக இப்படி இரு கடிதம் அனுப்ப மாட்டான். இது உங்களது தந்தை தூண்டி விட்டு செய்த வேலையாக இருக்கும்.”

“உண்மையிலேயே அவர்கள் என் தந்தைக்கு விசுவாசம் மிக்கவர்களாக இருக்கலாம். தன்னுடைய இளம் வயதில் இருந்தே அவர்களுடன் இணைந்து பல போர்க்களங்களை சந்தித்தவர் என் தந்தை. என் தந்தை ஒரு சிறந்த போர் வீரர். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாய் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம்.”

“அரசே! உங்கள் வாழ்நாளை விட அதிக நாட்கள் நான் அரசாண்டிருக்கிறேன். யாருக்கு நிலைமை சாதகமாக இருக்கிறதோ அந்த பக்கம் செல்வார்கள் இந்த தளபதிகள். நீண்ட நாட்கள் வலமாக வாழ வேண்டும் என்றே அனைவரும் எண்ணுவர். தோற்கப்போகும் அணியில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். முகாமிற்கு அருகேதான் உங்கள் தந்தை இருக்க வேண்டும். அவர் தன்னுடைய ஒற்றர்களை அனுப்பப் கூடும். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று தன் அனுபவத்தில் பேசினார் ஜெய் சிங்.

அதைக் கேட்ட அக்பரின் கொந்தளிப்பு அப்படியே அடங்கியது. ஜெய் சிங் வகுத்த திட்டம் வேலை செய்யவில்லை. தன்னை பேரரசனாக பிரகடனப்படுத்திக் கொண்டது தந்தைக்கு தெரிந்தால் அவனுடைய வாழ்வு என்னாகுமோ என பயப்படத் துவங்கினான். யாரை நம்புவது என புரியாமல், ஜெய் சிங் என்ன சொல்கிறாரோ அதை பின்பற்றுவோம் என முடிவெடுத்தான். அன்று காலையில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து களைப்படைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

இரவு கவிழத் துவங்கியதும், அவர்களின் முகாமை சுற்றி பாதுகாப்பை அதிகப்படுத்தி இருந்தனர் ஜெய் சிங்கின் தளபதிகள். அவுரங்கசீப்பின் படை இரவு நேரத்தில் தாக்கலாம் என்ற அச்சத்தில் அனைவரும் விழிப்புடன் இருந்தனர். படுக்கையில் தூக்கம் வரமால் புரண்டுக் கொண்டிருந்த அக்பரின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்கள் தோன்றின. ஜெய் சிங்கையும் மற்ற இராஜபுதன மன்னர்களையும் எந்த அளவிற்கு நம்புவது என அவனால் முடிவெடுக்க இயலவில்லை. அவர்களுடன் சில நாட்கள் செலவழித்தும், அவர்கள் பக்கத்தில் இணைந்தும், அவன் அவர்களை நம்பும் அளவிற்கு அவர்களும் அவனை நம்புகிறீர்களா என கணிக்க இயலவில்லை. ஒருவேளை தந்தையுடன் தான் செய்ய இருக்கும் போரில் தான் தோற்றுவிட்டால் அப்பொழுதும் அவர்கள் தன்னை தொடர்ந்து ஆதரிப்பார்களா இல்லை எவ்வளவு வேகமாக தன்னை ஆதரித்தார்களோ அதே அளவு வேகமாய் தன்னை கைவிடுவார்களா என பயந்தான். ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

வெளியில் யாரோ பூனை போல் மெதுவாய் அடி மேல் அடி வைத்து செல்வது அவனுக்கு கேக்க, தன் வாளைக் கையில் எடுத்துக்கொண்டு கூடாரத்திற்கு வெளியே சென்றான்.

“யாரங்கே செல்வது?”

நெடிய கறுத்த உருவம் “அரசே! நான்தான்” என பதில் கூறியது.

“தஹாவூர் கான்? இந்த இரவு வேளையில் நீ எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?”

“எங்கும் செல்லவில்லை அரசே! சரியாக உறக்கம் வராததால் இந்த முகாமை சுற்றி நடந்து பாதுகாப்பு சரியாக உள்ளதா என கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்.”

“இங்கே குளிர் கடுமையாக உள்ளது. மேலும், இதை செய்வதற்கு வேறு ஆட்கள் உள்ளார்கள்.”

இதைக் கேட்ட தஹாவூர் என்ன சொல்வது என புரியாமல் புன்னகைத்து “என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள் அரசே! நீங்கள் சென்று ஓய்வெடுங்கள்!” என அக்பரை சமாதானப்படுத்தினான்.

தஹாவூர் தயக்கமாய் பதில் கூறியது அக்பரை சங்கடப்படுத்தியது. இது அவனின் இயல்பு கிடையாதே என சந்தேகித்தான்.

“தன்னை கௌரவிப்பவர்களை இறைவன் காப்பாற்றுவான்.”

அவன் கூறியதற்கு மீண்டும் தயக்கமாய் தலை அசைத்த தஹாவூர் “நீங்கள் என் இதயம் போன்றவர்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து விலகி நடந்தான்.

****

மறுநாள் காலையில் வெகு நேரம் கழித்தே அக்பர் கண்விழித்தான். சூரியன் உதித்து பல மணி நேரம் ஆகி இருந்ததை கண்டு வியப்படைந்தான். அவனிடம் இருந்த பொருட்கள் அங்கிருந்த பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தன் முன்னே இருந்த பாத்திரத்தில் இருந்த நீரைக் கொண்டு தன் முகத்தை கழுவிக் கொண்டான். அவனுடைய கூடாரத்திற்கு வெளியே இருந்து பறவைகளின் ஓசை கேக்க, அந்த பருவத்தில் தில்லியில் கேக்கும் பலவித பறவைகளின் ஓசை அவனுக்கு நினைவிற்கு வந்தது.

திடீரென படை வீரர்களின் முகாமில் பறவைகளின் சப்தம் மட்டுமே கேட்பது ஏன் என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு. போர் முகாமில் வழக்கமாய் கேட்கும் குதிரைகளின் கனைப்பொலியோ, வீரர்களின் வாட்கள் உராய்வதால் எழும்பும் சப்தமோ எதுவும் கேட்கவில்லை அவனுக்கு. இந்த சந்தேகம் எழுந்தவுடன், வேகமாய் கூடாரத்தின் வாயிலுக்கு சென்று வெளியே பார்த்தவன், அங்கே இருந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

அவர்களின் முகாம் அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. ஆங்காங்கே எழுப்பப்பட்ட கூடாரங்கள் இருந்தாலும், முகலாய வீரர்களையோ அல்லது ராஜபுதன வீரர்களையோ அவனால் பார்க்க இயலவில்லை.

“எல்லோரும் எங்கே சென்றீர்கள்?” எனக் கத்திகொண்டே ஓடினான்.

அப்பொழுது நான்கைந்து முகலாய வீரர்கள் அவனை நோக்கி வந்தனர். அவர்களின் தலைவன் போல் இருந்தவன் “நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் இளவரசே!” என அக்பரை குற்றம்சாட்டினான்.

தன்னை கொன்றுவிடுபவன் போல் பார்த்த அவனை நோக்கி “ஒரு பொழுதும் உங்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்!” என அக்பர் கூறினான்.

தங்கள் கைகளில் கத்தி மற்றும் ஈட்டிகளை ஏந்திக் கொண்டு அக்பரை கொன்றுவிட தயராய் இருந்தவர்களை பார்த்து “தஹாவூர் கான் எங்கே?” எனக் கேட்டான்.

“அவன் எங்கே என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் இளவரசே!”

“கடைசியாக நேற்று நள்ளிரவில் அவனை சந்தித்தேன். அதன் பிறகு அவன் எங்கே சென்றான் எனத் தெரியாது.”

“நீங்கள் தஹாவூர் கானை நம் போர் திட்டங்களுடன் அவுரங்கசீப்பிடம் அனுப்பியதாக நாங்கள் எண்ணுகிறோம். நீங்களும் தஹாவூரும் அவுரங்கசீப்பின் ஒற்றர்கள். அதனால்தான், நீங்கள் இராஜபுதன மன்னரை ஏமாற்றியதற்கு பாராட்டு தெரிவித்து அவுரங்கசீப் கடிதம் அனுப்பி இருந்தார். நீங்கள் திட்டம் தீட்டி எங்களை ஏமாற்றி விட்டீர்கள்” என சொல்லி கீழே உமிழ்ந்தான் மற்றொரு வீரன்.

அதைக் கேட்ட அக்பர் உறைந்து போனான். நேற்றிரவு தஹாவூர் கான் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தது முகாமின் பாதுகாப்பை சரி பார்க்க அல்ல, அவுரங்கசீப்பிடம் செல்வதற்குத்தான் என்பது அவனுக்கு உறைத்தது. தனக்கு தஹாவூர் துரோகம் செய்வான் என்று சிந்திக்கக் கூட அவனால் முடியவில்லை.

போர்முனையில் தனக்காக இராஜபுதன மன்னருக்கு தூது சென்றது, இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தன்னை கைவிடுவதற்குத்தானா என நொந்துக் கொண்டான். கையில் ஆயுதங்களுடன் தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவசரத்தில் தான் வாளை கொண்டுவரவில்லை என்பது உறைத்தது.

“அதிர்ஷ்டவசமாக , அந்தக் கடிதம் உங்களை அடைவதற்கு முன்பு எங்களால் தடுக்கப்பட்டது. அதன் மூலம் எங்களுக்கு எதிராக நடக்க இருந்த சதி தவிர்க்கப்பட்டது.”

“சதி திட்டமா ? நான் மிகவும் நம்பிய என் தளபதி என் தந்தையுடன் இணைந்து என்னை ஏமாற்றிவிட்டான். அவர்கள் இருவரும் இருந்து நம் கூட்டணியை உடைக்கப்பார்க்கின்றனர்.”

“கூட்டணி ஏற்கனவே உடைந்துவிட்டது. ராஜபுதன மன்னர்கள் அவர்களது வீரர்களுடன் சென்று விட்டனர். முகலாய வீரர்கள் ஆங்காங்கே சிதறி ஓடிவிட்டனர். உங்கள் கூட்டணி மேல் யாருக்கும் நம்பிக்கை இல்லை இளவரசே!”

“அப்படியானால் நீங்கள் மட்டும் இன்னும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?”

இதைக் கேட்டவுடன் அந்த வீரர்கள் அக்பரை நெருங்கி வரத் துவங்கினர். அவர்களிடம் சிக்காமல் இருக்க பின்னோக்கிப் போனான் அக்பர். கையில் அவர்கள் தாக்குதலை தடுக்க எந்தவித ஆயுதமும் இல்லாத நிலையில் அவன் நிலை அபாயகரமாக இருந்தது.

திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. தூக்கி வீசப்பட்ட அக்பர் அருகிலிருந்த மண் சாலையில் விழுந்தான். பயங்கர வலியில் துடித்த அக்பர் மெல்ல எழுந்து சுற்றிலும் பார்த்தான். பீரங்கி குண்டு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. இத்தனை நேரம் அவனை சுற்றி வளைத்து நின்ற வீரர்கள் அந்த பீரங்கி குண்டு வெடித்ததால் தூக்கி எறியப்பட்டு கிடந்தனர். ஒரு வீரன் வலியினால் கதறிய சப்தம் கேக்க அந்தப்பக்கம் திரும்பினான் அக்பர். அவனை கண்ட காட்சி அவனை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வீரனின் இரு கால்களும் துண்டாகிய நிலையில் அவனுடைய உடலில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

மீண்டும் ஒரு பீரங்கி குண்டு வெடித்த சப்தம் கேட்டது அக்பருக்கு. ஆனால் அவன் இருந்த இடத்தில் இருந்து தொலைவில் அந்த குண்டு விழுந்ததால் அக்பருக்கு எதுவும் பாதிப்பு நிகழவில்லை. காயத்தால் துடித்துக் கொண்டிருந்த வீரனை அருகிலிருந்த கூடாரத்திற்கு தூக்கி சென்றான் அக்பர். “வீரனே! இராஜபுதன மன்னர்கள் எங்கே சென்றனர் என சொல்!” என அவனிடம் கேட்டான்.

“சொல்ல முடியாது. நீ துரோகி. உன்னை நம்பி உண்மையான பேரரசரை பகைத்துக் கொண்டோம். இராஜபுதன மன்னர்களை பிடிக்க எங்களை வைத்து சதி செய்தாய் நீ!” வலியினாலும், இரத்தப்போக்கினாலும் துடித்துக் கொண்டிருந்த அந்த வீரன் மிகவும் கஷ்டப்பட்டு பேசினான். “இராஜபுதன வீரர்களை எதிர்த்து போர் புரிவதற்காக உங்களுடன் நாங்கள் ஆரவல்லி மலைக்கு வந்தோம். நீ உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்ள சொன்னாய். ஆனால் இறுதியில் இராஜபுதன வீரர்கள் எங்களை துரோகிகள் என்றனர்.” இதைக் கூறிய பின் தான் அனுபவித்த அவமானத்தால் அழத் துவங்கினான். “என் வாழ்நாள் முழுவதும் முகலாயர்களுக்கு சேவகம் செய்த பின்னும் துரோகி என அழைக்கப்பட்டேன்.”

அவன் கையை தேடிப்பிடித்த அக்பர், அவனுடைய உள்ளங்கையில் தன் கையை வைத்துக் கொண்டு ” நீ மிகுந்த துணிவுடன் பல போர்களின் போராடி உள்ளாய். உன் குழந்தைகள் உன்னை நினைத்து பெருமைக் கொள்வர். அல்லாஹ்வின் பெயரில் ஆணையிட்டுக் கூறுகிறேன் நான் யாரையும் ஏமாற்றவில்லை. என் ஒரு வயது மகன் நிகுசியார் மேல் சத்தியம் செய்து கூறுகிறேன் நான் என் வீரர்களிடம் பொய் சொல்லவில்லை. நேற்று இரவு தஹவூர் கானை நான் பார்த்தது உண்மை. ஆனால் அவன் முகாமை கண்காணிக்கிறேன் என்றே நம்பினேன். அவன் நம் முகாமில் இருந்து கிளம்பி என் தந்தையுடன் இணைவான் என்று நான் நினைக்கவில்லை அதை இப்பொழுது கூட என்னால் நம்ப இயலவில்லை” என அவனிடம் மீண்டும் மன்றாடினான்.

வலியினால் அவதியுற்ற அந்த வீரன், அக்பரின் கண்களையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஒரு பேரரசரிடம் இருந்து கொண்டவரப்படும் கடிதம் அவ்வளவு எளிதில் எதிரிகளிடம் சிக்க விடுவார்களா ? நேற்று இரவு தஹவூர் கான் என்னை சந்தித்ததும், அதில் இருந்து சிறிது நேரம் கழித்து அந்தக் கடிதம் உங்களிடம் சிக்குவதும் எல்லாமே அவர்கள் திட்டமிட்ட ஒன்று. அல்லாஹ் என் தந்தையை மன்னிக்கட்டும். என்னால் அவரை மன்னிக்க இயலாது. இராஜபுதன மன்னர்கள் எங்கே சென்றார்கள் என்று சொல் வீரனே!” என மீண்டும் ஒருமுறை அவனிடம் கேட்டான் அக்பர்.

“நீங்கள் உண்மையைத்தான் பேசுகிறீர்கள் என இறந்த உங்கள் தாயின் மீது ஆணையிட முடியுமா?

தன் உண்மையான அன்னை , இறந்த தில்ராஸ் அல்ல, ஜெபுனிஷாதான் என்பதை அறியாத அக்பர்,” இறந்த என் அன்னை மீது சத்தியமாக கூறுகிறேன்” எனக் கூறினான்.

“இறந்த ஜஸ்வந்த் சிங்கின் மகன் ஜோத்பூரில் இருக்கிறான். அவனைக் காப்பாற்றுவதற்காக இராஜபுதனத்து மன்னர்கள் அங்கே சென்றுள்ளனர். அவர்கள் கிளம்பி சிறிது நேரம்தான் ஆகிறது. நீங்கள் உடனே செல்லுங்கள்” என்றுக் கூறினான்.

***

“அக்பருக்கு உதவி தேவைப்படும் இந்நேரத்தில் என்னால் இங்கே இருக்க முடியாது” என்றாள் ஜெபுனிஷா.

“ராஜ் சிங் அவனுடன் இருக்கிறார். அவர் உதவி புரிவார்” என அவளுக்கு நினைவூட்டினாள் ஜீனத்.

“அவர்கள் யாரையும் என்னால் நம்ப இயலாது. நான் அக்பரிடம் சென்றாக வேண்டும். என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பான் அக்பர்.”

“நீ அபப்டி எதையும் செய்யக் கூடாது. நீ அங்கே சென்றால் நம் அனைவரின் மீதும் சந்தேகம் வரும். வழக்கம் போல் கவிதையில் குறிப்புகளை அனுப்பு.”

“இனி கவிதைகள் கிடையாது. அவன் குறிப்புகளை தவறாக புரிந்து கொண்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சாதாரண வார்த்தைகளில்தான் எழுதப் போகிறேன். அதை என்னுடைய மிக நம்பிக்கைக்குரிய அந்தரங்க காவலாளி எடுத்து செல்வான்.”

“கடிதத்தை எங்கே அனுப்பப் போகிறாய்?”

“ஜோத்பூருக்கு. ஏற்கனவே இராஜபுதன மன்னர்கள் அனைவரும் அங்கே கூடி இருப்பார்கள். அக்பரும் அங்கே தான் இருக்க வேண்டும்.”

அவள் கூறியதைக் கண்டு வியந்த ஜீனத், “அது உனக்கு எப்படி தெரியும் ஜெபுனிஷா? இது உனது யூகமா அல்லது உனக்கு ஏதேனும் செய்தி வந்ததா?” எனக் கேட்டாள்.

தன் சகோதரியை முறைத்துப் பார்த்த ஜெபுனிஷா ” நீங்கள் யாரும் நம் தந்தையைப் போல சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். அதனால்தான் உங்களால் நம் தந்தையை தோற்கடிக்க இயலவில்லை. ஜஸ்வந்த் சிங்கின் குழந்தை ஜோத்பூரில்தான் உள்ளது. எனவே அக்குழந்தையைப் பாதுகாக்க அனைத்து இராஜபுதன வீரர்களும் அங்கேதான் இருப்பர்” என கூறினாள்.

***

ஜோத்பூரை அடைந்து ஜெய் சிங்கை சந்திக்க முயன்ற அக்பரை காவலன் தடுத்து நிறுத்தினான். உள்ளே செல்ல முயன்ற அக்பரின் வயிற்றில் எட்டி உதைத்தான் அந்தக் காவலன்.

“இராஜபுதன வீரர்களை ஏமாற்ற முயன்றால் என்ன நடக்கும் இன்று உனக்கு பாடம் கற்பிக்கிறேன்” என்று சொல்லியபடியே அக்பரை தரையில் இருந்து தூக்கி சுவற்றில் இடித்தான். தன் தலை சுவற்றில் மோதியதால் உண்டான வலியிலும், ஏற்கனவே வயிற்றில் உதைத்ததனால் ஏற்பட்ட வலியிலும் அக்பர் துடித்து தரையில் விழுந்தான்.

அந்தக் காவலன் அக்பரை மேலும் அடிக்கும் முன், ஜெய் சிங்கின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

“அவனை விடு. அவனிடம் நான் பேசிக் கொள்கிறேன்” என சொல்லி அந்தக் காவலனை அங்கிருந்த அனுப்பினார் ஜெய் சிங்.

பரிச்சயமான குரல் கேட்டவுடன் கஷ்டப்பட்டு தன் கண்களை திறந்தவன், தனக்கு முன் இருந்த இருக்கையில் ஜெய் சிங் அமர்ந்திருப்பதைக் கண்டு, மிகவும் சிரமப்பட்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்.

“இன்று உணவருந்தினீர்களா?”

“காலை உணவை அருந்த அமர்ந்த பொழுது என் படையினர் என்னைக் கைவிட்டு ஓடிவிட்டதை அறிந்தேன். அப்பொழுது அங்கே விழுந்த பீரங்கி குண்டினால், என் உணவு மண்ணில் வீழ்ந்தது.”

“கிண்டல் தேவை இல்லை இளவரசே. உங்கள் தந்தையின் திட்டம் அறிந்து உங்களைப் போலவே நாங்களும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறோம்.”

“உங்களுக்கு எதுவும் புரியவில்லை. என் தந்தை எந்த திட்டமும் வகுக்க வில்லை. அவர் விரித்த வலையினில் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள்.”

“என்ன வலை?”

வலி அவனது உடலை ஊடுருவ பல்லைக் கடித்துக்கொண்டே ” உங்களை எனக்கு எதிராக திருப்புவது. அவரின் சதித்திட்டம் புரியாத முட்டாளாக இருக்கிறீர்கள் நீங்கள்” என கத்தினான்.

“உங்களுக்காக அவர் வெட்டி வைத்த குழியில், கண்ணை மூடிக்கொண்டு போய் விழுந்துவிட்டீர்கள் அரசே! ஆரம்பத்தில் இருந்தே அவருக்காக வேலை செய்த தஹவூர் கான், நம் முகாமில் இருந்து கிளம்பும் முன் என்னை சந்திக்க செய்து நாங்கள் இருவரும் சதி செய்வது போல் உங்களை நம்ப வைத்தார். அவன் சென்ற சிறிது நேரத்தில், அவரது ஓலையை உங்களிடம் சிக்க வைத்தார். அந்த கடிதத்தில் எனக்கு செய்தி சொல்லி இருந்தாலும் அது உங்களுக்கு அனுப்பப்பட்டதே. அதை படித்த நீங்கள் நான் உங்களுக்கு துரோகம் செய்ததாக நம்பினீர்கள். என்னிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக உங்கள் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டீர்கள். என்னுடன் இருந்த முகலாய வீரர்களும் என் தந்தையின் படையுடன் இணைந்துக் கொண்டனர். இப்பொழுது நம்மிடம் இருப்பது உங்களின் 6000 படை வீரர்களே!” என அவுரங்கசீப்பின் சதியை விளக்கினான்.

அக்பர் சொன்னதைக் கேட்ட ஜெய் சிங் நம்ப இயலாமல் அவனைப் பார்த்தார். அவன் சொன்னது சரியாக இருந்தாலும், அவுரங்கசீப்பின் கடிதம் தனக்கு வெட்டப்பட்ட குழி என்பதை அவரால் நம்ப இயலவில்லை. அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்தார்.

அன்பு மகன் அக்பருக்கு

நீ என்னையும் நம் சாம்ராஜ்யத்தையும் பெருமை கொள்ள செய்துவிட்டாய். என்னை பதவியில் இருந்து தூக்கி எரிவது போல் நடித்து அவர்கள் படையில் ஊடுருவி அவர்களை அஜ்மீரிலேயே இருக்க வைத்துவிட்டாய். இந்த சமயத்தில், நான் ஜோத்பூரை நோக்கி முன்னேறுவேன். இராஜபுதனம் முழுவதும் விரைவில் நமது வசமாகும்.

ஆலம்கீர்

“இந்த கடிதம் போலி என்று சொல்கிறீர்களா?”

“உங்கள் நகரங்களை எரிப்பதை எந்த அளவு எனது தந்தை நியாயப்படுத்துகிறாரோ அந்த அளவு போலியானது இது.இதையும் பாருங்கள்” என ஜானி அவனிடம் கொடுத்த கடிதத்தை அவரிடம் தந்தான்.

அதைப் படித்த ஜெய் சிங் “இதில் அரச முத்திரை இல்லையே?” என சந்தேகத்துடன் கேட்டார்.

அவர் சொன்னதை ஆமோதித்த அக்பர் ” இது உண்மையிலேயே எனது சகோதரி அனுப்பிய கடிதமா என்பதே எனக்கு சந்தேகமாய் உள்ளது. அதில் இருந்தவை உண்மையா என்பதை கண்டறிய அந்த சமயத்தில் எனக்கு அவகாசம் இருக்கவில்லை. ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, யாரோ ஒருவர் திட்டமிட்டு என்னை தவறாக வழி நடத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஜெபுனிஷாவின் கடிதங்கள் முத்திரை இடப்படாமல் வராது.”

“அரசே!” எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஜெய் சிங்கின் வார்த்தைகளில் முன்பு இல்லாத மரியாதை இப்பொழுது மீண்டும் வந்தது.

சில நிமிடங்களில் தன் நிலையை மாற்றிக் கொண்டவனை கண்டு வெறுப்படைந்தான் அக்பர். “நான் எழுந்திருக்க உதவுங்கள்” என ஜெய் சிங்கிடம் கூறினான். ஜெய் சிங் குனிந்து அவனை எழுப்பி சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தான்.

“அடுத்து என்ன செய்வதாக உள்ளீர்கள்?” என அக்பர் கேட்டான்.

“எங்களிடம் இருக்கும் குறைந்த அளவு படையைக் கொண்டு உங்கள் இருவரையும் காப்பாற்றுவதே எங்கள் வேலை. இன்னும் சிறிது காலம் நாம் ஜோத்பூரில்தான் இருக்க வேண்டும்.”

***

அடுத்த சில வாரங்கள் எதிர்பார்ப்பிலேயே கழிந்தன. அவுரங்கசீப்பின் படைகள் ஜோத்பூரை நெருங்கி விட்டது குறித்து இராஜபுதன தளபதிகளிடைய மறைமுக பேச்சுகள் உலவின. தன் செயலால் கோபம் கொண்டு தன்னை வெறுத்திருப்பரா அப்பா என அக்பர் தனிமையில் இருக்கும் தருணங்களில் நினைத்தான். சில நேரங்களில், தான் நேரில் சென்று மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிடக் கூடுமோ என்று கூட நினைத்தான். ஆனால், அடுத்த நிமிடமே அந்த எண்ணம் மறைந்துவிடும். சில நாட்கள் என்றாலும், மற்றவரை அவனை பேரரசராக நடத்தியது அவனுக்கு பிடித்திருந்தது. அதை மறக்க அவன் தயாராக இல்லை.

மழைக்காலம் துவங்கி விட்டதால், தில்லியில் இருந்து தூதுவர்கள் வருவது சிரமம் ஆகி விட, ஜெபுனிஷாவிடம் இருந்து எந்த ஒரு கடிதமும் வரவில்லை. எனவே,இராஜபுதன மன்னர்கள் அளித்த விருந்தை உண்டு அருகே இருந்த காடுகளில் வேட்டையாடி தன் பகற்பொழுதுகளை கழித்தான். இரவு நேரங்களை மது அருந்துவதிலும், அந்தப்புரம் பெண்களிடம் சுகம் துயிப்பதிலும் கழித்தான்.

இறுதியாக, ஒரு நாள் அவன் எதிர்பார்த்திருந்த கடிதம் ஜெபுனிஷாவிடம் இருந்து வைத்தது.

அன்புக்குரிய அக்பருக்கு,

நீ ஏன் அவரசப்பட்டு உன்னை பேரரசராக அறிவித்துக் கொண்டாய் என எனக்குப் புரியவில்லை. நீ அவசரப்பட்டு முன்கூட்டியே செய்த காரியத்தால், தன் திட்டங்களை மாற்றிக் கொள்ள அப்பாவிற்கு தகுந்த அவகாசம் கிடைத்தது.

இந்தக் கடிதம் உன்னிடம் கிடைக்குமானால் , நீ ஜோத்பூரில் இருப்பாய் என்று நான் எண்ணுகிறேன். ஆனால், அங்கே நீ அதிக நாட்கள் தங்க இயலாது. அங்கிருந்து தக்காணத்திற்கு தப்பி செல்ல வழி செய்து கொள். அங்கே, நம் தந்தையின் பரமஎதிரியான சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜி ஆண்டு வருகிறான். முகலாயர்களை எதிர்க்கும் எண்ணமும் ஆள்பலமும் கொண்ட ஒரே நபர் சம்பாஜி மட்டுமே. உன்னை விருந்தினராக ஆவண ஏற்றுக் கொள்ள நான் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்துவிட்டேன். நீ அங்கே மறைந்திருக்கும் தருணத்தில், தில்லியில் உனக்கு தேவையான ஆதரவை திரட்ட நான் ஏற்பாடு செய்கிறேன்.

ஜெபுனிஷா

“ஜெய்சிங்கை நான் பார்க்க விரும்புகிறேன் என சொல்!” என்று பணியாளரை அனுப்பினான். அந்தக் கடிதத்தை தன் முன்னால் இருந்த மேஜையில் வைத்தவன், தன் பால்யத்தை நினைவுக் கூர்ந்தான். அப்பொழுதிருந்தே அவனை காப்பது ஜெபுனிஷாவின் கடமையாக இருந்தது.

தன் தளபதிகள் பின் தொடர ராஜ் சிங்க் அவன் அறைக்கு வந்தார்.

“இறுதியாக, தில்லியில் இருந்து கடிதம் வந்துவிட்டது. நான் தக்காணம் செல்லவேண்டும். என் பாதுகாப்பிற்காக சில வீரர்களை என்னுடன் அனுப்புங்கள்” என்று ஜெபுனிஷாவின் திட்டத்தை கூறினான்.

“உங்களுடன் வீரர்களை அனுப்புவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தக்காணத்தில் என்ன இருக்கிறது?” என அவனுடைய திட்டம் புரியாமல் குழப்பத்துடன் ஜெய்சிங் கேட்டார்.

“சம்பாஜி!”

“தன் இறுதி வரை, முகலாயர்களின் கண்ணில் விரல் விட்டு ஆடிய சிவாஜியின் மகன் தானே?”

“ஆம். இப்பொழுது சம்பாஜியிடம் முகலாயர்களை விட பெரிய படை உள்ளது. நான் அங்கு சென்று சம்பாஜியிடம் உதவி கேட்கப்போகிறேன்.”

“உங்களுடன் வர வீரர்களை தயார் செய்கிறேன். நீங்கள் ஜோத்பூரை விட்டு நீங்குவதால், நாங்களும் ஜஸ்வந்த் சிங்கின் மகனான அஜித் சிங்கை இங்கிருந்து வேறு இடத்திற்கு கூட்டி செல்வதே நல்லது.” அவன் கூறியதற்கு அங்கிருந்த அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

“உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அப்படி செய்யுங்கள் அரசே!” எனக் கூறிய அக்பர், தன் கவசத்தை அணிந்து வாளை சொருகிக் கொண்டு கிளம்பத் தயாரானன்.

“நான் கிளம்புகிறேன். நீங்கள் அனைவரும் கூட இங்கிருந்து உடனடியாக கிளம்புங்கள். இல்லையேல், என் தந்தை இந்த நகரத்தை எரிக்கும் சமயத்தில் அந்த தீயினில் சிக்கிக் கொள்வீர்கள். ஆனால் முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான்.”

இதை சொல்லிவிட்டு, தன் உடைமைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான். ஜெபுனிஷா அனுப்பிய கடிதத்தை கூட எடுத்துக் கொள்ள மறந்துவிட்டான்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் ஜெய் சிங் மற்றும் அவனது தளபதிகளும் ஜோத்பூரை விட்டு கிளம்பினர்.

****

திட்டமிட்டப்படி தக்காணத்தை நோக்கி சென்றான் அக்பர். இராஜபுதன வீரர்கள் இரவு நேரத்தில், கூலித் தொழிலாளிகளாகவும், பணிப்பெண்களாகவும் வேடமிட்டு அங்கிருந்து அகன்றனர். ஜோத்பூர் நகரம் முழுவதும் கைவிடப்பட்டுவிட்டது என்பது தெரியக்கூடாது என்பதற்காக சிறிய படை ஒன்றை மட்டும் அங்கே நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால், முகலாயப்படை அங்கே நுழைந்தபொழுது அவர்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. மற்றுமொரு இராஜபுதன நகரம் எரித்து தரை மட்டமாக்கப்பட்டது. அந்த நகரத்து மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் செல்வம் களவாடப்பட்டது.

****

“அரசே! இந்தப் பையில் இருப்பவை இளவரசர் அக்பருடைய உடமைகள். இவை தீக்கு இரையாகும் முன் காப்பாற்றி விட்டேன்.” அந்த வீரன் காட்டிய பையில் நகைகளும், பல காகிதங்களும், துணிகளும் இருந்தன.

“அந்த துரோகியின் உடைமைகளை பார்க்க நான் விரும்பவில்லை. அதை நீ எரியட்டும் என விட்டிருக்க வேண்டும். அக்பரை நான் காண நேரிட்டால் அவனையும் உயிருடன் எரித்து விடுவேன்” என நடுங்கும் குரலில் கூறினான் அவுரங்கசீப்.

அவுரங்கசீப்பின் நம்பிக்கைக்கு உரியவனான சதுல்லா கான் குறுக்கிட்டு , அந்தப்புர பெண்களிடம் கொடுத்து அந்தப் பையில் என்ன இருக்கிறது என பார்க்க சொன்னான். அதுவே அவர்களின் பழக்கமாகவும் இருந்தது. முன்பு, இளவரசன் சுல்தான் புரட்சி செய்து எதிர்த்தபொழுதும், அவனுடைய உடமைகளை அந்தப்புர பெண்களே சரி பார்த்தனர். அந்தப்புர பெண்கள் மூலம் இதை செய்வதால் , அரச குடுமப இரகசியம் எதுவும் வெளியே செல்லாது அவர்களுக்குள்ளேயே தங்கிவிடும். தேவையற்ற வதந்திகள் பரவுவதையும் தடுக்கும்.

அந்தப்புரத்தில் யாரிடம் அக்பரின் பையை குடுப்பது என்ற கேள்வி எழுந்த பொழுது சதுல்லா கான் யோசிக்க துவங்கினான். பேரரசி ஜெபுனிஷாவிற்கே அவற்றை அனுப்பி விடலாமா என யோசித்தான். ஆனால், அது தில்லி சென்று சேரும் முன், அதை பிரித்து உள்ளிருப்பதை காவலர்கள் பார்க்க அதிகம் வாய்ப்புகள் இருந்ததால் அந்த யோசனையை புறக்கணித்தான். அப்பொழுதுதான், இளவரசர் ஆஸம் மற்றும் அவருடைய மனைவி ஜானியின் நினைவு வந்தது. இப்பொழுது, அக்பரும் இல்லாத காரணத்தால், அவுரங்கசீப்பிற்கு பிறகு ஆஸமே பேரரசர் ஆகக் கூடும். எனவே, அந்த காவலனிடம், அக்பரின் உடமைகளை ஜானியிடம் கொடுக்க சொன்னான்.

****

27. அம்பலமான திட்டம்

மக்ஃபியே உங்கள் கண்ணீரை எனக்கு கொடுத்துவிடுங்கள் அவை மழையாக பொழிந்து எரியும் என் இதயத்தை தணிக்கட்டும்
அதன் வலி நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும்
தீப்பிழம்பாக வெளிப்படுகிறது

1 டிசம்பர் 1681

அன்று மாலை, தனது கூடாரத்தில் அமர்ந்து அக்பரின் உடமைகளைத் தனித்தனியாக பிரித்துக் கொண்டிருந்தாள் ஜானி. அவற்றை என்ன செய்வது என்று ஏற்கனவே அவள் முடிவெடுத்து இருந்தாள். அவனிடமிருந்த நகைகள் அனைத்தையும் அந்த போர்க்களத்தில் அவளுக்கு விசுவாசமாக இருந்த நம்பகமான வேலைக்காரர்களுக்கு கொடுக்க இருந்தாள். அவனுடைய உடைகளை அவளின் அடிமைகளுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்தாள். வெறும் கோவணம் அணிந்து இருக்கும் அவளின் அடிமைகளுக்கு அக்பரின் உடைகள் ஆடம்பரமாய் இருக்கும். அவனுடைய மற்றப் பொருட்களை தூக்கி எறிவது அல்லது தில்லியில் இருக்கும் அவனது மனைவியிடம் சேர்த்துவிடுவது என தீர்மானித்தாள்.

அவனிடம் இருந்த நகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அதன் மதிப்பை கணக்கிட்டவள் அவளிடமோ அவள் கணவனிடமோ இருந்த நகைகளை விட அக்பரிடம் இருந்த நகைகளின் மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தாள். அவன் தன் பயிற்சியை முடித்துவிட்டு வந்தபொழுது அவுரங்கசீப் தந்த மாணிக்கமும், மரகதமும் பாதிக்கப்பட்ட தங்க காப்பு, அவனது இருபதாவது வயது நிறைவின் பொழுது பேரரசரால் தரப்பட்ட மாணிக்கங்கள் பாதிக்கப்பட்ட வெள்ளி குறுவாள், பெரிய பெரிய முத்துகள் கொண்டு கோர்க்கப்பட்ட முத்து மாலை என எதுவுமே அவர்களிடம் இருந்ததில்லை. இதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு சென்ற அக்பரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டாள்.

அதன் பின், அவனுடைய துணிகளை எடுத்து மடிக்கத் துவங்கிய தருணத்தில், உள்ளே எதோ காகிதம் தட்டுப்பட்டது. அந்த துணிகளை துழாவியா பொழுது அவளுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. ஜெபுனிஷா அக்பருக்கு அனுப்பிய அந்த கடிதத்தை படித்தவள், ஏற்கனவே தன்னிடம் இருந்த ஜெபுனிஷாவின் கடிதத்துடன் ஒப்பிட்டு அதன் உண்மைத்தன்மையை சோதித்துக் கொண்டாள்.

ஜானி, தன் இதயம் படபடவென துடிப்பதை உணர்ந்தாள். இந்தத் தருணத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என யோசிக்கத் துவங்கினாள். ஜெபுனிஷாவை சிக்க வைக்க இந்தக் கடிதம் போதுமா அல்லது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் பேரரசர் இந்தக் கடிதத்தை படித்து நம் மேல் கோபம் கொள்வாரா என பலவாறு யோசித்தாள்.

‘அக்பரின் துணிகளை மடிக்கும் பொழுது இந்தக் கடிதம் கிடைத்ததாக அவரிடம் ஒப்படைத்து விடுவோம். அவரே இந்த கடிதத்தை படித்து, அக்பரின் புரட்சிக்கு பின் இருப்பது ஜெபுனிஷா தான் என்பதை அறிந்து கொள்ளட்டும். இந்த விஷயத்தில் நான் ஒரு அப்பாவி’.

அவரிடம் என்ன சொல்ல வேண்டுமென்பதை பலமுறை தனக்குத்தானே பேசி பயிற்சி எடுத்துக் கொண்டாள். பின், நீண்ட பெருமூச்சு விட்டு தன்னை நிதானித்துக் கொண்ட பின், தன் மேல் சால்வை ஒன்றைப் போட்டுக் கொண்டு அவுரங்கசீப்பின் கூடாரத்தை நோக்கி சென்றாள்.

***

“அரசே! இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும். ஆனால், நான் கொண்டுவந்துள்ள செய்தி மிக மோசமானது” என்று அவுரங்கசீப்பிடம் கூறினாள்.

அந்த சமயத்தில் அவள் அங்கே வந்தது அவுரங்கசீப்பிற்கு பிடிக்கவில்லை. அக்பரை பிடிக்க இயலாத கோபத்தில் கண்ணில் படுவோர் எல்லோரையும் திட்டிக்கொண்டிருந்தான். ஆனால், மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்தைகளை கொண்டு ஜானி பேசிய விதம் அவனுள் அந்த செய்தி என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆவலைத் தூண்டியது. “அப்படி என்ன செய்தி கொண்டு வந்துள்ளாய்?” என கோபத்துடன் கேட்டான்.

காண்போரை கவர்ந்திழுக்கூடிய தன் கண்களால், வயதான பேரரசரை பார்த்தாள் ஜானி. வாழ்நாள் முழுவதும் போர்க்களங்களையும், இரத்த ஆற்றையும், நம்பிக்கைத் துரோகங்களையும் சந்தித்திருந்த அவுரங்கசீப்பின் உடல் தளர்ந்து போயிருந்தது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஜானி “இளவரசர் அக்பர் எங்கு சென்றுள்ளார் என எனக்குத் தெரியும்” என்று கூறினாள்.

அவுரங்கசீப்பின் அருகே நின்றுக் கொண்டிருந்த சதுல்லா கான் உடனே அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“சதுல்லா கான் அக்பரின் உடமைகளை பிரிக்கும் பணியை தந்திருந்தார். அப்பொழுது அக்பரின் உடைக்குள் இந்த கடிதம் இருந்தது. இதில் இருப்பவற்றை நான் சொல்வதை விட, பேரரசரே படிப்பதுதான் சரியாக இருக்கும்” எனக் கூறி அந்த கடிதத்தை நீட்டினாள்.

அங்கிருந்த பணியாள் ஒருவன், அவளிடம் இருந்து அந்தக் கடிதத்தை வாங்கி, அவுரங்கசீப்பிடம் கொடுத்தான். அப்பொழுதும் ஜானி மேல் நம்பிக்கையில்லாத அவுரங்கசீப் சந்தேகத்துடனேயே அந்தக் கடிதத்தை பிரித்து படிக்கத் துவங்கினான். அதை படிக்க படிக்க ஆச்சரியத்தில் கண்கள் விரிய, அந்தக் கண்களில் குரோதம் மின்னியது. அவனின் கட்டுக்கடங்காத கோபம் பெருமூச்சாய் வெளிவந்தது.

“நான் ஏமாற்றப்பட்டேன். என்னுடைய சொந்த இரத்தங்களால் நான் ஏமாற்றப்பட்டேன். நான் மிகவும் நேசித்த எனது இரண்டு பிள்ளைகள் என்னை கைவிட்டு என்னை வீழ்த்த நினைக்கும் எதிரிகளுடன் இணைந்து விட்டனர்!”

அப்பொழுது அவுரங்கசீப்பிற்கு இருந்த கோபத்தில், கண்ணில் படும் யாரையும் கொள்ளும் அபாயம் இருந்தது. அவுரங்கசீப்பின் கோபத்தை குறைக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே “அரசே! அந்தக் கடிதத்தில் அப்படி என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் சதுல்லா கான்.

“துரோகி அக்பர், நமது எதிரி சம்பாஜியுடன் இருக்கிறான். அக்பரின் புரட்சியும் ஜோத்பூரில் இருந்து அவன் தப்பி செல்ல வழியும் வகுத்தது நான் மிகவும் நேசித்து அன்பு செலுத்திய என் மகள், ஜெபுனிஷாதான்.”

இதைக் கேட்ட சதுல்லா கான் பீதியில் உறைந்தான்.

ஜானி தன் தலையை குனிந்து கொண்டாள். யாரையும் அந்தக் கணம் பார்க்க விரும்பாத அவுரங்கசீப், அவர்களிடம் இருந்து திரும்பி நின்று யோசிக்கத் துவங்கினான். பின் சதுல்லா கானிடம் “நான் உடனடியாக தில்லி திரும்புவதாக எனது மகளுக்கு செய்தி அனுப்பு. அவளை அரச அவையில் சந்தித்து படையெடுப்பை பற்றி விவாதிக்க வேண்டும் என சொல். இந்தக் கடிதத்தை பற்றியோ, அல்லது எனக்கு எதிரான புரட்சியைப் பற்றி நான் அறிந்து கொண்டே என்றோ ஒரு வார்த்தை வெளியே யாருக்கும் தெரியக் கூடாது. புரிந்ததா?” என்றான்.

“உங்கள் விருப்பம் போல் அரசே!”

ஜானி மௌனமாய் தலையசைத்தாள் .

“இருவரும் வெளியேறுங்கள். எனக்கு இப்பொழுது தனிமை வேண்டும்.”

***

28. இறுதிக் கூட்டம்

நான் மகிழ்ச்சியைத் தேடினான் ஆனால் முடிவைக் காணவில்லை
நீட்டிய வேற்று கரங்களால் என் நபர் எவரையும் என்னால் வாழ்த்த இயலாது

10 ஜனவரி 1682

மக்ஃபியின் இறுதிக் கூட்டத்திற்கு ஜெபுனிஷா அழைப்பு விடுத்திருந்தாள். வழக்கமாய் அந்தக் கூட்டத்திற்கு வரும் மவ்லானா அப்துல் காதர் பெடில், கலிம் கஷானி, சா’ப்
தப்ரிஸி, கானி காஷ்மீரி போன்ற கவிஞர்களும், ஜெபுனிஷாவின் சகோதரிகளும் வந்திருந்தனர். மெல்லிய இன்னிசை பின்னணியில் இசைக்கப்பட, மது பறிமாறப்பட்டது.

தன்னுடைய இருக்கையில் சாய்ந்து கொண்ட ஜெபுனிஷா யார் முதலில் கவிதை சொல்லப் போகிறீர்கள் எனக் கேட்க, வழக்கம் போல் அனைவரும் மௌனம் காத்தனர்.

அக்பர், தக்காணத்திற்கு தப்பி சென்ற செய்தியும், அவுரங்கசீப் அவனை துரத்தி செல்லாமல் தில்லிக்கு திரும்ப இருக்கும் செய்தியும், தலைநகருக்கு வந்திருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது எப்படி ஜெபுனிஷாவால் அமைதியாக இருக்கு முடிகிறது என மக்ஃபி குழுவினர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர்.

“நீங்கள் யாரும் கவிதை சொல்ல மறுப்பதால், நானே துவங்குகிறேன்” என சொன்னாள் ஜெபுனிஷா.

நான் மலர் அல்ல நைட்டிங்கேலும் அல்ல
எனவே துக்கத்துடன் தோட்டத்தில் இருந்து நான் வெளியேறுகிறேன்
தென்றலே, அவளுடைய தோட்டதிற்கு திரும்பும்
வழியை கண்டறியுங்கள்
என்னுடய காதலனுக்கு என் அன்பை தெரிவியுங்கள்
நாடு கடத்தப்பட்டு உங்களிடம் இருந்து செல்லுகிறேன்
என்னுடைய பிரயாணத்தில் புல்லைப் போலவும்
நாணலைப் போலவும் வளைந்து குலுங்கி பிரயாணிக்கிறேன்
இந்தக் கடினமான பாதையில் நான் மேற்கொண்ட பிரயாணம் இது
உங்கள் நலனுக்காக விட்டு செல்கிறேன்
புரிந்துகொண்ட ஆன்மாவின் முன் அமைதியாக இருங்கள்
பாலைவன மணலில் தன் கதையை அவன் கற்றுக் கொண்டான்
மற்றவற்றை நீங்கள் கூற வேண்டாம்
மற்றவற்றை கூறி அவன் மார்பில் விஷ அம்புகளால்
தைக்க வேண்டாம்

“இந்த இரவை நன்கு அனுபவியுங்கள். இந்த அறையில் உங்கள் வார்த்தைகளை உள்வாங்கி கொண்டு பல நூற்றாண்டுகள் எதிரொலிக்கட்டும். நீங்களும் , நானும் மண்ணோடு மண்ணாவோம். ஆனால், நாம் எழுதும் வார்த்தைகள் பல நூற்றாண்டுகள் வாழும்.”

அந்த அறையில் இருந்தவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இரவோடு இரவாக தில்லியில் இருந்து கிளம்பி அக்பர் இருக்கும் இடத்திற்கு செல்லப் போகிறாளோ? ஜூபைதாதும், பத்ருனிஷாவும் கண்களில் கண்ணீருடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கலிம் கஷானி “என்னை அனுமதித்தால் நான் சில வரிகளை சொல்ல விரும்புகிறேன் ” என்றார். ஜெபுனிஷா மெல்ல தலை அசைத்தாள்.

சிரமமான காரியங்களில் ஈடுபடுவோர் அந்த சிரமங்களில் இருந்து விடுபடுகிறார்கள்
குமிழிகளால் கட்டப்பட்ட வீட்டை அலை எங்ஙனம் அழிக்கும்

அன்று கொடுக்கப்பட்டிருந்த தலைப்பான விடுதலையை ஒட்டி மற்றவர்கள் தங்கள் வரிகளை படித்தனர்.

அலையும் நுரையும் கடலின் ஆழத்தைக் காண இயலாது
யதார்த்த அறிவிற்காக இந்த உலகம் நிம்மதியற்று சுற்றுகிறது
அதற்கான தகுதி இல்லாமல்

“காதர் பெடில், உங்களிடையே வரிகள் சிறந்தவை. அவை உங்களையும் என்னையும் தாண்டி வாழும்” என்றாள் ஜெபுனிஷா.

அதற்கு பின் பல்வேறு முகலாய உணவுகளால் நிரம்பிய அறுசுவை விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது. விருந்து முடிந்தவுடன், இறுதிக் கூட்டம் என்பதால் ஒருவருக்கொருவர் விடைக் கூறிக்கொண்டனர். சிலர் அழுக, சிலர் புன்னகைத்தனர். ஆனால் ஜெபுனிஷாவோ முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாது அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் விடைபெற்றப் பின் ஜெபுனிஷாவும் அவளது சகோதரிகளும் மட்டும் அங்கிருந்தனர்.

“உன்னை அடுத்த பேரரசராக அறிவிக்கப்போகிறார்களா ஜெபுனிஷா? இன்றிரவு அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஆனால் நீயோ மிக அமைதியாக இருந்தாய்” என அவளிடம் வினவினாள் ஜூபைதாத்.

“என்னுடைய உணர்வுகள் எல்லாம் கவிதையில் மட்டுமே” என புன்னகையுடன் கூறியவள், பின் அங்கே வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு “இன்றிரவு என்னுடைய அறைக்கு வாருங்கள்” என்று கூறினாள்.

***

ஜெபுனிஷா கூறியவாறு அன்றிரவு அவள் அறைக்கு சகோதாரிகள் அனைவரும் சென்றனர். அன்று குளிர் காற்றின் வேகம் அதிகமாய் இருந்ததால் ஜூபைதாத் தன் கைகளை தன் உடலின் குறுக்கே வைத்து குளிரை தணிக்க முயன்றாள்.

“எங்களை போல ஏன் சால்வையை எடுத்து வரவில்லை?” என ஜீனத் கேக்க,

“இவ்வளவு நேரம் நாம் காத்திருப்போம் என நான் நினைக்கவில்லை” என ஜூபைதாத் கூறினாள்.

அப்பொழுது ஜெபுனிஷாவின் அறையில் இருந்து வெளியே வந்த பணிப்பெண் “இளவரசி ! பேரரசி இங்கிருந்து சென்றுவிட்டார்” எனக் கூறினாள்.

“சென்று விட்டார்களா? என்ன உளறுகிறாய்?”

“அவர்களுடைய அறையில் அவர்கள் இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதம் கொடுத்திருக்கிறார்கள்” என ஜெபுனிஷாவின் கடிதத்தை அவர்களிடம் கொடுத்தாள்.

அவளிடம் இருந்து கடிதத்தை வாங்கிப் படித்தவர்களின் முகம் பலவித உணர்வுகளின் கலவையாய் மாறியது. ஜூபைதாதின் முகம் அதிர்ச்சியில் உறைய, மற்ற சகோதரிகளின் முகம் அவர்களின் கண்ணீரால் நனைந்திருந்தது.

“உனக்கான கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள்?” என மிஹிர் ஜூபைதாதை கேட்டாள்.

கடிதம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத ஜூபைதாத்,கடிதத்தில் எழுதி இருந்ததை சொன்னாள். “வாழ்நாள் முழுவதுமான நட்புக்கு நன்றி சொல்லி இருந்தாள். சிஃப்ருடன் இணைந்து வாழுமாறும், ஒரு நாளும் அவன் என்னை அடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறாள். அவளுடைய நகைகளில் நான்கில் ஒரு பங்கும், அவளுக்கு மிகவும் பிடித்த பதக்கத்தையும் எனக்கு கொடுத்திருக்கிறாள்.”

“உனக்கு என்ன எழுதி இருக்கிறாள் பத்ருனிஷா?”

“கிட்டத்தட்ட உனக்கு எழுதி இருப்பதையேதான் எனக்கும் எழுதி இருக்கிறாள்.”

“நன்றி கூறுகிறாளாம் நன்றி. இவளிடம் இப்பொழுது நன்றியை யார் கேட்டார்கள்? அவளுடைய நகைகளில் நான்கில் ஒரு பங்கை கொடுத்தவள் வாழ்நாள் முழுவதும் நான் கவிதை எழுத வேண்டுமென்றும், என் கணவன் என்னை அடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் எழுதி இருக்கிறாள். அவள் இதுவரை எழுதிய கவிதைகளை பாதுகாத்து வர சொல்லி இருக்கிறாள்” என பாதி கோபமும், துக்கமும் கலந்த குரலில் தனக்கு எழுதப்பட்டதை மிஹிருன்னிஷா கூறினாள்.

அதுவரை அடைத்துவைத்திருந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓட அழுதுகொண்டே ஜெபுனிஷாவின் அறைக்குள் சென்றார்கள். அங்கே, அவளுடைய நகைகள் நான்கு பங்காக பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவளுடைய மற்ற உடைமைகள் எதுவும் அங்கே இல்லாமல் அறை காலியாக இருந்தது.

“ஜூபைதாத், ஜெபுனிஷா இங்கிருந்து சென்றுவிட்டதால், அவளுடைய செயல்களுக்கு தந்தை நம்மை குற்றம்சாட்டுவாரா?” என்று பயந்து கொண்டே மிஹிருன்னிஷா கேட்டாள்.

“எனக்கு தெரியாது. அப்படியே நடந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இதுவரை பயந்து பயந்து வாழ்ந்தது போதும். அவளுடைய செயல்களுக்கு என்னைப் பொறுப்பாக்கினால் அது எனக்கு பெருமையையே தரும்.”

“ஆனால், கவலைபபடாதீர்கள். ஜெபுனிஷா எப்பொழுதும் நம் மீது பழி வர அனுமதிக்க மாட்டாள். அவள் ஏதோ ஒரு திட்டத்தின் படி செயல்படுகிறாள். அவளிடம் எப்பொழுதுமே ஒரு மாற்றுத் திட்டம் இருந்துகொண்டே இருக்கும்” என அவர்களுக்கு தைரியம் சொன்னார்.

***

அன்று அரச சபை கூடிய பொழுது, சபை முழுவதும் எதிர்பார்ப்புடன் கூடிய அமைதி நிலவியது. தனது மயில் சிம்மாசனத்தில் அவுரங்கசீப் அமர்ந்திருக்க, ஒரு பக்கம் பிரபுக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். இராஜபுதன மன்னர்களோ தளபதிகளோ அந்த அவையில் காணப்படவில்லை. வழக்கம் போல், அந்தப்புர பெண்கள் திரைக்கு பின் நின்று அவையில் நடக்கப்போவதை எண்ணி பயந்து கொண்டிருந்தனர்.

அன்று அவையில் முக்கியமான நிகழ்வொன்று நடக்கப் போகிறது என முல்லாக்கள் யூகித்திருந்தனர். அரசருக்கு எதிராக புரட்சி செய்தது யாரென்பது அரசருக்கு தெரிந்து விட்டது என்றும் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் அதை செய்தார் என்றும் வதந்திகள் ஏற்கனவே பரவத் துவங்கி இருந்தது. அதனால், இளவரசிகளில் ஒருவர் கைது செய்யப்படலாம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று முல்லாக்கள் யோசித்தாலும் எந்த இளவரசி இதற்கு காரணம் என யாருக்கும் தெரியவில்லை.

“பேரரசி ஜெபுனிஷாவை , அரசர் முன் வர அழைக்கிறோம்” என காவலாளி அறிவித்தான்.

அதைத் தொடர்ந்து அவையில் கனத்த மௌனம் நிலவியது.

திரைக்குப் பின் இருந்த சகோதரிகளின் முகத்தில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது. அப்பொழுது அவர்கள் என்ன செய்யவேண்டும் என புரியாமல் நின்றனர். ஜெபுனிஷா, அவளுடைய உடைமைகளை தங்களுக்கு தந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் எனக் கூறினால் அவள் மேல் இருக்கும் கோபம் தங்கள் மேல் திரும்புமோ என்ற அச்சத்தில் உறைந்து போய் நின்றனர்.

“பேரரசி ஜெபுனிஷாவை , அரசர் முன் வர அழைக்கிறோம்” என காவலாளி மீண்டும் அறிவித்தான்.

அவை அமைதியாய் இருக்க ஜெபுனிஷா எங்கே சென்றிருப்பாள் என தங்களுக்குள் பேசிக் கொண்டனர் சிலர்.

அவுரங்கசீப்பின் கோபம் அதிகமாகிக் கொண்டே சென்றது. இதுவரை அவைக்கு வர பேரரசரின் கட்டளையை யாரும் மீறியதில்லை. என்ன நடக்கப்போகிறது என அவளுக்கு யாரேனும் முன் கூட்டியே தகவல் கொடுத்துவிட்டார்களா என யோசித்தான். பின் அந்தப்புர பெண்கள் இருந்த திரையைப் பார்த்து மீதமிருந்த தன் மகள்களை தன் முன் வருமாறு கட்டளையிட்டான். அவனுடைய குரல் கடுமையாக இடி முழக்கம் போல் இருந்தது.

சகோதரிகள் நால்வரும், அழுது வீங்கிய முகத்துடனும், பயத்துடனும் , திரையின் பின் இருந்து வந்து அவுரங்கசீப்பின் முன் நின்றனர்.

“உங்கள் சகோதரி எங்கே?”

தலை குனிந்து கீழே தரையைப் பார்த்துக் கொண்டே தங்களுக்கு தெரியாது என சொல்லும் விதமாய் மறுப்பாக தலையை ஆட்டினர்.

“நான் பேசும்பொழுது என்னை மட்டுமே பார்க்கவேண்டும்.”

தங்கள் தலையை நிமிர்த்தி அவுரகன்சீப்பின் முகத்தை பயம் நிரம்பிய கண்களால் பார்த்தனர்.

“உங்களுக்கு பதில் தெரியும். உங்கள் முகமும். அமைதியும் உங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. அவள் எங்கே என சொல்லுங்கள் இல்லையேல் உங்களை சிரச்சேதம் செய்ய உத்தரவிடுவேன்.”

“பேரரசே! நேற்று இரவு உணவை ஒன்றாக உண்டோம். அதன் பிறகு ஜெபுனிஷா அவளுடைய உடமைகளில் சிலவற்றை எங்களுக்கு தந்துவிட்டு இங்கிருந்து சென்றுவிட்டாள் என அறிந்தோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது” என ஜூபைதாத் நடந்ததைக் கூறினாள்.

“நீ பொய் சொல்கிறாய்.”

“அரசே! அவள் எங்கே எப்பொழுது சென்றால் என எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரியாமல் அவளிடம் பல இரகசியங்கள் இருந்தன.”

“ஆனால், அவள் துரோகி அக்பருடன் இணைந்து திட்டமிட்டாள் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?”

அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் நால்வரும் உறைந்தனர். மக்ஃபியில் முடிவெடுத்தப்படி அனைத்தையும் மறைத்து பொய் சொல்வதா அல்லது உண்மையைக் கூறி தந்தையின் கோபத்திற்கு ஆளாவதா என முடிவெடுக்க இயலாமல் நின்றுக் கொண்டிருந்தனர்.

மிஹிருன்னிஷா, மற்றவர்களிடம் இருந்து விலகி முன்னே சென்றாள்.”அரசே! எங்களுக்கு எதுவும் தெரியாது! இளவரசர் அக்பருக்கு அவள் உதவி செய்கிறாள் என்பதை மிக சமீபத்தில்தான் அறிந்தோம். நாங்கள அவளைத் தடுக்க முயற்சி செய்தோம். ஆனால் எங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் எங்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது” என்று பழியை ஜெபுனிஷாவின் மீது போட்டாள்.

மற்ற மூவரும் , கண்களில் கோபமும் வெறுப்பும் மிஹிருன்னிஷாவை முறைத்தனர்.

ஆனால் மிஹிருன்னிஷாவோ அவர்களை சட்டை செய்யவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் ஜெபுனிஷா தன் மீது நம்பிக்கையை உடைத்து தனக்கு எதுவும் தெரியாது என அரசரை நம்பவைப்பதுதான் ஒரே வழி என முடிவு செய்தாள்.

“உங்களுக்கு கடிதம் அனுப்ப எண்ணினோம். ஆனால், அவளுடைய ஒற்றர்கள் எங்கும் நிறைந்திருந்தனர், உங்கள் போர் முகாமில் கூட. நீங்கள் இல்லாத நேரத்தில் அவளின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை.”

மற்ற மூவரும் அழுவதை நிறுத்தி மிஹிருன்னிஷாவின் துரோகத்தால் குரோதம் பொங்கும் கண்களுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு நடப்பவற்றை அவுரங்கசீப் தனது கூறிய விழிகளால் மௌனமாய் பார்த்துக்கொண்டிருந்தான். மிஹிருன்னிஷா கெஞ்சுவதையும், அவளை மற்ற மூன்று பெரும் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தவனின் மனதில் இத்தனை வருடங்களாய் அவன் மனதில் தோன்றாத ஒரு உணர்ச்சி பொங்கிப் பெருகத் துவங்கியது. சோகம் என்பதையே அவன் மறந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. இப்பொழுது தன் மகள்களே குற்றவாளிகளை நிற்பதைப் பார்த்தவுடன் அவன் மனம் சோகத்தில் தடுமாறியது.

“மிஹிருன்னிஷா, ஜெபுனிஷா பிடிபடும் சமயத்தில் அவளுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?”

“அரசே…” மிஹிருன்னிஷா வார்த்தைகள் வராமல் தடுமாறினாள். தன் சகோதரிகள் தனக்கு உதவி புரிவார்களா என அவர்களைப் பார்த்தபொழுது, அவர்களின் கண்களில் வெறுப்பே மின்னியது. பின், தன் தந்தையைப் பார்த்தவள் “எனக்குத் தெரியவில்லை” என்றாள்.

“உனக்குத் தெரியும் மிஹிர். உனக்குள் ஒலிக்கும் குரல் கூறுவதை கேள். உன் வாழ்நாள் முழுவதும் இந்த அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளாய். இங்கே வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை பார்த்துள்ளாய். உன் சகோதரியின் செயல்களுக்கு சரியான தண்டனையைக் கூறு.” ஒருவருக்கு எதிராக இன்னொரு சகோதரியை நிறுத்தியதை எண்ணி தனக்குள் மகிழ்ந்தான் அவுரங்கசீப்.”இல்லை, அவளுக்கு நான் கருணை காட்டலாமா என்பதையும் சொல்.”

அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு பயத்தில் பதிலளிக்காமல் தன் தலையைக் குனிந்து கொண்டாள். தன் தந்தை தன்னை கிண்டல் செய்கிறார் என்பது அவளுக்கு புரிந்தது.

“பல வருடங்களுக்கு முன்பு தாராவின் தலையைத் துண்டித்தது போல் இவளது தலையையும் துண்டிக்க உத்தரவிடவா? துண்டிக்கப்பட்ட ஜெபுனிஷாவின் தலையை மக்ஃபியின் அடுத்த கூட்டத்திற்கு பரிசாக அளிக்கலாம்.”

அவன் மக்ஃபி பற்றி கூறியதைக் கேட்டதும் நான்கு இளவரசிகளும் மேலும் பயந்தனர். அவனுக்கு எப்படி மக்ஃபி பற்றி தெரியும்? மக்ஃபி பற்றி தெரியும் என்றால், அவர்கள் எழுதிய மறைமுக குறிப்புகள் அடங்கிய கவிதைகளைப் பற்றியும் தெரியுமா ? அந்த கூட்டங்களில் பங்கேற்ற மற்ற கவிஞர்கள், இளவரசன் முவாஸம், அக்பர் மற்றும் அகில் கானைப் பற்றியும் அறிந்திருப்பாரா?

“ஜூபைதாத், மற்ற அனைவரையும் விட நீதான் ஜெபுனிஷாவிற்கு மிக நெருக்கமானவள். நான் என்ன செய்வது என நீயே சொல். அவளுக்கு நான் கருணைக் காட்டவா அல்லது ஆயுள் தண்டனை தரலாமா அல்லது அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிடவா?”

ஜூபைதாத் எச்சிலை முழுங்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். பின், ஓரடி முன்னே வந்து “அரசே! நீங்கள்…”

“அவளை சிரச்சேதம் செய்ய வேண்டும்” என கம்பீரமான பெண் குரல் ஒன்று அந்த அவையை ஊடுருவி ஒலித்தது.

அவையில் இருந்த அனைவரும் அந்தக் குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தனர். எந்தவித அலங்காரமும் இன்றி, ஒரு வெள்ளை உடையை உடுத்திக் கொண்டு கழுத்தில் ஒரே ஒரே முத்துமாலை அணிந்து நின்றுக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. தைரியத்துடன் எதற்கும் அஞ்சாமல் அங்கே நின்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்து அந்த அவையினர் வியந்தனர். அவுரங்கசீப்பும், அவளின் திடீர் வருகையினால் பேச்சிழந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவையினுள் வந்து அவனை வணங்கினாள். “அரசே! நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. ஒரு இரகசிய கவிதைக் குழு இருந்ததும், நானும் என் சகோதரிகளும், பல கவிஞர்களும், கற்றறிந்த அறிஞர்கள் பலரும் அந்தக் குழுவில் இருந்ததும் உண்மை. நாங்கள் பல வருடங்களாக இரகசியமாக சந்தித்து கலைகளைக் கொண்டாடினோம். ஆனால், நாங்கள் அரசியலை பற்றி பேசியதில்லை. மக்ஃபி முழுக்க முழுக்க கவிதைகளைப் பற்றியதே, அதில் அரசியலுக்கு இடமில்லை. பல வருடங்களுக்கு முன்பே உங்களை அகற்றி அந்த இடத்தில் என் தம்பி அக்பரை அமரவைக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். இந்த விஷயத்தில் என்னைத் தவிர வேறு யாரையும் நான் நம்ப முடியாது என்றக் காரணத்தால் யாரையும் நான் கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை.” இதை சொன்னப் பின் மிஹிருன்னிஷாவை அவள் பார்க்க, அவளோ அழுதுக் கொண்டே தனது பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“நானும் இளவரசன் அக்பரும் மட்டுமே நீங்கள் தேடும் புரட்சியாளர்கள். என்னுடைய அறையில் இருந்த பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டேன். உங்கள் கைதியாக மாற நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் என்ன தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

தன் முன் சிறிதும் பயமின்றி நின்றுக் கொண்டிருந்த ஜெபுனிஷாவைப் பார்த்தான் அவுரங்கசீப். அவைக்கு வந்து, தன் முன்னே நின்று தன் செயல்கள் அனைத்தையும் ஒத்துக்கொள்வாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் அவனுடைய எதிரிகள் யாரும் அவனை முன் நின்று தாங்கள் செய்தவற்றை ஒத்துக்கொண்டதில்லை. துணிச்சலுடன் அவன் முன் நின்றுக் கொண்டிருந்த தன் பிரியத்துக்குரிய மகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அரசே! இறுதியாக இந்த அரச முத்திரையையும் பெற்றுக் கொள்ளுங்கள். எனக்கு இனி தேவைப்படாது. இதை மிஹிருன்னிஷாவிற்கு தரவும். அவள் நீங்கள் சொல்வதை எப்பொழுதும் கேப்பாள்.”

சதுல்லா கான்தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவளிடமிருந்து அந்த அரச முத்திரையைப் பெற்றுக் கொண்டான்.

இவ்வளவு நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த அவுரங்கசீப் நிமிர்ந்து பார்த்த பொழுது அவன் கண்கள் ஈரத்தில் மின்னின. ஆனால், யாரும், எதுவும் அரியணையை விட உயர்ந்ததில்லை.

“பேரரசரை பதவியில் இருந்து அகற்ற முயன்ற குற்றத்திற்காக ஜெபுனிஷா தேச துரோகத்தில் ஈடுபட்டாள் என்பது நிரூபணமானதால் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்ற ஆயுள் தண்டனையை அளிக்கிறேன்!”

தண்டனையை அறிவித்தவன், அங்கிருந்த காவலாளிகளைப் பார்த்து அவனுக்கு பிரியமான மகளைக் கைது செய்ய சைகை செய்தான்.

அந்தப்புர பெண்களும், ஜெபுனிஷாவிற்கு பிரியமான சகோதரிகளும் துக்கம் தாள இயலாமல் அழுகத் துவங்கினர். அந்த அவையில் வீற்றிருந்த அறிஞர்கள் சிலரும், தங்களில் துளிர்த்த கண்ணீரை பிறர் அறியாவண்ணம் துடைத்துக் கொண்டனர். ஆனால் ஜெபுனிஷாவோ சிறிதும் துக்கமோ, பயமோ இல்லாமல், நிமிர்ந்த தலையுடன் சிறையை நோக்கி சென்றாள்.

***

29. சலீம்கர்க்

மக்ஃபியின் ஏக்கங்களைப் போல உன் நாடு கடத்தலும் நீண்டது
காத்திருப்பு நீள , உன் இதயம் எரிவதும் நீளும்

6 ஜூன் 1684

தன் ஆயுள்தண்டனையை சலீம்கர்க் கோட்டையில் அனுபவிக்க ஜெபுனிஷா பணிக்கப்பட்டாள். முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வருவதற்கு முன்பு இந்திய மன்னர்களின் அரண்மனையாக இருந்தது அது. முகலாய மன்னர்கள் இங்கு தங்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பல புதிய அரண்மனைகளை தங்களுக்காக கட்டிக்கொண்ட பின்னர் சலீம்கர்க் அரண்மனை கவனிப்பார் இன்றி பாழடைந்து போனது. அவுரங்கசீப் பதவி ஏற்றபின் அதை சிறைச்சாலையாக மாற்றி இருந்தான். இதே சலீம்கர்க் சிறையில் தான், தாராவும் தலை துண்டிக்கப்படும் வரை சிறைப்பட்டிருந்தான். ஆனால், ஜெபுனிஷாவின் நிலை அதில் இருந்து மாறுபட்டது. அவளுக்கு ஆயுள்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

அவள் இருந்த சிறை அறையானது ஒரு வீடு போல் இருந்தது. அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கே இருந்தன. அவளுக்கென்று தனிப்பட்ட பணியாளர்களும் இருந்தனர். ஆனால், அவளுடைய சாம்ராஜ்யம் அந்த அறைக்குள் மட்டுமே. அந்த அறையில் இருந்து வெளியே செல்ல அவளுக்கு அனுமதி இல்லை. அதே போல், அவளுக்கு வரும் கடிதங்களும், அவள் அனுப்பும் கடிதங்களும் சிறை அதிகாரிகளால் படிக்கப்பட்ட அனுப்பப்பட்டன. எனவே அக்பருக்கு அவள் எந்த கடிதமும் அனுப்பவில்லை.

ஒரு நாள், தன் இருக்கையில் அமர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கையில், “ஜெபுனிஷா!!” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

தன் கையில் இருந்த மயில் இறகை கீழேப் போட்டவள் “ஜூபைதாத்” என அழைத்துக் கொண்டே அந்த அறையின் கதவை நோக்கி சென்றாள்.

“எப்படி இருக்கிறாய் ஜெபோ?” என சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

“நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“உன்னை சந்திக்க பல மாதங்கள் முன்பே அப்பாவிடம் அனுமதி வேண்டினோம். ஆனால், உனக்குத்தான் அவரை பற்றி தெரியுமே. நேற்றுதான் எங்களுக்கு அனுமதி கிடைத்தது” என ஜீனத் பதில் அளித்தாள்.

“மிஹிருன்னிஷா எங்கே ? அவள் ஏன் வரவில்லை?”

“அவள் இப்பொழுது பேரரசி ஆகி விட்டாள். அவளையும் அழைத்தோம். ஆனால், உன்னை சந்திக்க வெட்கப் பட்டுக்கொண்டு வர மறுத்துவிட்டாள்” என ஜூபைதாத் கூறினாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு “ஜெபுனிஷா, நாம் மீண்டும் சந்திக்க இயலுமா என எனக்குத் தெரியவில்லை. எனவே உன்னிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி ஒன்றை கேட்டுவிடுகிறேன். நம் தந்தைக்கு நம் இரகசியம் தெரியும் என்பதை நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என பலநாளாய் அவள் மனதில் இருந்ததை ஜூபைதாத் கேட்டாள்.

“நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எனக்கு எல்லா இடத்திலும் ஒற்றர்கள் இருக்கிறார்கள் என. எனக்கு எல்லா இடத்திலும் ஒற்றர்கள் இருந்தனர். இப்பொழுது இந்த அறையே என் உலகம் என்றாகி விட்டது.”

“நீ நாள் முழுக்க என்ன செய்கிறாய்?”

தனிமையும் கவனிப்பும் இல்லாமல் அவளின் விழிகளின் கீழே கருவளையம் உருவாகி இருந்தது. “நாள் முழுக்க எழுதுகிறேன்.”

“உன்னை எழுத அனுமதிக்கிறார்களா?”

“ஆம். நாம் அனைவரும் மறைந்து போன பின்பும் இவை இருக்கும். பல வருடங்கள் கழித்து அதைப் படிப்பவர்கள், அனைத்து விதமான கலைகளும் தடை செய்யப்பட்டிருந்த பொழுதும், ஒரு சிலர் அவர்களுடைய உயிரை பணயம் வைத்து கவிதைகள் எழுதி உள்ளனர் அனா அறிந்து கொள்வார்கள்.”

சிறைக்கம்பிகளின் வழியே தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு பல நிமிடங்கள் அமைதியாய் நின்றுக் கொண்டிருந்தனர். அமைதியாய் இருந்த ஜூபைதாதின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

“இப்பொழுது எதற்கு அழுகிறாய் நீ?”

“நாம் தோற்றிருக்கக் கூடாது ஜெபுனிஷா. நம் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்ட அனைத்தும் வீணாய் போனது.”

“இல்லை. எதுவும் வீணாக போகவில்லை. நாம் போராடினோம். நம் திட்டத்தில் வெற்றி பெற்றோம். நம் தந்தை அவருடைய விருப்பங்களை நம் மேல் திணித்த பொழுதும், அவரால் நம்மை மாற்ற இயலவில்லை. அவருடைய வீட்டை இசை மற்றும் நமது சிரிப்பால் நிறைத்தோம். அவருடைய வீட்டிலேயே கவிதைகள் எழுதினோம். எந்த படையாலும் நமமை தடுக்க இயலாது என்பதைக் காட்டினோம். ஒருவரை சிறை செய்தால், மற்றொருவர் அவனுக்கெதிராய் முளைப்பார் என நிரூபித்தோம். நம் இதயங்களை அவரால் ஒரு பொழுதும் வெல்ல இயலாது என்பது இப்பொழுது அவருக்கு புரியும். தன் வாழ்நாளின் இறுதியில் தனியாகத்தான் இறப்பார்.”

“அக்பரின் நிலைமை?”

“தன் பாதையை அவனேதான் வகுக்க வேண்டும். நான் எப்பொழுதும் அவனுக்கு வழிகாட்ட இயலாது. “

“மஹிருன்னிஷாவை நடந்தவற்றை எண்ணி வருத்தப்பட வேண்டாம் என சொல். அவள் மேல் எனக்கு கோபம் எதுவும் இல்லை. நாம் ஒன்றாகக் கழித்த இன்பமான நாட்களின் நினைவுகள் மட்டுமே என் மனதில் உள்ளது என கூறு.”

“அப்பா உங்களை சந்திக்க வந்தாரா அல்லது கடிதம் அனுப்பினாரா?”

“என்னை சந்திக்கவோ அல்லது எனக்கு கடிதம் அனுப்பவோ மறுத்து விட்டார். நானும் எந்தவித முயற்சியும் எடுக்க வில்லை. நான் அவருக்கு செய்த துரோகம், அவரது நெஞ்சை துளைத்து விட்டது. அதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்.”

1686

ஜெபுனிஷா அந்த சிறைக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகி இருந்தன. ஒரு நாளையும் வீணடிக்காது தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தாள்.

“உங்களைக் காண அகில் கான் வந்துள்ளார், இளவரசி!”

அவளை பேரரசி என்றோ இளவரசி என்றோ அழைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தும், காவலாளிகள் அவளை இளவரசி என்றே அழைத்து வந்தனர்.

“என்னை மன்னித்து விடுங்கள் என் அன்பே!” என அகில் கானிடம் ஜெபுனிஷா கூறினாள்.

“இல்லை. நீதான் என்னை மன்னிக்க வேண்டும். முக்கியமான தருணத்தில் நீ கொடுத்த வேலையை என்னால் நிறைவேற்ற இயலாமல் போனது.”

திடீரென ஜெபுனிஷா அழத் துவங்கினாள். வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த துக்கத்தை ஒரே நாளில் அழுது கரைப்பவள் போல் அழுதுக் கொண்டிருந்தாள். அகில் கானையும், அக்பரையும் அவளுடைய குடும்பமாக வெளியே சொல்ல இயலாததால் வந்த சோகமா? தன்னுடைய குறுகிய மனப்பான்மையை அனைவரிடமும் புகுத்திய ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக வெற்றிப்பெற முடியாத அவர்களின் காதலை எண்ணி அழுதாள்.

“என்னுடைய பிரயாணத்தில் நான் இன்னும் சிறிது கவனமாக இருந்திருந்து உடல்நலம் குன்றாமல் இருந்திருந்தால் நம்முடைய திட்டம் வெற்றிப் பெற்றிருக்கும்.”

“அது எனக்கு தெரியும். உடல் நலம் பாதிப்படையும் என்று முன்பே எப்படி உனக்கு தெரியும்? நீ இருந்ததால் மட்டுமே, அரசருக்கு நம் இரகசியம் என்று முன்கூட்டியே நான் அறிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் என்னுடைய மற்ற விஷயங்களை என்னால் முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடிந்தது.”

“என் உடல்நலம் தேறிய சமயத்தில், அக்பர் இராஜபுதன வீரர்களுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதற்கு மேல் நம் மகனுக்கு உதவ என்னால் எதுவும் செய்ய இயலாமல் போனது.”

“நீ செய்தது சரியே. நீ என் தந்தையுடன் இருந்ததால் மட்டுமே அவர் என்ன செய்யப்போகிறார் என கண்டறிய இயன்றது.”

“உன் கடிதத்தை ஜானி உன் தந்தையிடம் கொடுத்த பொழுது, அவளுடைய கழுத்தை நெறிக்க எண்ணினேன். நான் அவருடைய முடிவுக்கெதிராய் பேசி இருந்தால், நனையும் உன்னுடன் சேர்ந்திருப்பதை கண்டுபிடித்து என்னையும் கொன்றிருப்பார்.”

“நீ இல்லையேல் எனக்கும் விஷயம் தெரிந்திருக்காது.”

“நீ என் தப்பித்து செல்லவில்லை?”

“தப்பித்து சென்றால் நான் ஜெபுனிஷா இல்லை. மேலும், நான் எங்கே செல்வேன் ? என் சொந்த மகனே யார் தஞ்சம் தருவார்கள் என ஓடிக் கொண்டிருந்தான். என்னை யார் அகதியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்? பெண்ணான என்னை யார் காப்பற்றி இருப்பார்கள்?”

“நான் காப்பாற்றி இருப்பேன்.”

“அது எனக்குத் தெரியும்” எனக் கூறிய ஜெபுனிஷா , கம்பிகளின் இடையே கை விட்டு அவன் முகத்தை தடவினாள். “ஆனாலும் உன்னை யார் காப்பாற்றி இருக்கக் கூடும். அக்பரின் பெற்றோர் இருவரில், ஒருவரது உயிரோடு இருக்க வேண்டும்.”

“ஆனால், நீ இப்படி சிறைப்பட்டிருப்பதை என்னால் காண இயலவில்லை.”

“பொறுமையாக இருக்க சொல்கிறேன் நான். ஒருநாள் அவுரங்கசீப் இறப்பார். அப்பொழுது நம் மகன் பேரரசனாவான். அந்த சமயத்தில் நான் விடுதலை ஆவேன். நம் சாம்ராஜ்யம் முழுவதும் கலைகளை பரப்புவேன். மக்ஃபி மீண்டும் உயிர்த்தெழும். அதுவரை பொறுமையாக இரு என்றுதான் கூறுகிறேன்.”

தன் விரல்களை முத்தமிட்டு அதை ஜெபுனிஷாவின் உதடுகளில் வைத்தான். தன் கண்களை மூடிக் கொண்ட ஜெபுனிஷா பல வருடங்கள் முன்பு அவனுடன் உறவு கொண்டதை எண்ணிப் பார்த்தாள்.

“நீங்கள் கிளம்புங்கள். மீண்டும் என்னை பார்க்க வரவேண்டாம். உங்கள் அன்பினால் என்னை பலவீனம் அடைய செய்கிறீர்கள். நம் மகன் அக்பரின் போராட்டத்திற்கு உதவுங்கள்.”

கண்ணில் கண்ணீருடன் அகில் கான் விடைபெற்றான். அவன் அங்கிருந்து கிளம்பியவுடன் அமைதியாக சப்தம் வராமல் அழுகை துவங்கினாள் ஜெபுனிஷா. மீண்டும் அவனை கூப்பிட வேண்டும் என மனதில் தோன்றிய ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

அன்றிரவு சீக்கிரமாக உறங்க சென்றாள். பல மாதங்கள் கழித்து நிம்மதியாக நீண்ட நேரம் உறங்கினாள். அவளுடைய மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் ஒன்றை கீழே இறக்கி வைத்தது போல் இருந்தது. அவளுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய வார்த்தைகளை அகில் கான் என்றுமே தட்ட மாட்டான் என்று. அவனுடைய வருகை அவளை பலவீனம் அடைய செய்தது. சிறையில் இருக்கும் வரை தைரியமாக இருக்க வேண்டியது அவசியம் என நினைத்தாள்.

1701

“இளவரசி உங்களை பார்க்க வந்திருக்கிறார்கள்.”

அங்கிருந்த பழைய காவலாளி இறந்தப்பின் புதிதாய் வந்தவன் இவன். தான் இவர்களை மோசமாக நடத்தினால், ஒருவேளை பிற்காலத்தில் பேரரசரும், இளவரசியும் ஒன்றாக சேர்ந்துவிட்டால், அந்த நேரத்தில் தனக்கு பாதிப்பு வரும் என ஜெபுனிஷாவை மரியாதையுடன் நடத்தினான்.

வயதான காரணத்தினால், நடையில் தள்ளாட்டம் இருக்க, அவள் தலைமுடியோ அவளது உடை போன்றே வெளுத்திருந்தது. மெதுவாய் சிறைக்கம்பிகள் அருகே வந்து அதை தன் சுருக்கம் விழுந்த வலியினால் அவதிப்படுகின்ற கைகளால் பிடித்து, பார்வைக் குன்றிய கண்களால் தன்னை காண வந்திருப்பது யார் என பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாய் குள்ளமான கூன் விழுந்து ஒரு உருவம் வந்தது.

இவளைக் காண வந்த அந்த உருவமும், கைத்தடியை ஊன்றி தளர்ந்து நடந்து வந்தது. தன் அருகே வந்ததும் அந்த உருவத்தை ஊன்றிக் கவனித்த ஜெபுனிஷா, அந்த உருவமும் தளர்ந்து, தோல் சுருங்கி இருப்பதைக் கண்டாள். ஒருவேளை, தன்னிடம் வேலை செய்த பணிப்பெண்கள் யாரேனும் தன்னை காண வந்துள்ளனரோ என எண்ணினாள்.

“பேரரசி” என்றைழைத்த அந்த குரல் தனக்கு பரிச்சயமான ஒன்றென்பதை ஜெபுனிஷா உணர்ந்தாள்.

“யார் நீ? உன் குரல் எனக்கு பரிச்சயமான ஒன்றென்றாலும் உன்னை யாரென்று என்னால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.”

“என்னையே என்னால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை அரசி.”

“நான் பேரரசி அல்ல. என்னை அவ்வாறு அழைப்பது உன்னையும் இந்த சிறையில் தள்ளும். என்னை நிமிர்ந்து பார்.”

மெதுவாகத் தன் தலையை உயர்த்தி ஜெபுனிஷாவை பார்த்த அந்த உருவம் “என்னுடைய உடலை விட பெரிய சிறை வேறெதுவும் இல்லை” என்றது.

நோய்வாய்ப்பட்டு, மெலிந்து காணப்படும் இந்தப் பெண்மணி யார்? அவளைப் பற்றிய எதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருந்தது. மறந்து போன கவிதை வரி ஒன்றை நினைவுக்கு கொண்டு வர இயலாமல் தவிப்பது போல்.

“நான்தான் குற்றவாளி. நீங்கள் இங்கே இருப்பதற்கு நானே காரணம். இந்த சாம்ராஜ்யம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கும் நானே காரணம்.”

“உஷ். இப்படி கெட்ட விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசாதே. பேரரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.”

“அல்லாஹ் எனக்கு அளித்துள்ள தண்டனையை விட வேறெதுவும் பெரிய தண்டனையாக இருக்க முடியாது. பேரரசி ! நான்தான் ஜானி.”

அதைக் கேட்ட ஜெபுனிஷா திடுக்கிட்டாள். தன் நினைவில் இருந்த அழகிய முகத்தை தற்போதைய முகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.

“இங்கே எதற்கு வந்தாய் ஜானி?”

“உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக.”

“என்னிடம் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்?” அக்பரை தவறாக வழிநடத்தியதில் ஜானியின் பங்கே அதிகம் என அவள் அறிந்திருந்தாலும், ஏதும் அறியாதவள் போல் கேட்டாள்.

“நான்தான் உங்கள் கடிதத்திற்கு பதிலாக தவறான வழிகளைக் கொண்ட கடிதத்தை அக்பருக்கு கொடுத்தது. பின், அக்பர் தப்பி ஓடியதும், உங்கள் கடிதத்தை பேரரசரிடம் கொடுத்ததும் நான்தான். நான் அப்படி செய்திருக்காவிடில், இன்று அக்பர் பேரரசனாக வீற்றிருப்பான். நீங்களும் உங்கள் மாளிகையில் இருந்திருப்பீர்கள்.”

அதைக் கேட்ட ஜெபுனிஷா புன்னகைத்தாள். அவள் நினைத்திருந்தால் அகில் கான், நடந்தவைகளை அவளிடம் சொன்னபொழுதே தப்பி சென்றிருக்கலாம். ஆனால், காலம் மாறும் என்ற நம்பிக்கையில் தண்டனையை ஏற்றுக் கொண்டாள்.

“யார் வெற்றி பெற வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்கிறார். உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே!”

“ஆனால், என்னால் சாம்ராஜ்யம் மேலும் அழிந்தது.”

“என் தந்தைதான் இந்த சாம்ராஜ்யத்தின் அழிவிற்கு காரணம். மற்ற அந்தப்புர பெண்களைப் போல் உன் எதிரியான என்னுடன் சண்டையிட்டாய் அவ்வளவுதான். நீயும், நானும் அத்தை ஜகன்னாரா மிகவும் நேசித்த மருமகள்கள். ஆனால், அவளது நகைகள் முழுவதும் உனக்கு மட்டுமே அவள் தந்த பொழுது உன்னைக் கண்டு நான் பொறாமைப்பட்டேன். உனக்கு தந்தை இல்லாததால் அவர்கள் அதை செய்தார்கள் என அப்பொழுது எனக்கு புரியவில்லை. ஆனால், நீ ஏன் என்னை வெறுத்தாய் என்பது எனக்கு புரியவே இல்லை.”

ஜெபுனிஷாவையே பார்த்துக் கொண்டிருந்த ஜானி “அகில் கான்தான் காரணம்” என்றாள்.

“அகில் கான்?”

“அகில் கான் உன்னைத்தான் விரும்புகிறார் என தெரிந்தும் நான் அவரை விரும்பினேன். உன்னால் அவர் என்னை வெறுத்தார். பேரரசர் கட்டளை இட்டதால் ஆஸமை திருமணம் செய்துகொண்டேன். ஆனால், அகில் கான் மட்டுமே என் மனதில் இருக்கிறார்.”

“நம்மை பற்றி எண்ணிப் பார். வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் வெறுத்தோம். நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள் என்றெண்ணியே நம் வாழ்நாளைக் கழித்தோம்.” ஜானியின் கைகளைப் பற்றிக் கொண்ட ஜெபுனிஷா “நான் உன்னை மன்னித்து விட்டேன் ஜானி. இதையே ஒரு சுமையாக மனதில் எண்ணிக் கொண்டிராதே” என்றாள்.

இதைக் கேட்டதும் ஜானி அழுகத் துவங்கினாள்.” நன்றி பேரரசி. இனி நான் நிம்மதியாக இறப்பேன்”

“இறக்கப் போகிறாயா?”

“சில வருடங்களுக்கு முன் என் மார்பில் கட்டி தோன்றியது. வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் அதை பரிசோதிக்க விரும்பினார். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. அந்த கட்டி இன்னும் வளர்ந்து பெரிதானது மட்டுமில்லாமல் என்னுடைய மற்றொரு மார்பகத்திற்கும் பரவி விட்டது. இதற்கு மருத்துவம் ஏதும் இல்லை. நான் இறப்பதற்கு முன்பு உங்களை சந்தித்து பாவ மன்னிப்பு கேக்க விரும்பினேன்.”

இந்த வாழ்வில் சிரிப்பும் அன்பும் இல்லவே இல்லையா? அவளுக்கு வலியைத் தவிர வேறெதுவும் நினைவிலே இல்லை.

“பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், யார் பாவம் செய்துள்ளார்கள் என தீர்மானிக்க வேண்டியது அல்லாஹ்தான். உன்னை நீயே தண்டித்துக் கொள்ளாதே!” என அவளை சாந்தப்படுத்தினாள்.

ஜானி செல்வதையே பார்த்திருந்த ஜெபுனிஷா, தான் வாழ்நாள் முழுவதும் வெறுத்தவளின் தற்போதைய நிலையை எண்ணி வருந்தி அவளுக்காக கண்ணீர் சிந்தினாள். ஆனால், அவளால் எப்பொழுதும் ஜானியை மனதார மன்னிக்க இயலாது. ஆனால், இறக்கப்போகிறவளின் ஆன்மாவிற்கு அமைதி அளிக்கவே மன்னித்ததாகக் கூறினாள்.

1702

26 மே 1702 அன்று தன் சிறை அறையில் அமைதியாக இறந்தாள் ஜெபுனிஷா. அவள் இருங்தா செய்தி கிடைத்த பொழுது அக்பர் பெர்ஷியாவில் இருந்தான். அவுரங்கசீப் தக்காணத்தில் போர்முனையில் இருந்தான். அரசின் சார்பில் இறுதி சடங்குகளோ அல்லது துக்கமோ அனுசரிக்கப்படவில்லை. அப்பொழுது உயிருடன் இருந்த மக்ஃபியின் உறுப்பினர்கள் சிலர் தனிமையில் துக்கம் அனுஷ்டித்தனர். முகலாய இளவரசியும், சில காலம் பேரரசியுமாக இருந்த ஜெபுனிஷா மிக எளிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள். அவள் உடலை தூக்கி சென்றவர்களைத் தவிர வேறு யாரும் அவளது இறுதி பயணத்தில் பங்கேற்கவில்லை.

ஜெபுனிஷா இருந்த அறையை பூட்டி அதை யாரும் திறக்கக்கூடாது என உத்தரவிட்டாள். அவளுடைய உத்தரவை மாற்ற அவுரங்கசீப் எதுவும் செய்யவில்லை. தன் இறுதி நாட்களில் தோல்வியுற்ற மனிதனாய் தனிமையில் கழித்தான். தனக்கு பின் அரியணைக்கு சண்டை போட வேண்டாம் என அவன் கூறியதை அவன் மகன்கள் கேட்கவில்லை. 1705ல் பெர்ஷியாவிலேயே அக்பர் இறந்துவிட, மீதமிருந்தவர்களான முவாஸம், ஆஸம் மற்றும் காம் பக்ஷ் இடையே சண்டை மூண்டது.

ஜானி இறந்தபின் மனம் உடைந்திருந்த ஆசமை முவாஸம் எளிதில் முறியடித்தான். அவுரங்கசீப்பின் கணக்கற்ற மனைவிகளில் ஒருத்தியின் மகனான காம் பக்ஷ் கொல்லப்பட்டான். பகதூர் ஷா என்ற பெயரில் அடுத்த சக்ரவர்த்தியாக பாதை ஏற்ற முவாஸம் இராஜபுதனர்களுடனேயான உறவை சீர் செய்ய முயன்றான். ஆனால் அவனால் அதை சரி செய்ய முடியவில்லை. அவுரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு முகலாய சாம்ராஜ்யம் மெல்ல உடையத் துவங்கியது. 1739ல், பெர்ஷிய சக்ரவர்த்தியாக இருந்த நாதிர் ஷா, தில்லியின் மீது படையெடுத்து ஆயிரக்கணக்கான முகலாயர்களை கொன்று அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்.

ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் இப்பொழுது தில்லிக்குள் அடங்கிவிட்டது. அவர்களுடைய பெருமைகள் எல்லாம் போய் செல்வங்களும் களவாடப்பட்டப்பின் பெயரளவிலேயே அவர்கள் அரசு இருந்தது. இப்பொழுது மற்ற சிற்றரசர்கள் போலத்தான் இருந்தனர்.

1752

இரண்டு வீரர்கள், கையில் தீப்பந்தங்களை ஏந்தி அந்த இருண்ட தாழ்வாரத்தில் நிதானமாக எச்சரிக்கையுடன் சென்று கொண்டிருந்திருந்தனர். அந்த மாளிகையின் கல்லாலானக் மேற்கூரையில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன், சுவர்களை தடவி ஆராய்ந்துக் கொண்டே வந்தான். ஏதேனும் மறைக்கப்பட்ட பொக்கிஷ அறைகள் இருக்கிறதா என கண்டுபிடிப்பதே அவனது நோக்கமாய் இருந்தது.

திடீரென ஒரு இடத்தில் நின்று தன் கூட வந்தவனை அழைத்தான். தான் நின்ற இடத்தில் சுவற்றில் வெளிச்சம் நன்கு படுமாறு தீப்பந்தத்தை பிடித்தவன் “மற்ற இடங்களில் எல்லாம் கல் சுவர்கள் இருந்தன. இங்கு மட்டும் செங்கல் கற்கள் தென்படுகின்றன. இந்த சுவருக்குப் பின் கண்டிப்பாய் பொக்கிஷ அறை இருக்க வேண்டும்” எனக் கூறினான்.

அந்த சுவருக்கு பின் இருக்கக்கூடிய பொக்கிஷத்தை எண்ணி இருவரின் கண்களும் ஆசையில் மின்னின. தங்கள் இடையில் வைத்திருந்த சிறிய கோடாரி கொண்டு அந்த சுவரை இடிக்கத் துவங்கினர். சிறிது சிறிதாக அந்த சுவர் இடியத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து அந்த சுவர் இடிந்து விழுந்தது. உடைந்த சுவருக்குப் பின்னால், இரும்பு கதவொன்று தென்பட்டது. இருவரும் அந்த கதவை தங்கள் பலம் கொண்டு தள்ளத் துவங்க, பல நிமிடங்கள் கழித்து அந்த கதவும் வழி விட்டது.

தூசு படிந்த அந்த அறைக்குள் நுழைந்த அந்த வீரர்கள் அறை முழுவதும் தங்கள் பார்வையைப் படர விட்டனர். அறையின் ஒரு பக்கம் தூசுப்படிந்த ஆனால் அழகிய கட்டில் ஒன்று இருந்தது. இன்னொரு பக்கம், நவரத்தின கற்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி ஒன்று இருந்தது.

“இது சிறைச்சாலை போல காணப்பட்டாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒருவர் தங்கிய அறையாக தோன்றுகிறது.”

“ஆனால் இங்கே நகைகள் ஏதும் இல்லையே. இங்கே எதையோ மறைத்து வைத்ததாலேயேதான் வெளியே ஒரு சுவர் எழுப்பி இந்த அறையை மற்றவர்கள் கண்டுபிடிக்கமுடியாத வண்ணம் செய்திருந்தனர்” என பொக்கிஷம் ஏதும் தென்படாத ஏமாற்றத்தில் பேசினான் மற்றொருவன்.

அங்கிருந்த அழகிய வேலைப்பாடுகளால் நிறைந்த மர மேஜையை திறந்தவன் பழைய காகிதங்களின் தொகுப்பை பார்த்தான்.

“பேரரசியாய் இருந்த ஜெபுனிஷா எழுதியவை இவை. 1658-1702ல் பேரரசி ஜெபுனிஷாவால் எழுதப்பட்ட மறைக்கப்பட்ட புத்தகம்” என அதில் எழுதப்பட்டிருந்தது.

“1658-1702? அது முகலாயர்கள் ஆண்ட இருண்ட காலமாயிற்றே ? அப்பொழுது கவிதைகள் மற்றும் கலைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்ததே?”

ஜெபுனிஷா கைது செய்யப்படுவதற்கு முன்பும், சிறையில் இருந்த பொழுதும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு போல் தோன்றியது. தன் தந்தை இறந்த பின் வருபவர்கள் யாரேனும் இதை கண்டுபிடிக்கட்டும் என மிஹிருன்னிஷா இவற்றை தொகுத்து வைத்திருப்பாள்.

“அந்த வருடங்களில் கவிதை ஹிந்துஸ்தானத்தில் செழித்து வளர்ந்தது போல் தோன்றுகிறது.”

“ஆம். அவுரங்கசீப்பால் அவற்றை முற்றிலும் ஒழிக்க இயலவில்லை போல. இதுவே அதற்கு சாட்சியாக இருக்கிறது.”

“இதை நம் தளபதியிடம் சேர்ப்போம். அவருக்கு கவிதைகளின் மேல் விருப்பம் அதிகம். இதை கொண்டு வந்ததற்காக நமக்கு அவர் பொற்காசுகள் வழங்கக் கூடும்.”

அன்றிரவு மது அருந்த காசு கிடைக்கும் என்ற எண்ணமே அவர்களை மகிழ்வித்தது.

அந்த காகிகதங்களின் தொகுப்பை மிக எச்சரிக்கையாய் எடுத்துக் கொண்டு தங்களின் இருப்பிடம் நோக்கி சென்றனர். அவர்களில் ஒருவன் “அரை நூற்றாண்டுக்கு மேலாய் நீ சிறைப்பட்டிருந்தாய். இனியாவது மக்ஃபி வெளியுலகைக் காணட்டும்” என்று நகைச்சுவையாக கூறிக் கொண்டே சென்றான்.

*******

வாசகர்-ஆசிரியர்

கேள்வி-பதில்

  • இந்த புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது ?

” Mistress of the Throne ” புத்தகம் வெளிவந்த பின், அதன் தொடர்ச்சியை எழுத சொல்லி பல மின்னஞ்சல்கள் வந்தன. அந்த புத்தகத்தில் ஜகன்னாராவின் வாழ்க்கை முழுவதும் சொல்லப்பட்டுவிட்டதால் , மற்றொரு முகலாய இளவரசியான ஜெபுனிஷாவைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். தன் அத்தையைப் போல் இவளும் அவள் தந்தைக்கு மிகவும் பிடித்தமான மகள். ஜகன்னாரா தன் தந்தையின் ஆட்சியை பாதுகாக்க போராட, ஜெபுனிஷாவோ தன் தந்தையின் ஆட்சியை அகற்றப் போராடினாள். அவள் உருவாக்கிய இரகசிய கவிதைக் குழு என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில், முகலாய வரலாற்றில் மக்ஃபி பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. அவுரங்கசீப்பின் சொந்த மகன்களும், மகள்களும் அவனது கொடுங்கோலாட்சியை அகற்றப் போராடியது எழுதப்பட வேண்டிய ஒரு விஷயம். அதனாலேயே, இந்த புத்தகத்தில், அவுரங்கசீப்மற்றும் அவன் அதிகம் நேசித்த அவனுடைய மகள் ஜெபுனிஷாவிற்கு அதிகம் முக்கியத்துவம் தந்தேன்.

  • இந்தப் புத்தகத்தில் எத்தனை சதவீதம் வரலாறு மற்றும் எத்தனை சதவீதம் கற்பனை?

ஜெபுனிஷாவைப் பற்றியோ மக்ஃபியை பற்றியோ வரலாற்றில் அதிகம் எழுதப்படவில்லை. எனவே முந்தையப் புத்தகத்தை விட இதில் என்னுடைய கற்பனை அதிகம். முதல் புத்தகத்தில் என்ன வழிமுறையை கடைபிடித்தேனோ அதே வழிமுறையை இதிலும் பின்பற்றினேன். முதலில் தெரிந்த வரலாற்றில் இருக்கும் விஷயங்களை எழுதிக் கொண்டேன். பின், ஒரு நிகழ்விற்கும் அதற்கு அடுத்த நிகழ்விற்கும் இடையே இப்படித்தான் நடந்திருக்கும் என என்னுடைய எண்ணங்களை நிரப்பினேன். ஜெபுனிஷா அவுரங்கசீப்பிற்கு மிகவும் பிடித்த பெண் என்பது நமக்குத் தெரியும். எனவே ஆரம்பத்தில் ஜெபுனிஷாவை அவுரங்கசீப்பின் மிகப்பெரிய ஆதரவாளராகக் கொண்டு துவங்கினேன். அவளுக்கும் , சுலைமானுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது என்றும், அதன் பின் அவன் கொல்லப்பட்டதும், தனது தந்தைக்கு எதிராக அவள் திரும்பினாள் என்றும் நாம் அறிவோம். எனவே, சுலைமான் மனிதத்தன்மை இல்லாத முறையில் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் , அவனை சிறையில் சந்தித்த ஜெபுனிஷா , பிரியத்துக்குரிய மகளாக இருந்து கிளர்ச்சி செய்யும் இளவரசியாக மாறியதாக எழுதினேன். அதேபோல், பெர்ஷியர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் கந்தஹாரைத் தான் அடையலாம் என அவுரங்கசீப் நினைத்ததும், அந்த திருமண ஒப்பந்தம் முறிந்தப் பின் அவுரங்கசீப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதும் வரலாற்றில் உள்ள ஒன்று. முறிந்த திருமண ஒப்பந்தம் அதற்கு காரணமா ? இந்த இடத்தில் எழுத்தாளர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி இரண்டிற்கும் சம்பந்தம் உள்ளதாக கொண்டு சென்றேன்.

ரவுசனாரா பேரரசியாக இருந்தது வரலாற்றில் பதியப்பட்ட ஒரு நிகழ்வு, அதே போன்றுதான், அவுரங்கசீப் உடல்நலம் குன்றி இருந்தபொழுது ஆஸமை பேரரசனாக்க அவள் முயன்றதும் அதற்காக தண்டிக்கப்பட்டு உயிரழிந்ததும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஒன்று உள்ளது. தன் தந்தையை வெறுத்த ஜெபுனிஷா, அவரைப் போன்ற குணநலன்களைக் கொண்ட தன் அத்தையையும் வெறுத்திருப்பாள். எனவே அந்த இடைவெளியை, அவர்கள் இருவருக்குமான சண்டையை கொண்டு நிரப்பினேன்.

முவாஸமும், அக்பரும் செய்த புரட்சி பற்றி வரலாற்றில் செய்திகள் உண்டு. ஆனால், அதில் மக்ஃபியின் பங்கு பற்றியோ, ஜெபுனிஷா செய்த உதவிகள் பற்றியோ எந்த செய்திகளும் இல்லை. இரண்டு சகோதரர்கள் தங்கள் தந்தைக்கு எதிராக புரட்சி செய்யும் பொழுது அவர்களது சகோதரிகளுக்கு தெரியாமல் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அந்த வரலாற்றில் இருக்கும் அந்த புரட்சியை இரண்டு தனித்தனி நிகழ்வுகளாய் மக்ஃபியால் நிகழ்த்தப்பட்ட செயல்களாய் மாற்றியுள்ளேன்.

ஜெபுனிஷா அகில் கான் என்பவனுடன் உறவுக் கொண்டிருந்தாள் என்பதற்கு தகவுகள் உள்ளன.ஆனால் அந்த உறவு எத்தனைக் காலம் நீடித்தது என்றோ அந்த உறவின் மூலம் குழந்தைகள் பிறந்தனவா என்பதைப் பற்றியும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே, அந்த உறவை இன்னும் கொஞ்சம் ஆழமாய் கொண்டு சென்றேன்.

இறுதியாக, ஜெபுனிஷாவின் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்து இறுதி நாட்களை சிறையில் கழித்தாள் என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. அதை, ஜெபுனிஷாவின் தோல்வியாக காட்ட விருப்பம் இல்லை எனக்கு. எனவே இறுதி அத்தியாயங்களில் ஜெபுனிஷாவை வலுவான மற்றும் எதையும் தாங்கும் சக்தியுள்ள பெண்ணாக காட்டியுள்ளேன். இறுதியாக, பல்வேறு பாத்திரங்கள் ஜெபுனிஷாவை அவள் சிறையில் இருக்கும் பொழுது சந்தித்ததாக எழுதி உள்ளேன். இவை எதுவும் வரலாற்றில் இல்லை.அகில்-ஜெபுனிஷா காதல் , ஜானியுடனான சண்டை மற்றும் அவள் சகோதரிகளுடனான இறுதி கட்டம் போன்றவற்றிற்கு ஒரு முடிவு கொடுக்கவே அதை எழுதினேன்.

ஜெபுனிஷா இறந்து பல வருடங்கள் கழித்து அவள் எழுதிய கவிதைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது வரலாற்றில் இருக்கும் தகவல். ஆனால். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, முகலாய சாம்ராஜ்யம் சரிந்த பின், வெற்றிபெற்ற படையின் வீரர்கள் பொக்கிஷங்களைத் தேடி அலையும் வீரர்கள் அதைக் கண்டுபிடித்து தங்கள் தலைவனிடம் கொண்டு சேர்ப்பதாய் எடுத்துச் சென்றுள்ளேன்.

  • பேகம் ஜானியை ஏன் எதிர்மறை கண்ணோட்டத்தில் காண்பித்துள்ளீர்கள்?

ஜானியை பற்றிய குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. அவள் தாராவின் மகள் என்பதும், அவுரங்கசீப் பதவிக்கு வந்ததும், தன் அத்தை மற்றும் தாத்தாவுடன் ஆக்ரா சிறையில் இருந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. ஷாஜகானின் மரணத்திற்குப் பின், தன் மகன் ஆஸமிற்கு அவளை திருமணம் செய்து வைக்கிறான் அவுரங்கசீப். ஜகன்னாரா தனது நகைகள் அனைத்தையும் ஜானிக்கு கொடுத்திருந்தாள். வயதான காலத்தில் உடல் நலம் குன்றி ஜானி இறந்தாள். இவை அனைத்தும் வரலாற்றில் இருப்பவை. சில குறிப்புகளை மட்டுமே கொண்டு ஒருவரின் வாழ்வு முழுவதையும் எழுதுவது என்பது சிரமமான காரியம். வரலாற்று ஆய்வாளர்களும், அந்த காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர்களும் எழுதி வைத்துள்ள குறிப்புகளின் படி முகலாய அந்தப்புரத்தில் பொறாமையும் பூசல்களும் நிறைந்திருந்தது என்பதை நாம் அறியலாம். இருவரில் ஒருவரால் நல்லவளாகவும் மற்றொருவரை கெட்டவளாகவும் சித்தரிக்க நான் விரும்பவில்லை. அப்படி சித்தரித்திருந்தால் அவுரங்கசீப்-ஜெபுனிஷாவின் பரம்பரை “மோசமானது” என்றும் தாரா-ஜானி பரம்பரை “நல்லவர்கள்” என்றும் மாறியிருக்கும். அப்படி கொண்டு செல்ல விரும்பவில்லை. எனவே, இங்கே ஜெபுனிஷா ஜகன்னாரா ஜானியின் மேல் வைத்த பாசத்தை கண்டும், ஜானி – அகில் கான் ஜெபுனிஷாவின் மேல் கொண்ட காதலைக் கண்டும் பொறாமைப்படுவதாய் கதையை அமைத்தேன். அவர்களிடையேயான இறுதி சந்திப்பில், அவர்களுடைய போட்டி, பொறாமைகளை மறந்து இருவரும் சமாதானமாகிவிடுவதாக சித்தரித்திருக்கிறேன். இருவருமே அவரவர்கள் இருந்த சூழ்நிலைப் படி நடந்துகொண்டார்கள். அதில் அவர்கள் இருவர் மேலும் தவறில்லை.

  • முக்கிய கதாபாத்திரமான ஜெபனிஷாவை பற்றி எப்படி ஆராய்ந்தீர்கள்?

உண்மையில் ஜெபுனிஷாவைப் பற்றி அதிகம் குறிப்புகள் இல்லை. வால்டெமர் ஹேன்சன் எழுதிய “The Peacock Throne” மற்றும் அன்னி க்ரீகர் கிரினிக் எழுதிய “Captive Princess: Zebunissa, Daughter of Aurengzeb” என்ற இரு புத்தகத்திலிருந்தே அதிக தகவல்கள் திரட்டினேன். இந்த இரண்டு புத்தகங்களும், இந்த கதை நிகழ்ந்த காலகட்டத்தில் இருந்த முகலாய அரசைப் பற்றியும், ஜெபுனிஷாவைப் பற்றியும் உண்மைத் தகவல்களை தந்தன. திவான்-இ-மக்ஃபியின் ஆங்கில மொழியாக்கம், மக்ஃபியின் கவிதைகளை உபயோகிக்க உதவியது.

  • “Mistress of the Throne”இல் இருந்த பல கதாபாத்திரங்கள் இந்த கதையில் குறுகிய நேரம் வந்து செல்கின்றனர். அந்த கதாபாத்திரங்களை ஏன் மீண்டும் உபயோகித்தீர்கள்?

“The Hidden One” புத்தகத்தை காரணமாகத்தான் “Mistress of the Throne” புத்தகம் முடிந்த இடத்தில் இருந்து துவங்கவில்லை. அந்த புத்தகம் ஷாஜகான் இறப்பதில் முடிவடைகிறது. ஆனால், அந்த சமயத்தில், அவுரங்கசீப்புக்கு எதிரான புரட்சி துவங்கி நடந்துகொண்டிருந்தது. அந்த இடத்தில நான் துவங்கி இருந்தால், பல விஷயங்களை பின்னோக்கி சென்று சொல்லி இருக்க வேண்டும். அதனாலேயே, வாரிசுரிமைப் போரில் அவுரங்கசீப் வெற்றி பெறுவதில் இருந்து இந்த புத்தகத்தை துவங்கினேன். மேலும், பாசமான பெண்ணாக இருந்து பழிவாங்கும் புரட்சியாளராக ஜெபுனிஷாவின் மாற்றத்தையும் விவரிக்க முடிந்தது. தாராவின் மரணம் ஜெபுனிஷாவிற்கு தந்த தாக்கம், இறுதிவரை தன் தம்பியை எதிர்த்த ஜகன்னாராவின் எதிர்ப்பு போன்றவற்றை சொல்வதற்காகவும்,மக்ஃபி நடத்திய புரட்சியில் அவர்களின் பங்கு பற்றியும் பதிய வேண்டுமென்பதற்காக அவர்களின் கதாபாத்திரங்களை கொண்டு வந்தேன்.

நன்றி

இந்த புத்தகத்தை நான் எழுத பல பேர் காரணம். “Mistress of the Throne” எழுத என் குடும்பத்தினர் தந்த ஊக்கம் காரணம் என்றால், அதன் தொடர்ச்சியான இந்த புத்தகத்தை எழுத வாசகர்கள் தந்த ஊக்கமே காரணம். முதல் புத்தகத்தின் தொடர்ச்சியை எப்பொழுது எழுதப் போகிறீர்கள் என கேட்டு எனக்கு வந்த கணக்கற்ற மின்னஞ்சல்களே இந்த புத்தகத்தை எழுத முக்கியக் காரணமாய் அமைந்தது.

“Long Island Writer’s Guild” உறுப்பினர்களுக்கும் எனது நன்றி. பல்வேறு சமயத்தில் அவர்கள் கொடுத்த விமர்சனங்கள் புத்தகத்தை செம்மைப் படுத்த உதவின.

இறுதியாக, தன்னுடைய கடுமையான வேலை சுமைகளை நடுவிலும், புத்தகத்தை படித்து திருத்த உதவிய என் மனைவி சுபர்ணாவிற்கும் என் நன்றி.