மும்பை நினைவுகள் – 6

This entry is part 6 of 9 in the series மும்பை நினைவுகள்

முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன்.

மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. வாக்மாரே/ஹாத்திமாரே – புலி/ யானையை வேட்டையாடுபவர்.மஞ்சரேக்கர் – பூனை குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படி பல.

மராட்டியர்களின் சாப்பாட்டு ராமர்களும் உண்டு. அதற்கேற்றார்போல அவர்களது பெயர்களும் அமையும்.தஹி ஃபலே – தயிர் வடை பிரியர்; பாஜி ஃபலே – காய்கறி பிரியர்; கோப்ரே – கொப்பரை மற்றும் உலர்பழ பிரியர் இப்படி.

நிறத்தை குறிக்கும் விதமாகவும் மராட்டிய உப பெயர்கள் அமையும். காலே (கருப்பர்கள்), கோரே(சிவப்பர்கள்),, ஹீர்வே (பச்சை மனிதர்கள் ) மற்றும் பில்வே ( மஞ்சள் மனிதர்கள்). இது மட்டுமல்ல,உலோகங்களை
குறிக்கும் வகையிலும் மராட்டிய உப பெயர்கள் அமைந்து நான் பார்த்திருக்கிறேன். பித்தலே (பித்தளை),தாம்பே (தாமிரம்) லோக்கண்டே(இரும்பு )சோனே (தங்கம் ). பொய் சொல்பவர்கள் கோட்டேவாகவும், உண்மை பேசுபவர்கள் கரேவாகவும் அறியப்படுகிறார்கள்.

செய்கிற தொழில்களுக்கு ஏற்றவாறும் இவர்களுடைய உப பெயர் அமைகிறது.
ஆடேகர் – பொறியாளர்
பாப்பட் – கிராமத்து நாட்டாமை அல்லது சிறு குழு தலைவர்
சாந்த்தேக்கர் – வெள்ளி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்
சத்ரே – குடை செய்பவர்
சித்ரே – படம் வரைபவர்
திவேகர் – விளக்குகள் செய்பவர்
கவாஸ்கர் – கவாஸ்வாடி கிராமத்தை சேர்ந்தவர்
டெண்டுல்கர் – டெண்டுல் கிராமத்தை சேர்ந்தவர் மங்கேஷ்கர்- மங்கேஷி கிராமத்தை சேர்ந்தவர்.

முன்பெல்லாம் , ஏன் பத்து வருடங்களுக்கு முன்பு கூட, திருமணம் ஆனவுடன் பெண்களது பெயரை மாற்றும் பழக்கம் இருந்தது .கணவன் பெயருக்கு பொருத்தமாக மனைவியின் பெயரை மாற்றுவார்கள் இப்போதெல்லாம் இந்த நடைமுறை வெகுவாக குறைந்துவிட்டது. இல்லை என்றே கூடச் சொல்லலாம். பெயரை மாற்றுவதில் இருக்கிற நடைமுறை சிக்கல்கள் காரணமாக இப்போதெல்லாம் பெண்கள் பெயரை மாற்றிக் கொள்வதற்கு சம்மதிப்பதில்லை. என்னுடன் பணிபுரிந்த தீபாவின் பெயரை சம்ஹிதா என்று மாற்றினார்களாம். தன்னுடைய அப்பா எல்லா ஆவணங்களிலும் அவளது பெயரை மாற்ற எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்று அவள் மிகுந்த வருத்தத்தோடு சொல்வாள். இன்னொருத்தி மாதவி. திருமணத்திற்கு பிறகு இவர் பெயரை பல்லவி என்று மாற்றிவிட்டார்கள். திருமணமான புதிதில் , பல்லவி என்று கூப்பிட்டால், யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று பதில் சொல்லாமல் உட்கார்ந்திருப்பார் இதெல்லாம் இவர்கள் சிரித்தவாறே பகிர்ந்து கொள்ளும் துயரங்கள்.

இன்னும் வரும்.

Series Navigation<< மும்பை நினைவுகள் – 5மும்பை நினைவுகள் – 7 >>

About Author

2 Replies to “மும்பை நினைவுகள் – 6”

  1. மராட்டியப் பெயர்களுக்கான விளக்கங்கள் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. கல்யாணம் ஆனதும் வீட்டுக்கு வரும் மருமகளின் பெயரை மாற்றும் வழக்கம் தஞ்சை ஜில்லாவில் பெருவாரியாக உண்டு. எனக்குக் கல்யாணம் ஆனதும் கூட என் பெயரை மாற்ற வேண்டும் என என் கடைசி மைத்துனன் பிடிவாதமாக இருந்தும் நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என்ன பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் எனவும் பள்ளி இறுதிச் சான்றிதழில் உள்ள பெயரை மாற்றுவது கஷ்டம் என்பதையும் இதற்கு கெஜட்டில் எல்லாம் போடணும் என்றெல்லாம் சொன்னப்போ அவங்க நம்பவே இல்லை. பின்னாட்களில் என் கடைசி நாத்தனார் பெயரைத்தானாக மாற்றிக் கொண்டு ஹிந்தி தேர்வுக்குப் போகையில் அனுமதி மறுக்கப்பட்டுப் பின்னர் சட்டபூர்வமாகப் பெயரை மாற்றிக் கொண்டு கெஜட்டிலும் வெளியிட்டார்கள். இப்போவும் என் பெயர் ஆதாரில்/பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் பான் கார்டில் இல்லை. இவற்றை அரும்பாடு பட்டு இணைத்தார்கள். கையெழுத்துப் போடுகையில் கீதா சாம்பசிவம் எனப் போடுவதில் பிரச்னை வரலை. ஆனால் ஆவணங்களில் பெயர் மாற்றம் என்பது பிரச்னை தான்.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.