ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 10

This entry is part 10 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம்முந்தைய பகுதிகளை படிக்க

விஸ்வேதேவரிடம் சென்று அவர் தலையில் அட்சதை போட வேண்டும். வலது பக்கமாக முழங்காலிலிருந்து உடல், தோள், வலது பக்க தலை ஆகியவற்றில் அட்சதை போட வேண்டும். வாத்தியார் நாலே நாலு அரிசியை எடுத்துக் கொடுத்தால் இப்படி செய்ய முடியாதுதான். ஆகவே நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்றால் வாத்தியாருக்கும் நமக்கும் கொஞ்சம் புரிதல் இருக்க வேண்டும். கொஞ்சம் சிரமம்தான்.

பிறகு பூணூலை தோள் மாற்றிக்கொண்டு வசு ருத்ர ஆதித்ய வடிவங்களான எனது பிதா, பிதாமகர். ப்ர பிதாமகர் அவர்களுக்கு நமஸ்காரம் என்று சொல்லி எள்ளை பித்ருக்களுக்காக வரணம் செய்யும் பிராமணரின் இடது பக்க தலை, தோள், உடல் என முழங்கால் வரை போட வேண்டும். மூன்றாவதாக விஷ்ணுவுக்கும் விஸ்வேதேவர் போல அட்சதையை போட்டு வரணம் செய்ய வேண்டும்.

இது போல அடிக்கடி கோத்திரம் சர்மா இவற்றைச் சொல்லி ‘இவர்களுக்காக பார்வண விதிப்படி செய்யும் பிரத்யாப்தீக சிராத்தத்தில்..’ என்று சொல்லி விஸ்வேதேவர் பித்ருக்கள், விஷ்ணு ஆகியவர்களுக்கு ஆசனம், அர்க்கியம், நமஹ என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்போம். திருப்பி திருப்பி இதை சொல்வது அவசியமா, ஒரு முறை சொன்னால் போதாதா என்று தோன்றலாம் ஆனால் சாஸ்திரம் சொல்கிறபடி நாம் சிரத்தையுடன் நடக்க வேண்டும். அடிக்கடி இப்படிக்கு சொல்லுவதால் கர்த்தா, போக்தாக்களுக்கும் (வரிக்கப்படும் ப்ராம்ஹணர்) இந்த உலகத்தின் வாசனையை விட்டுவிட்டு பித்ரு தேவ வடிவத்தில் அதிகம் ஈடுபாடு தோன்றும். இந்த இடங்களில் போக்தாக்கள் – அதாவது வரணம் செய்யப்பட்டவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை ஒரு அட்டவணையாக தனியாக கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்துக் கொள்ளவும். இந்த காலத்தில் வாத்தியார் யாரும் இவர்கள் சொல்லவேண்டியதை சொல்லி சொல்ல வைப்பது இல்லை. சிராத்தம் செய்கிறவர்கள் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக் கொண்டு போய் விடுகிறார்கள். சிரத்தை உள்ளவர்கள் இதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

சமீபகாலமாக நான் சிராத்தம் செய்ய வேண்டியிருப்பதால் இவற்றை அச்சிட்டு வருகிறவர்களுக்கு ஆளுக்கு ஒன்று கொடுத்து விடுகிறேன்.. அவர்களுக்கு புதிதாக இருக்கிறது. இருந்தாலும் வாத்தியார் அதை பார்த்துவிட்டு அவர்களுக்கு அந்த இடத்தை சுட்டிக்காட்டி இதை சொல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

விஸ்வேதேவரிடம் நாம் கேட்டுக்கொண்ட பின் அதை அவர் அங்கீகரிக்க வேண்டும். அந்த ஸ்தானத்தை பெறவேண்டுமென்று கர்த்தா வேண்ட அவரும் ‘அப்படியே ஆகட்டும். அந்த வரணத்தையும் ஸ்தானத்தையும் அடைந்தேன்’ என்றவர் பதில் சொல்ல வேண்டும். இப்போது அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதில் ஏன் நாம் கவனம் கொள்ள வேண்டும் என்பது புரிந்திருக்கும். அவர் ஏற்கவில்லை என்றால் நாம் மேற்கொண்டு சிராத்தம் செய்வதில் அர்த்தமில்லை, இல்லையா?

இதேபோல பித்ருக்கள் இடம் சென்று பூணூலை இடம் ஆக்கிக் கொண்டு அவர் கையில் தீர்த்தம் அளித்து கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி பித்ரு ரூபம் அடைந்த எனது தந்தை அல்லது தாய்க்கு பார்வண விதிப்படி செய்யும் சிராத்தத்தில் என்று சொல்லி மறுபடியும் கோத்திரத்தைச் சொல்லி வசு ருத்ர ஆதித்ய வடிவினர் ஆன பித்ரு பிதாமகர் பிதாமஹர் ஆகியோருக்கு இதம் ஆசனம் என்று சொல்லி அவர் காலடியில் இரண்டாக மடித்து முறுக்கின தர்பங்களை போடவேண்டும். பிறகு அவர் கையில் தீர்த்தம் கொடுக்க வேண்டும். மீண்டும் பித்ரு பிதாமஹ பிதாமஹ ஆகியவற்றுக்காக தாங்கள் அந்த வரணத்தை ஏற்று அந்த ரூபத்தை பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொல்வார். இந்த இடத்தில் ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பெண்களுக்கு ஒரு மாதிரியும் இலக்கணப்படி சொல்லப்படும். அதற்குள் நாம் இங்கே இப்போது போக வேண்டாம்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 9ஶ்ராத்தம் – 11 >>

About Author

One Reply to “ஶ்ராத்தம் – 10”

  1. ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

    மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ஸ்வாமி. அதிக கவனத்துடன் செய்யவேண்டிய கடைபிடிக்கவேண்டிய கர்மா இந்த ஸ்ரார்த்தம். இதை சரியாக சொல்பவர்கள் இன்று மிக குறைவு பண்ண வேண்டியவர்கள் கடமையே என்றும் வாத்தியார்களும் நமக்கென்ன காசு வந்தா போதும் என செய்பவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த விஷயத்தில் அடியேன் பாக்கியவான். மிக நல்ல வாத்தியார் கிடைத்திருக்கிறார்.

    தொடருங்கள் எம்பெருமான் அனுக்ரஹம் எப்பொழுதும் தேவரீருடன்.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.