ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 20

This entry is part 20 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் – 2

ஆமாம், நாம் கிழக்கு நோக்கி உட்கருவோம் என்று தெரியும்தானே? சரி சரி, எதற்கும் சொல்லிவிடலாம் என்று…

வடக்கே 12 தர்பங்களை பரப்ப வேண்டும். அவற்றின் மீது ஒன்றொன்றாக ஹோம பாத்திரங்களை கவிழ்த்து வைக்க வேண்டும். இதுவே தேவ காரியத்தில் இரண்டு இரண்டாக கவிழ்த்து வைப்போம். முக்கியமான ஹோம கரண்டி, நெய் பாத்திரம், வருணனை ஆவாஹனம் செய்ய ப்ரணிதா பாத்திரம், ப்ரோக்‌ஷணம் செய்ய பாத்திரம், நெய் எடுக்க சின்ன கரண்டி, சமித்துகள் இவை வைக்கப்படும். கரண்டிக்கு பதிலாக பலாச இலைகளை பயன்படுத்தலாம். இது உசிதமானது. சௌகரியமும் கூட. பூச்சி அரிக்காமல், கிழியாமல் இருக்க வேண்டும். (வாய்ப்பு இருப்பவர்கள் என்னைப்போல வீட்டில் வளர்க்கலாம்.)

அடுத்து இரண்டு தர்பைகளால் செய்த பவித்ரத்தை கையில் வைத்துக் கொண்டு, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தொட்டு ப்ரோக்‌ஷண பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கும் அக்னிக்கும் நடுவே எட்டு தர்பங்களை வடக்கு நுனியாக போட்டு, அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். இதில் சிறிது அட்சதையும் நீரும் சேர்க்க வேண்டும். இந்த பவித்திரத்தை வடக்கு நுனியாக பிடித்துக் கொண்டு வலது கையால் மறுமுனையில் பிடித்துக்கொண்டு இதைத் தண்ணீரில் முக்கி, கிழக்கு பக்கமாக மூன்று முறை தள்ள வேண்டும். இது தண்ணீரை சுத்திகரிக்கும் கர்மாவாகும். பிறகு எல்லா பாத்திரங்களையும் நிமிர்த்த வேண்டும். சமித்துகளின் கட்டை அவிழ்க்க வேண்டும். பிறகு இந்தத் தண்ணீரால் எல்லா பாத்திரங்களையும் மூன்று முறை புரோக்‌ஷணம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை தெற்கே வைக்க வேண்டும். கூடுதலாக நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு பிரணிதா பாத்திரத்தை எடுத்து முன்போலவே அட்சதை நீர் விட்டு, பவித்ரத்தால் மூன்று முறை கிழக்கு பக்கமாக தள்ளி சுத்திகரித்து, மூக்கு மட்டத்திற்கு அதை தூக்கி அக்னிக்கு வடக்கே பரப்பி வைத்திருக்கும் மேலும் 12 தர்பங்கள் மீது இதை வைக்க வேண்டும். இதை 6 தர்பங்களால் மூட வேண்டும். இதில் வருணன் தேவதையை ஆவாஹனம் செய்யப்போகிறோம்.

உபவீதியாகி ‘வருணாய நமஹ, ஸகலாராதனை ஸ்வர்சிதம்’ என்று சொல்லி அட்சதை இந்த பாத்திரத்தின் மேல் போட வேண்டும். மேலே இந்த ஹோமத்தை செய்வதற்காக வாத்தியாரை பிரம்மாவாக வரணம் செய்ய வேண்டும். இந்த பிரம்மா என்பவர் ஹோமத்தில் முழு சொரூபத்தை அறிந்திருப்பார். எங்கே எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஏதேனும் தவறுகள் நடந்தால் அவற்றுக்கு பிராயச்சித்தம் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும்.

இப்படித்தான் இஷ்டிகளில் ஒரு பிரம்மாவை வரணம் செய்வோம். அங்கே அடிக்கடி உத்தரவு கேட்பார்கள்; அவரும் செய் என்று உத்தரவு கொடுப்பார். ஆனால் இங்கே அப்படி இல்லை ஒரே ஒரு முறைதான் சமித்துகளை போடும் முன் அனுமதி கேட்டு அவரும் அனுமதி கொடுப்பார்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 17ஶ்ராத்தம் – 21 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.