ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 40

This entry is part 40 of 44 in the series ஶ்ராத்தம்

வைஶ்வதேவம் செய்யும் புண்ணியவான் சிராத்தம் முடிந்து செய்யலாம். ஆனால் அதற்காக தனியாக பாகம் செய்து செய்ய வேண்டும்.

சிராத்தம் செய்து முடித்து சேஷத்தை கர்த்தா சாப்பிடாவிட்டால் விஶ்வேதேவர்கள் ஹவிஸை ஏற்பதில்லை. கவ்யங்களை பித்ருக்களும் எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே அவசியம் பித்ரு சேஷத்தை சாப்பிட வேண்டும். ஏகாதசி விரதம் இதனால் கெட்டுப் போகாது. கர்த்தா நீங்கலாக மற்றவர்களுக்கு கெட்டுப் போகும் என்று தோன்றினால் குறைந்தது முகர்ந்து பார்க்க வேண்டும். பழம் காய்கறிகள் வியஞ்ஜனங்கள் பால் தயிர் நெய் தேன் இவற்றுக்கு பித்ரு சேஷம் என்ற தோஷம் இல்லை. மிகுந்து போனதை யாரும் சாப்பிடலாம்.

ஒருவேளை பசி இல்லை என்றால் கூட எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.
அடுத்து இந்த சிராத்த தினத்தில் சிரார்த்தம் செய்தவன் சிராத்தம் உண்டவன் ஆகியோருக்கான நியமங்களை பார்க்கலாம். இவர்கள் அன்று இரவு முழுவதும் பிரம்மச்சர்யத்துடன் இருக்க வேண்டும். மீண்டும் புசிப்பது, வழி நடப்பது, வாகனத்தில் ஏறுவது, தேகப்பயிற்சி செய்வது, ஸ்த்ரீ சங்கமம் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது. வேதம் சொல்லுவது, பகலில் தூங்குவது, வேறு யாரிடமும் தானம் வாங்குவது, பாரம் சுமப்பது ஆகியவற்றையும் செய்யக்கூடாது .

ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.

பரேஹணி தர்ப்பணம்

இந்த தர்ப்பணம் நடக்காமல் சிராத்தம் பூர்த்தி ஆவது இல்லை என்பதால் கர்த்தா இடையில் பிராமணர்கள் அல்லாதவருடன் பேசக்கூடாது. முடிந்தவரை மௌனமாகவே இருந்து விட வேண்டும். அடுத்த நாள் விடிகாலையில் சூரியன் உதயமாகும் முன்னர் இதை செய்ய வேண்டும். ஹிந்துக்கள் கணக்குப்படி சூரியன் உதயமானால்தான் அடுத்த நாள் என்பது ஆரம்பிக்கிறது. தேவையானால் மலஜலம் கழித்து, கை கால் முகம் அலம்பி துடைத்துக்கொண்டு ஆசமனம் செய்து பரேஹனி தர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். (வேறு புத்தகத்தில் ஸ்னானம் சொல்லி இருக்கிறது) இது அமாவாசையில் தர்ப்பணம் போலவேதான். கூர்ச்சம் உண்டு. பித்ரு ஆவாஹனம் உண்டு. ஆனால் யாருடைய ஸ்ரார்த்தமோ அந்த வர்க்கத்தை மட்டுமே ஆவாஹனம் செய்ய வேண்டும். அப்பாவுக்கு சிரார்த்தம் ஆனால் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ என்று மட்டும் ஆவாஹனம். அதேபோல அம்மாவுக்கான ஸ்ராத்தம் ஆனால் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹி என்று மட்டும் ஆவாஹனம். அமாவாசை தர்ப்பணம் போலவே செய்து முடிக்க வேண்டும். தர்ப்பங்களை பிரித்து எறிந்து ஆசமனம் செய்தபிறகு பல் துலக்குவது போன்ற தினசரி வேலைகளை ஆரம்பிக்கலாம்.

இத்துடன் ஶ்ராத்தப்பிரயோகம் முடிகிறது.

Series Navigation<< ஶ்ராத்தம் – 39ஶ்ராத்தம் – 41 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.