ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-13

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி – முந்தைய பாடல்கள்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் = குவளை மலர்களின் கருங்குவளைப் பூக்கள் நிறைந்தும், செந்தாமரை மலர்கள் நிறைந்தும் காணப்படும் திருக்குளத்தில், நீர்ப்பறவைகளும் நிறையவே இருந்தனவாம். குருகினம் என்றால் பறவையினம். அவைகள் போடும் கீச் கீச்சென்ற சப்தமும் நிரம்பிக் குளக்கரையே சல்லென்ற சப்தத்தால் நிரம்பி இருந்ததாம். ஒருபக்கம் வண்டுகளின் ரீங்காரம், மற்றொரு பக்கம் பறவைகளின் கலகலத்வனி. இன்னொரு பக்கம் குளிக்க வரும் பெண்களின் கைவளைகள் சப்தம், கால் சிலம்புகள் சப்தம், இதற்கு நடுவே மரங்களின் மர்மர சப்தம், அத்தனைக்கும் நடுவே குளிக்கும் பெண்களின் நமசிவாய என்னும் மந்திர சப்தம், என நிரம்பி இருக்கும் குளக்கரையில்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த= இதை வெளிப்படையாய்ப் பார்த்தால் மலம் கழித்துவிட்டு வந்து கழுவுவதை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் நம் மும்மலமாகிய ஆணவன், கன்மம், மாயை போன்றவற்றையே குறிக்கும். அத்தகைய மும்மலங்களை இத்திருக்குளத்தில் நீராடி ஈசன் திருநாமத்தை உச்சரித்து அவனையே தியானிப்பதன் மூலம் கழுவலாம் என்பது மணிவாசகர் கூற்று. இங்கே திருக்குளத்தைப் பிராட்டியும் ஈசனும் போல எனக்குறிப்பிட்டிருப்பதும் பொருந்தி வரும்.

https://paytm.business/link/49115/LL_423965736
Click here to donate for server to keep the site going

பொதுவாக நீர்நிலைகளைப் பெண்ணாகவே வழிபடுகிறோம். திருக்கைலையும், மானசரோவர் ஏரியும் ஈசனும் அம்மையும் இணைந்திருப்பதாகவே ஐதீகம். அதேபோல் மாணிக்கவாசகர் திருவண்ணாமலை ஐயனின் உருவமாக வழிபட்டதால், திருக்குளத்தை அம்பிகையாக எண்ணி இருவரும் இணைந்திருக்கும் அர்த்தநாரீசுவரக் கோலம் என்று கூறுகிறார். மேலும் குவளை மலரின் கரிய நிறமானது அம்பிகையின் கரிய நீண்ட கண்களையும் செந்தாமரை மலரின் செந்நிறமானது ஈசனின் சிவந்த திருமேனியையும் சுட்டுவதாயும் கூறுகிறார். அதோடு குருகு என்பதும் அம்பிகையின் கைவளையல்களையும் அவை எழுப்பும் சப்தத்தையும் குறிப்பதோடு அரவம் என்பது இங்கே பாம்பையும் குறிப்பதால் நீர்ப்பாம்புகள் ஐயனின் ஆபரணங்களாய்த் தோற்றமளித்ததாயும் கூறுகிறார்.

பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!= ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பொங்கி மேலெழுந்து வருகிறதாம். குளங்களுக்குள்ளே ஆழமாக மடுவென்று ஒரு இடம் உண்டு. அதுதான் ஊற்றுக்கண் என்பார்கள். அந்த ஊற்றுக்கண் ஆழம் அதிகம் என்பதால் மடுப்பக்கம் போகவேண்டாம் என்பார்கள்.

ஆனால் இங்கேயோ இந்தப் பெண்கள் அத்தகைய ஆழமான பொங்கும் மடுவுக்குள்ளும் பாய்ந்து புகுந்து அவர்கள் கால் சிலம்புகள் சப்திக்கவும், ஈசன் திருநாமத்தைச் சொல்லி நீராடும்போது பூரிக்கும் மனதையும் கூறுகிறார். இத்தகைய பூரிப்பான மகிழ்வான எண்ணங்களோடு குடைந்து குடைந்து நீராடும்போது குளத்து ஆழத்து நீரும் மேலெழும்பும். அவாறு குளித்து ஈசன் புகழைப்பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். இங்கே கொங்கைகள் என மார்பைச் சுட்டி இருப்பது பக்தியின் குறியீடு. பக்தி மேலீட்டினால் இதயம் விம்முவதையும், மகிழ்வினால் விம்முவதையும், நாம் பலமுறை உணர்ந்திருப்போம் அல்லவா?

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.