இன்று திருவோணம் என்பதால் இந்த சிறப்பு பதிவு. திருவோண நட்சத்திரத்தின் அதிபதியும் திங்கட்கிழமையின் அதிபதியும் சந்திரனே. எனவே திங்கள் கிழமை வரும் திருவோணம் மிக சிறப்பு வாய்ந்தது. சந்திரனே மனோகாரகன். அதனால்தான் என்னவோ என் மனதில் நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென நினைத்த இந்த பதிவு இன்று வெளியாகிறது.
உங்களுக்கெல்லாம் திருவோணம்னா என்ன ஞாபகத்துக்கு வரும்?
கேரளா, மகாபலி சக்கரவர்த்தி, படகு போட்டி, ஸ்கூல் லீவு. நான் ஒரு தீவிர கமல் ரசிகை. அதனால் எனக்கு இது கூட சேர்ந்து “சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்” பாட்டும் ஞாபகத்துக்கு வரும். ஆனா இது சினிமா பதிவல்ல.
என் வாழ்க்கைல திருவோணத்தால் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ந்ததில்லை. சிலது உடனே தெரியவரும். சிலது சில வருடங்களில் தெரிய வரும். எனது நேர்த்திக்கடன் பதிவு படித்தால் உங்களுக்கு புரிய வரும். லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன்.
அந்த மாதிரி தாமதமாக நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் பற்றி தான் இப்போது கூறப் போகிறேன். ஆமாங்க நான் கொஞ்சம் லேட் பிக்கப் தான்.
இதை படிக்கும் உங்களில் சிலர் கூட திருவோணம் நட்சத்திரமாக இருக்கலாம். அல்லது திருவோணத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தால் என்னை சுற்றி “பல கோணங்களில் திருவோணம்” (நட்சத்திர அன்பர்கள்)
உங்க எல்லார்க்கும் உப்பிலியப்பனை தெரியும்.தாயாரின் திருமணத்தின் போது என் குழந்தைக்கு உப்பு போட்டுக் கூட சமைக்கத் தெரியாத அறியாப் பெண் இவள் என்று பெற்றோர் இயம்ப, உப்பில்லாமல் சாப்பிடுகின்றேன் என்று பெருமாள் சொன்னாராம். அன்றிலிருந்து இத்திருத் தலத்தில் உப்பிலா நைவேத்தியம் செய்யப்படுகிறது.
எனக்கு இந்த உப்பிலியப்பனை ரொம்ப பிடிக்கும்.Best Husband & best மாப்பிள்ளை இவர். என் பொண்ணுக்கு உப்பு போட்டுக் கூட சமைக்கத் தெரியாதுனு மாமனார் சொல்றப்போ, எனக்கு அந்த உப்பே வேணாம், உங்க பொண்ணை மட்டும் கொடுங்கனு கேட்கறாரே. அங்கே நிற்கிறார் இந்த உப்பிலியப்பன் யாருக்குமே ஒப்பில்லாத அப்பனா!
சீராட்டி வளர்த்த பெண்ணை, ‘எங்கே அவளுடன் தன் குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன் பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே! அந்த வகையில் சாமர்த்தியசாலிதான் – ஆனால் அவருக்குத் தெரியாம போச்சு, இதுதான் சாக்கென்று நாம ‘இதைச் சொல்லியே கோயில் உப்புக் கணக்கில் சிக்கனம் செய்வோமென்று!’ – for everything there is price to pay என்று பேயாழ்வாரின் மாப்பிள்ளைக்கு தெரியாமல் போனதுதான் ஆச்சர்யம்.
எனக்கு இதில் இப்பவும் சுவாமிக்கு தாயார் மீது இருக்கும் அழகான காதலாகத் தான் தெரிகிறது. அதுவுமின்றி இங்க உப்புக்கெல்லாம் கணக்கு பார்த்து சிக்கனம் பண்ணினாத் தானே இன்னோரு பக்கம் வட்டி கட்டனும் இந்த திருவோணத்தான். அதனால் நல்ல பட்ஜெட் போடற சிறந்த குடும்பஸ்தன் கூட….
14 வருசம் முன்ன என் பாட்டி எனக்கு நல்ல இடத்துல கல்யாணம் ஆகனும்னு 27 திருவோணம் உப்பில்லா விரதம் இருப்பதாக உப்பிலியப்பன்ட்ட வேண்டிக்கிட்டாங்க. 3வது திருவோணம் முடிஞ்ச 6ம் நாள் ரேவதில எனக்கு கல்யாணம் முடிந்து விட்டது. 4வது திருவோணம் விரதம் இருக்க பாட்டி உயிருடன் இல்லை. இது ல என்ன விசேஷம்னா எங்க வீட்டுக்காரர் திருவோணந்தான்.
அதுக்கு பிறகு புதுசா நிறைய திருவோணத்துக்காரங்க கூட பழக்கமாச்சு. திரும்பின பக்கம் எல்லாம் திருவோணமாச்சு. ஆழி சூழ் உலகு போல என்னோடது திருவோணம் சூழ் உலகு. பொதுவாகவே யார் கூடவும் அதிகம் பேசாத திருவோணக்காரர்கள் என்னிடம் எளிதாக பேசுவார்கள். என் ஆத்மார்த்தமான தோழி ஒருவர் (அவரும் திருவோணந்தான்) கூறியது பின்வருமாறு:
ஶ்ரீராமர் புனர்பூசம் (நானும்). அவருக்கு உதவிய விபிஷணர் திருவோணம். அதனால தான் நீங்க சீக்கிரம் திருவோணத்துக்கிட்ட பழக்கம் ஆகிடறீங்க
என்னை தனியா விட்டுட்டு போக கூடாதுனு என் பாட்டி கடைசியா உப்பிலிகிட்ட பொறுப்பை விட்டுட்டு போக, அந்த திருவோணத்தான், இன்னோரு திருவோணமான என் வீட்டுக்கார்ட்ட ஜாயின் பண்ணிட்டார். அந்த உப்பிலியப்பன் பொண்டாட்டிக்காக உப்பே வேணாம்னார். எங்க வீட்டுக்காரர் என்ட்ட சண்டை போட ஒரே காரணம் என் சமையல்ல உப்பு அதிகம். இவர் என்னடான்னா உப்பும் வேண்டாம் நீயும் வேண்டாங்கிறார்.
ஜோதிட ரீதியாக பார்த்தால் எனக்கு யோகத்தை தரக்கூடிய நட்சத்திரம் “திருவோணம்”. அதற்குரிய நட்சத்திர அதிபதி சந்திரன்.என்னுடைய கரண நாதனும் சந்திரனே. எனவே தான் சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரக் காரர்கள் மற்றும் சந்திரன் உச்சமாகும் ரிஷப ராசி அன்பர்கள்தான் என் நட்பு வட்டத்தில் அதிகம்.
ஏனென்றால் சந்திரன் எனக்கு அமித்த காரகன். அதாவது இரண்டாவதாக அதிக பாகை பெற்ற கிரகம். 23°. (HD- Highest degree)
அதென்ன HD? (Highest Degree)LD ? (Lowest Degree)
HD – நம் ஜனன கால ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரகத்தின் காரகத்துவங்கள் நமக்கு எளிதில் கிடைக்கும். அதை தேடி நாம் போகத் தேவையில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.
LD – Lowest Degree. நம் ஜனன கால ஜாதகத்தில் இருப்பதிலேயே மிக குறைந்த பாகை பெற்ற கிரகத்தின் காரகத்துவங்கள் நமக்கு அவ்வளவு எளிதில் கிடைத்திடாது. வாழ்நாள் முழுதும் நாம் தேடி அலைய வேண்டும். அலைந்தாலும் கிடைக்காது.
இப்படி எல்லா காரியங்களுக்கு பின்னும் ஏதோ சில காரணங்கள் உள்ளன.இயல்பாகவே நமக்கு சில விஷயங்கள் உடனே நடக்கும். சிலது நிறைவேறாது. அதற்கு, நமக்கு அவயோகத்தை தரும் கிரகங்கள் எவை?
அதை தொடர்ந்து பலமாக இயக்குவது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். நன்றி.
நேர்த்திக்கடன் பதிவின் லிங்க்: