மழை தொடங்கிவிட்டது.இப்படித்தான் உள்ளும் புறமும் பொழிந்து கொண்டிருந்த இதே நாளில் (ஜூன் 18) பதினோரு வருடங்கள் முன்பு மும்பை வந்து சேர்ந்தோம்.
1985 இல் இருந்து 2011 வரை கிட்டத்தட்ட 26 வருடங்கள் டெல்லியில் இருந்து விட்டு மும்பைக்கு கிளம்பும் போது மெல்லிய தயக்கம் இருந்தது. புதிய மொழி, புதிய சூழல், புதிய கலாச்சாரம்… தாக்குபிடிக்க முடியுமா என்கிற பயம் இருந்தது ஆனால் கொஞ்ச நாட்களிலேயே எல்லாம் சகஜமாகிவிட்டது போலத் தோன்றியது பணியில் சந்தித்த முதல் குழப்பம் சக பணியாளர்களின் பெயர்கள் . கிட்டத்தட்ட 26 வருடங்கள் டெல்லியில் ஒரே இடத்தில் வேலை. எனவே,ஏறக்குறைய ஆண்கள்,பெண்கள் எல்லோரையும் அவர்களின் குடும்ப விவரங்களோடு பழக்கம்.
ஆனால் இங்கு கூட பணிபுரிபவர்களின் பெயர்கள் அவர்களின் கிராம் மற்றும் குடும்ப பெயர்களுடன் சேர்ந்து நீளமாக இருந்தது. ஒரே பெயர் கொண்டவர்கள் ஒரு டஜன் பேராவது இருந்தார்கள். அவர்களது குடும்ப பெயர் அல்லது ஊரின் பெயரை வைத்தே அவர்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ராணே, குல்கர்னி, கதம், ஷிண்டே, பவார், நல்வாடே, தன்வாடே, கோல்டே, ஜாதவ்,இங்க்லே, பிங்கிலேஆப்டே,காலே, மோரே, ரண்கம்பே… இதைத்தவிர ஊர்ப்பெயர்கள் கொண்ட கட்காவ்ன்கர், பட்காவ்ன்கர், பருலேகர், மார்க்கர், வெங்குர்லேகர்,கராட்கர்,பாடன்கர்,யோவ்லேகர் தேவுல்கர்…இத்யாதி.
அதற்குப் பின் வந்த வருடங்களில் சிங்க மராட்டியர்களின் சமூக அமைப்புகள் லேசாகப் புரிய ஆரம்பித்தது. மும்பையை அடுத்த தாணேவிலிருந்தும் புணே போகிற வழியில் இருக்கும் சுற்றுப்பட்டு கிராமங்களிலிருந்தும் அலுவலகப் பணியாளர்கள் பெரும்பாலும் வந்தார்கள். மாலை நடை போகும் வழியில் வடா பாவ் வண்டிக்காரர் சினேகமாக சிரிக்கத் தொடங்கினார்.மவ்ஷி, இன்று என் கடையிலிருந்து காய் வாங்கிக்கொள் என்று மராட்டிய பெண்கள் கையைப் பிடித்து இழுத்து வம்படியாக காய்கறி விற்றனர். மும்பை கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் இறங்கிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
– இன்னும் வரும்
தொடக்கம் சுவாரசியம். தொடருங்கள்
👌 வாழ்த்துக்கள்
என் பூனா வாழ்க்கை அப்படியே நினைவுக்கு வருது. ஆமாம் ஏன் ஜோஷியைக் காணோம் 🙂