மும்பை நினைவுகள் – 3

This entry is part 1 of 9 in the series மும்பை நினைவுகள்

இது இப்படி என்றால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ,விநாயகர் சதுர்த்திக்கு மால்வன்,கொங்கண் போன்ற பகுதிகளில் இருக்கும் தத்தம் சொந்த ஊர்களுக்கு போவார்கள். பொதுவாக எல்லோருக்கும் இங்கு ஒரு வீடும் கிராமத்தில் ஒரு வீடும் இருக்கும். ஒவ்வொரு ஏரியாவில் இருந்தும் மக்கள் தனிப் பேருந்து ஏற்பாடு செய்துகொண்டு சொந்த ஊருக்குப் போவார்கள். கிராமத்தில் இருக்கும் தங்கள் பாரம்பரிய வீட்டை வெள்ளையடித்து, சுத்தம் செய்து கணபதியை அமரவைத்து பூஜைகள் செய்து ஆடிப்பாடி கொண்டாடி அலுத்துக் களைத்து சந்தோஷமாக, அடுத்த வருடம் வரையில் தாக்குப்பிடிக்கிற மாதிரி சக்தியை சேகரித்துக்கொண்டு திரும்புவார்கள. மூன்று மாதம் முன்னதாகவே விடுமுறைக்கு விண்ணப்பித்து, ரயில் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்துவிட்டு, குடும்பத்துடன் ரொம்பவும் சந்தோஷமாக ஊருக்குப் போவார்கள்.

கணேசரை வீட்டுக்கு அழைத்து, அமர்த்தி, பூஜை செய்த கையோடு, அவரது தாய் கௌரியும் அழைக்கிறார்கள். கௌரிக்கு கணேசர் மிகவும் பிரியமானவர். எனவே, அவரைக் காண்பதற்காக, கௌரி பூமிக்கு வருவதாக ஐதீகம். பொதுவாக கௌரி பூஜை மூன்று நாட்கள் நடத்துகிறார்கள். முதல்நாள் கௌரியை வரவேற்று இரண்டாம் நாள் பூஜை செய்து மூன்றாம் நாள் வழி அனுப்புகிறார்கள் .சிந்தூரம் சந்தனம்,மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு,ஊதுபத்தி, விசேஷ நைவேத்தியங்கள் போன்றவைகளை கௌரிக்கு படைப்பார்கள். ஐந்து தட்டுகளில் பெண்களின் அலங்காரப் பொருட்கள்,புடவைகள், பரிசுகள் பணம்,வளையல், மாலை போன்ற ஆபரணங்கள், தின்பண்டங்கள் போன்றவற்றை வைத்து, ஐந்து பெண்களுக்கு கொடுப்பார்கள். ஐந்து வித மலர்கள்,காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றையும் கௌரிக்கு படைப்பார்கள். கௌரி, இப்பெண்களின் மூலமாக அவர்கள் அளிப்பதை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மூன்றாம் நாள் வழி அனுப்புவதற்கு முன்பு ஆரத்தி எடுத்தபின், ஒரு மூட்டையில் தயிரில் ஊற வைத்த அவல் அல்லது தயிர் சாதத்தையும் படைப்பார்கள். கௌரி திரும்பிப் போகிற வழியில் அந்த மூட்டையிலிருந்து சாப்பிட்டுக் கொள்வாள் என்று நம்புகிறார்கள். இந்த வருடம் வந்திருந்து சிறப்பித்ததற்காக நன்றியும் அடுத்த வருடம் சீக்கிரமே மகனுடன் வரவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து பாட்டு பாடி வழி அனுப்பி வைக்கிறார்கள். இப் பூஜைகளிலும் கொண்டாட்டங்களிலும் ஆண்களுக்கு அனுமதி இல்லை

நான் பங்கு பெற்ற கௌரி பூஜையில் கிட்டத்தட்ட ஆளுயர கௌரியைப்பார்த்து அசந்து போனேன். அந்த கௌரிக்குக் கொஞ்சம் ஐஸ்வர்யா ராய் சாயல் இருந்தது. தினமும் வெவ்வேறு வண்ண புடவைகளால்கௌரியை அலங்கரித்து, பூச்சூட்டி, ஆபரணங்கள் அணிவித்து மகிழ்கிறார்கள். புதுமணப் பெண்கள்,முதல் மங்கள கௌரி பூஜையை வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

கௌரி பூஜை நடக்கும் மூன்று நாட்களும் பெண்கள் இரவு முழுவதும் விழித்திருந்து பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். ஜிம்மா ,ஃபுகு டி போன்ற விளையாட்டுகள் பிரசித்தி பெற்றவை. ஜிம்மா நம் பக்கத்து கோலாட்டம் அல்லது கும்மியை ஒத்தது. ஒருவரையொருவர் சீண்டி கேலி செய்து மகிழ்கிற வகையில் இதன் பாடல்கள் அமைந்திருக்கின்றன ஃபுக்டி,

நம் குழந்தைகள் ஒரு கையையோ அல்லது இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டோ சுற்றும் தட்டாமாலை போன்றே இருக்கும் பாடல்களைப் பாடியவாறே, கைகளைக் கோர்த்துக்கொண்டு வட்டவடிவில் சுழன்று மகிழ்கிறார்கள். முழு இரவும் இப்படியே ஆடலும் பாடலுமாய் கழியும். இதற்காக ஆண்டு முழுவதும் மனதில் எதிர்பார்ப்புகளை சுமந்துகொண்டு இப்பெண்கள் காத்திருக்கிறார்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் நெருங்க செய்வதில் இப்பண்டிகைகள் பெரிதும் உதவுகின்றன.

மூன்றாம் நாள், கௌரியை வழியனுப்புகிற தினம்,ஆளுயர கௌரிக்கு அணி வித்திருக்கும் நகைகளை கழற்றிவிட்டு, குளத்தில் கௌரியை கரைக்க எடுத்துச் செல்வார்கள் .சில இடங்களில் கௌரியும் விநாயகரையும் ஒருசேர கரைக்கிறார்கள் திரும்பி வருகையில் ஒரு பிடி மண் கொண்டுவந்து வீட்டில் வைத்து வருடம் முழுவதும் அதை கௌரியாக பாவித்து, வழிபடுகிறார்கள் கௌரியை வழியனுப்புகையில் தன் பெண்ணை பிரிவது போல உணர்ச்சிப்பூர்வமாக கண்ணீருடன் பிரிகிறார்கள்.

Series Navigationமும்பை நினைவுகள் – 2 >>மும்பை நினைவுகள் – 4 >>

About Author

One Reply to “மும்பை நினைவுகள் – 3”

Comments are closed.