கற்றது கைம்மண்ணளவு

சொர்ணம்….

உன் பிள்ளைட்ட சொல்லி கொஞ்சம் எருக்க இலை பறிச்சிண்டு வரச்சொல்லு.
நாளைக்கு ரத ஸப்தமி.
ஸந்தி பண்ணி முடித்த ஈஸ்வரய்யரிடமிருந்து வந்தது குரல்.

ம்ம்ம்க்க்கும்.
இத்தனை நேரம் இங்க தானே இருந்தான். நீங்களே சொல்லிருக்கப்படாதா? அலுத்துக்கொண்டாள் சொர்ணம்.

அவன் தானே! நா சொன்னா உடனே கேட்டுடப்போறானாக்கும். ஆயிரம் குதர்க்க கேள்வி கேட்டு நக்கல் நையாண்டி பண்ணிட்டு என் வயித்தெரிச்சல கொட்டிண்டு போவான். பண்ண பாவம் ஒரு நாஸ்திகன் புள்ளையா வந்து பொறந்திருக்கு”….

அறிவு பூர்வமா கேள்வி கேட்டா உடனே நாஸ்திகன்னு திட்டறதா என மாடியிலிருந்து பிள்ளையும் பதிலுக்கு எகிற அடாடாடா ஆரம்பிச்சாச்சா உங்க சண்டைய என அலுத்துக்கொண்டே நகர்ந்தாள் சொர்ணம். இது அவர்கள் வீட்டில் அன்றாடம் நடக்கும் விஷயம் தான்.

அப்பா எது சொன்னாலும் ஏட்டிக்கு போட்டி கேள்வி கேட்கும் பிள்ளை.
அதனால் எரிச்சலடையும் அப்பா.

தாயே மீனாட்சி எதிரும் புதிருமா நிக்கற இவாளை நீதான் ஒத்துமையா இருக்க வைக்கணும். மனப்பூர்வமா வேண்டிக்கொண்டாள் சொர்ணம்.
பாவம் விஸ்வா நல்ல பிள்ளை தான். என்ன, இந்தத் தலைமுறைக்கே உரிய துடுக்குத்தனமும் கேள்வி கேட்டுக்குடையும் சுபாவமும் கொஞ்சம் அதிகம். எல்லாம் சரியாயிடும். நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டாள் சொர்ணம்.

அப்போது எதேச்சையா ஈஸ்வரய்யர் காதில் விழுந்தது பிள்ளையின் குரல். ஃபோனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்

"நௌமி ஸப்தமி தேவி த்வாம்
ஸப்த லோகைக மாதரம்
ஸப்தார்க்க பத்ர
ஸ்நானேன மம பாபம் வாயபோஹயே

ன்னு சொல்லி தலை, கண், தோள்ல எருக்க இலைய வெச்சிண்டு குளிக்கணும்டா.

பீஷ்மரோட பாபத்தையே போக்கின சக்தி வாய்ந்த எருக்க இலை ஏழு ஜன்மத்துல நாம பண்ண பாவத்தையும் போக்கும்ங்கிறது நம்பிக்கை.
எங்க தூரத்து சொந்தக்கார தாத்தா தான் இந்த ஸ்லோகத்தை எனக்குச் சொன்னார்.

ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா
தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு புராணத்துலயோ இதிகாசத்துலயோ, இலக்கியத்துலயோ நிச்சயமா குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனா யாருக்கும் எதைப்பற்றிய தெளிவுமில்ல .

நாம என்ன பண்றோம்?

தீபாவளியா பட்டாசு வெடிக்கணும், ரத சப்தமியா எருக்கெலை ஸ்நானம்னு . அதோட தாத்பர்யத்தை சரியா தெரிஞ்சுக்காம வெறும் சடங்கு சம்பிரதாயத்தோட நிறுத்திட்டோம்.

இன்னொண்ணு சொல்றேன், எல்லா விஷயங்களுக்கும் விஞ்ஞான விளக்கம் இருக்கணும்னு அவசியம் இல்ல. அதெல்லாம் மெய்ஞான அனுபவம் சம்பந்தப்பட்டதுன்னு உணரணும். நம்ம முன்னோர்கள் முட்டாளில்லன்னு நாம நம்பணும். எது செஞ்சிருந்தாலும் அதுக்கு காரணமிருக்கும்னு முழு மனசா ஏத்துக்கணும்.

அந்தக் காரணங்கள் என்னவா இருக்கும்னு புரிஞ்சுக்கணுங்கிற ஆர்வத்துல தான் எங்கப்பா கிட்ட நான் தொட்டதுக்கெல்லாம் கேள்வி கேக்கறது.

அவருக்கு பதில் தெரியலேன்னா எனக்கு நாஸ்திகப் பட்டம் தந்துடுவார்
பாவம்!”

கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரய்யருக்கு ஒரு உண்மை புரிந்தது…..தான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம் என.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.