Dahaad

Dahaad – என் பார்வையில்

சமீபத்தில் நான் பார்த்த வெப் சீரியஸ்களில் ஓரளவு தெளிவாக கதையை நகர்த்தி சென்ற க்ரைம் தொடர்களில் ” Dahaad “ சீரியஸும் ஒன்று. மொத்தம் 8 எபிசோட்கள் இருக்கும் முதல் சீசனில் ராஜஸ்தானை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளனர். கதை ஒரு க்ரைம் தொடருக்குண்டான பரபரப்பு இல்லாமல் சென்றாலும் தொடர்ந்து பார்க்க வைக்கிறது. அதற்காக இயக்குனர்களுக்கு ஒரு பாராட்டு. வழக்கம்போல் சில தேவை இல்லாத விஷயங்களையும் கதைக்குள் இழுத்துள்ளனர். அதை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் உறுத்துகிற விஷயங்கள் எதுவுமில்லை.

Dahaad – கதை

ராஜஸ்தான் மாநிலம் மண்ட்வா கிராமத்தில் ஒரு காதல் ஜோடி ஓடி சென்றுவிடுகிறது. காதலன் முஸ்லீம் காதலி அந்த கிராமத்து பணக்காரர் மற்றும் ஜாதி கட்சி எம் எல் ஏ வீட்டுப் பெண். பெண் தரப்பில் அது லவ் ஜிகாத் என சொல்லப்பட போலீஸோ அவர்கள் விரும்பி சென்றனர் என சொல்கின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு ஏழையின் தங்கை காணாமல் சென்று புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. காதலன் முஸ்லீம் என சொன்னால் ஆதரவு கிடைக்கும் என்று அந்தப் பெண்ணின் அண்ணன் இப்பொழுது மீண்டும் மாற்றி சொல்ல , போலீஸ் விசாரிக்கத் துவங்குகிறது. விசாரிக்கும் பொழுது அந்தப் பெண் தற்கொலை செய்து இறந்து விட்டாள் எனத் தெரியவருகிறது.

அந்தப் பெண்ணின் அலைபேசி அழைப்புகளை வைத்து விசாரிக்கத் துவங்கும் பொழுது அவள் அழைத்த எண் வேறு ஒரு பெண்ணின் பேரில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து மேலும் விசாரிக்க அது ஒரு தொடர்கதையாய் சென்று 20க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜஸ்தானின் வெவ்வேறு கிராமங்களில் ஒரே மாதிரி தற்கொலை செய்து இறந்துள்ளது தெரியவருகிறது. இறந்த அனைத்துப் பெண்களும் இறப்பதற்கு முன்பு உடலுறுவு கொண்டுள்ளனர், அதே போல் பொதுக் கழிப்பறையில் சயனைட் உண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அனைவரும் கல்யாண பெண்ணைப் போல் உடை உடுத்தி இருந்தனர்.

இந்த தற்கொலைக்கு காரணமானவர் யார் அதை எப்படி காவல் துறையினர் நிரூபிக்கின்றனர் என்பதே மீதி கதை.

கிராமத்து போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டராய் சோனாக்ஷி சின்கா. நேர்மையான கண்டிப்பான ஆபிஸர் என்பதாலோ என்னவோ அனைத்துக் காட்சிகளிலும் கான்ஸ்டிபேஷன் நோயாளி போலவே முகத்தை வைத்துக் கொண்டு வருகிறார். மற்றபடி ஓரளவு நன்றாகவே நடித்துள்ளார்.

இன்ஸ்பெக்டராக ” குல்ஷன் “. மற்றுமொரு நேர்மையான போலீஸ். லஞ்சம் வாங்க மறுத்ததற்காக கிராமத்திற்கு மாற்றப்பட்டவர். இதில் எனக்கு பிடித்த பாத்திரப்படைப்பும் இவருடையதுதான். நேர்மையான அதிகாரியாக இருக்கட்டும். வீட்டில் மகளை படிக்க வைக்கவும் , போட்டியில் கலந்து கொள்ள மனைவியுடன் சண்டை போட்டாலும் பரவாயில்லை என மகளை தில்லிக்கு அனுப்ப போராடும் இடமும் சரி, மனிதர் அனாவசியமாக செய்துள்ளார். இவருக்கும் சோனாக்ஷிக்கும் கள்ள தொடர்பிருக்கிறது என மனைவி சந்தேகப்படும் இடங்கள் , வழக்கமான ஒரு மத்தியதர இந்தியக் குடும்பத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகள்.

வில்லனாக ” விஜய் வர்மா “. அலட்டிக்கொள்ளாமல் ஆர்பாட்டம் இல்லாத ஒரு நடிப்பு. ஒரு புறம் காலேஜ் ப்ரொபஸராகவும் வார இறுதிகளில் கிராமத்து குழந்தைகளுக்கு கதை சொல்பவராகவும் பணத்தின் மேல் ஆசை இல்லதாவராகவும் காட்டிக்கொண்டு மறுபுறம் பெண்களை தொடர்ந்து வேட்டை ஆடும் நபராகவும் மிக அருமையாக செய்துள்ளார் தனது பாத்திரத்தை.

இன்னும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் பெண்களுக்கு எதிரான நிலை கதை நெடுக வந்து கொண்டே உள்ளது. அதே போன்று ஜாதி வேறுபாடுகள் பார்க்கும் சமுதாயத்தை பற்றியும்.

கதையின் மிகப் பெரிய பலமாக நான் கருதுவது, வில்லன் யார் என தெரிந்தும் அதன் பின் கதை தொய்வடையாமல் அவனை எப்படி பிடிக்கின்றனர் எப்படி நிரூபிக்கினறனர் என கொண்டு சென்றுள்ளதே. இது போன்ற சீரியல் கில்லர் கதைகளில் வில்லன் தெரிந்துவிட்டால் கதையில் தொய்வு வந்துவிடும். அது இதில் இல்லை.

குறைகள்

சொல்ல வந்த கதைக்கும் லவ் ஜிகாதிற்கும் சம்பந்தம் இல்லை. அது இதற்கு வலிய திணித்துள்ளனர் என்றே புரியவில்லை. அதே போன்று கதாநாயகி , பிற்போக்கு சிந்தனைகளை வெறுப்பவள் எனக் காட்டுவதற்காக அவளை விட வயதுக் குறைந்த ஆண் நண்பனுடன் மொட்டை மாடியில் உறவு கொள்வதெல்லாம் கதைக்கு சம்பந்தமே இல்லாத ஒன்று. வில்லனின் மனைவியின் கள்ள உறவும் அதே போன்று சம்பந்தம் இல்லாத ஒன்று.

இந்தக் குறைகளை தவிர்த்து பெரிதாய் குறை ஒன்றும் இல்லை. கண்டிப்பாக பார்க்கலாம். அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்க இயலும்,

About Author