கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 3

This entry is part 3 of 4 in the series கங்கை உருவாகிறாள்

அலக்நந்தா, மந்தாகினி நதிகளின் சங்கமம்

காலை ஏழரை மணிக்கு தேவ் பிரயாக் நகரிலிருந்து பேருந்து மூலம் புறப்பட்டு 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ருத்ர பிரயாக் நகரை நான் வந்தடைந்த போது மணி ஒன்பதரை மணி! ஒரு பெரிய அரச மரம் அருகே தான் பேருந்துகள் நிற்கின்றன.  தனியாக பேருந்து நிலையம் என்று ஒன்றும் இல்லை.  அப்படி நின்ற இடத்தின் எதிரே இருந்த ஒரு உணவகத்தில் காலை உணவை (ஒரு மிக்ஸ் பராட்டா, தொட்டுக்கொள்ள காரமாக ஒரு சட்னி!  விலை 60 ரூபாய்) முடித்துக் கொண்டேன். 

கடைக்காரரிடம் சங்கமம் குறித்து விசாரிக்க, “வண்டி இருக்கா, கொஞ்சம் தூரம் என்றார்!” இல்லை என்றதுமே சரி இப்படியே நடந்து போங்க, வந்துடும்! என்று வேண்டா வெறுப்பாக பதில் சொன்னார்.  இப்படியான அனுபவங்கள் குறைவாகவே கிடைத்தாலும் கிடைக்கும்போது மனதுக்கு உவப்பாக இருப்பதில்லை.  சரி பரவாயில்லை என உணவகத்திலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன். கூகுளைக் கேட்க இரண்டரை கிலோமீட்டர் என்று காண்பித்தது!  பார்த்துக் கொள்ளலாம் என நடக்க ஆரம்பித்தேன். எதிரே ஒரு காவலாளி தென்பட, அவரிடம் விசாரித்தேன்.  சரியாக வழி சொல்லி அனுப்பினார். அவர் சொன்ன வழியில் சில நிமிடங்களில் சங்கமம் அருகே சென்று சேர்ந்து விட்டேன்.  ஒரு சந்தின் நுழைவுப் பகுதியில் இருக்கும் பதாகை பழமையான ருத்ரதேவ் கோவில் செல்லும்  வழி என்று தகவல் தந்தது.  அந்த குறுகிய சந்து வழி மேட்டுப்பாங்கான வழியில் ஏறிச் செல்ல, சந்தின் முடிவில் வலப்பக்கம் ப்ராசீன்(Pracheen) ருத்ரதேவ் மந்திர் செல்லும் வழி என்று ஒரு பதாகையும், இடப்புறம் ருத்ரதேவ் மந்திர்/சங்கமம் செல்லும் வழி என ஒரு பதாகையும் இருந்தது.  முதலில் இடப்பக்கம் இருந்த படிகள் வழி கீழே இறங்க, முதலில் ஒரு கோவில்.  அங்கே சின்னச் சின்னதாக சன்னதிகள் இருக்க, அங்கே இருந்த ஒரு பெரிய சிவன் சிலையும், பக்கத்திலேயே இருக்கும் நாரதரின் சிலையும் மிகவும் அழகாக இருந்தது.  சிவன் கோவிலில் அமர்ந்து சிறிது நேரம் தியானித்த பிறகு இன்னும் படிகள் வழி இறங்கி அலக்நந்தா நதியும், மந்தாகினி நதியும் சங்கமிக்கும் இடம் நோக்கி நடந்தேன்.  ஆஹா என்ன ஒரு அழகு. மந்தாகினி நதியின் வண்ணம் கண்ணைப் பறித்தது! இரண்டு நதிகளும் மிகவும் வேகமாகவும் ஆக்ரோஷமாகவும் ஒன்றுடன் ஒன்று கலப்பதைப் பார்த்தால் மனதுக்குள் அப்படி ஒரு குதூகலம். பெரிய பெரிய கூழாங்கற்கள் நிறைந்திருந்த அந்த இடத்தில் நடந்து, ஒரு பெரிய கல்லின் மீது அமர்ந்து கொண்டு இயற்கையையும் மலைகளுக்கு இடையே நதிகள் பாயும் சூழலையும் ரசித்தபடியே அமர்ந்து இருந்தேன்.  அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தில் நதிகளின் சங்கமத்தினை கண்டு களித்தேன். 

ருத்ரநாத் ஜி மந்திர் – நாரதர் தபோபூமி

அலக்நந்தா மற்றும் மந்தாகினி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருந்த பின்னர் அங்கிருந்து மனதே இல்லாமல் படிகள் வழி மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  இந்த இடத்தில் இருக்கும் கோவில், ருத்ரபிரயாக் கங்கா ஆரத்தி சமிதியால் நிர்வகிக்கப்படுகிறது. கோவிலில் இருந்த சன்னதி ஒன்றில் காவி உடை அணிந்த மூதாட்டி தான் பூஜாரி! அங்கே அமர்ந்து, வரும் பக்தர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு இருந்தார்.  அவர் அருகே அமர்ந்து நானும் திலகம் இட்டுக்கொண்டதோடு, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். பல வருடங்களாக இதே கோவிலில் இருக்கிறாராம்.  இக்கோவிலில் இருக்கும் சாமுண்டா தேவி சக்தி வாய்ந்தவள் என்றும், கேட்டது அருள்பவள் என்றும் சொன்னார்.  சில நிமிடங்கள் அங்கே அமர்ந்து தியானம் செய்து தொடர்ந்து மேலே நடந்தேன்.  

இந்த இடத்திலிருந்து படிகள் ஏறி மேலே வந்தால் எதிர் புறம் சில படிகள்… மீண்டும் படிகள் வழி மேலே ஏறினால் நாம் சென்று அடைவது ருத்ரநாத் ஜி மந்திர் மற்றும் தேவரிஷி நாரதர் அவர்களின் தபோபூமி!  அதாவது இசையில் தனக்கு நல்ல திறமை வளர சிவபெருமானை நோக்கி இந்த இடத்தில் தான் தேவரிஷி நாரதர் தவம் இருந்தாராம்.  கடுமையான தவத்திற்குப் பிறகு அவருக்கு ருத்ரநாத் – அதாவது சிவபெருமான் காட்சி அளித்து கேட்ட வரம் கொடுத்ததோடு நாரதருக்கு மகதி என்ற பெயர் கொண்ட வீணையை பரிசாகத் தந்தாராம்.  நாரதருக்கு காட்சி அளித்த அதே ருத்ரநாத் இங்கே கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பதும் நம்பிக்கை.  

இங்கே குடிகொண்டிருக்கும் ருத்ரநாத் பெயரிலேயே இந்த ஊரும் ருத்ரபிரயாக் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.  இக்கோவிலில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக பணிபுரிந்து வருவதாகச் சொன்ன காவி உடை தரித்த பெரியவர் அருகே அமர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தேன்.  வடக்கே இருக்கும் கோவில்கள் அனைத்திலுமே பூஜை செய்பவர்கள் அவர்களாகவே தான் சந்தனம், குங்குமம் போன்றவற்றை பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவது வழக்கம்.  இந்தக் கோவிலில் கூட அந்தப் பெரியவர் எனக்கு திலகம் இட்டு விட்டு, சர்க்கரை மிட்டாய்களை பிரசாதமாக கொடுத்ததோடு, ஒரு நான்கு முக ருத்ராக்ஷமும் கொடுத்தார்.  அதனை “கயிற்றில் இணைத்துக் கட்டிக்கொள்ளப்பா” என்று சொல்ல வாங்கி வைத்துக் கொண்டேன்.  இந்தக் கோவிலிலும் சில நிமிடங்கள் அமர்ந்து எல்லோருக்கும் நல்லதே கொடப்பா என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொண்டு புறப்பட எத்தனிக்கும் போது அந்தப் பெரியவர் “ஆரத்தி நடக்கப் போகிறது இருக்கலாமே!” என்றார்.  எனக்கு அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் அவரிடம் அன்புடன் மறுத்து அங்கிருந்து புறப்பட்டேன்.  

கார்த்திக் சுவாமி கோவில்

அலக்நந்தா – மந்தாகினி நதிகளின் சங்கமம் மற்றும் ருத்ரநாத் ஜி மந்திர் அனுபவங்கள் மனதில் மகிழ்ச்சியினை உண்டாகியிருக்க, குறுகிய சந்தின் வழி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன்.  ஒரு ஓரத்தில் சிறு கடை ஒன்று இருக்க, அங்கே இருந்த பலகை ஒன்றில் அமர்ந்து கொண்டு, கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  தேநீர், காஃபி போன்றவை அருந்துவதை தவிர்த்து விட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி போன்றவை மட்டுமே அருந்துவதால் அப்படி எதுவும் கிடைக்குமா என்று பார்க்க ஷிக்கஞ்சி கிடைத்தது! ஷிக்கஞ்சி என்பது எலுமிச்சை சாறு, ஷிக்கஞ்சி மசாலா பவுடர், தண்ணீர் (அல்லது) சோடா கலந்து செய்யப்படுவது! எலுமிச்சை ஜூஸுக்கு அக்கா என்று வைத்துக் கொள்ளலாம் 🙂  அதை வாங்கி பருகியபடி கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  ருத்ர ப்ரயாக் அருகே இருக்கும் கார்த்திக் சுவாமி கோவில் செல்ல எனக்கு யோசனை இருந்ததால் அவரிடம் கேட்க அவர் சொன்ன தகவல் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.  

ருத்ர ப்ரயாக்-லிருந்து கனக்சௌவ்ரி என்ற இடம் வரை (38 கிலோ மீட்டர்) ஜீப் மூலம் பயணித்து அங்கே இருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.  கடைக்காரரிடம் பேசியதில் பாதை சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதால் 38 கிலோ மீட்டர் பயணிக்க குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும் என்றார்.  அதன் பிறகு 3 கிலோ மீட்டர் மலையேற்றம்! – அதற்கு ஒரு மணி நேரம் ஆகலாம்! ஆக மொத்தம் ஒரு பக்கத்திற்கு 3 மணி நேரம், கோவிலில் ஒரு மணி நேரம் என போய் வர ஏழு மணி நேரம் ஆகலாம்! அதன் பிறகு மீண்டும் நான் தேவ் பிரயாக் திரும்பி வர இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் – அதாவது தேவ் பிரயாக் திரும்ப எப்படியும் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகும் என்பதால் அங்கே செல்லும் திட்டத்தினை கைவிட்டேன்.  ஆனால் இந்தக் கோவில் குறித்து, எனக்கு தெரிந்த சில தகவல்களை இங்கே சொல்லி விடுகிறேன். 

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வது போல இங்கே க்ரோன்ச் பர்வத் என்று அழைக்கப்படும் இந்த மலைப்பகுதியில் கார்த்திக் சுவாமி என்று இந்த ஊரில் அழைக்கப்படும் முருகன் குடி கொண்டிருக்கிறான்.  செல்லும் வழி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பார்க்கக் கிடைக்கும் காட்சிகள் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை தரவல்லவை.  மாங்கனி வேண்டி உலகை ஏழு சுற்று சுற்றி வர புறப்பட்ட முருகன், திரும்பி வந்தபோது, அம்மையப்பனை சுற்றி வந்து கனியை விநாயகன் பெற்றுவிட்டது அறிந்து கோபம் கொண்டு முருகப் பெருமான் சென்று சேர்ந்த இடம் தான் இந்த க்ரோன்ச் பர்வத் என்றும் அங்கே கோவில் கொண்டிருக்கிறான் கார்த்திக் சுவாமி என்றும் இங்கே உள்ள மக்கள் நம்பிக்கையுடன் வழி படுகிறார்கள்.  இந்த முறை பார்க்க முடியவில்லை என்றாலும் நிச்சயம் ஒரு முறை இங்கே பயணிக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன்.  உங்கள் வசதிக்காக, இணையத்திலிருந்து ஒன்றிரண்டு படங்களை மட்டும் இணைத்து இருக்கிறேன்.  

இந்த கார்த்திக் சுவாமி கோவில் செல்லவில்லை என்றாலும், அப்பன் சிவனை வேறு ஒரு கோவிலில் சென்று தரிசித்தேன். 

கோடேஷ்வர் மஹாதேவ் மந்திர்

ருத்ர பிரயாக் நகரில் இருந்து கார்த்திக் ஸ்வாமி கோவில் செல்ல முடியாததால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோடேஷ்வர் மஹாதேவ் மந்திர் செல்ல முடிவு எடுத்தேன்.  கார்த்திக் ஸ்வாமி கோவில் செல்லும் ஜீப் அனைத்தும் இந்தக் கோவில் வழியே தான் செல்லும் என்பதால் ஒரு ஜீப் ஓட்டுனரை கேட்க, “எத்தனை சவாரி?” என்று கேட்டார்.  நான் ஒருவனே என்று சொன்னதும், அதன் பிறகு எனக்கு சவாரி கிடைக்காது அதனால் அழைத்துச் செல்ல முடியாது என்று சொல்லி விட்டார்.  பக்கத்தில் இருக்கும் இரும்புப் பாலம் அருகே சென்று பாருங்கள், அங்கிருந்து சில ஜீப்கள் செல்லும், அப்படி இருந்தால் அதில் சென்று விடுங்கள் என்று சொல்லி வழி அனுப்பினார்.  உத்திராக்கண்ட் மாநிலத்தில் பல இடங்களில் இரும்புகளால் ஆன பாலங்கள் தான் – நதிகளுக்கு குறுக்கேயும், மலைகளுக்கு இடையேயும் – இந்த மாதிரி பாலங்கள் இல்லையென்றால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்! இல்லை என்றால் வெகு தூரம் சுற்றி வர வேண்டியிருக்கும்.  

இரும்புப் பாலம் அருகே சென்று ஜீப் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க, ஒன்றுமே இல்லை.  அதனால் அங்கே இருந்த ஒரு காவலரிடம் கேட்க, தனியாகத் தானே போக வேண்டும் – அப்படி ஒன்றும் தூரம் இல்லை – மூன்று கிலோ மீட்டர் தான் – நடக்க முடிந்தால் நடந்து விடுங்கள்! இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்பவர்களிடம் கேட்டால் அழைத்துச் செல்வார்கள் என்றும் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்றும் சொல்ல, நடக்க ஆரம்பித்தேன். இரு சக்கர வாகனம் ஒன்று கடக்க, வாகன ஓட்டியிடம் கேட்டேன். அவர் அந்தப் பக்கம் போகவில்லை என்று மறுத்து விட்டார்.  சரி பரவாயில்லை என நடக்க ஆரம்பித்து விட்டேன்.  ஒரு பக்கம் மலை மறு பக்கம் சுழன்று ஓடும் அலக்நந்தா நதி!  நதியையும் மலையையும் பார்த்தபடி நடந்தேன். ஆங்காங்கே இருந்த நீல வண்ண பூக்கள் இருந்த மரங்களும், பாதை ஓரத்தில் நடப்பவர்கள் அமர்ந்து சற்றே ஓய்வெடுக்க இருந்த இருக்கைகளும் என இருக்க, நடையின் தீவிரம் தெரியவில்லை. மலையேற்றம், இறக்கம் என மாறி மாறி இருந்ததால் கொஞ்சம் கடினமான நடை தான்.  ஆனாலும் நடுவே சில நிமிடங்கள் சாலையோர இருக்கைகளில் அமர்ந்து நதியையை பார்த்து ரசித்து மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டேன். 

கோவில் நுழைவாயிலை அடைந்து கீழ் நோக்கிய பாதையில் சுமார் 750 மீட்டர் நடந்தால் கோடேஷ்வர் மஹாதேவ் மந்திர் நம் கண்களுக்கு முன்னே! அலக்நந்தா நதியின் கரையில் அமைந்திருக்கும் சிவன் கோவில்.  முன்பு குகைக்குள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் தற்போது அப்படி இல்லை.  பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான், அது தனக்கே ஆபத்தாக முடிய அவனிடமிருந்து தப்பிச் சென்று இங்கே அலக்நந்தா நதியின் கரையில் இருந்த குகைக்குள் தவம் இருந்து விஷ்ணுவினை வேண்ட, அவர் பஸ்மாசுரனை அழித்ததாக, இந்தக் கோவிலுக்கான கதையாக சொல்கிறார்கள். இன்னும் ஒரு கதையாக கேதார்நாத் செல்லும் பாதையில் சிவபெருமான் இங்கேயும் பக்தர்களுக்கு அருள் புரிய கோவில் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.  கதை எப்படி இருந்தாலும் கோவில் மிகவும் அழகான சூழலில் அமைந்திருக்கிறது.  கோவிலில் சின்னச் சின்னதாக மற்ற சன்னதிகளும் உண்டு.  கோவிலுக்குள் கோடேஷ்வர் மஹாதேவ் அருகில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்த பிறகு, வெளியே வந்தேன்.  

கோவில் வளாகத்திலிருந்து சுமார் ஐம்பது படிகள் கீழே இறங்கினால் அலக்நந்தா நதி.  இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பாய்ந்தோடி வரும் அதன் அழகை பார்க்கப் பார்க்க ஆனந்தம்.  அங்கே இறங்கிச் செல்வதற்குள் கால் சூடு பொறுக்க முடியவில்லை.  கீழே இறங்கிச் சென்று முதல் வேலையாக கால்களை நனைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.  சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து படிகள் வழி மேலே ஏறி, பிறகு மலையேற்றம் – சாலை வரை.  அங்கிருந்து ருத்ரபிரயாக் வரை செல்ல ஜீப் கிடைத்தால் நன்றாக இருக்கும் என மனது சொல்வதற்குள் கால்கள் சொல்ல ஆரம்பித்தன. 

Series Navigation<< கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 2கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 4 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.