பொதுவாய் , இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் டிரா செய்வது என்பதே இங்கு வரும் அணிகளுக்கு கடினமான ஒன்று. பிட்ச் எந்த விதமான பவுலர்களுக்கும் உதவி செய்யாத பட்சத்தில்தான் இங்கு டிரா ஆகும். ஆனால் ஓரளவு பவுலர்களுக்கு உதவி செய்த கான்பூர் பிட்சில் நியுஜிலாந்து அணியினர் டிரா செய்தது பெரிய விஷயம். அந்த நம்பிக்கையுடன் மும்பையில் நடைபெற உள்ள India vs New Zealand 2nd test match ல் களம் இறங்குவார்கள் அவர்கள். இந்திய அணியின் பேட்டிங் சமீபகாலமாக தடுமாறி வருவது தெரிந்த விஷயம். நாளை டெஸ்ட் மேட்சுக்கான அணி தேர்வு மிக சவாலான ஒன்று. மூன்று அவுட் ஆப் பார்ம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனில் யாரை வெளியே உட்கார வைப்பது யாரை அணியில் சேர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று.
2019க்கு பிறகு 3,4,5 என்ற மிக முக்கிய இடங்களில் களம் இறங்கும் புஜாரா, கோஹ்லி மற்றும் ரஹானே மூன்று பேரும் சேர்ந்து அடித்துள்ள சதங்கள் ஒன்றே ஒன்று, மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரஹானே அடித்த சதம் அது. அதன் பிறகு மிடில் ஆர்டர் ரன் இல்லை. இதில் ஆபத்தில் இருப்பது புஜாராவின் இடமே. கோஹ்லி கேப்டன் ஆதலால் அணியில் இருப்பார். ரஹானேவை உடனடியாக வெளியே உக்கார வைக்க இது 1975 இல்லை. புஜாராவின் பிரச்சனை நிதானமாக ஆடுவது இல்லை, அந்த நிதானமான ஆட்டத்தை பெரிய அளவிலான ஆட்டமாக மாற்றாமல் விடுவது. டெஸ்ட் மேட்சில் பவுண்டரியை விட ஒற்றை ரன்களுக்கு மதிப்பு அதிகம். ஸ்ட்ரைக் ரொட்டேட் கூட அவர் செய்வதில்லை என்பதே பெரிய சிக்கல். இதனால் எதிர் முனையில் இருப்பவர்களுக்கும் அழுத்தம் அதிகமாகும். எனவே புஜாராவிற்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட கூடும்.
மற்றுமொரு வழி ஆனால் இதற்கு வாய்ப்புக் குறைவு . நாளைய ஆட்டத்தில் சாஹா ஆடுவாரா அதற்கு முழு உடல் தகுதி அவருக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்நிலையில் அவருக்கு ஓய்வுக் கொடுத்துவிட்டு அந்த இடத்தில் பரத்தை கொண்டு வரலாம். பரத், பர்ஸ்ட் க்ளாஸ் ஆட்டங்களில் ஓப்பனராக ஆடியுள்ளார். அவர் அடித்த 300 கூட ஓப்பனராக தான் . எனவே அகர்வாலுக்கு பதில் அவரை ஓப்பனராக கொண்டு வரலாம். ஆனால் இது ஒரு தாற்காலிகமான ஏற்பாடாகத்தான் இருக்கும். எப்படியும் அடுத்த தொடருக்கு ராகுல் / ரோஹித் வந்துவிடுவார்கள்.
அதே போல் பந்துவீச்சில், இஷாந்த் ஷர்மா மீண்டும் பழைய மோசமான பந்துவீச்சை தொடர்கிறார். எனவே அவருக்கு பதில் சிராஜ் வரலாம் என்றெண்ணுகிறேன். மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் தேவையா அல்லது இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் ஆடுவாரா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் பொதுவாக மும்பை பிட்ச் பவுன்ஸ் இருக்கும். இல்லை மீண்டும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடக்கூடும்.
அதே போல் டாஸ் மிக முக்கியம். எனவே பேட்டிங் ப்ராக்டிஸுடன் டாஸ் பிராக்டிஸ் செய்வதும் நல்லது.