20 ஆண்டுகளுக்கு முன்பு தேன்காடு என்னும் மலை கிராமத்தில் ஒரு பழங்குடியினர் இனம் முழுவதுமே ஒரு குகையில் தீமூட்டி தற்கொலை செய்துகொள்வதில் துவங்குகிறது கதை. கதை நடக்கும் காலத்தில் விலங்குகள் / பறவைகளை படம் பிடிக்கும் ராபர்ட் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்படுகிறார். அவர் உடல் முழுவதும் சிலந்தி வலை போன்று பின்னப்பட்டு காணப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க வரும் CBCID இன்ஸ்பெக்டர் Inspector Rishi யாக நவீன் சந்திரா.
அடுத்தடுத்து சில கொலைகள். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நபர்கள் அதே போல் கொல்லப்பட்டு தொங்கவிடப்படுகின்றனர். வழக்கை விசாரிக்க வந்த ரிஷி எந்தவித தடயமும் இன்றி வனத்தை சுற்றி வருகிறார். எந்த ஒரு கொலையிலும், யாரிடமும் முழுவதாக விசாரிப்பதாக காட்டவில்லை. கதையில் தனி டிராக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒரு பக்கம். அவர்களை பிடிக்கத் துடிக்கும் வன சரகராக கிருஷ்ணா தயாள்.
ஆறு எபிசோட் வரை கதை மிகவும் மெதுவாக செல்கிறது. அதன்பிறகே கதையில் வேகம் வருகிறது. நான்கு கொலைகள் நடந்து முடிந்து பல நாட்களுக்குப் பின் தான் கொலைகளுக்கான நோக்கத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அதன் பின்னே கொலையின் முடிச்சுகள் வேகமாக அவிழ்கின்றன.
கதையின் கருவை சொல்லவேண்டுமென்றால் வனத்தை பாதுகாக்க வேண்டும். வனத்தையும் அங்கிருக்கும் உயிர்களையும் அளிப்பவர்களை தண்டிக்கவேண்டும். கதையில் மர்மத்தை அதிகரிக்க கானகர் இன குல தெய்வமான வன ரட்சியை உபயோகித்துக் கொள்கின்றனர். வன ரட்சி உண்மையா இல்லை அதை உபயோகித்து தங்கள் பழி வாங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனரா?
ரிஷிக்கு துணையாக லோக்கல் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் சித்ரா . கதையின் ஊடே இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. எதற்கு ஓரின சேர்க்கை பற்றி இந்த கதையில் சேர்க்க வேண்டும் என கடைசி வரை புரியவில்லை. கதையின் வேகத்திற்கு சித்ரா சம்பந்தப்பட்ட இடங்கள் வேகத்தடை. அதே போன்றுதான் ரிஷியின் பழைய வாழ்க்கை.
அதே போல், கானகர் இனத்தவர் கூட்டு தற்கொலை செய்துகொண்டவுடன் அங்கே நிறைவேற்றப்பட இருந்த சுரங்கம் நிறுத்தப்பட்டது என ஒரு எபிசோடில் வருகிறது. ஆனால் கடைசி இரு எபிசோடுகளில் திடீரென சுரங்கம் காட்டப்படுகிறது. இறுதி கட்ட காட்சிகள் சுரங்கத்தில் வைக்க வேண்டும் என அதை மெனக்கெட்டு திணித்தது போன்று தோன்றுகிறது.
கதையை வேகமாய் கொண்டு போக வாய்ப்புகள் இருந்தும், தன் சொந்தக் கருத்துகளான ஓரின சேர்க்கை , ஜாதகத்திற்கு எதிரான கருத்துகள் என பல கருத்துக்குப்பைகளை இயக்குனர் சேர்த்ததால் கதை பல இடங்களில் அந்த வன ரட்சி போல் ஊர்ந்து செல்கிறது.
அதிக எதிர்ப்பார்ப்புகள் இன்றி ஒரு முறை பார்க்கலாம்.
Prime Video: Inspector Rishi – Season 1