அம்மா

"கொஞ்சம் (நிறைய) தலைமுடி, நிறைவாய் (கொஞ்சம்) அம்மா"
மனதில் பதிந்து விடும் விருப்பமான முன் முடிவுகளை பெற்ற அம்மாவிடமிருந்து எப்படியோ ஆண் பெறுகிறான்‌ என்பது என்‌ அனுபவம். வெறுக்கத்‌தக்க முன் முடிவுகளை தகப்பனிடமிருந்து பெறுகிறான்‌. இதுவும் என் கூற்று. வெறுப்பை ஒதுக்கிவிட்டு விருப்பத்தை மட்டும் விரிவாக பேசுவோமா?

நினைவறிந்த நாள் முதல்‌‌‌ அம்மாவைப் பார்த்து நான் வியக்‌‌‌கும் சங்கதிகள் குறித்து தனியாகப் பட்டியலிடலாம். அவரின் சில நடவடிக்கைகள் தவிர்த்து பிற விஷயங்‌‌‌கள் என்று பார்‌‌‌த்தால் முதன்மையானது அவரின் தலைக் கேசம். நீளமான தலைமுடி என்பது அம்‌‌‌மாவுக்கு ஈசன் தந்த வரம். அதைக் காணும் போதெல்லாம்‌‌‌ மனதில் சந்‌‌‌தோஷம் ஆர்ப்பரிக்‌‌‌கும். அவற்றுடன் இணைப்பாக “வயதாகும் போது என் தலை முடியை மட்‌‌‌டும்‌‌‌ எடுத்து வழுக்கைத்தலையனாக மாற்றி விடாதே” என்று கடவுளிடம் வேண்டுதல் இடம்பெறும்‌‌‌. பின்னந்தலை வழுக்கை, நடு மண்டை வழுக்கை… எதுவுமே வந்து விடக் கூடாது என்‌‌‌ற அச்சம் மனதில் நிலையாக குடிபுகுந்‌‌‌து விட்டது.

நான் பார்த்த வரை நீளமான கேசத்திற்காக அம்மா பெரிதாக மெனக்கெடவில்லை. தலைக்கு சாதாரண தேங்காய் எண்ணை வைப்‌‌‌பார். தினமும் தலைக்கு நீர் விடுவார்.

அம்மாவின்‌‌‌ பள்ளிப் பருவ காலத்‌‌‌தில் ஒரு கார்த்‌‌‌திகை தீபத் திருநாளின்‌‌‌ போது வீட்டில் ஒரு பெரிய இரும்பு டிரம் அருகே நிற்‌‌‌கும் கருப்பு வெள்ளை புகைப்படமொன்று இப்போதும் ஆல்பத்தில்‌‌‌ உள்ளது. பக்கவாட்டு தோற்றத்தில் சிகை தெளிவாகத் தெரியும் விதத்தில் உள்ள அந்தப் புகைப்படத்‌‌‌தில் கூந்தல் தரையைத் தொடுமளவு நீளமாக இருக்கும். என்னளவில் அது தான் துவக்‌‌‌கப்புள்ளி.

இந்த மனோநிலை நாளடைவில் பாப் கட், வேண்டுதலுக்காக முடி காணிக்கை தந்த பிறகான தலை கொண்ட பெண்‌‌‌களைக் கண்டாலே தீயை மிதித்த உணர்வு ஏற்‌‌‌படும் நிலைக்கு கொண்டு சென்றது.

ஒரு முறை என் சகோதரிக்கு தேக சுகவீனம் காரணமாக மாதக் கணக்‌‌‌கில் சிகிச்சை நீடிக்க, அம்மா சமயபுர மாரியம்மனுக்கு முடி காணிக்கை தருவதாக வேண்டுதல் வைத்தார். அக்கா குணமான மறு நாளே வேண்டுதல் நிறைவேறியது.

அம்மாவின் முடி துறந்‌‌‌த தோற்றத்தைப் பார்த்து கதறி அழுது வீட்‌‌‌டையே கதிகலங்க வைத்தேன். இரண்டு நாட்கள் உணவருந்‌‌‌தாமல் தாக்குப் பிடித்து அரற்றினேன்‌‌‌.

“சமயபுர அம்மாக்கு வேண்டுதல் டா, நீ இப்‌‌‌படி அழறது தப்பு. தெய்வ குத்‌‌‌தம்‌‌‌ ஆகிடும்” – அவரின் ஆறுதல் மனதை மாற்றவில்லை. மெட்ராஸ்க்‌‌‌கு குடி வந்த போதும் நீடித்தது.

2010 ஆம் வருட காலகட்டத்தில் மெட்ராஸ் நங்கநல்லூர் பகுதியில் வசித்த போது ஒரு பூக்காரம்மா கடையில் மல்லி, வில்வம், கதம்பம் என வழமையாக வாங்கி வந்‌‌‌தேன்‌‌‌. காரணம் அவருக்கும்‌‌‌ அம்மா போல்‌‌‌ நீளமான தலை முடி. வாடிக்கையாளர்களிடம் தன்மையாகப்‌‌‌ பேசுவது, தாமதமின்றி துரித கதியில் பூ கட்டுவது போன்றவை எல்லாம் பிடித்ததிற்கான கூடுதல் காரணிகள். பூக்காரம்மாவுக்கும் ஒரு மகள். பள்ளி சென்‌‌‌று திரும்பி கடைக்கு வந்து தாய்‌‌‌க்கு ஒத்தாசையாக இருப்பாள். வீடு மாறிய பின்‌‌‌ அந்தப் பூக்கடைக்கு செல்வது நின்று போனது இருப்பினும் பூக்காரம்மாவின் முகம் மறக்‌‌‌கவில்லை.

கூந்தல் தொடர்பாக வேறு சில அனுபவங்களும் எனக்கு கிடைத்தன. எங்க ஊர்க்‌‌‌கார பெண்‌‌‌ணொருவர் தன்னுடைய நீளமான சிகையைத் துறந்து ஒரு புகைப்‌‌‌படத்தை காட்டி என்‌‌‌ சிந்தனைக்கு கொள்ளி வைத்தார்.

“ஏங்க இப்‌‌‌படி செய்தீங்க?” என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் கண் கலங்க வைத்‌‌‌தது.

“புற்று நோயாளிகளுக்கு சிகிச்சையின் வீர்யத்தால் தலை முடியை இழக்கும் அவல நிலை உண்டாகும், அவர்களுக்காக கேச தானத்தை என் ஸ்நேகிதி முன்னெடுத்‌‌‌து வருகிறார், என் பங்களிப்பைத் தந்தேன். முடி தானே? திரும்ப வளரும், இதுக்கெல்லாம் ஃபீல் ஆகாதீங்க”

அம்மாவின்‌‌‌ பழைய சமாதானம் மீண்டும் மற்றொரு பெண் மூலம்‌‌‌ உருமாறி வந்தது ஆனாலும் மனம் கேட்கவில்லை.

சமீப காலமாக தலைக்கேசம்‌‌‌ தொடர்பாக பேசினால் “பழைய மாதிரி அடர்த்தி இல்லைடா எனக்கு வயசாச்சு” என்பார் அம்மா. “லெங்தா இருக்கே?” என்றால் முடியை அள்‌‌‌ளி முடிந்து சிறிய பந்தாகத் தெரிவதைக் காட்டி புரிய வைத்‌‌‌தார். “மனுஷனுக்கு எதுவுமே சாஸ்வதம் இல்‌‌‌லை” என்றார், புரிந்தும்‌‌‌ புரியவில்லை.

“நாளாக நாளாக அடர்‌‌‌த்தி குறையும், அள்ளி முடிஞ்சால்‌‌‌ தெரியும்” அம்மாவின் இதே கருத்தை சமீபத்தில்‌‌‌ இன்னொரு பெண்மணி எடுத்து சொன்னார்.

“மயிரே போச்‌‌‌சு” என்று ஏனோ இருக்க முடியவில்லை. “மயிரா? ஐயோ போச்சே” மனநிலை தான்.

கடந்த மூன்‌‌‌று வருடங்களாக மீண்டும் நங்கநல்லூர்வாசியாகி விட்டாலும்‌‌‌ பழைய பூக்காரம்மா கடை தொலைவு என்‌‌‌பதால் இருப்பிடமருகே உள்ள பூக்கடையில் பூ வாங்கி வருகிறேன். பழைய பூக்காரம்மா கடைப் பக்கம் சென்றால் பூ வாங்குவது, நலம் விசாரிப்பு சடங்கு தொடர்கிறது. அவர் மகளும் வளர்ந்து மணமுடித்து விட்டாள். கடையும் சற்று பெரிதாகி இருவரும் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைத் தாச்சி மகள் கடைக்‌‌‌கு வரவில்லை.

நான்கு நாட்களுக்கு முன்பு பழைய பூக்காரம்மா கடைப்பக்கம் சென்ற போது அவர் தலை முடி துறந்‌‌‌து காணப்பட்டார். பதறி விசாரித்தேன்.

“பிரவசத்துல மகளுக்கு ரொம்ப சிரமம். ஏதோ ஜெஸ்டா டயபடீஸ்னு சர்க்கரை வியாதி வேற, வயித்‌‌‌துல பெரிய குழந்தைன்னு டாக்டர் சொல்ல ரொம்‌‌‌ப கவலையாப் போச்சு, பெரிய பாளையத்தம்‌‌‌மா கிட்ட வேண்‌‌‌டிக்கிட்டேன், சுகப் பிரசவம்‌‌‌. பேரனும் மகளும் நல்லா இருக்காங்க, முடி காணிக்கை வேண்டுதலை…”

அவர் முகத்‌‌‌தைப் பார்த்தேன்‌‌‌. தோற்றம் கண்டு ஏனோ வருத்தம் வரவில்லை. சந்தோஷமாக ஐந்து முழம் மல்லி வாங்‌‌‌கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன்.

About Author

3 Replies to “அம்மா”

  1. அருமை! ஒவ்வொரு மகனுக்கும் தாயுடன் இதுபோன்றதொரு நிகழ்வு த்தொடர்புகள் ஏதேனும் இருக்கும்!

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.