- அழியாத மனக்கோலங்கள் – 1
- அழியாத மனக்கோலங்கள் – 2
- அழியாத மனக்கோலங்கள் – 3
- அழியாத மனக்கோலங்கள் – 4
- அழியாத மனக்கோலங்கள் – 5
- அழியாத மனக்கோலங்கள் – 6
- அழியாத மனக்கோலங்கள் – 7
- அழியாத மனக்கோலங்கள் – 8
- அழியாத மனக்கோலங்கள் – 9
- அழியாத மனக்கோலங்கள் – 10
- அழியாத மனக்கோலங்கள் – 11
- அழியாத மனக்கோலங்கள் – 12
- அழியாத மனக்கோலங்கள் – 13
- அழியாத மனக்கோலங்கள் – 14
இலங்கை ‘கதம்பம்’ பத்திரிகை ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’ என்ற போட்டியை நடத்தியது என்றால் குமுதம் ‘எனக்குப் பிடித்த நாவல்’ என்ற போட்டி ஒன்றை நடத்தியது. அந்தப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரைகளில் ஒன்றாக எனது கட்டுரை தேர்வாயிற்று.
பேராசிரியர் கல்கியின் மகள், மகன் இருவருமே எழுத்தாங்கங்களில் சோடை போனதில்லை. மகள் ஆனந்தி கல்கி பாதியில் விட்டு விட்டுப் போன ‘அமரதாரா’ நாவலை தகப்பனார் அந்த நாவலுக்காக எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டே அற்புதமாக முடித்து வைத்தார். மகள் தந்தைக்கு ஆற்றிய அற்புத பணிக்கடமை இது. இல்லையென்றால் கல்கி அவர்கள் எழுதிக் கொண்டிருந்த அமரதாரா நாவல் அவர் காலமானதும் அரைகுறையாகவே முடிக்கப்படாமல் நின்று போயிருக்கும். கல்கியின் திருமகனார் ராஜேந்திரனோ கல்கி காலத்திலேயே சில கதைகள் எழுதி சின்ன அண்ணாமலை போன்றோரிடம் பாராட்டு பெற்றவர். அவரது அந்த ஆர்வம் கல்கி மறைந்ததும் தொடர்ந்தது.
கி.ராஜேந்திரன் கல்கி பத்திரிகையில் எழுதிய முதல் தொடர் ‘பொங்கி வரும் பெருநிலவே’ என்பது. லதா அவர்கள் தன் அழகு சித்திரங்களால் அந்தத் தொடரின் கதாபாத்திரங்களின் நடமாட்டத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். கி. ராஜேந்திரன் கல்கியிலேயே இரண்டாவதாக எழுதிய தொடர் ‘நெஞ்சில் நிறைந்தவள்’ என்ற பெயர் கொண்டது. இந்தத் தொடருக்கு வினு சித்திரங்களை வரைந்திருந்த நினைவு. கமலபதி என்ற பெயர் கொண்டிருந்த கதையின் நாயகனின் பாத்திரப் படைப்பு அற்புதமாக இருக்கும்.
கி. ராஜேந்திரரனின் இந்த நாவலைத் தான் எனக்குப் பிடித்த நாவலாக மனத்தில் வரித்துக் கொண்டு குமுதம் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். பரிசு பெற்ற அந்த கட்டுரை தான் குமுதத்தில் வெளியான எனது முதல் படைப்பு. குமுதத்தில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு எனது அன்றைய முகவரி விசாரித்துக் கொண்டு கி. ராஜேந்திரன் எனக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார். நான் பொங்கல் வாழ்த்து அனுப்பும் எழுத்தாளர் பட்டியலில் கி.ராஜேந்திரனும் சேர்ந்து கொண்டார்.
இந்த சமயத்தில் தான் மறுபடியும் வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது. சேலம் ஹஸ்தம்பட்டி பகுதியில் இருந்த தேசிய மாணவர் படை (NCC – National Cadet Corps) அலுவலகத்தில் அடுத்த திங்கட்கிழமை நேர்காணல் இருப்பதாக கடிதச் செய்தி தெரிவித்தது. அந்த நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியும் ஏற்றுக் கொண்டேன். ACC செக்ஷனில் இருந்தவர் நீண்ட விடுப்பில் சென்றிருந்ததால் அந்தப் பிரிவு வேலை எனக்களிக்கப் பட்டது. உள்ளூரிலேயே பணி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்துப் போன அலுவலகமாக இது ஆயிற்று.
சேலம் மாவட்டத்தில் இருந்த அத்தனை கல்லூரிகள், உயர் நிலைப் பள்ளிகளிலும் இருந்த NCC, ACC மாணவர் படைகளுக்கான பயிற்சிகள், அவர்களுக்கான சீருடை, பயிற்சி சுற்றுலா, சான்றிதழ் வழங்குதல் என்ற அத்தனை பணிகளையும் கண்காணித்து கவனித்துக் கொண்ட மாவட்ட அலுவலகம் அது. நான் அங்கு பணியில் இருந்த காலத்தில் அதிகாரியாக இருந்த மேஜர் கான் என்பவர் மறக்க முடியாதவர். கண்டிப்பும் அன்பும் கொண்ட அற்புத மனிதர் அவர்.
அந்த அலுவலத்தில் பணியாற்றிய எழுத்தர், காஷியர், ஸ்டோர் டிபார்ட்மென்ட் கண்காளிப்பாளர், கணக்காளர் போன்ற சகல அலுவலர்களும் சிவிலியன்கள். மற்ற எல்லோருமே இராணுத்தில் பணியாற்றியவர்கள். அல்லது பணியாற்ற பயிற்சி பெறுபவர்கள் என்றிருக்கும். டெபுடேஷனாகவும் இராணுவத்திலிருந்து இங்கு வருவர். இராணுவத்தினருக்கே உரித்தான கட்டுப்பாடு, மிடுக்கு, உடல்வாகு, பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்களிடம் காணப்படும். என் வாழ்க்கையில் குறிப்பிடத் தகுந்த சில பண்பாட்டு நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை இங்கு பணியாற்றிய கால கட்டத்தில் கற்றுக் கொண்டேன் என்று தாராளமாகச் சொல்லலாம். சம்பளப் பணத்தை புத்தம் புதிய நோட்டுகளாக ஒரு உறையிலிட்டு, உறையின் மேல் பெயரெழுதப்பட்டு பெற்ற முதல் அலுவலகம் இதுவே.
சுதந்திரத்திற்கு முன்னான காலத்திலே சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் டாக்டர் சுப்பராயன். அந்நாளைய சென்னை மாகாண முதல்வராய் இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கப் பெற்றவர். பண்டித நேருவின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையிலும் பங்கு கொண்டவர். இவரது குடும்பமே பல்வேறு அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகங்களில் தங்கள் பங்களிப்பைத் தந்த குடும்பம். மூன்று மகன்கள். கோபால் குமாரமங்கலம், பரமசிவ குமாரமங்கலம், மோகன் குமாரமங்கலம் என்று மூன்று மகன்கள். இவர் மகள் பார்வதி பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான என்.கே. கிருஷ்ணனை மணந்தவர். பார்வதி கிருஷ்ணனும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்தவர். மோகன் குமாரமங்கலத்தின் துனைவியார் கல்யாணி குமாரமங்கலம், மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் எல்லோரும் அரசியல் தொடர்பு கொண்டவர்களே.
நான் என்.சி.சி. அலுவலகத்தில் பணியாற்றுகையில் தான் அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்திய ராணுவ தரைப்படைப் பிரிவில் படைத் தலைவராக இருந்த பி.பி. குமாரமங்கலம் இந்த அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். அவர் வருகையின் போது சிவிலியன்களான எங்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தியது, புகைப்படம் எடுத்துக் கொண்டது என்று எதையும் மறப்பதற்கில்லை. நான் வாசித்த பாரதி வித்தியாலயா பள்ளியின் ACC பிரிவின் சேர்க்கைகள், சான்றிதழ்கள் பெறுதல் சம்பந்தமாக நான் படிக்கும் காலத்து டிரில் மாஸ்டராய் இருந்த சண்முகம் அவர்கள் இந்த அலுவலகத்துக்கு வருவார். எனக்கு அவர் விஷ் பண்ணுவதற்கு முன்னால் முந்திக் கொண்டு நான் அவருக்கு விஷ் பண்ணுவேன். “இல்லையில்லை. இப்பொழுது நீங்கள் இந்த அலுவலகத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர். நான் தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்'” என்று சொல்லி வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு போவார். சேலம் கல்லூரியில் NCC பிரிவு தலைவராக இருந்த லெப்டினெண்ட் இராமமூர்த்தி அவர்களும் மறக்க முடியாதவர். அந்த அலுவலகத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பில் செல்ல ஆறு மாதங்கள் பணியாற்றினேன். ஏதோ நிரந்தர அலுவலர் அங்கு பணி முடித்துப் போவது போல அதிகாரி மேஜர் கான் அவர்கள் எனக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்ததை மறக்கவே முடியாது.
மறுபடியும் நான் அய்யங்காரின் ஜாப் டைப்பிங் அலுவலகத்திற்குப் போனாலும் தமிழக அரசின் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்வதற்கான ஆணை வாசல் கதவைத் தட்டியது. காமராஜர் அவர்கள் தமிழக முதல்வராய் இருந்த காலம் அது.அதனால் வழக்கமாக வீட்டிற்கு வரும் இயல்பான கடிதம் போல் அரசு வேலைக்கான அந்த ஆணை தபாலில் வந்தது.
தமிழ்நாடு மீன்வளத் துறையில் (LDC) லோயர் டிவிஷன் கிளார்க் பணியில் தூத்துக்குடி அலுவலகத்தில் பணியில் சேர்வதற்கான ஆணை அது. செய்தி மகிழ்ச்சிகரமாக இருந்தாலும் பணியில் சேரவிருந்த துறை குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. காமராஜருக்கே கடிதம் எழுதி வேறு இலாகா மாற்ற கோரிக்கை மனு அனுப்பேன்’ என்ற ஆலோசனையை பக்கத்து வீட்டு பெரியவர் சொன்னார். அந்நாட்களில் திருமதி ஜோதி வெங்கடாசலம் என்பவர் அந்தத் துறை அமைச்சர். அவரையானும் போய்ப் பார்த்து இலாகாவை மாற்றிக் கொள்ள வீட்டில் வற்புறுத்தினார்கள். ஆனால் எனக்கென்னவோ வந்த முதல் அரசுப் பணியை ஏற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியது. பணியில் சேர இரண்டு வார அவகாச காலம் இருந்தது.
அந்த ஆணை வந்து நான்கு நாட்கள் தாம் ஆகியிருக்கும். ஏற்கனவே தபால் தந்தி இலாகாவில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தேன். பரிசீலனையில் தேர்வாகி சேலம் சூப்பிரண்டெண்டெட் ஆஃப் போஸ்ட் ஆபிஸஸ் அலுவலகத்தில் ஒரு வார கால அவகாசத்தில் நேரிடைத் தேர்வுக்காக வரச் சொல்லி கடித செய்தி சொல்லியது. அந்தக் கடிதம் அளவில்லாத மகிழ்ச்சியை என் வீட்டாருக்கு அளித்தது.
நானும் சேலம் ராஜகணபதியை வேண்டிக் கொண்டு அந்த நேர் காணலுக்குத் தயாரானேன்.