அழியாத மனக்கோலங்கள் – 6

This entry is part 6 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

வாழ்க்கையில் நிறைய நட்புகள் அந்தந்த காலகட்டங்களில் குறுக்கிடலாம். அந்நியோன்யமாகப் பழகலாம். ஆனால் இளம் வயதில் யாராவது ஒருவரிடம் கொள்ளும் நட்பு மட்டும் காலாதிகாலத்திற்கு வாழும் ஒரே நட்பாக அமையும். அந்த நண்பர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை; ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தேவையுமில்லை.. நீண்ட கால இடைவெளி கூட அந்த நட்பை ஒன்றும் செய்து விட முடியாது… எப்பொழுது வேண்டுமானாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலும், பேசினாலும் இல்லே இந்த ரெண்டுமே இல்லேனாலும் அந்த நட்பு வாடாமல் வதங்காமல் என்றும் துளிர்த்த நிலையிலேயே பச்சைப் பசுமையாக இருக்கும் ‘ என்று காண்டேகர் சொல்லுவார்.

வாழ்க்கையில் ஒரே ஒருத்தர் இடத்தில் தான் இப்படியான அந்தப் பரஸ்பர நட்பு ஏற்படுமாம். காண்டேகர் சொல்வது சரி தானா?.. உங்கள் அனுபவத்தில் யோசித்துப் பார்த்துச் சொல்லுங்கள்..

காண்டேகர் சொன்ன மாதிரி எனக்கமைந்த நண்பன் ரகுராமன். பாரதி வித்தியாலயா பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்தோம். ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்று இப்பொழுது புதுவையில் இருக்கிறான். திடீரென்று ஃபோன் பண்ணி, “எப்படிடா இருக்கே?” என்று எங்களில் யாராவது ஒருவர் கேட்டால் போதும். நேற்று தான் பேசி விட்ட இடத்தில் தொடர்கிற மாதிரி பேச்சுத் தொடரும்; பாசம் பொங்கும். மனைவி, மக்கள், குடும்பம் என்று பின்னால் ஏற்பட்ட பந்தங்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த உறவில் என்றும் பங்கம் ஏற்பட்டதில்லை.

சேலத்தில் ரகுராமன் பீஷர் காம்பவுண்டு பக்கத்திலிருந்த இரத்தினம் பிள்ளை வளாகத்தில் குடியிருந்தான். ராஜாஜி பிறந்த ஊரில் பிறந்தவன். நாங்கள் இரண்டு பேருமே அந்தக் காலத்தில் எஸ்.ஏ.பி.யின் எழுத்துப் பைத்தியங்கள். எனது நிறைய கதைகளில் ரகுராமன் என்று கதை மாந்தருக்குப் பெயர் வைத்திருக்கிறேன். நல்லதோ, கெட்டதோ நிறைய விஷயங்களை கதைகளில் அவன் தோளில் ஏற்றிச் சொல்லியிருக்கிறேன்.

திடீரென்று ஒரு நாள் போன் பண்ணி, “இன்னுமாடா எழுதிண்டு இருக்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். நிறைய வாசிக்கத் தொடங்கி, ஆங்கில நாவல்களில் மனம் புதைந்து.. புதைந்து.. எழுதுவதையே நிறுத்தி விட்டான்.

“ஏண்டா நிறுத்திட்டே?” என்று இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டேன்.

“ப்ச்.. என்னத்தைச் சொல்றது?.. ஏதோ நிறுத்திட்டேன்..” என்று விட்டேர்த்தியாக பதில் சொன்னான்.

“எப்படிடா நிறுத்திட்டே?..” என்று அடுத்த கேள்வியை அடக்க மாட்டாமல் கேட்டேன்.

“இங்கிலீஷ் நாவல் நிறையப் படிச்சேன்டா. சாப்பிட்டுட்டு ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா ரெண்டு, ரெண்டரை ஆயிடும்.. முடிக்காம தூக்கம் வராது. படிக்க படிக்க.. என்னத்தைடா சொல்றது?.. நாமல்லாம் என்ன எழுதறோம்ன்னு ஆயிடுச்சு.. சத்தியமா சொல்றேண்டா. நாமல்லாம் ஜீரோடா.. அந்த உண்மை உறைத்ததும் என்னாலே எழுத முடிலேடா…”

“சாவி இருந்த காலத்திலே நீ குங்குமத்திலே எழுதினதெல்லாம் இன்னும் நெனைப்புலே இருக்குடா.. நீயே ஒன்னைக் குறைச்சு மதிப்பிடற மாதிரி இருக்கு..”

“நோ…” என்று ஆவேசமாக மறுத்தான். “நாமெல்லாம் உண்மைக்கு ரொம்ப விலகியிருந்து பாசாங்கா நிறைய எழுதறோம்டா. பட்டவர்த்தனமா கதைலே கூட எதையும் யாரையும் எதுவும் சொல்ல முடியாத நிலைடா இங்கே. அங்கேலாம் அது இல்லேடா.. எழுத்துன்னா அதுலே சத்தியம் இருக்கணும்.. அது இல்லாத பட்சத்திலே.. ஆல்ரைட்.. விட்டுத் தள்ளு..” என்று சர்வ சாதாரணமா அந்த டாபிக்கையே கத்தரித்து விட்டான். .

ரகுராமனால் முடிந்தது நம்மால் முடியவில்லையே என்ற நினைப்பு தான் இப்பொழுதும் ஓங்கியிருக்கிறது.

சைக்கிள் விடக் கற்றுக் கொண்ட ஆரம்ப காலத்தில் குரங்கு பெடல் தான். சீட்டில் உட்கார்ந்து பழக ஆரம்பித்த போது ரகுராமன் தான் பின்னாலேயே பாதுகாப்பாக ஓடி வருவான். ஓரளவு எதிரில் வருபவர் மீது மோதாமல் வளைத்து ஹேண்டில் பாரை ஒடைக்கத் தெரிந்து பாலன்ஸ் கிடைத்ததும்
ஒரு நாள் திடீரென்று “ஏற்காடு போகலாமா?” ஏன்று என்னைக் கேட்டான்.

“ஏற்காடா? எப்போடா?”

“நாளைக்குத் தாண்டா.. காலம்பற சைக்கிளை எடுத்திண்டு வந்திடு. சாயந்தரத்துக்குள்ளே திரும்பிடலாம்..”

“சைக்கிள்லேயா?.. இப்பத்தானேடா விடவே கத்திண்டிருக்கேன்?.. மலை மேலே போக முடியுமாடா?’ பயந்தேன்.

“உன்னாலே முடியும்டா..” என்று அபயக்கரம் நீட்டினான் ரகுராமன்.

அடுத்த நாள் அதிகாலைலேயே வீட்டில் ஏதோ சாக்குபோக்கு சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். இன்னொரு சைக்கிளில் ரகுராமன். மலைலே கொஞ்ச தூரம் கூட என்னாலே சைக்கிள்லே ஏற முடிலே. அநியாயத்திற்கு ஹேண்டில் பார் ஒரு பக்கம் ஒடிந்தது. தொடக்கத்தில் பத்தடி பள்ளத்தைப் பார்த்தாலே பயமாக இருந்தது.

“டே.. இது ரிஸ்க்குடா…”

ஒரு மண்ணும் இல்லே..” என்று மறுத்தான் அவன்.

அதற்கு மேல் மலை ஏற சைக்கிளும் மனமும் ஒத்துழைக்க வில்லை.

“பேசாம தள்ளிண்டு வா..” என்று சொல்லி விட்டு அவனும் என்னோடையே தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான்.

பின் பக்கமோ, எதிர்த்தாற்போலவோ வண்டி ஏதாவது வந்தால் ஒதுங்கிக் கொண்டு வண்டி போனதும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே… வழியில் பயங்கர தண்ணீர் தாகம். வேர்த்து வழிய ஒரு மதகடியில் உட்கார்ந்து விட்டேன்.

மலையிடுக்குகளில் சுனை நீர் வழிகிறது. கையைக் குவித்து குடிக்க முடியவில்லை. கடைசியில் ரகு தான் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தான். சைக்கிள் பெல் கப்பைக் கழட்டினான். சுனைநீர் வழியற இடத்தில் ஒட்டிப் பிடித்தான். கப் கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்ததும், “குடிடா..” என்று என்னிடம் கொடுத்தான். தானும் அந்த மாதிரியே குடித்தான்.

“போலாமா?..”

“உம்..”

சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன. ஈ காக்காய் இல்லை. ஹோவென்றிருந்தது. கொஞ்ச தூரம் போனதும், “சைக்கிள்லே ஏறி மிதிடா..” என்றான்.ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான். இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது. ஹேண்டில் பாரை இறுகப் பற்றிக் கொண்டு வண்டி சாய்ந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி மிதித்தேன். மலையின் கீழ்ப் பக்கமோ, மேல் பக்கமோ ஏதாவது வண்டி– லாரி வர்ற சத்தம் கேட்டால் டக்கென்று சைக்கிளிலிருந்து இறங்கி ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம். சில்லென்று காற்று வீசுகிற சூழ்நிலை உற்சாகமாக இருந்தது. அதற்கடுத்து பத்தே நிமிடங்களில் மலையின் மேல் பகுதிக்கு வந்து ஏரிக்கு வந்து விட்டோம்.

ரகுராமன் அவன் வீட்டில் கொடுத்து காசு எடுத்து வந்திருந்தான். ஏரிக் கரையில் ஆரஞ்சுப் பழம் வாங்கினான். அப்புறம் கொய்யா. அதற்கப்புறம் மாண்ட் போர்ட் ஸ்கூல் பக்கத்திலே சப்போட்டா. ஏற்காட்டில் இரண்டு மணி நேரம் இருந்திருப்போம்.

“போலாமாடா?” எதையும் தீர்மானிப்பது அவன் தான்.

எனக்கும் சீக்கிரம் மலையிறங்கி அடிவாரத்திற்குப் போய் விட்டால் நல்லது என்றிருந்தது. எப்படிப் இறங்கப் போகிறோமோ என்ற மலைப்பில் விளைந்த எண்ணம் அது.

ஏரி தாண்டி வந்தோம். மலையிலிருந்து இறங்கற வளைவில், “சைக்கிளில் ஏறிக்கோ..” என்றான். “பிரேக்கை இறுக்கமா பிடிச்சிண்டா போதும். சைக்கிள் நகர்ற அளவில் வைச்சுக்கோ. வளைவில் மட்டும் பாத்து குறுக்கமா திரும்பாம அகலமா திரும்பற மாதிரி பாத்துக்கோ. எதிர்த்தாற் போலேயோ, பின்னாடியோ லாரி வந்தா பிரேக் பிடிச்சு ஒதுங்கிக்கோ. முடிலேனா இறங்கிக்கோ. நான் பின்னாடியே வர்றேன்.. பயப்படாதே..” என்று தைரியம் கொடுத்தான்.

என்ன மாயமோ தெரிய வில்லை. இருபதே நிமிஷத்தில் அடிவாரம் வந்து விட்டோம். பாதி தூரத்தில் வழியில் ஒரே ஒரு லாரி மட்டும் பின்னாடி ஹாரன் அடிச்சு மெதுவாத் தாண்டி எங்களைக் கடந்தது.

கீழே வந்ததும் மலையை நிமிர்ந்து பார்த்த பொழுது, நாமா மேலே ஏறி கீழே அதுவும் சைக்கிளில் இறங்கி வந்தோம் என்றிருந்தது.

“அவ்வளவு தாண்டா.. இதுக்கு போய் என்னவோ யோசிச்சையே? பூச்சி பூச்சின்னா ஒண்ணும் வேலைக்கு ஆகாது.. துணியணும்.. துணிஞ்சு இறங்கணும். என்னாயிடப் போறது?” என்றான் ரகுராமன். “இனிமே டவுன்லே எங்கே வேணா நீ சைக்கிள் ஓட்டலாம். அதான் ஏற்காடு மலைலேயே ஏறி இறங்கிட்டியே?” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

இன்னொரு தடவை இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று என் மனம் மட்டும் என்னிடம் லேசா கிசுகிசுத்தது. நானும் சிரித்துக் கொண்டேன்.

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 5அழியாத மனக்கோலங்கள் – 7 >>

About Author