ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 12

This entry is part 12 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளைப் படிக்க

சங்கல்பம், உபசாரம்

அடுத்து சிராத்த சங்கல்பம். நாள் கிழமை போன்றவற்றை சொல்லி செய்வது. சுத்தமாக இருக்கிறானோ அசுத்தமாக இருக்கிறானோ நாராயணனை நினைக்கும்போது அவன் அருளால் நாம் சுத்தமாக ஆகிறோம் என்று சொல்லி திதி வார நட்சத்திர யோக கரணம் சொல்லி சங்கல்பம் செய்கிறோம்.


முன்போலவே விஸ்வேதேவருக்கு கையில் நீர் அளித்து ஆசனம் அளித்து கையில் மீண்டும் நீர் அளித்து அந்த வரணத்தையும் ஸ்தானத்தையும் அடையவேண்டும் என்று வேண்ட அவரும் அடைகிறேன் என்று சொல்வார். இங்கே விஸ்வா என்ற தக்‌ஷ ப்ரஜாபதியின் புத்ரியின் குழந்தைகள் இந்த விஸ்வேதேவர்கள் என்பதை நினைவு கூற வேண்டும். அதற்கான மந்திரம் சொல்லப்படுகிறது. பிறகு பூணூலை இடமாக்கி பித்ரு பிராமணர் கையில் தீர்த்தம் கொடுத்து கோத்திரம் சர்மா போன்றவற்றை சொல்லி பித்ரு சொரூபம் அடைந்த என் தந்தை அல்லது தாய் அவர்களுக்கு பார்வண விதிப்படி செய்யும் சிராத்தத்தில்… என்று சொல்லி மீண்டும் இன்ன கோத்திரம் வசு ருத்ர ஆதித்ய வடிவினர் ஆன பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கு இது ஆசனம் என்று சொல்லி நுனி உள்ள நீண்ட முழு தர்பைகளை இரண்டாக மடித்து முறுக்கி அவர் காலடியில் போட வேண்டும். மீண்டும் கையில் நீர் அளிக்க வேண்டும். இதையெல்லாம் முன்னேயே பார்த்துவிட்டோம் இருந்தாலும் மனதில் பதிவதற்காக திருப்பியும் சொல்லுகிறோம். மீண்டும் கோத்திரம் முதலியவற்றை சொல்லி தாங்கள் அந்த வரணத்தை ஏற்று அந்த ரூபத்தை பெற வேண்டும் என்று வேண்டுகிறோம். அவர் அப்படியே ஆகட்டும் என்று சொல்கிறார். விஷ்ணுவுக்கும் அவ்வாறு வரவேற்பு உபசாரம் செய்ய வேண்டும்.

Click here to donate for Server
Click here to donate for server to keep the site going

இந்த உபசாரம் என்பது பூஜை செய்பவர்களுக்கு தெரியும். அதில் ஒரு கிரமம் இருக்கிறது. பகவானை தியானித்து ஆசனம் கொடுத்து கையில் தீர்த்தம் கொடுத்து கால் அலம்பி விடுவோம். அதே போல தான் இங்கேயும் செய்யப்போகிறோம்.

இதற்காக அவர்களது கால்களை அலம்பி விட நாம் வீட்டுக்கு வெளியே செல்கிறோம். வீட்டுக்கு முன்னும் பின்னும் இடமில்லாமல் போய் விட்ட இந்த காலத்தில் வீட்டிலேயேதான் செய்யப்படுகிறது. வீட்டின் முன்னிலையில் வாசற்படி சமீபத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட பூமியில், பசுவின் மூத்திரத்தால் மண்டலங்களை செய்யச் சொல்லியிருக்கிறது. விஸ்வேதேவர்களுக்கு நான்கு மூலை உள்ளதாக அதாவது சதுரமாக மண்டலம் செய்ய வேண்டும். பித்ருகளுக்கு அதற்குத் தெற்கில் வட்டமாக 12 அங்குலம் அளவில் மண்டலம் செய்ய வேண்டும். வீட்டினுள்ளே இந்த கால் அலம்புவது முதலியவற்றை செய்யக்கூடாது. அதேபோல வடக்கிலும் தெற்கிலும் கூட செய்யக்கூடாது.

ப்ரேதன் என்கிற சப்தம் இருக்கும் வரைதான் குழியாக வெட்டிய குண்டத்தில் கால்களை அலம்ப வேண்டும். அது முடிந்தால் அப்புறம் மண்டலம் என்கிற கோலம்தான். குண்டத்தில் செய்தால் அது குல க்ஷயம் ஆகும்.


வீட்டுக்குள் செய்ய வேண்டி இருந்தால் கிழக்கு நோக்கி பிராமணர் உட்காரும்படி இடம் விட்டு ஒரு ஆசனத்தை போட்டு எதிரில் இரண்டு கோலங்கள் போட வேண்டும். கோலங்கள் போட்டு அதன் மேல் ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து அதில் வேலையை செய்து முடிக்க வேண்டும். இந்த இரண்டு தாம்பாளங்களாக வைத்துக்கொண்டால் இவர்களுக்கு காலை அலம்பும் தண்ணீர் ஒன்று சேர வாய்ப்பு இராது. தனித்தனியாகவே கொண்டு வெளியே கொட்ட வேண்டும். வெளியே செய்வதாக இருந்தால் இருவரின் கால் அலம்பிய தீர்த்தமும் ஒன்றாக சேராதபடி நடுவில் மண்ணால் ஒரு அணை போல கட்டிவிடலாம். எப்படியும் இரண்டு ஜலமும் ஒன்றாக சேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். வெறும் தரையில் நடுவில் ஒரு ஈரத் துண்டை போட்டு செய்வது என்பது அவ்வளவு உசிதமான விஷயமாக இருக்காது.

Series Navigation<< ஶ்ராத்தம் – 11ஶ்ராத்தம் – 13 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.