ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 23

This entry is part 23 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -5

ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்

நல்லது. இப்பொழுது ஆபஸ்தம்ப கர்த்தாக்கள் செய்ய வேண்டிய ஹோமம் – சிராத்த பிரயோகத்தை பார்க்கலாம். பெரும்பாலான கர்த்தாக்கள் ஔபாசனம் இல்லாமல் தனியே ஹவிஸ் வைத்து கொண்டு வருவதால் இந்த நேரத்தில் இந்த ஔபாசன அக்னியின் மீது அதை வைத்து சூடு காட்டுவதாகவும் அதில் சிறிது நெய் விட்டு இறக்கி வைப்பதாகவும் இருக்கிறது. இது அவ்வளவு சிலாக்கியம் இல்லை என்று நமக்கு தெரியும். இருந்தாலும் இதுதான் நடைமுறை சாத்தியமாக பலருக்கும் இருக்கிறது. இப்பொழுது பெரிய ஹோம கரண்டி – இனி பெரிய இலை என்று சொல்லிக்கொண்டு போகலாம் – பெரிய இலையில் சின்ன இலையால் நெய் விட்டு தடவ வேண்டும். அது வழுவழுவென்று ஆகிவிடும் படி சற்று அதிகமாகவே நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மீது அன்னத்தை வைத்தால் அது ஒட்டாமல் சுலபமாக வழுக்கிக்கொண்டு அக்னியில் விழவேண்டும் என்பது உத்தேசம்.

நல்லது. இப்பொழுது பெரிய இலையில் நெய்யை தடவி ஒரு கட்டை விரல் பருமன் அளவுக்கு அன்னத்தின் நடுவிலிருந்து அன்னம் எடுக்க வேண்டும். பிறகு இரண்டாம் முறை கிழக்குப் பகுதியிலிருந்து அதே அளவு அன்னம் எடுக்க வேண்டும். ஶ்ரீவத்ஸ கோத்திரம் போன்ற 5 அல்லது மேற்பட்ட பிரவர ரிஷிகள் உள்ளவர்கள் மேற்குப் பகுதியில் இருந்து மூன்றாவது முறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சின்ன இலையால் நெய் எடுத்து அன்னத்தின் மீது ஒரு முறை விட்டு அபிகாரம் செய்ய வேண்டும். இதற்கு நடுவில் ஒரு பாத்திரத்தில் நமக்கு வலது பக்கமாக தண்ணீரை வைத்திருந்து அன்னத்தை எடுத்த பின் கையை கழுவிக் கொள்ளலாம். அவரவர் நடைமுறை சௌகரியம். இப்போது இடது கையில் இருந்து இந்த பெரிய இலையை அன்னத்துடன் வலது கைக்கு மாற்றிக் கொண்டு, இடது கையால் ஹவிஸ் இருக்கும் அந்தப் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். மந்திரத்தை கூறி கடைசியில் ஸ்வாஹா … ஆ என்று முடிக்கும் பொழுது அந்த அன்னத்தை அக்னியில் இட வேண்டும். இதுதான் பிரதான ஹோமம் செய்ய வேண்டிய முறை. இப்படியாக நாம் வேறு ஹோமங்களும் செய்வோம்.

ஆபஸ்தம்பிகள் இதில் சொல்லும் யன்மே மாதா என்னும் மந்திரத்திற்கு தவறான பொருள் கொள்ளப்படுகிறது. “என் தாய் பதிவிரதா தர்மப்படி தன் தர்ம விரதங்களை முழுக்க அனுஷ்டிக்காமல் இருந்தாலும் என்னை உண்டு பண்ண பிதாவே இந்த ஹவிசை பெறட்டும். விதி தவறு இருந்தால் ஹவிஸை பெற வரும் மற்ற அசுரர்கள் முதலானவர்கள் இதை அடைய வேண்டாம் என் தந்தைக்கே தருகிறேன்” என்பது அதன் பொருள். ‘என்னை உண்டு பண்ண தந்தை’ என்று சொல்வதை வைத்துக்கொண்டு பலரும் மோசமான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு வியாக்கியானம் செய்து தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள். இது அவசியம் இல்லை. அந்த காலத்தில் பதிவிரதா தர்மம் என்பது மிகவும் உயர்த்தி சொல்லப்பட்டது. அப்படி அனுஷ்டிப்பது என்பது மிகவும் விரிவானது. அதை ‘சரியாக அனுஷ்டிக்க வில்லை என்றால்..’ என்று அது மிகவும் தெளிவாக சொல்லப்பட்டது. அவ்வளவுதானே ஒழிய அன்னை சோரம் போனாள் என்பதாக அர்த்தம் செய்து கொள்ள கொள்ளுதல் மிகவும் மோசமானதாகும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 22ஶ்ராத்தம் – 24 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.