ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 38

This entry is part 38 of 44 in the series ஶ்ராத்தம்

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி காதில் வைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு கை அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை பத்னிக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் பூணூலை மாலையாக அணிந்து இருக்க வேண்டும். இதற்கு மந்திரம் ‘அபாந்த் வௌஷதீனாம்…’ என இருக்கிறது.

பொருள்: ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’. அவளும் கிழக்கு முகமாக உட்கார்ந்து சத்புத்திரன் உண்டாவான் என்று நினைத்து ‘ஆதத்த’ என்ற மந்திரம் சொல்லி அதை உட்கொள்ள வேண்டும். (நித்தியனான இறைவன் தாமரை மாலை அணிந்த குமாரனை உண்டு பண்ணியது போல பித்ருக்கள் குழந்தையை உண்டு பண்ணட்டும்).

இக்காலத்தில் பிள்ளை பேறு இல்லாமல் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த பிரயோகம் தெரியாமல் இருக்கிறது. பிறகு கர்த்தா பூணூலை இடம் செய்து கொண்டு பிண்ட பித்ரு தேவதைகளை வணங்கி பிரணவத்தை சொல்லி (மற்ற) எல்லா பிண்டங்களையும் தொட வேண்டும்.

பிறகு எல்லா பிண்ட பித்ரு தேவதைகளையும் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு இந்த பிண்டங்களை இரண்டிரண்டாக இரண்டு கைகளாலும் மறித்து முதலில் நடு பிண்டங்களையும் பின் தெற்கிலும் கடைசியாக வடக்கிலும் எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

இந்த பிண்டத்திற்கு அடியிலிருந்த இந்த தர்ப்பங்களை எடுத்து எள்ளும் ஜலமும் எடுத்து ‘ஏஷாம் ந மாதா’ என்ற மந்திரம் சொல்லி – ஆமாம் அமாவாசை தர்ப்பணத்தில் வரும் அதேதான் – பித்ரு தீர்த்தமாக கீழே விட்டு தர்ப்பைகளை போட்டு விட வேண்டும். பிறகு பூணூலை நேர் செய்து கொண்டு ஆசமனம் செய்து, ஔபாசன அக்னியிலிருந்து பஸ்மா எடுத்து இட்டுக் கொள்ளலாம். துளசி தீர்த்தம் அக்ஷதை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ‘காயேன வாசா’ சொல்லி எல்லாவற்றையும் பிரம்மார்ப்பணம் செய்துவிட வேண்டும்.

பிறகு யாரும் உண்ணும் காலத்தில் ஜபம் செய்து இருந்தால் அவர்களுக்கும் நடத்தி வைத்த வாத்தியாருக்கும் தக்க சம்பாவனை தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 37ஶ்ராத்தம் – 39 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.