ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 5

This entry is part 5 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம்முந்தைய பதிவுகளை படிக்க

விஶ்வேதேவர், ஶ்ராத்தத்துக்கு முன்.

வயதாகிவிட்டது. பலதும் மறந்து போகிறது. ஆகவே நோக்கம் வழக்கமான சிராத்தத்தை கொஞ்சம் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டு போவதுதான் என்றாலும் இந்த விஶ்வேதேவர் குறித்து இங்கே ஒரு விஷயம்.

விஶ்வா என்பவள் தக்ஷப் ப்ரஜாபதியின் மகள். அவளுடைய பிள்ளைகள் 12 பேர். அவர்களே விஶ்வேதேவர்கள். இவர்களே சிராத்தங்களில் பலம் சேர்க்க பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள். பிசாசர்கள், ராக்ஷசர்கள், யக்ஷர்கள், பல விதமான பூதங்கள் ஆகியோர் விஸ்வேதேவர் இல்லாத ஸ்ராத்தத்தை நாசப்படுத்துகின்றனர். எந்த மாதிரியான சிராத்தத்தில் யார் யார் வருவர் என்று நிர்ணயம் இருக்கிறது. பார்வணத்தில் ‘ புரூரவார்த்ரவ ஸம்க்ஞக விஸ்வேதேவர்’ என்போம். இந்த ஸம்க்ஞக என்னது? சமிக்ஞை கேள்விப்பட்டு இருப்போம். சிக்னல். அதாவது ஒரு அடையாளம். ‘புரூரவார்த்ரவ ஸம்க்ஞக விஸ்வேதேவா என்றால் புரூரவர் ஆர்தரவர் என்ற அடையாளம் கொண்ட விஸ்வேதேவர்கள் என்று பொருள். பூணூல் போன்ற சுப காரியங்களிலும் நாந்தீ சிராத்தம் என்று செய்கிறோம் இல்லையா? அங்கே வரும் விஸ்வேதேவர்கள் வேறு இருவர். ஸத்யர், வஸூ. இதே போல மற்றவை. மஹாளயத்தில் துரு ரோசனர். யாகத்தில் கர்மாங்கமாக செய்யும் சிராத்தத்தில் க்ரது, தக்ஷர். ஸபிண்டீகரணத்தில் காலர், காமுகர். ஸன்யாஸாங்க சிராத்தத்தில் ஸாது, ருரு.

ரைட். இப்போது சிராத்தத்துக்கு முந்தைய நாள் செய்ய வேன்டியவற்றை பார்த்துவிடலாம். ஆமாம். சிராத்தம் என்றால் எப்போது வருகிறது என்று நாமே அறிந்து தயாராக இருக்க வேண்டும். இன்ன நாள் சிராத்தம் என்று தகவல் சொல்லுவது வாத்தியாரின் வேலை இல்லை. ஆனால் நடுவில் எப்போதோ அப்படி ஆக்கி வைத்திருக்கிறோம். “சிராத்தம்ன்னா ரெண்டு நா முன்னாடியா சொல்லறது? முன்னாலேயே சொல்லி இருக்க வேணாமோ? அது வாத்தியாரோட ட்யூட்டி இல்லையோ?” என்று அங்கலாய்த்த பெண்மணியை பார்த்து இருக்கிறேன். தப்பு; அது அவருடைய வேலை இல்லை. எங்கள் தந்தை புதிய பஞ்சாங்கம் வந்த உடனேயே இரண்டு சிராத்த நாட்களையும் குறித்து வைத்துவிடுவார். ‘தமிழ்’ மாசமும் பக்‌ஷமும் திதியும் தெரிந்தால் போதும். பஞ்சாங்கத்திலேயே சிராத்த திதி என்று தனியாக கடைசி பத்தியில் கொடுத்து இருக்கிறார்கள். அந்த மாசத்துக்கான பக்கத்தில் வளர்பிறையா தேய் பிறையா என்று கொஞ்சம் கவனத்துடன் பார்த்து திதியை கண்டு கொள்ளலாம்.

வரிக்க வேண்டிய பிராமணர்களை (இங்கே யார் யாரை வரிக்கலாம் என்று பார்க்கப்போவதில்லை. பின்னால் எழுதினாலும் எழுதுவேன்.) எல்லோரும் சாப்பிட பிறகு இரவில் அவரது வீட்டுக்குப்போய் வரிக்க வேண்டும் என்று இருக்கிறது. இப்போது நடைமுறையில் இல்லை. ஏன்? யார் வரப்போகிறார்கள் என்றே நமக்குத்தெரியாது. சில சமயம் வாத்தியாருக்கே தெரியாது. நகரங்களில் இது ஆர்கனைஸ் ஆகிவிட்டது. வாத்தியார் அந்த ஆர்கனைசேஷன் பொறுப்பில் இருப்பவருக்கு சொல்லிவிடுவார். அவர் பொறுப்பாக அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

சிராத்தம் வரும் ஒரு மாஸத்திற்கு முன் பரான்னம் சாப்பிடக் கூடாது. அதாவது தன் வீட்டில் மனைவியோ தாயோ சமைத்தது தவிர எதுவும் சாப்பிடக்கூடாது. தற்காலத்தில் ஹோட்டலில் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்ய வேன்டும் போலிருக்கிறது. குரு, மாமா, சகோதரி, மாமனார் இவர்கள் வீட்டு அன்னம் பரான்னமல்ல. இவ்வளவு நாட்கள் நியமம் இருக்க முடியாதென்றால் ஒரு பக்ஷம், அல்லது ஒரு வாரமாவது குறைந்தது 3 நாளாவது பரான்னம் சாப்பிடாமலிருக்க வேண்டும். ஸ்திரீ ஸங்கமும் பாய் மெத்தையும் படுக்கையும் கூடாது. 1 வாரம் முன்னே எண்ணைத் தேய்த்துக் கொள்ளக் கூடாது. இது பெரிய பிரச்சினை இல்லை போலிருக்கிறது. ஏனென்றால் முக்காலே மூன்றுவாசி பேருக்கு இந்த பழக்கம் ஏற்கெனெவே இல்லை!

தேவையான காய்கறிகள், இலை, மளிகை சாமான்கள் ஆகியவற்றை வாங்கி வரவேண்டும். அடுத்த நாளுக்கு தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என்பதை சோதித்துக்கொள்ள வேன்டும்.

அடுத்து சிராத்த நாளில் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 4ஶ்ராத்தம் – 6 >>

About Author