ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 9

This entry is part 9 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க

விஷ்ணு இலை பஞ்சாயத்து

நல்லது. இப்போது இடையே விஷ்ணுவைப் பற்றி ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது. ஆகவே மேலே போகும் முன் அதை பார்த்து விட்டு போகலாம். இல்லையென்றால் மறந்தாலும் மறந்துவிடும்.

எப்படி விஸ்வேதேவர் பித்ருக்கள் என்று இரண்டு பேரை வரணம் செய்கிறோமோ அது போலவே விஷ்ணு என்று மூன்றாவதாக ஒருவரை வரணம் செய்வதே சரியான முறை. இதுவே பழக்கத்தில் இருந்து இருக்கிறது பின்னால் ராஜாக்கள் ஆட்சியெல்லாம் முடிவுக்கு வந்து வைதீகத்தில் உயிர் பிழைக்க வேண்டும் என்று ஒரு நிலைமை அந்த அந்தணர்களுக்கு வந்த பிறகு அவர்கள் நடைமுறையை வேறு வழியில்லாமல் கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள் போலிருக்கிறது. வறுமை இருப்பதால் மூன்றாவதாக ஒருவரை வரணம் செய்யாமல் இலையை மட்டும் போட்டு ஒரு கூர்ச்சத்தையும் போட்டு உணவு பரிமாறிவிட்டு சிராத்தம் முடிந்த பிறகு வேறு யாரையாவது சாப்பிட சொல்லி நடைமுறை படுத்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் பாடசாலை பிரம்மச்சாரிகள் அக்ரஹாரத்தில் வீடு வீடாக சென்று பிட்சை ஏற்று சாப்பிட்டு வந்தார்கள். சில சமயம் வீட்டிலேயே உணவிடுவது இருந்திருக்கிறது. அத்தகைய அக்ரஹாரத்தில் சிராத்தம் நடக்கும் போது இந்த விஷ்ணு இலைக்கு இந்த பாடசாலை பிரம்மச்சாரியை உட்கார வைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. பின்னால்தான் அக்ரஹாரங்கள் காணாமல் போகத்துவங்க பாடசாலைகள் என்று தனியாக நாட்டுக்கோட்டை நகரத்தார் புண்ணியத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு தனியாக உணவு ஏற்பாடு என்றெல்லாம் துவங்கி நடந்து இருக்கிறது. பாடசாலை மாணவர்கள் வெளியே சென்று பிட்சை எடுக்கும் வழக்கமும் விட்டுப் போயிற்று. ஆனால் விஷ்ணு இலை என்று தனியாக போட்டு ஒரு பிரம்மச்சாரி உட்கார வைப்பது ஒரு சம்பிரதாயம் போல ஆகி விட்டதால் அந்த நேரத்துக்கு தேடி ஒரு பிரம்மச்சாரியை வரச்சொல்லி விஷ்ணு இலைக்கு உட்கார வைத்திருக்கிறார்கள். இது ஒரு சம்பிரதாயம் தானே ஒழிய இதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை.

பின் காலத்தில் இதுபோல பிரம்மச்சாரிகளும் கிடைக்காமல் போனதில் சில இடங்களில் சிரார்த்தம் செய்து வைக்கும் வாத்தியாரே விஷ்ணு இலையில் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்திருக்கிறார்கள். இதை நானே பார்த்திருக்கிறேன். இப்போது ஏனோ அப்படி செய்வதற்கு வாத்தியார்களுக்கும் மனதில்லை போலிருக்கிறது. ஆகவே வேறு யாரையாவது வீட்டில் இருப்பவர்களையே சாப்பிட சொல்லிவிட்டு போகிறார்கள் என்று தெரிகிறது. இது அவ்வளவு உசிதம் இல்லை.

மந்திரங்கள் சொல்லி உணவை அர்ப்பணித்த பின் சூக்‌ஷுமமான பாகத்தை விஷ்ணு எடுத்துக் கொண்டு விடுவதால் மீதி இருக்கும் தூல பாகத்தை பசு மாட்டுக்கு கொடுத்து விடலாம். அல்லது பூமியில் அப்படியே இலையுடன் புதைத்து விடலாம் கடைசி பக்ஷமாக உறவினர் யாரும் சாப்பிட்டு விடலாம். குப்பைத் தொட்டியில் போடுவதற்கு இது பரவாயில்லை. ஆகவே இன்னார் இன்னார் இதை சாப்பிடலாம், கூடாது என்றெல்லாம் ஒரு சாஸ்திர விவஸ்தை இல்லை.

இப்போது அனேகமாக பலரது பொருளாதார நிலையும் இடம் கொடுப்பதால் விஷ்ணுவாக ஒருவரை வரிப்பதே நல்லது. என் அப்பா, என் தாத்தா அப்படி செய்யவில்லை என்று பிடிவாதமாக 2 பேரை மட்டும் வரிப்பது சரியில்லை. சாஸ்திர விரோதமான சம்பிரதாயத்தை மாற்றிக்கொள்வதே சரியாகும். பொருளாதாரம் இடம் கொடுக்காதவர் உசிதம் போல செய்யவும். அடுத்த பதிவில் வரணம் தொடரும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 8ஶ்ராத்தம் – 10 >>

About Author