postpartum depression

புனிறு தீர் பொழுது -1

This entry is part 1 of 5 in the series Postpartum depression

எங்கள் அபார்ட்மென்ட்டில் புதியதாக தாயான ஒருவரைச் சமீபத்தில் சந்தித்த போது அவர் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறான். தன்னை PPD காரணமாக விவாகரத்து செய்வதால் அதை எப்படி சட்டபூர்வமாகச் சமாளிப்பது என்று கேட்டார். PPD ஆங்கிலத்தில் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் ( postpartum depression ) என்றறியப்படும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு.

நம் உடலில் இருந்து ஒரு பாகம் திடீரென்று கழற்றி வைக்கப் பட்டால் எப்படி இருக்கும்?

பல் விழுவது முதல் அப்பன்டிசிஸ் நீக்கம் வரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஏறத்தாழ பத்து மாத காலம் உடலோடு ஒன்றாக இருந்த வயிற்றுச் சுமை திடீரென்று பெறுவலியோடு நீங்கும் பொழுது ஒரு பெண்ணின் உடல் மனம் ஆன்மா எல்லாவற்றிலும் அதீத மாற்றங்கள் ஏற்படும்.

குழந்தை பிறந்து முதல் மூன்று வாரங்களில் ஒரு பெண்ணுக்கு சோகம், எதையோ இழந்து விட்ட உணர்வு, பதற்றம், குற்றவுணர்வு போன்றவை ஏற்படக்கூடும். இதற்கு ஆண் பெண் பாலின பாகுபாடு அல்லது ஆதிக்க மனநிலை என்று எல்லாவித காரணங்களும் பிரித்து ஆராயப்பட்டு விட்டன. ஆனால், பிள்ளைப்பேறுக்கு பிறகான பெண்கள் மனநலம் பற்றி நாம் கவனஞ் செலுத்தி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதுதான் மகப்பேறு விடுப்பு இருக்கிறதே? அந்த ஆறு மாதகாலம் அம்மா வீட்டில் தானே இருக்கிறார்கள்? அதிக வேலைகள் செய்ய விடுவதில்லையே? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறோமே? என்று நீங்கள் சமாதானப் படுத்திக் கொள்ளும் காரணங்கள் எல்லாமே முதன் முதலில் தாயான பெண்ணுக்கு செய்வதாக ஏமாற்றிக் கொள்வதுதான். நாம் பார்க்கும் திரைப்படங்களில் கூட “தாய்மை”யை அலாதியான ஆனந்தமயமான குதூகலமான ஒன்றையே பார்க்கிறோம். போதாக்குறைக்கு அவளை சகமனுஷியாகப் பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்டு “தெய்வீக” கிரீடத்தை வேறு ஏற்றி வைத்து சுமக்க வைக்கிறோம்.

இந்தியாவில் மகப்பேற்றுக்குப் பிறகான மனஅழுத்தம் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறதா என்று நீங்கள் யோசித்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு விழிப்புணர்வாய் இருக்கும். சிவில் கோர்ட்டில் கவனித்துப் பார்த்திருந்தீர்கள் என்றால், பெரும்பாலான விவாகரத்துகள் திருமணமாகி குறைந்த காலகட்டத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் டேகேர் சென்டரில் விட்டு வரும்படியாகவே இருக்கும்.

இந்தியாவில் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு அல்லது பேபி ப்ளூஸ் என்பது ஒருபோதும் விவாதிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. தாத்தா பாட்டிக்கள் புதிய வாரிசு கூட அந்த அற்புதக் கணங்களை மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கணவன்மார்களோ குழந்தையைக் கையாள்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள் அல்லது மனைவிக்கு உதவுவதில் குழப்பமடைகிறார்கள். இந்தக் கூத்தில் “அவள்” கஷ்டப்படுகிறாளா என்று கூட யாரும் பார்ப்பதில்லை.

புதிய உயிருக்கு அபரிமிதமான அன்பும் கவனமும் தேவை. ஆனால் தாய்க்கு அவள் கர்ப்பமாக இருந்தபோது பெற்ற அக்கறை போல அவ்வளவு அதிகமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் அவளுக்கான கவனம் தேவை.

அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை, நம்மால் டயாபெட்டீஸ், கான்ஸர், HIV-AIDS-STD, ஆனானப்பட்ட கொரோனா போன்ற எல்லாவற்றையும் சகஜமாக ஏற்றுக் கொள்ள முடிந்து விட்டது. ஆனால் அது எந்த வகையான மனநலப் பிரச்சனையாக இருந்தாலும், அது தனக்கும் தன் குடும்பத்துக்கும் தீராத களங்கம் உண்டாக்கி விட்டதை போல ஒரு மாயை ஏற்பட்டு விடுகிறது. மிக சர்வ சாதாரணமாக 5ல் ஒருவருக்கு இருக்கும் டிப்ரஷன் என்ற மனச்சோர்வை குடும்பத்தினர்கள் கையாள்வதை நான் பார்த்திருக்கிறேன். தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் மனச்சோர்வடைந்துள்ளார், ஆனால் ஒருபோதும் அது பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை! ஏதோ மனஅழுத்தம் தொற்றிக்கொள்ளும் வியாதி போல பதறிப் போகிறார்கள்! அதை முடி மறைத்து, பாதிப்படைந்த நபரைக் குற்றவுணர்வுக்குத் தள்ளி, ஏதோ நடக்கூடாத ஒன்று நடந்து விட்டதைப் போல மேலும் பதட்டத்துக்கு ஆளாக்கி, மாத்திரை மருந்துகளை சாப்பிடவிடாமல் செய்து, இன்னுமும் மூடி மூடி வியாதி அதிகமாக ஆகி விடும்.

இந்தியப் பெண்கள் இயற்கையாகவே தாய்மை குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் குழந்தைகளின் மீது அன்பும், பற்றும் தன்னிச்சையாய் வந்து விடவேண்டியதாக இருக்கிறது. மிகக் கசப்பான உண்மை என்னவெனில், ஒவ்வொரு 7 பெண்களில் ஒருவர் பிரசவத்திற்குப் பின் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். இதைப் பற்றி ஒருபோதும் பேசப்படுவதில்லை – ஏனென்றால் குழந்தையைக் கவனிக்கவே முழு நேரமும் தேவைப்படும் போது அதன் அம்மாவுக்கு யாருக்கு நேரம் இருக்கிறது?

மனச்சோர்வு என்பது ஒரு தாற்காலிக conditionதான் என்பதை புரிந்து கொள்ளவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ தவறிவிட்டோம். நிலைமை இப்படி இருக்கும் போது, பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும், குழந்தை பிறந்த பிறகு ஒரு தாய் சோகமாக இருக்கக்கூடும் அல்லது மனச்சோர்வடைந்திருப்பாள் என்பதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

சில கணவர்கள் தம் மனைவி பிள்ளைப் பேற்றுக்கு பின் வரக்கூடிய மனச்சோர்வு (PPD) ஏற்படும்போது அதை எப்படி கையாளுவது என்று தெரியாமல், உறவுச் சிக்கல் பெரிதாகாமல் அல்லது மேலும் மனஅழுத்தத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் சரியான முறையில் அதைப் பற்றி நேர்மறையாக உரையாடி சரி செய்து கொள்வது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது.

நம்மிடம் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சாதாரண உரையாடல் (discussion) கூட விவாதமாகவே (argument) ஆக்கி விடுவதுதான். உரக்கச் சத்தமாய் அல்லது கீழ்மைப் படுத்தி அல்லது (பெரும்பாலும் பழிச்சொல் பயன்படுத்தி) அதட்டிப் பேசுவது ஆளுமை குணம், அல்லது எதிராளியை அடக்கும் ஒரு உத்தி என்று நம்புவதுதான்.

மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் எப்போது மனச்சோர்வு ஆகிவிடுகிறது என்று என் கூட பணிபுரிந்த பெண்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.

என் முதல் குழந்தையைப் பெற்ற பிறகு உடலிலோ மனத்திலோ பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனக்கான வாழ்க்கைப் பயணம் அப்போதுதான் துவங்கி இருந்தது. ஆனால் இரண்டாவது குழந்தை, ஆமாம், அப்போதுதான் நான் நன்றாக மாட்டிக்கொண்டேன். ஏனென்றால், என் தொழில்முறையில் ஏணியின் உச்சிக்கு ஒரு படி தான் இருந்தது. Social support என்று நாம் சொல்லிக் கொள்ளும் அம்மா-வழி / புகுந்த வீட்டு வழி ஆதரவுக்கு இருப்பவர்கள் எல்லோருமே வயதானவர்களாக ஆகிவிட்டிருந்தனர். எனக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான வயதும் உடல் பலமும் இல்லாமல் ஆகி விட்டிருந்தது. உண்மையில் இது மிக மிக மிக மிகவும் கடினமானது என்பதைத் தவிர வேறெந்த மந்திரஜாலமேதும் அதற்குப் பதிலாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. “அதை எப்படிச் சமாளிப்பது” என்ற கேள்வி, மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வாக, பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறன் கொண்ட ஒரு மேஜிக் பட்டன் போல என்னை இதைப் பற்றி எழுதத் தூண்டுகிறது.

இப்போது PPDயின் தாக்கம் விவகாரத்துக்கானக் காரணங்களை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். சரியாகக் கண்டறியப்படாத (undiagnosed) PPD காரணமாக இன்று நம் சமூகத்தில் 20-30% முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. நான் ஏற்கனவே கற்றறிந்தது என்னவென்றால், பெற்றோர் ஆன பிறகு முதல் வருடம் திருமணமான தம்பதிகளுக்கு மிகவும் சவாலானது. இந்த சவால் தீராத பிரச்சினையாகும் என்பது பிரசவத்திற்கு முந்தைய மனநிலை அல்லது மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் (கவனிக்க: மனச் சோர்வு இல்லை) போன்ற கவலைகள், உறவுச் சிக்கல்களை ஏற்கனவே சரியாய் நிர்வகிக்காத ஒரு ஜோடிக்குப் பொருந்தும்.

விவாகரத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தம்பதிச் சண்டைகள், பெரும்பாலும் பேசினாலே தீரக்கூடிய சில்லரைத்தனமான, ஆனால் பேசாமல் இருந்ததால் புகைச்சலாகிவிட்ட சண்டையாகவே இருக்கின்றன.

பல சமயங்களில், ஒரு பெண் மகப்பேற்றுக்கு பிறகு ரத்த இழப்பினால் ஏற்பட்ட நலக் குறைவு, உடல் அசதி, மன அழுத்தம், சோர்வு அல்லது பதட்டம் ஆகிவற்றால் அவதிப்படும்போது அவளுடைய துணை குழப்பமடைகிறான். அவளுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் அல்லது தன்னால் எதுவும் செய்ய முடியாது ஆகி அக் கையாலாகாதத்தனம் கோபமாக மாறுகிறது.

மேலும் பெண்களுக்கு எப்போதுமே தனது பிரச்சினைகளை தன் துணைவருக்கு எப்படி விளக்குவது என்று தெரியாது. ஏனெனில் biological wiring அப்படியானது பெண்களின் துரதிருஷ்டம்.

இருவருக்கும் குழப்பம், ஏமாற்றம் அதனால் கோபம். அப்பாவுக்கு அம்மா மீது கோபம். அம்மாவுக்கு அப்பா மீது கோபம். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மற்றவரிடம் எப்படிப் பேசுவது என்று இருவருக்கும் தெரியாது, அதனால் அவர்கள் பேசுவதை நிறுத்துகிறார்கள். அல்லது பேசுவது கத்தலும் கூச்சலுமாக மாறும். மனங்கள் உடைந்து திருமண உறவு முடிவடைகிறது.

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு காரணமாக சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உறவிலும் போராட்டங்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் திருமண பந்தம் இதிலிருந்து மீள முடியாது சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.

விவாகரத்துக்கான காரணம் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்று நாம் கருதலாம், PPD உண்மையில் ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி வைக்கோற்புல்லாக இருக்கலாம். பெரும்பாலும் தினப்பாடு வேலைகளின் சவால்கள், நம்பிக்கையின்மை, விசுவாசமின்மை, பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது சரியே செய்ய முடியாத வேறுபாடுகள் போன்ற பெரிதாக்கப்பட்ட ஏதோவொன்றின் காரணமாக திருமணம் முடிவடைகிறது.

உறவு மோதல் ஒரு கசப்பான உண்மை. பெண்கள் மனதாலும் உடலாலும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரையில் அவர்களைச் சார்ந்த குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. அந்த அம்மா யாராக இருந்தாலும், அவள் எவ்வளவு வலிமையானவளாக இருந்தாலும், சில நேரங்களில் அம்மாக்களுக்கு அவர்கள் உணரும் எண்ணற்ற சிக்கலான உணர்ச்சிகளை அவள் அதைத் தனியே கடந்து செல்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்போது அந்தப் புதைமணலில் இருந்து மீண்டும் அவளை மீட்டு உருவாக்க கணவன்-மனைவி இரண்டு பேரும் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Series Navigationபுனிறு தீர் பொழுது – 2 >>

About Author