நான் நன்றி சொல்வேன்..
மாலதியின் செல்போன் விட்டுவிட்டு குரல்கொடுத்தபடியே இருந்தது.

போன் அருகில் இருந்தும் அதை எடுக்காமல் பூ தொடுத்துக்கொண்டு இருந்த மாலதியை ஆச்சர்யமுடன் ஏறிட்ட்டார் சங்கரன்.

“மாலதி. ரொம்பநேரமா போன் அடிக்குது எடுக்கலையா?” என்று கேட்டார்.

“வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் செய்த கார்ப்பெண்ட்டர் கதிரேசன் வரை ஏழெட்டு பேர் கடன்தொகை உதவியா கேக்கறாங்க..கொரானா காலத்துல நீங்களும் ரிடையர் ஆக போற நேரத்துல நாமே அரை சம்பளத்துல குடித்தனம் செய்யறோம் .இருந்தா கொடுக்க வஞ்சனையா என்ன? சொன்னால் புரிஞ்சிக்கக்கூடிய நிலையில் அவங்களும் இல்ல..உதவமுடியலையேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் இந்த போனை நான் அட்டெண்ட் பண்ணல” என்று வேதனையுடன் சொன்னாள் மாலதி.

“இது யார்கிட்டேருந்து?”

“முன்னே நம் வீட்டுல சிலகாலம் வாட்ச்மேனா வேலைபார்த்த ரங்க சாமிகிட்டேருந்து”

“மகளுக்குக் கல்யாணம் செய்யணும்னு ஊரோடு போறதா சொல்லிப்போனவர் நினைவிருக்கு”

“ஆமா..என்ன கஷ்டமோ கடன் கேக்கப்போறார். இல்லைன்னு சொல்றதைவிட போனை எடுக்காம இருந்துடறது நல்லதுன்னு தோணுது”

மாலதியின் இரக்கமனம் சங்கரன் அறிந்தது. ஊரடங்கிற்குப்பிறகு சங்கரனது சம்பளமும் பாதியாகிவிட்டது. இல்லாவிடில் உதவி செய்வதற்கு கணவன் மனைவி இருவருமே தயார்தான்.

சற்று நேரம் கழித்துமறுபடி போன் அடிக்கவே திரையில் ரங்கசாமி என்ற பெயரைப்பார்த்து சங்கரன்,” மாலதி எடுத்துப்பேசிடு.. ஐஞ்சாறு தடவை பண்ணிட்டாரு . என்ன பணக்கஷ்டமோ? .நம்ம நிலைமையையும் நாசூக்கா சொல்லிடு” என்றார்.

வேறுவழியின்றி போனை எடுத்து”ஹலோ?’ என்றாள் மாலதி. குரலில் சுரத்தே இல்லாமல்போனது.

எதிர்முனை உற்சாகக்குரலில்”அம்மா நாந்தாமா ரங்கசாமி” என்றது.

‘தெரியும்’ என்று மாலதியின் மனம் சொல்லிக்கொண்டாலும்”ஓ ரங்க..ரங்க சாமியா? நி… நிறைய தடவை போன் செ..செய்திருக்கிறே நா.. நான் கவனிக்கமுடியலைப்பா” என்றாள். பொய் சொல்லும்போது மட்டும் வார்த்தைகள் தடுமாறித்தான் போகுமோ?

“அதனால் என்னம்மா? நீங்க எவ்வளவு பிசியானவங்கன்னு எனக்கு தெரியுமே! அம்மா இப்போ நான் எதுக்கு போன் பண்ணேன்னா…” இழுத்தான் ரங்கசாமி.

மாலதி மௌனமாயிருக்கவும் ரங்கசாமி தொடர்ந்தான்.” அம்மா! ஊரடங்கு காலம்மா.. வேலைவெட்டியே இல்ல.. மகள்வீட்டுல தான் இருக்கேம்மா.. தினமும் என் மகள் காலையில் எழுந்து காப்பிபோட்டுக்கொடுக்குதும்மா.. இவ்வளவு நாளா போட்ட காப்பியைவிட இன்னிக்கு என் மக போட்ட காப்பியைக்குடிச்சதும் உங்க நினைவு வந்ததும்மா.. நீங்க தினமும் எனக்கு கள்ளிச் சொட்டா காப்பிதருவீங்களே அதே மாதிரி போடக்கத்துக்கிட்டாம்மா.. ஆனாலும் உங்க தர்ம உள்ளம் நீங்க எனக்குத்தந்த காபிலயும் மணத்துதெரியும். அதை நான் நினைக்காத நாளில்லை. இன்னிக்கு மகள் அருமையா காபி போடக்கத்துக்கிட்டதும் நீங்க அங்கே வேலைபார்த்த நாளில் எனக்குக்கொடுத்த காப்பிக்கு நன்றி சொல்லணும்னு தோணிச்சும்மா அதான் போன்பண்ணினேன் நன்றிம்மா வைச்சுடறேன்’

மாலதிக்கு கண் நிறைந்துபோக,ரங்கசாமி போனில்கடனே கேட்டிருக்கலாம்போலிருந்தது.About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.