சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.
மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே சரியாக இருக்கும் என்பதை அகத்திய மாமுனிகள் வரிகளிலே
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”
என்கிறார்.
ஒரு அத்யாயத்தில் ஸெல்ப் எஸ்டீம் பற்றி விரிவாக பேசுகிறார்.
நண்பர் ஒருவரோடு தன்னுடைய உரையாடலை இதில் சொல்கிறார்.
அவருடைய வரிகளில்…
“அவரோடு பேசிக்கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் கொட்டி தீர்த்து விட்டார். ஏகப்பட்ட வருத்தங்கள். ஓரிருவர் மீதல்ல. பலர் மீது கோபம். காரணம், அவருடைய நினைப்பு, என் அருமை பலருக்கும் தெரிவதில்லை. என்னை எவரும் போதிய அளவு பாராட்டுவதில்லை. மதிப்பதில்லை. மொத்தத்தில் எனக்கு கிடைக்க வேண்டிய அளவு அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை. நான் திறமையானவன், ஆனாலும் எனக்குபோய் இப்படி ஒரு நிலை. பேச்சு முழுக்க ஆதங்கமும் அங்கலாய்ப்புமாகவே இருந்தது.”
ஸெல்ப் எஸ்டீம் கண்டிப்பாக தேவை. ஆனால் அது அதிகமானால்? தன்னை மட்டுமே மதிப்பது,, நேசிப்பது. அதுதான் பலருக்கும் பிரச்சனை.
மனம் என்ற பட்டறையில் இழைத்து இழைத்து உருவாக்கப்படுவதுதான் ஸெல்ப் எஸ்டீம். அங்கே பிடித்து வைக்கப்படுவதுதான் பிள்ளையார். நமெக்கெல்லாம் ஒரு பழமொழி தெரியும் “பிள்ளையார் பிடிக்க குரங்கானது” என்று. இங்கு நடப்பதும் அதுதான். அந்த மன அறையில் அவர்களைத்தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தனக்கு தானே எதை வேண்டுமானாலும் சொல்லி கொள்வார்கள். எப்படி? “நான் அழகானவன், எனக்கு முக கவர்ச்சி உண்டு, எனக்கு நிறைய நண்பர்கள்”
அடுத்து மற்றவர்களைப்பற்றியும் அவரது கருத்துக்களை அங்கே வெளிப்படையாக வைப்பார். அதையும் எவரும் ஏன்? என்ன ? என்று கேட்க முடியாது.
இப்படிதான் எல்லோரும் இருப்பார்களா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்கிறார் திரு வள்ளியப்பன். வேறு விதமானவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது …”நான் சாதித்திருப்பவை சிறப்புதான் . அதேசமயம் என்னைவிடவும் கூடுதலாக சாதித்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களையும் உலகம் கொண்டாடும்.
லைப் கோச்சிங் இல் சொல்வதானால் “Assrtiveness – I am Okay and You are also Okay” என்ற மனப்பான்மை. இப்படி தங்கள் மனதிற்குள் நினைப்பவர்களுக்கு மனது கனமின்றி லேசாக இருக்கிறது.
உள்ளே இருக்கும் வெளிச்சம் அவர்கள் முகத்திலும் பேச்சிலும் செயலிலும் பிரகாசிக்கிறது.
ஆனால் அதீத ஸெல்ப் எச்டீமில்அரற்றல் அங்கலாய்ப்பு எல்லாம் வருவது மற்றவர்களை குறை கூறுவதால், பாராட்ட முடியாததால். இதை மனதிற்கு சொல்லி கொடுத்து மாற்றலாம் என்கிறார் திரு வள்ளியப்பன்,
எப்படி?
நான் சரி. மற்றவர்களும் சரிதான்.எனக்கும் கிடைக்க வேண்டும். மற்றவர்களுக்கும் கிடைக்கலாம். என் பலம் என்பது அடுத்தவர் பலவீனமாக இருக்க வேண்டியதில்லை. இத்தகைய நேர்மறை எண்ணங்கள் அதிகமாக, அதிகமாக I am Okay and You are also Okay என்னும் Assertiveness தானாக வரும். நான்தான் எல்லாம் என்ற Aggressiveness விலகும்.